உலகச் செய்திகள்

 ரஷ்யத் தாக்குதலால் உக்ரைனின் டொன்பாஸ் பகுதி முற்றாக அழிவு

மரியுபோலில் மேலும் 700 உக்ரைன் வீரர்கள் சரண்

பைடனின் ஆசிய பயணம் ஆரம்பம்

அணு ஆயுதச் சோதனை நடத்த வடகொரியா தயார்

பின்லாந்து, சுவீடன் நாடுகள் இணைவதில் நேட்டோ உறுதி

அமெரிக்கா, ஐரோப்பா, கனடாவில் குரங்கம்மை நோய் சம்பவம் பதிவுரஷ்யத் தாக்குதலால் உக்ரைனின் டொன்பாஸ் பகுதி முற்றாக அழிவு

உக்ரைனின் டொன்பாஸ் பிராந்தியத்தில் ரஷ்யாவின் புதிய தாக்குதல்கள் அந்தக் கிழக்குப் பிராந்தியத்தை நரகமாக மாற்றி இருப்பதாக உக்ரைன் ஜனாதிபதி வொலோடிமிர் செலென்ஸ்கி தெரிவித்துள்ளார். ரஷ்யா அர்த்தமற்ற தாக்குதல்களை நடத்தி வருவதாகவும் அவர் குற்றம்சாட்டினார்.

கடந்த பெப்ரவரியில் முழு வீச்சில் படையெடுப்பை மேற்கொண்ட ரஷ்யா உக்ரைன் தலைநகரை கைப்பற்றுவதில் தோல்வி அடைந்ததை அடுத்தே டொன்பாஸ் பிராந்தியத்தை கைப்பற்றுவதற்காக உக்கிர தாக்குதல்களை ஆரம்பித்தது. ஒன்றிணைந்த டொன்பாஸ் மற்றும் லுஹான்ஸ் பிராந்தியங்களில் ரஷ்ய ஆதரவு பிரிவினைவாதிகள் சார்பிலேயே ரஷ்யா உரிமை கோரி வருகிறது.

‘ஆக்கிரமிப்பாளர்கள் அழுத்தத்தை அதிகாரிக்க முயற்சிக்கின்றனர். அங்கு நரகமாக உள்ளது என்று கூறுவது மிகையாகாது’ என்று கடந்த வியாழக்கிழமை உரையாற்றிய செலென்ஸ்கி கூறினார்.

லுஹான்ஸ்க் பிராந்தியத்தின் செவெரொடொனட்ஸ்க் நகரில் கடந்த வியாழனன்று நடத்தப்பட்ட கொடிய மற்றும் அர்த்தமற்ற குண்டுவீச்சில் 12 பேர் கொல்லப்பட்டதாகவும் அவர் கூறினார்.

‘மத்திய உக்ரைனில் இருக்கும் ஒடெசா பிராந்தியத்தின் மீது தொடர்ச்சியான தாக்குதல்கள் இடம்பெற்று வருகின்றன. டொன்பாஸ் முற்றாக அழிந்துவிட்டது’ என்றும் அவர் கூறினார்.   நன்றி தினகரன் 
மரியுபோலில் மேலும் 700 உக்ரைன் வீரர்கள் சரண்

உக்ரைனின் மரியுபோலிலுள்ள அஸோவ்ஸ்டல் உருக்காலையில் பதுங்கியிருந்த மேலும் 700 வீரர்கள் தங்களிடம் சரணடைந்துள்ளதாக ரஷ்யா தெரிவித்துள்ளது.

நேட்டோ அமைப்பில் உக்ரைன் இணைவதற்கு எதிர்ப்பு தெரிவித்து வந்த ரஷ்யா, அந்நாட்டின் மீது கடந்த பெப்ரவரி மாதம் 24ஆம் திகதி படையெடுத்தது. மூன்று மாதங்களை எட்டியுள்ள போரில் உக்ரைன் தரப்பில் அதிக இழப்புகள் ஏற்பட்டுள்ளன.

தலைநகர் கியேவ், கார்கீவ் உள்ளிட்ட பகுதிகளைத் தொடர்ந்து மிகப்பெரிய நகரமும், தங்களின் கட்டுப்பாட்டில் இருக்கும் டொன்பாஸ் கிரீமியா தீபகற்பத்துக்கும் இடையே உள்ளதுமான மரியுபோல் நகரைக் கைப்பற்றுவதற்காக ரஷ்யப்படை தொடர்ந்து போரிட்டு வருகிறது. மரியுபோலின் பெரும்பாலான பகுதிகளை கைப்பற்றினாலும் மிகப்பெரும் உருக்காலையில் உக்ரைன் வீரர்கள் பதுங்கியிருந்து சண்டையிட்டு வந்தனர்.

கடந்த இரு மாதங்களாக மரியுபோல் இரும்பாலையில் பதுங்கி போராடி வந்த உக்ரைன் வீரர்கள், வேறுவழியின்றி தற்போது ரஷ்யாவிடம் சரணடைந்துள்ளனர்.

கடந்த திங்கள் இரவு 959 பேர் சரணடைந்த நிலையில் மேலும் 771 வீரர்கள் சரணடைந்துள்ளதாகவும் இதனால் தற்போது 1,730 உக்ரைன் வீரர்கள் தங்கள் கட்டுப்பாட்டில் இருப்பதாகவும் ரஷ்ய பாதுகாப்புத் துறை தகவல் தெரிவித்துள்ளது. இவர்களில் 80 பேர் காயமடைந்திருப்பதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சரணடைந்த ஒவ்வொரு வீரரிடமும் விசாரணை நடத்தப்படும் என்றும் தெரிகிறது. சரணடைந்த வீரர்கள், டொனட்ஸ்க் குடியரசு கட்டுப்பாட்டில் உள்ள ஒலியோ நிவ்காவில் உள்ள சிறைக்கு கொண்டு செல்லப்படுகின்றனர்.

உக்ரைன் வீரர்கள் சரணடைந்துள்ளது குறித்து உலக செஞ்சிலுவைச் சங்கம் பதிவு செய்துள்ளது. அவர்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்பட வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளது.   நன்றி தினகரன் 
பைடனின் ஆசிய பயணம் ஆரம்பம்

அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் நேற்று தென் கொரியாவுக்கு பயணமானார். தொடர்ந்து அவர் இன்று ஜப்பானுக்குப் பயணிக்கவுள்ளார்.

அமெரிக்க ஜனாதிபதியாக பொறுப்பேற்ற பின் பைடன் ஆசியாவுக்கு மேற்கொள்ளும் முதல் பயணம் இதுவாகும். ஆசியாவில் அமெரிக்காவின் தலைமைத்துவத்தை உறுதிப்படுத்த அவர் முனைகிறார். 

அத்துடன் சுதந்திரமான, தடையற்ற இந்தோ–பசிபிக் வட்டாரத்தை உறுதிசெய்யும் பைடன் நிர்வாகத்தின் நோக்கத்தையும் அவர் முன்வைப்பார்.  

அவரது வருகையின்போது வட கொரியா அணுவாயுதச் சோதனையை நடத்தக்கூடும் என்ற அச்சம் நிலவுகிறது. 

எந்த நேரத்திலும் அணுவாயுதச் சோதனையை நடத்த வட கொரியா தயாராய் இருப்பதாகத் தென் கொரிய உளவுத் துறை எச்சரித்துள்ளது. 

அணுவாயுத நாடான வட கொரியா, வட்டாரத்தின் பாதுகாப்புக்கு விடுக்கும் மிரட்டல் குறித்தும் பைடனின் வருகையின்போது பேசப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

வட கொரியா ஏற்கனவே இந்த ஆண்டில் சாதனை எண்ணிக்கையாக 16 ஏவுகணைச் சோதனைகளை நடத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

நன்றி தினகரன் 
அணு ஆயுதச் சோதனை நடத்த வடகொரியா தயார்

வட கொரியா அணுவாயுதச் சோதனையை நடத்துவதற்குத் தயாராக இருப்பதாக செய்தி வெளியாகியுள்ளது.

அதற்குப் பொருத்தமான நேரத்தை எதிர்பார்த்து அது காத்துள்ளது என்று தென் கொரியாவின் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் கூறியுள்ளார்.

தென் கொரியாவின் தேசிய உளவுச் சேவைப் பிரிவுக்கு அவர் விளக்கம் தந்துள்ளார்.

வட கொரியா கொவிட்–19 நோய் பரவலால் பாதிக்கப்பட்டிருந்தாலும் அதன் அணுவாயுதத் தயார்நிலையில் மாற்றமில்லை என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் இன்று தென் கொரியாவுக்குப் பயணம் மேற்கொள்ளும் நேரத்தில் இந்தச் செய்தி வெளியாகியுள்ளது.

ஜனாதிபதி பைடன், தென் கொரியாவுக்கும் ஜப்பானுக்கும் வருகைபுரியும் நேரத்தில் வட கொரியா அணுவாயுதச் சோதனையை நடத்தக்கூடும் என்று அமெரிக்க உளவுத்துறை கூறியிருந்தது.   நன்றி தினகரன் 

வட கொரியா கடைசியாக 2017ஆம் ஆண்டில் அணுவாயுதச் சோதனையை நடத்தியது.   நன்றி தினகரன் பின்லாந்து, சுவீடன் நாடுகள் இணைவதில் நேட்டோ உறுதி

பின்லாந்தும் சுவீடனும் விரைவாக நேட்டோ கூட்டணியில் சேரும் என்று நேட்டோவின் தலைவர் ஜென்ஸ் ஸ்டோல்டன்பர்க் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

அவ்விரு நாடுகளும் நேட்டோவில் சேர்வதைத் துருக்கி எதிர்க்கிறது. 

நேட்டோவில் உள்ள 30 நாடுகளும் ஏகமனதாக ஏற்றுக்கொண்டால் தான் புதிய நாடுகள் அதில் சேரமுடியும். 

பின்லாந்தும் ஸ்வீடனும் குர்தியத் தீவிரவாதிகளுக்கு அடைக்கலம் வழங்கிவருவதாகத் துருக்கி குற்றஞ்சாட்டுகிறது. 

பின்லாந்தும் ஸ்வீடனும் நேட்டோவில் சேர்வதை அமெரிக்கா முழுமையாக ஆதரிக்கிறது. அவ்விரு நாட்டுத் தலைவர்களையும் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் வெள்ளை மாளிகையில் சத்தித்துத் தமது ஆதரவை உறுதிப்படுத்தினார்.

பின்லாந்துக்கும் ஸ்வீடனுக்கும் நேட்டோவில் சேர்வதற்கான எல்லாத் தகுதியும் இருப்பதாக பைடன் கூறினார்.

உக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பை அடுத்தே இந்த இரு நாடுகளும் நேட்டோவில் இணைவதற்கு விண்ணப்பித்துள்ளன. எனினும் நேட்டோவை அச்சுறுத்தலாக கருதும் ரஷ்யா, அந்த கூட்டணி விரிவுபடுத்தப்படுவதும் விளைவுகளை ஏற்படுத்தும் என்று எச்சரித்துள்ளது.   நன்றி தினகரன் 

அமெரிக்கா, ஐரோப்பா, கனடாவில் குரங்கம்மை நோய் சம்பவம் பதிவு

குரங்கம்மை நோய் ஐரோப்பிய நாடுகள் மற்றும் அமெரிக்கா, கனடா மற்றும் அவுஸ்திரேலியாவில் பரவி உள்ளது பற்றி விசாரணைகள் நடத்தப்பட்டு வருவதாக சுகாதார நிர்வாகங்கள் மற்றும் உள்ளூர் ஊடகங்களை மேற்கோள்காட்டி செய்தி வெளியாகியுள்ளது.

பிரான்ஸ், இத்தாலி, சுவீடன் மற்றும் அவுஸ்திரேலியாவில் புதிய சம்பவங்கள் பதிவாகியுள்ளன.

அமெரிக்கா, ஸ்பெயின் மற்றும் போர்த்துக்கலில் கடந்த புதன்கிழமை குரங்கம்மை சம்பவங்கள் பதிவான நிலையிலேயே தற்போது புதிய நாடுகளுக்கு பரவியுள்ளது. அதேபோன்று 13 சந்தேகத்திற்கு இடமான சம்பவங்கள் குறித்து கனடா விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.

குரங்கம்மை நோய் மத்திய மற்றும் மேற்கு ஆபிரிக்காவின் தொலைதூர பகுதிகளில் பொதுவாகப் பரவக்கூடிய நோயாக உள்ளது.

பயணங்களுடன் தொடர்புபட்டே இந்த பிராந்தியங்களுக்கு வெளியில் இந்த நோய் பரவுகிறது.

மிக அரிதான வைரஸ் தொற்றாக இருக்கும் குரங்கம்மை லேசான பாதிப்பை ஏற்படுத்தக்கூடியது என்பதோடு பெரும்பாலான சம்பவங்களில் சில வாரங்களில் குணமடையக்கூடியதாக உள்ளது என்று பிரிட்டன் தேசிய சுகாதார சேவை குறிப்பிட்டுள்ளது.

இது மக்களிடையே இலகுவாக பரவாது என்பதோடு பொதுமக்களிடையே பரந்த அளவில் அச்சுறுத்தலை ஏற்படுத்து சாத்தியம் குறைவாகவே உள்ளது.

கடந்த மே 7ஆம் திகதி பிரிட்டனில் முதல் தொற்று சம்பவம் பதிவானது. அந்த நோயாளி அண்மையில் நைஜீரியாவில் இருந்து பயணித்தவராவார். அவர் இங்கிலாந்துக்கு பயணிப்பதற்கு முன்னரே தொற்றினால் பாதிக்கப்பட்டிருக்கலாம் என்று பிரிட்டன் சுகாதார நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

பிரிட்டனில் தற்போது உறுதி செய்யப்பட்ட ஒன்பது தொற்று சம்பவங்கள் பதிவாகியுள்ளன. இதன் மூலங்கள் இன்னும் உறுதி செய்யப்படாத நிலையில் இவை உள்நாட்டில் பரவி இருக்க வாய்ப்பு உள்ளதாக உலக சுகாதார அமைப்பு குறிப்பிட்டுள்ளது.  நன்றி தினகரன் 

No comments: