இலங்கைச் செய்திகள்

பயங்கரவாதிகளை நினைவுகூர அனுமதியில்லை; உயிரிழந்த உறவினரை தனிப்பட்ட ரீதியில் நினைவுகூர அனுமதி

இலங்கை வருகிறார் அமெரிக்க உயரதிகாரி

ரயில் பயணச்சீட்டுக்கள் ஒன்லைனில் விநியோகம்

மைத்திரிபால சிறிசேன 20 இல் யாழ். விஜயம்

 70 வயதில் முதுகலை பட்டம் பெற்ற முதியவர்



பயங்கரவாதிகளை நினைவுகூர அனுமதியில்லை; உயிரிழந்த உறவினரை தனிப்பட்ட ரீதியில் நினைவுகூர அனுமதி

பயங்கரவாதிகளை நினைவுகூர அனுமதியில்லை; உயிரிழந்த உறவினரை தனிப்பட்ட ரீதியில் நினைவுகூர அனுமதி-Terrorists are not Allowed to be Commemorated-Death of a Relative Occurred During the War Can-HR Commission Recommended

- கையளிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழு இடைக்கால அறிக்கையில் பரிந்துரை
ஜூன் மாதத்துக்குள் ஆணைக்குழுவின் இறுதி அறிக்கை ஜனாதிபதியிடம்

பயங்கரவாதிகளை நினைவுகூர அனுமதியில்லை என்றும் யுத்தத்தின் போது உறவினரொருவர் உயிரிழந்திருப்பாராயின், தனிப்பட்ட ரீதியில் அவரை நினைவுகூர அனுமதி வழங்குமாறும், மனித உரிமை மீறல்கள் இடம்பெற்றனவா என்பது குறித்து விசாரிப்பதற்காக ஜனாதிபியினால் நியமிக்கப்பட்ட ஆணைக்குழு பரிந்துரை செய்துள்ளது.

முந்தைய மனித உரிமைகள் ஆணைக்குழுக்கள் மற்றும் ஏனைய குழுக்களினது தீர்மானங்களின் மதிப்பாய்வு மற்றும் எதிர்கால நடவடிக்கைகள் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவின் இரண்டாவது இடைக்கால அறிக்கை, உயர் நீதிமன்ற நீதியரசர் ஏ.எச்.எம்.டீ. நவாஸ், வெள்ளிக்கிழமை (18) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் வைத்து, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் கையளித்தார்.

மனித உரிமைகள், சர்வதேச மனிதாபிமானச் சட்ட மீறல்கள் மற்றும் அதுபோன்ற கடுமையான குற்றங்கள் பற்றிய குற்றச்சாட்டுகளை விசாரிப்பதற்காக நியமிக்கப்பட்ட ஆணைக்குழுக்கள் அல்லது ஏனைய குழுக்கள் கண்டறிந்த தகவல்கள் தொடர்பான விசாரணைகள், ஆராய்ச்சிகள் மற்றும் அறிக்கையிடல்கள் அல்லது உரிய நடவடிக்கைகளை எடுப்பதற்காக, ஜனாதிபதியினால் 2021 ஜனவரி 21ஆம் திகதியன்று, உயர் நீதிமன்ற நீதியரசர் ஏ.எச்.எம்.டீ. நவாஸ் தலைமையிலான ஆணைக்குழுவொன்று நியமிக்கப்பட்டது.

அந்த ஆணைக்குழுவின் முதலாவது அறிக்கை, 2021 ஜூலை 21ஆம் திகதியன்று ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டது.

யுத்தத்துக்கு முகங்கொடுத்த மற்றும் அது தொடர்பான அனுபவங்களைக் கொண்ட யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களில் வசிக்கும் 75 பேர் வழங்கிய சாட்சியங்களின் அடிப்படையிலான பரிந்துரைகள் அடங்கிய 107 பக்கங்களுடன் இந்த இரண்டாவது அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது.

2015ஆம் ஆண்டில் நியமிக்கப்பட்ட பரணகம ஆணைக்குழு கண்டறிந்த விடயங்களை உடன் விசாரித்து, அது தொடர்பில் வழக்குத் தாக்கல் செய்யவோ அல்லது நட்டஈடு வழங்கவோ பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. பொருளாதார ரீதியில் தலைநிமிர அரசாங்கத்தின் உதவி அவசியமென்று, ஆணைக்குழு முன் சாட்சியமளித்துள்ள நபர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர் என்றும் ஆணைக்குழு தனது பரிந்துரையில் குறிப்பிட்டுள்ளது.

பயங்கரவாதிகளை நினைவுகூர அனுமதியில்லை என்றும் யுத்தத்தின் போது உறவினரொருவர் உயிரிழந்திருப்பாராயின், தனிப்பட்ட ரீதியில் அவரை நினைவுகூர அனுமதி வழங்கவும், ஆணைக்குழு பரிந்துரை செய்துள்ளது. அத்துடன், ஜூன் மாதத்துக்குள் ஆணைக்குழுவின் இறுதி அறிக்கையை ஜனாதிபதியிடம் கையளிக்க முடியுமென்று, அதன் தலைவரும் உயர்நீதிமன்ற நீதியரசருமான ஏ.எச்.எம்.டீ. நவாஸ் குறிப்பிட்டார்.

ஜனாதிபதியின் செயலாளர் காமினி செனரத் இதன்போது பங்கேற்றிருந்தார்.    நன்றி தினகரன் 



இலங்கை வருகிறார் அமெரிக்க உயரதிகாரி

மனித உரிமைகள், வர்த்தகம் மற்றும் முதலீடு சம்பந்தமாக பிரதானமாக கவனம் செலுத்தப்படும் பேச்சுவார்த்தைக்காக அமெரிக்காவின் உயர் அதிகாரி ஒருவர் இலங்கைக்கு விஜயம் செய்ய உள்ளார்.

அமெரிக்காவின் தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான உதவி இராஜாங்க செயலாளர் டொனால்ட் லு (Donald Lu) எதிர்வரும் மார்ச் மாதம் இலங்கைக்கு விஜயம் செய்ய உள்ளார்.

கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் உதவி இராஜாங்க செயலாளராக பதவியேற்ற பின்னர், அவர் முதல் முறையாக இலங்கைக்கு விஜயம் செய்கிறார். டொனால்ட் லு, நேற்றுமுன்தினம் தொலைபேசியில் செய்தியாளர்கள் சிலருடன் பேசியுடன் அடுத்த மாதம் பங்களாதேஷ் மற்றும் இலங்கைக்கு விஜயம் செய்ய உள்ளதாக கூறியுள்ளார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மற்றும் உலக தமிழர் பேரவை ஆகிய தரப்புடன் கடந்த நவம்பர் மாதம் வொஷிங்டனில் நடைபெற்ற பேச்சுவார்த்தை ஒன்றிலும் டொனால்ட் லு கலந்துக்கொண்டார்.   நன்றி தினகரன் 




ரயில் பயணச்சீட்டுக்கள் ஒன்லைனில் விநியோகம்

நேற்று முதல் ஆரம்பித்து வைப்பு

பயணிகளுக்கு சிறந்த சேவையை வழங்கும் நோக்கில் நேற்று முதல் ஒன்லைனில் ரயில் பயணச்சீட்டுகளை வழங்க இலங்கை ரயில்வே திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது.

பயணிகள் இணையத்தில் பயணச்சீட்டை முன்பதிவு செய்ய முடியும் அல்லது கையடக்க தொலைபேசி செயலி ஊடாக ஆசனத்தை முன்பதிவு செய்ய முடியும் என இலங்கை ரயில்வே சேவையின் பொது முகாமையாளர் தம்மிக்க ஜயசுந்தர தெரிவித்தார். இதற்கான கையடக்கத் தொலைபேசி செயலி விரைவில் அறிமுகப்படுத்தப்படும். பயணிகளின் தேவைக்கு ஏற்ப எதிர்காலத்தில் இந்த வசதி கிடைக்கும். பயணிகள் கடன் அட்டைகளை பயன்படுத்தியும் பணம் செலுத்த முடியும் என்றும் அவர் மேலும் கூறினார்.   நன்றி தினகரன் 




மைத்திரிபால சிறிசேன 20 இல் யாழ். விஜயம்

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேன யாழ். மாவட்டத்துக்கான விஜயத்தை மேற்கொள்ளவுள்ளார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் யாழ். மாவட்ட மாநாடு எதிர்வரும் 20ஆம் திகதி இடம்பெறவுள்ள நிலையில், அவர் இந்த விஜயத்தை  மேற்கொள்ளவுள்ளார். இம்மாநாட்டுக்கான அழைப்பிதழை, யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் பாராளுமன்ற குழுக்களின் பிரதித் தவிசாளருமான அங்கஜன் இராமநாதன் நேற்று உத்தியோகபூர்வமாக கையளித்தார். இதன்போது, யாழ். மாவட்ட மக்கள் கடந்த காலத்தில் தமக்கு வழங்கிய ஆதரவை நினைவுகூர்ந்த மைத்திரிபால சிறிசேன, யாழ். மாவட்ட மக்களை சந்திப்பதற்கு ஆர்வமாக இருப்பதாகவும் தெரிவித்தார்.   நன்றி தினகரன் 




70 வயதில் முதுகலை பட்டம் பெற்ற முதியவர்

யாழ்ப்பாணத்தில் 70 வயதில் நபர் ஒருவர் முதுகலை பட்டம் பெற்று சாதனை படைத்துள்ளார். இதற்கு பெரும்பான்மையான சிங்கள மக்கள் பாராட்டுத் தெரிவித்துள்ளனர்.

யாழ்ப்பாணத்தை சேர்ந்த நபர் ஒருவர் தனது 70ஆவது வயதில் பட்டம் பெற்றதை அவரது மகன் தனது முக நூலில் பதிவிட்டுள்ளார்.

“எனது தந்தை தனது 70ஆவது வயதில் MPA பட்டம் பெற்றுள்ளார்” என மகன் பதிவிட்டுள்ளார்.

வைத்தியரான மகனின் முகநூல் பக்க பதிவை சிங்கள முக நூல் பக்கங்கள் மீள் பதிவு செய்து வெளியிட்டுள்ளன. அத்துடன் கல்விக்கு வயதில்லை என்பதனை அவர் உண்மையாக்கியுள்ளார் என பலரும் 70 வயதான அவரை பாராட்டியுள்ளனர்.

எனினும் இந்த கற்கையின் பெறுமதியை இன்றைய காலப்பகுதியினர் மதிக்காமல் பணம் செலுத்தி பட்டங்களை பெற்றுக் கொள்வதாக பலரும் குறிப்பிட்டுள்ளனர்.

அதன் மதிப்பை உணர்ந்தவர் வயதை பொருட்படுத்தாமல் சாதித்து காட்டியுள்ளாரென பதிவிட்டுள்ளனர்.   நன்றி தினகரன் 






No comments: