உற்சவ காலம் தொடங்குகிறது ! அன்று யாத்திரை ! ! – இன்று மெய்நிகர் ! ! ! அவதானி


நல்லூர் கந்தசுவாமி கோயில், மடுத்திருத்தலம், முதலானவற்றில் வருடாந்த உற்சவம் தொடங்கும்போது, அதற்கான தயாரிப்பு வேலைகளை பக்தர்களும் அடியாளர்களும்  ஆரம்பித்துவிடுவார்கள்.

அதுபோன்று  கச்சதீவு உற்சவம்,  ஹஜ்பெருநாள் வரும் காலங்களில் கச்சதீவு செல்வதற்கும் மக்காவுக்கு பயணிப்பதற்கும்  யாத்திரீகர்கள் தயாராகிவிடுவார்கள்.

 காலம் காலமாக இது நடந்தேறிவருகிறது.

இலங்கையில் பல வருடங்களாக நீடித்திருந்த  உள்நாட்டுப்போர் 2009


ஆம் ஆண்டு மே மாதம் நடுப்பகுதியில் முடிவுக்கு வந்ததையடுத்து, கடந்த பன்னிரண்டு வருடங்களாக மற்றும் ஒரு  உற்சவத்திற்கு இலங்கை அரசும்,  அதனை ராஜபக்‌ஷ காலத்தை மாத்திரம் தவிர்த்து,  எதிர்த்துவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரும், கஜேந்திரகுமாரின் தமிழ்த்தேசிய முன்னணியினரும் ஐக்கிய நாடுகள் சபைக்கு முறையிடுவதற்காக யாத்திரையை ஆரம்பித்துவிடுவார்கள்.

இந்த யாத்திரை காலம் பெரும்பாலும் ஒவ்வொரு வருடமும் மார்ச் மாதத்தில் வரும்.

ஐக்கிய நாடுகளின் மனித உரிமைப்பேரவையின் கூட்டத்தொடர் வருடாந்தம் பெப்ரவரி மாதம் முதல் மார்ச் மாதம் வரையில் நடைபெற்று வருகிறது.

இதற்குச்செல்வதற்கு அரச தரப்பும், எதிரணித்தரப்பும் கடந்த தயாராகிவிடும்.

எனினும் கடந்த 2020 ஆம் ஆண்டு முதல் கொவிட் பெருந்தொற்று பரவியதையடுத்து மெய்நிகர் ஊடாக அனைத்து தரப்புகளும் பேசத்தொடங்கியிருக்கின்றன.

விமான யாத்திரைக்கு பயணச்செலவு. மெய்நிகர் சந்திப்புக்கு செலவே இல்லை.

அவ்வளவுதான் வித்தியாசம் !

இலங்கையின் நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகளை மேம்படுத்துவது தொடர்பிலான அறிக்கையை ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் ஒவ்வொரு வருடமும் வெளியிடுவார்.

அதற்குத்  தகுந்தாற்போல் இலங்கை அரசும் மாற்று அறிக்கையை அல்லது அவகாசம் கோரும் வேண்டுகோளை விடுத்துவரும்.

அப்போது  இலங்கை அரசுக்கு சில நாடுகள் துணை நிற்கும்.  இம்மாதம் தொடங்கவிருக்கும் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைப் பேரவையின் கூட்டத்தொடரில் எதிர்வரும் மார்ச் மாதம் 03 ஆம் திகதியன்று,  இலங்கை தொடர்பான எழுத்து மூல அறிக்கையை ஆணையாளர் மிச்சேல் பச்லெட் சமர்ப்பித்து விவாதத்தை தொடக்கிவைப்பார்.

அதற்கு முன்னர் அந்த அறிக்கை இலங்கை அரசின் கவனத்திற்கு கிடைக்கவிருப்பதாகவும், அதற்கான விரிவான பதிலை விவாதம் தொடங்குவதற்கு முன்னர் அனுப்பவிருப்பதாகவும் வெளிவிவகார அமைச்சர் ஜீ. எல். பீரிஸ் அண்மையில் தெரிவித்துள்ளார்.

போர் முடிவுக்கு வந்த காலம் முதல்,  மனித உரிமை மீறல்கள், காணாமல் போனவர்கள் விவகாரம், அரசியல் கைதிகளின் விடுதலை பற்றியெல்லாம் தொடர்ந்து பேசப்படுகிறது.

2009 இற்குப்பின்னர்  இலங்கையில் சில ஆட்சி மாற்றங்களும் நடந்துவிட்டன.

மகிந்த ராஜபக்‌ஷ இரண்டு தடவைகள் நாட்டின் அதிபரானார். தற்போது அவரது தம்பி கோத்தபாய ராஜபக்‌ஷ அதிபராக பதவி வகிக்கிறார்.

இடையில் நல்லாட்சி அரசின் காலம் என்ற பெயரில் பொது வேட்பாளராக களம் இறக்கப்பட்ட மைத்திரிபால சிறிசேன அதிபராகவும் ரணில் விக்கிரமசிங்கா பிரதமராகவும் பதவியில் இருந்தனர். இவர்களுக்கு அனுசரணையாக தமிழ்த்தேசியக்கூட்டமைப்பும் இதர மலையக தமிழ்க்கட்சிகளும்  இயங்கின.

ஆனால்,  ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைப்பேரவை முன்னெடுத்து வந்த நடவடிக்கைகளில் ஏதும் பயன் – பலன் கிட்டியிருப்பதாகத் தெரியவில்லை.

ராஜபக்க்ஷக்கள் மீதும் சில இராணுவ தளபதிகள் மீதும் போர்க்குற்றங்கள் தொடர்ந்து சுமத்தப்பட்டன.  ஆயினும் இதுவரையில் எவரும் தண்டிக்கப்படவில்லை.

மனித உரிமைப்பேரவையின் தரப்பில் போர்க்குற்றங்கள் சுமத்தப்படும் வேளைகளில், விடுதலைப்புலிகள் தரப்பில் நிகழ்த்தப்பட்ட போர்க்குற்றங்கள் குறித்தும்,  சிறுவர் போராளிகள் பற்றியும் இலங்கை அரசு தரப்பில் சொல்லப்பட்டது.

இப்படியே  ஒரு தசாப்த காலம் உருண்டோடிவிட்டது.

இம்முறை இலங்கைக்கு எதிரான மற்றும் ஒரு காட்டமான பிரேரணையை முன்வைப்பதற்கு பிரித்தானிய தரப்பு தயராகியிருப்பதாகவும் செய்திகள் கசிந்துள்ளன.

இதேவேளை, இறுதிப்போர் காலத்தில் களத்திலிருந்த இராணுவத் தளபதிகளில் ஒருவரான மேஜர் ஜெனரல் சாகி கல்லகே, நடக்கவிருக்கும் கூட்டத்தொடரில் இலங்கைக்கு பேராபத்து இருப்பதாக ஆரூடம் கூறியுள்ளார்.

இலங்கை  இராணுவத் தரப்பின் பாஷையில்  பயங்கரவாதிகளை தோற்கடித்திருந்தாலும்,  சர்வதேச சமூகத்தினதும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையினதும்  அச்சுறுத்தலுக்கு இலங்கை அரசு ஆளாகியிருப்பதாகவே அவரது கூற்றுக்கள் புலப்படுத்துகின்றன.

ஒவ்வொரு ஆண்டும் மார்ச் மாதம் வரும்போது இலங்கை அரசுக்கு அது கண்டம் வரும் காலமாகவே அமைந்துவிடுகிறது.  எனினும் இக்கண்டத்திலிருந்து சாதுரியமாக கடந்து சென்றுவிடுகின்றது.

ஆனால், இது எவ்வளவு காலத்திற்கு…? பொறுப்புக்கூறல் விடயத்திலும், மனித உரிமைப்பேரவை முன்வைக்கும் குற்றச்சாட்டுக்களுக்கு தக்க பதில் அளிப்பதிலும் இலங்கை அரசு சரியான பொறிமுறையை உருவாக்கவில்லை என்பதே,  போர்க் காலத்தில் பணியிலிருந்த தளபதிகள் சரத் பொன்சேக்கா, மற்றும் சாகி கல்லகே ஆகியோரின் கூற்றாக இருந்து வருகிறது.

கடந்த ஆண்டும் இதே காலப்பகுதியில்,  ஐ.நா. மனித உரிமை பேரவை ஆணையாளர் மிச்சேல் பட்டேல்,  இலங்கைக்கு எதிரான குரலை தமது அறிக்கையின் மூலம் எழுப்பியிருந்தார்.

நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் விவகாரங்களில் இலங்கை அரசு தொடர்ந்தும் தோல்விகளையே சந்தித்து வந்திருப்பதாக அரசியல் ஆய்வாளர்கள் தெரிவித்து வருகின்றனர்.

இது இவ்விதமிருக்க,  வடக்கிலிருக்கும் இராணுவம்,  நில ஆக்கிரமிப்பிலிருந்து தன்னை முழுமையாக விடுவித்துக்கொள்ளாமல்,  சில சமூகப்பணிகளையும் மேற்கொண்டுவருகின்றது.

வீடற்றவர்களுக்கு வீடு அமைத்துக் கொடுத்தல்,  ஏழை மாணவர்களுக்கு பாடசாலை உபகரணங்கள் வழங்குதல், பெருந்தொற்றுக்கால நிவாரண உதவி பெற்றுக் கொடுத்தல் முதலான செயற்பாடுகளில் ஈடுபட்டு வருகின்றது.

அத்துடன் அரச மரங்களை நடுவதிலும் அக்கறை காட்டிவருகிறது.

அண்மையில் முல்லைத்தீவிலிருந்து கொக்கிளாய் செல்லும் பாதையில் செழித்து வளர்ந்திருந்த வேப்பமரத்தை வெட்டித்தறித்துவிட்டு, அவ்விடத்தில் அரச மரத்தை நட்டுள்ளனர்.  விரைவில் அவ்விடத்திற்கு ஒரு புத்தர் சிலை வந்துவிடலாம்.

இலங்கை இராணுவத்தின் பொறுப்புக்கூறல் செயல்பாடுகள் இவ்வாறுதான்  அமைந்துள்ளன.

ஒவ்வொரு வருடமும் வரும் மார்ச் மாதத்திலும் ஜெனீவா கூட்டத்தொடர் பேசுபொருளாகவிருக்கும். அதன்பின்னர் வரவிருக்கும் புதிய ஆண்டின் பெப்ரவரி மாதம் வரையில்  மக்கள் வேறு விடயங்களை பேசிக்கொண்டிருப்பார்கள்.

எனவே ஆலய உற்சவங்கள் போன்று இந்த கூட்டத்தொடர் நிகழ்வுகளும் மாறியிருப்பதுதான் எம் காலத்து காட்சி.

இறுதிப்போர் நடந்த பிரதேசத்தில் பலருடைய உடலில் இன்னமும் எறிகணைத்துகள்கள் தங்கியிருக்கின்றன. அதனால், அவர்களுக்கிருக்கும் உடல் உபாதைகளும் இந்த தொடர்பேச்சுக்கள் போன்று தொடர்ந்து இருந்துவருகின்றன.

இதுபற்றி யார் பேசுவார்…?

No comments: