உலகச் செய்திகள்

உக்ரைனில் இருந்து பிரஜைகளை வெளியேற பல நாடுகள் உத்தரவு

பாகிஸ்தான் சிறுபான்மையினரை காக்க ஐ.நாவுக்குக் கடிதம்

மத நிந்தனை குற்றச்சாட்டில் பாகிஸ்தான் ஆசிரியருக்கு ஆயுள் சிறை

உக்ரைன் மீதான தாக்குதலுக்கு ரஷ்யா நியாயம் தேடுவதாக அமெ. குற்றச்சாட்டு

 'ரஷ்ய படைகள் பின்வாங்கவில்லை' அமெரிக்கா அறிவிப்பு

சகோதரியைக் கொன்றவரை விடுவித்தது பாகிஸ்தான் நீதிமன்றம்

டிரம்பின் புதிய சமூக ஊடகம்: 500 பேர் பயன்படுத்தி சோதிப்புஉக்ரைனில் இருந்து பிரஜைகளை வெளியேற பல நாடுகள் உத்தரவு

ரஷ்யாவின் உக்ரைன் மீதான படையெடுப்பு விரைவில் இடம்பெறலாம் என்று மேற்குல நாடுகள் எச்சரித்திருக்கும் நிலையில் உக்ரைனில் இருந்து தமது பிரஜைகளை வெளியேறும்படி பல நாடுகளும் வலியுறுத்தியுள்ளன.

அந்த நாட்டை விட்டு வெளியேறும்படி தமது பிரஜைகளுக்கு அறிவுறுத்தி இருக்கும் நாடுகளில் அமெரிக்கா, பிரிட்டன் மற்றும் ஜெர்மனியும் இடம்பெற்றுள்ளன.

உக்ரைன் எல்லையை ஒட்டி சுமார் 100,000 துருப்புகளை ரஷ்யா குவித்திருந்தபோதும் உக்ரைனை தாக்கும் திட்டம் இல்லை என்று அந்த நாடு தொடர்ந்து மறுத்து வருகிறது.

ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினுடன் தொலைபேசியில் உரையாடி இருக்கும் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன், எந்த படையெடுப்புக்கும் விலைகொடுக்க வேண்டி இருக்கும் என்று மீண்டும் ஒருமுறை எச்சரித்துள்ளார்.

எந்த நேரத்திலும் இந்தப் படையெடுப்பு இடம்பெறலாம் என்று வெள்ளை மாளிகை எச்சரித்துள்ளதோடு வானில் இருந்து குண்டு வீசுவதன் மூலம் இந்தத் தாக்குதல் ஆரம்பிக்கப்படலாம் என்று அது குறிப்பிட்டுள்ளது. இந்தக் குற்றச்சாட்டுகள் ஆத்திரத்தை தூண்டும் செயல் என்று ரஷ்யா குறிப்பிட்டுள்ளது.

இந்நிலையில் உக்ரைனில் இருந்து தமது நாட்டு பிரஜைகளை வெளியேறும்படி அவுஸ்திரேலியா, இத்தாலி, இஸ்ரேல், நெதர்லாந்து மற்றும் ஜப்பான் உட்பட பல நாடுகளும் வலியுறுத்தியுள்ளன. சில நாடுகள் தமது இராஜதந்திர ஊழியர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினரையும் வெளியேற்றியுள்ளன.

அமெரிக்காவும் ஒருசில முக்கியத் தூதரக ஊழியர்களைத் தவிர, மற்றவர்களை இடம் மாற்றியுள்ளது. உக்ரைன் வீரர்களுக்கு பயிற்சி அளித்து வந்த சுமார் 150 அமெரிக்க வீரர்களை அந்நாட்டு அரசு திருப்பி அழைத்துள்ளது.

அதேபோன்று, கனடா தனது தூதரக ஊழியர்களையும் போலந்து எல்லைக்கு அருகில் உள்ள லிவிவ் நகருக்கு மாற்றுவதாக கனடிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

உக்ைரனின் கிழக்கு எல்லையில் ரஷ்யா தொடர்ந்து படைகளை நிலைநிறுத்தி வருவதால் பதற்றம் படிப்படியாக அதிகரித்துள்ளது. ரஷ்ய படை வீரர்கள் உக்ரைனின் வடக்கே உள்ள பெலாரஸில் இராணுவப் பயிற்சிகளை நடத்தி வருகின்றனர் எனவும், அதே நேரத்தில் தென்கிழக்கில் உள்ள அசோவ் கடலில் கடற்படை பயிற்சிகள் மேற்கொண்டு வருகிறது எனவும், இது உக்ரைனின் கடல் மார்க்கத்தை ரஷ்யா தடுப்பதற்கு என்ற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது.    நன்றி தினகரன் 

 பாகிஸ்தான் சிறுபான்மையினரை காக்க ஐ.நாவுக்குக் கடிதம்

தொடர்ச்சியான அட்டூழியங்கள் மற்றும் கொடூர குற்றங்களுக்கு முகம்கொடுக்கும் பாகிஸ்தானில் உள்ள சிறுபான்மையினரின் பாதுகாப்புக்காக உடன் தலையிடும்படி ஐ.நா செயலாளர் நாயகம் அன்டோனியோ குட்டரசுக்கு இந்திய உலக மன்றத்தின் தலைவர் புனீத் சிங் சௌதொக் கடிதம் எழுதியுள்ளார்.

“பாகிஸ்தானில் வாழ்கின்ற சிறுபான்மையினரின் பாதுகாப்பிற்காக நீங்கள் உடன் தலையிட வேண்டும் எனக் கோரி இந்தக் கடிதத்தை நான் எழுதுகிறேன்.

அவர்கள் அங்கு தொடர்ச்சியான அட்டூழியம் மற்றும் கொடூர குற்றச்செயல்களுக்கு முகம்கொடுக்கின்றனர்.

சிறுபான்மையினர் குறிப்பாக இந்தியாவுடன் நெருக்கமான உறவைக் கொண்ட ஹிந்து மற்றும் சீக்கியர்கள் துன்புறுத்தப்பட்டு வருகிறார்கள்” என்று அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.   நன்றி தினகரன் 
மத நிந்தனை குற்றச்சாட்டில் பாகிஸ்தான் ஆசிரியருக்கு ஆயுள் சிறை

பாகிஸ்தான் சிந்து மாகாணத்தைச் சேர்ந்த ஒரு இந்து கல்லூரி ஆசிரியருக்கு 50 ஆயிரம் ரூபா அபராதமும் ஆயுள் தண்டனையும் விதித்து பாகிஸ்தான் நீதிமன்றம் ஒன்று தீர்ப்பளித்திருப்பதாக டெய்லி பாகிஸ்தான் பாத்திரிகை கடந்த செவ்வாய்க்கிழமை செய்தி வெளியிட்டிருந்தது. மத நிந்தனை செய்த குற்றச்சாட்டின் பேரிலேயே இத்தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

அரசு டிகிரி கல்லூரியின் ஆசிரியரான நூட்டன் லால் என்பவரே இக் குற்றச்சாட்டின் பேரில் 2019 ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டார். இவரது பிணை மனுக்கள் இரண்டு தடவைகளும் நீதிமன்றத்தால் நிராகரிக்கப்பட்டன. கடந்த 2019 ஆம் ஆண்டு ஒரு மாணவன் ஒரு உள்ளூர் பாடசாலையில் மத நிந்தனை இடம்பெற்றிருப்பதாக சமூக வலைத்தளமொன்றில் வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்ததையடுத்தே இவர் கைதுசெய்யப்பட்டதாகத் தெரிகிறது.

பாகிஸ்தான் சுதந்திரம் பெற்ற 1947 ஆம் ஆண்டு முதல் இதுவரை ஆயிரத்து 415 மத நிந்தனை வழக்குகள் போடப்பட்டிருந்த போதிலும் உண்மையான மத நிந்தனைச் சம்பவங்கள் மிக அதிகம் என்று ஒரு ஆய்வு நிறுவனம் குறிப்பிட்டுள்ளது. 1947 - 2021 காலப் பகுதியில் மாத்திரம் 18 பெண்களும் 71 ஆண்களும் மத நிந்தனைக் குற்றச் சாட்டின் பேரில் கொலைசெய்யப்பட்டிருப்பதாகவும் உண்மையான எண்ணிக்கை இன்னும் அதிகமாகவே இருக்கும் என்றும் 'டோன்' பத்திரிகை தெரிவித்துள்ளது.

பெரும்பாலும் மத நிந்தனை தொடர்பான சம்பவங்களுடன் தொடர்புடையோரில் 70 சதவீதமானோர் பஞ்சாப் மாகாணத்தைச் சேர்ந்தோர் என்பது குறிப்பிடத்தக்கது.   நன்றி தினகரன் உக்ரைன் மீதான தாக்குதலுக்கு ரஷ்யா நியாயம் தேடுவதாக அமெ. குற்றச்சாட்டு

உக்ரைன் மீது ஆக்கிரமிப்பு தொடுப்பதற்கான இட்டுக்கட்டப்பட்ட காரணங்களை ரஷ்யா தயாரித்து வருவதாகவும் அந்தத் தாக்குதல் எதிர்வரும் நாட்களில் இடம்பெறலாம் என்றும் அமெரிக்கா குறிப்பிட்டுள்ளது.

இராணுவ நடவடிக்கை விரைவாக இடம்பெறக் கூடும் என்றும் ஆனால், இராஜதந்திர தீர்வுக்கான சாத்தியம் இன்னும் இருப்பதாகவும் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் கடந்த வியாழக்கிழமை குறிப்பிட்டிருந்தார்.

இந்த ஆக்கிரமிப்பை நியாயப்படுத்த ரஷ்யா பல வழிகளை பயன்படுத்தக் கூடும் என்று பைடனின் வெளியுறவுக் கொள்கை தொடர்பான பிரதான அதிகாரி சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்தக் கூற்று அடிப்படை அற்றது என்று குறிப்பிட்டிருக்கும் ரஷ்யா, அமெரிக்கா பதற்றத்தை உருவாக்குகிறது என்று குற்றம்சாட்டியுள்ளது.

தனது மேற்கு அண்டை நாடான உக்ரைன் மீது ஆக்கிரமிப்புத் தொடுக்கும் திட்டம் இல்லை என்று ரஷ்யா தொடர்ந்து மறுத்து வருகிறது. உக்ரைன் எல்லையில் இருந்து துருப்புகளை வாபஸ் பெறுவதாக ரஷ்யா கூறுகின்றபோதும், அதனை மேற்கத்தேய நாடுகள் மறுத்துள்ளன.

‘தாக்குதல் தொடுப்பதை நியாயப்படுத்த போலியான நடவடிக்கை ஒன்றில் அவர்கள் ஈடுபடுவது பற்றி நாம் நம்புவதற்கு காரணம் உள்ளது’ என்று வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களை சந்தித்த பைடன் தெரிவித்தார். இதில் தனது நலனுக்காக இட்டுக்கட்டப்பட்ட தாக்குதல் ஒன்றை நடத்தி பதில் தாக்குதல் ஒன்றாக நியாயப்படுத்த ரஷ்யா முயல்வதாகவே குற்றம்சாட்டப்படுகிறது. ரஷ்யாவின் இந்த திசை திருப்பும் திட்டம் பற்றி அமெரிக்கா பல வாரங்களாகக் கூறி வருகிறது.

ரஷ்யா அவ்வாறான நடவடிக்கைக்கு தயாராக இருப்பதாக அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் அன்டனி பிளிங்கன் ஐ.நா பாதுகாப்பு சபையில் குறிப்பிட்டார்.

முன் திட்டமிடப்பட்ட அந்தத் தாக்குதல் என்னவென்று தெரியாதபோதும் ‘ரஷ்யாவுக்குள் பயங்கரவாத குண்டுத் தாக்குதல், பாரிய புதைகுழி கண்டுபிடிப்பு, பொதுமக்கள் மீது ஆளில்லா விமானத் தாக்குதல், போலி அல்லது உண்மையான இரசாயன ஆயுதங்களை பயன்படுத்துவது’ உட்பட சாத்தியங்கள் உள்ளன என்று அவர் சுட்டிக்காட்டினார்.

அவ்வாறான சம்பவத்திற்கு பின் ரஷ்யா ஒரு நாடகமாக உக்ரைனில் உள்ள ரஷ்யர்களை பாதுகாப்பதற்கு அவசரக் கூட்டம் ஒன்றை நடத்தி ரஷ்ய ஏவுகணைகள் மற்றும் குண்டுகள் உக்ரைனை இலக்கு வைக்கக் கூடும் என்று பிளிங்கன் குறிப்பிட்டுள்ளார்.

இந்தக் குற்றச்சாட்டுகளுக்கு அமெரிக்கா எந்த ஆதாரத்தையும் வெளியிடவில்லை. எனினும் சிலர் நான் கூறுவது பற்றி கேள்வி எழுப்பலாம். ‘ஆனால், ஒன்றை தெளிவாகக் கூறிக்கொள்கிறேன், நான் இங்கு போரை ஆரம்பிக்க வரவில்லை. அதனை தடுக்கவே வந்தேன்’ என்று பாதுகாப்பு சபையில் பிளிங்கன் குறிப்பிட்டார். ஏனைய மேற்குலகத் தலைவர்களும் இந்தக் கூற்றை பிரதிபலிக்கும் வகையில் கருத்து வெளியிட்டனர். ‘முன் திட்டமிடப்பட்ட ஆயுதத் தாக்குதல் ஒன்று பற்றி’ நேட்டோ செயலாளர் நாயகம் ஜேன்ஸ் ஸ்டொல்ட்பேர்க் எச்சரித்ததோடு, பிரிட்டன் வெளியுறவுச் செயலாளர் லிஸ் ட்ரஸ் மற்றும் பிரதமர் பொரிஸ் ஜோன்சனும், முன் திட்டமிடப்பட்ட தாக்குதுல் ஒன்று பற்றி குறிப்பிட்டார். உக்ரைன் படை மற்றும் ரஷ்ய ஆதரவு கிளர்ச்சியாளர்கள் இடையே கடந்த வியாழக்கிழமை உக்ரைன் நாட்டின் கிழக்கில் துப்பாக்கிச் சண்டை இடம்பெற்றதை அடுத்தே பதற்றம் அதிகரித்துள்ளது.

கடந்த பல ஆண்டுகளாக நீடிக்கும் போர் நிறுத்தத்தை மீறும் இவ்வாறான துப்பாக்கிச் சண்டைகள் அசாதாரணமானது அல்ல. ஆனால் இந்த வன்முறை தொடர்பில் இரு தரப்பும் பரஸ்பரம் குற்றம்சாட்டியுள்ளன.

ரஷ்ய ஆதரவு பிரிவினைவாதிகள் ஸ்டனிட்சியா லுஹன்ஸ்கா நகரில் உள்ள பாலர் பாடசாலை ஒன்றின் மீது தாக்குதல் நடத்தியதாக உக்ரைன் அதிகாரிகள் குற்றம்சாட்டியுள்ளனர். இதனால் சிறுவர்களின் இசை அறையின் சுவர்கள் இடிந்து மூன்று பெரியவர்கள் காயமடைந்ததாகவும் சிறுவர்கள் பாதிக்கப்படவில்லை என்றும் கூறப்பட்டுள்ளது.

கிளர்ச்சியாளர் கட்டுப்பாட்டில் இருக்கும் பல பகுதிகளில் உக்ரைன் படையினர் ஷெல் தாக்குதல் நடத்தியதாக ரஷ்ய ஆதரவு கிளர்ச்சியாளர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.   நன்றி தினகரன் 'ரஷ்ய படைகள் பின்வாங்கவில்லை' அமெரிக்கா அறிவிப்பு

உக்ரைன் எல்லையில் நிறுத்தப்பட்டிருந்த ரஷ்ய இராணுவ வீரர்கள் சிலர் முகாமிற்கு திரும்பியதற்கான ஆதாரங்கள் இல்லை என அமெரிக்கா தெரிவித்துள்ளது.

உக்ரைன் மீது எந்நேரமும் ரஷ்யா போர் தொடுக்கலாம் என்ற ரீதியில் சர்வதேச ஊடகங்கள் பரபரப்பு செய்திகளை வெளியிட்டு வரும் நிலையில், உக்ரைன் எல்லையில் நிறுத்தப்பட்டிருந்த இராணுவ வீரர்கள் சிலர் முகாமிற்கு திரும்பியதாக ரஷ்யா கடந்த செவ்வாய்க்கிழமை செய்தி வெளியிட்டது.

இந்த நிலையில், இந்த தகவலை அமெரிக்க தரப்பு மறுத்துள்ளது. ரஷ்யா படைகளை பின்வாங்கவில்லை என்றும் போர் மூளும் அபாயம் உள்ளதாகவும் அமெரிக்கா குற்றச்சாட்டை முன்வைத்துள்ளது.

இது குறித்து அமெரிக்க வெளியுறவு செயலாளர் அண்டனி பிளிங்கன் கூறுகையில், 'உக்ரைன் எல்லையில் நிறுத்தப்பட்டிருந்த இராணுவ வீரர்கள் சிலர் முகாமிற்கு திரும்பியதற்கான ஆதாரங்கள் இல்லை.

ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் எப்போது வேண்டுமானாலும் போர் தொடுக்கலாம். அதற்கான படைகளை உக்ரைன் எல்லையில் ரஷ்யா தயார் நிலையிலேயே வைத்துள்ளது. அமெரிக்கா எந்த சூழ்நிலையையும் எதிர்கொள்ள தயாராக உள்ளது' என தெரிவித்தார்.

இதேவேளை, ரஷ்ய படைகள் உக்ரைன் எல்லையில் இருந்து திரும்புவது உறுதிபடுத்தப்படவில்லை என நேட்டோ பொதுச்செயலாளர் ஜென்ஸ் ஸ்டோல்டன்பெர்க் தெரிவித்துள்ளார்.

பிரஸ்சல் நகரில் உள்ள நேட்டோ கூட்டணி அமைப்பு நாடுகளின் தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் அவர் தெரிவிக்கையில்:

ரஷ்ய படைகள் திரும்பப் பெறப்படுகிறதா என்பதைப் பார்க்க வேண்டும். நாங்கள் பார்ப்பது என்னவென்றால், அவர்கள் துருப்புக்களின் எண்ணிக்கையை அதிகரித்துள்ளனர், மேலும் துருப்புக்கள் வரவுள்ளன.

அவர்கள் உண்மையிலேயே படைகளைத் திரும்பப் பெறத் தொடங்கினால், அதை நாங்கள் வரவேற்போம். அவர்கள் எப்போதும் படைகளை முன்னும் பின்னுமாக நகர்த்திக் கொண்டிருப்பதால், படைகள், போர் டேங்கிகள் நகர்வுகளைப் பார்க்கிறோம்.

உண்மையான வெளியேற்றத்தை உறுதிப்படுத்தவில்லை. இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.   நன்றி தினகரன் 
சகோதரியைக் கொன்றவரை விடுவித்தது பாகிஸ்தான் நீதிமன்றம்

பாகிஸ்தானில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி, அந்நாட்டில் 'கௌரவக் கொலை' தொடர்பில் சட்டம் இயற்ற காரணமான சமூக ஊடக நட்சத்திரம் கன்தீல் பலொக் கொலையில் அவரது சகோதரரை பாகிஸ்தான் மேன்முறையீட்டு நீதிமன்றம் ஒன்று விடுவித்துள்ளது.

2016ஆம் ஆண்டு இடம்பெற்ற இந்த கொலையில் அந்தப் பெண்ணின் சகோதரர் முஹமது வசீம் குற்றவாளியாக நிரூபிக்கப்பட்டு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. இதற்கு எதிராக அவர் மேன்முறையீடு செய்தார்.

இந்நிலையில் இந்தக் குற்றச்சாட்டில் இருந்து அவர் முழுமையாக விடுவிக்கப்படுவதாக கிழக்கு நகரான முல்தானில் உள்ள நீதிமன்றம் ஒன்று கடந்த திங்கட்கிழமை தீர்ப்பு அளித்துள்ளது.

அவருக்கு மன்னிப்பு அளிப்பதாக அவரது தாய் நீதிமன்றத்திற்கு அறிக்கை சமர்ப்பித்திருப்பதாக அவரது வழக்கறிஞர் தெரிவித்துள்ளார். இந்த அறிக்கை அடிப்படையிலேயே நீதிமன்றம் அவரை விடுவித்ததா என்பது உறுதி செய்யப்படவில்லை.

சமூக ஊடக செயற்பாடுகள் காரணமாக 26 வயதான தனது சகோதரியை கழுத்து நெரித்துக் கொன்றதாக வசீம் ஒப்புக்கொண்டார்.   நன்றி தினகரன் டிரம்பின் புதிய சமூக ஊடகம்: 500 பேர் பயன்படுத்தி சோதிப்பு

அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப்பின் புதிய சமூக ஊடகத்தைச் சுமார் 500 பேர் பயன்படுத்திப் பார்த்துக்கொண்டிருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

ரோய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்துக்கு இருவர் அது குறித்துத் தகவல் அளித்தனர்.

‘ட்ரூத் சோசியல்’ எனும் அந்தத் தளத்தின் ஆரம்பப் பதிப்பு சோதனைக்கு வெளியாகியுள்ளது.

ட்விட்டரில் டிரம்ப்புக்கு 88 மில்லியன் ரசிகர்கள் இருந்தனர். சுமார் ஓராண்டுக்கு முன் பேஸ்புக், ட்விட்டர், யுடியுப் ஆகிய தளங்கள் டிரம்ப்பின் கணக்குக்குத் தடை விதித்தன.

அதையடுத்து, டிரம்ப்பின் சொந்த நிறுவனமான டிரம்ப் மீடியா அன்ட் டெக்னோலஜி குழுமம் புதிய சமூக ஊடகச் செயலிக்கான வடிவமைப்பை ஆரம்பித்தது.

மக்கள் தொடர்பில் இருக்கக்கூடிய, சுதந்திரமான அனுபவத்தை புதிய செயலி கொடுக்கும் என்று அதன் தலைமை நிர்வாகி கூறியுள்ளார்.

ஆனால் அதன் கருத்துச் சுதந்திரக் கொள்கைகள் ஆப்பிள், கூகுள் நிறுவனங்களின் செயலிகள் வரையறுத்திருக்கும் விதிமுறைகளுடன் ஒத்துப்போகுமா என்று தெரியவில்லை என்கின்றனர் தொழில்நுட்ப நிபுணர்கள்.   நன்றி தினகரன் 


No comments: