நூல் அறிமுகம் : மின்னூலில் வலம் வரும் “ வாழும் வரலாறு மல்லிகை ஜீவா “ தேவா ஹெரால்ட் - ஜெர்மனி


கம்பீரநடை
, நேர்கொண்ட பார்வை, சொல்லாற்றல், தனது கொள்கைப் பிடிப்பில் அவதானம்,  போராட்ட குணம்இவை போன்றவைகளே  நான் முதன்முதலில் டொமினிக் ஜீவா அவர்களை சந்தித்தபோது  அவரைப்பற்றி புரிந்துகொண்ட விடயங்கள்.

மல்லிகை ஆசிரியர் டொமினிக் ஜீவா,  அறிமுகப்படுத்திய எழுத்தாளர்தான் முருகபூபதி.    

 பதுகளிலே   எமது நீர்கொழும்பூரில்  ஜீவாவை நாம் சந்தித்த பின்னர்,  1972  ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம்  மல்லிகை நீர்கொழும்பு பிரதேச சிறப்பிதழும் வெளியிட்டோம்.

அதன் அறிமுக அரங்கு நடந்தபோது,   அதில் உரையாற்றுவதற்கு  வாய்ப்பளித்த எழுத்தாளர் முருகபூபதி,   ஜீவா மறைந்து ஓராண்டு நிறைவடைந்திருக்கும் இக்காலப்பகுதியில்  வாழும் வரலாறு மல்லிகை ஜீவா என்ற  மின்நூலை வெளியிட்டுள்ளார்.

வாசகர்கள் இதனை கிண்டிலில் தரவிறக்கம் செய்து படிக்கலாம்.

மல்லிகை ஜீவாவுடன் நெருக்கமாக உறவாடியிருக்கும் முருகபூபதி,


  அவர் பற்றிய ருசிகர சம்பவங்களை இந்நூலில்  பதிவிட்டுள்ளார்.

ஜீவாவை முதலில் சந்தித்தபோது, அவரது

உயர்ந்த தோற்றமும் எனக்குள்ளே உயர்ந்து நின்றது.

அவருடைய தொனியே - குரலே  நிகழ்வரங்கு  முழுவதும்  வியாபித்திருந்தது.

இந்துமதத்தின் கேடான சாதிக்கொடுமைபற்றியும், தான் எங்கு போனாலும், சாதியை முன்னிறுத்தி  தன்னை இழிவுபடுத்தியது பற்றியும், மேடைகளில், கூட்டங்களில் அவர் உரையாற்றும்போது அது நம் மனதை உலுக்கியெடுக்கும்.

தன் வாழ்நாள் முழுக்க  அவருக்கு நேர்ந்த கொடுமைகள் வார்த்தைகளுக்குள் அடங்கிவிடா. மனத்துயரங்கள் அழியாதவை. ஜீவாவின்  சாதியத்துக்கு எதிரான போராட்டத்தை அவரின் வாழ்நாள் சம்பவங்களிலிருந்து அவர் விபரிக்கையில் அது சாதியத்தின் திமிரை நேரடியாக கண்முன் நிறுத்தியது.

அவருடைய  இலட்சிய வேட்கை, மல்லிகை  இதழாக இலங்கையின் இன பன்மைத்துவத்தை முன்னிறுத்த செயலாற்றியது.  மல்லிகையில்  1970 காலப்பகுதியில்  ஜெயகாந்தன் பற்றி ,  ஜீவா  எழுதிய தொடர்  விமர்சனம்  பற்றி நேர்மறையான – எதிர் மறையான வாசகர்  கருத்துக்களும்  மல்லிகையில் பிரசுரிக்கப்பட்டன.   நானும் ஜீவாவின் தொடர் பதிவுக்கு மல்லிகையில் எதிர்வினையாற்றியிருந்தேன்.

அவ்வாறு எழுதியவர்களான மருத்துவர் ராஜம் தேவராஜன் லண்டனுக்கும், நான் ஜெர்மனிக்கும் காலப்போக்கில் புலம்பெயர்ந்து வந்துவிட்டோம்.  முருகபூபதி ,  இந்த நூலில் அந்தச்செய்திகளையும் தவறவிடாமல் எழுதியிருக்கிறார்.

 மல்லிகையில் வெளியான இலக்கியக் கட்டுரைகள், சிறுகதைகள், சமூகநீதியை வலியுறுத்தின.  அவை பற்றிய விமர்சனங்கள் இதழ் ஆசிரியருக்கு ஏற்புடமை இல்லாவிடினும்,  அவற்றை அவர்  மல்லிகையில் வெளியிட்டார்.  இனநல்லிணக்கத்துக்கான அவருடைய  நோக்கம் உறுதியானது. சக இனத் தோழர்களின், ஆக்கங்கள் , செவ்விகள் மொழி பெயர்க்கப்பட்டு மல்லிகையில் வெளியாகின.  தனிஆளாக ஒரு இலக்கிய இதழை வெளிக்கொணர்வது லேசான விடயமல்ல.

தற்போதைய கணினி யுகத்தில்   சாத்தியமான  வசதி வாய்ப்புக்கள் அவருடைய காலத்தில் இல்லை.

இலக்கியத் தாகமெடுத்த வாசகரிடத்தில்  மல்லிகையை எடுத்துச்சென்று  நேரடியாக வழங்கியது மட்டுமன்றி, யாவரிடத்தும் சமூகநீதிக்கான குரலையும் அது பேசவேண்டும் என்பதற்காகவும்  அவர்  வீதிச் சந்திகளில் நின்றும் மல்லிகையை விற்றார்.   குதர்க்கமான வாய்ச் சண்டைகளையும்,  தன் கண் முன்னாலேயே    மல்லிகை இதழை கிழித்துப் போட்டவர்கள் விபரங்களையும் பகிரங்கமாக்கினார்.

இச்செய்திகள் யாவும் இந்நூலில் இடம்பெற்றுள்ளன.

 நேர்மையான அவர் குரலின் ஆவேசம் இன்றும் நம் காதுகளுக்குள் கேட்கிறது. ஜீவா பட்ட துயரங்கள் அநீதியானவை. சாதியத்துக்கு எதிரானதை போட்டுடைக்கவும், சமதர்மத்தை  இலக்காகவும் இனங்களுக்கிடையேயான நல்லிணக்கத்தை பேணவும்   மல்லிகை ஒரு கருவியாய் ஜீவாவுக்கு அமைந்தது.

ஜீவா பற்றிய பல செய்திகளை நினைவூட்டும் வகையில்  இந்த நூல் அமைந்துள்ளது.  அவருடைய ஆளுமை வியக்கவைக்கிறது.


No comments: