தரையில் இறங்கும் விமானங்கள் - கானா பிரபா


இன்று விடிகாலையில் இருந்து மூன்று மணி நேரம் தவப்படுக்கையில் இருந்தது போலொரு உணர்வோடு கட்டுண்டு கிடந்தேன் “தரையில் இறங்கும் விமானங்கள்” புதினத்தில் மூழ்கியபோது.

கதையில் வரும் விஸ்வம் போலவே ஆகிக் கொண்டேன், அவனின் அண்ணி ருக்மிணி போலவே விஜயராணி அக்காவை நினைத்துக் கொண்டேன்.
விஜயராணி அக்கா இருந்த காலத்தில் அடிக்கடி சொல்லுவா
“பிரபா ! தரையில் இறங்கும் விமானங்கள் படியுங்கோ
இந்துமதி சோக்கா எழுதியிருக்கிறார்” என்று.
ஆனால் விஜயராணி அக்கா வாழ்ந்த காலத்தில் “தரையில் இறங்கும் விமானங்கள்” படித்து அவரிடம் இந்த நாவல் குறித்த உள்ளக்கிடக்கையைப் பேசியிருந்தால் எவ்வளவு சந்தோஷப்பட்டிருப்பா என்று நினைத்துக் கொண்டேன். அவருக்கும் எழுத்தாளர் இந்துமதிக்கும் கூட ஒத்த வயது.

நாம் மற்றவர்கள் மீது கொள்ளும் கற்பிதங்கள், ஆனால் அவர்கள்

எந்தவிதமான மனநிலையோடு தங்களைச் சந்தோஷப்படுத்திக் கொள்கிறார்கள், வாழ்வியல் நெறிமுறைகளோடு வாழத் தலைப்படுகிறார்கள் என்ற ஞானத்தின் திறவுக்கோலாகப் படைக்கப்பட்ட அற்புதமான நாவலிது.

விஸ்வத்தின் அண்ணி ருக்மிணி போலவே விஜயராணி அக்காவால் வாழ்வியலின் ஞானோதயத்தின் கதவுகள் திறந்த அனுபவங்கள் பலவுண்டு. அதனால் தான் இந்த நாவலைப் படிக்கும் போது விஸ்வத்துக்கும் அவனின் அண்ணிக்குமான உரையாடல்கள் அச்சொட்டாக என் வாழ்க்கையைப் பின்னோக்கிப் பார்த்தது போலிருந்தது.
பெண் எழுத்தாளர் என்றால் ஒரு குறிப்பிட்ட எல்லைக்குள் நின்றி பெண்களின் சமூகச் சிக்கலைத்தான் எழுதுவார்கள் போன்ற கற்பிதங்கள் என் வாசிப்பனுபவம் மேம்பட்ட காலத்தில் பொய்யுரையாய்ப் போனதுண்டு. இந்துமதி அவர்களால் ஒரு ஆணின் கோணத்தில் பயணிக்கும் இந்த நாவல் கூட முன்சொன்ன கற்பிதத்தை உடைத்த வகையினது.

மாமூல் உலகியல் வாழிவியலில் ஒட்ட முடியாத, இளமைப் பருவத்தில் மூழும் பெருங் கனவுகளோடு வாழும் விஸ்வம் மெல்ல மெல்ல எவ்விதம் தன்னைப் பக்குவப்படுத்திக் கொள்கிறான் என்பதைப் போதனை மொழியாக இல்லாத, சம்பவக் கோவைகளினூடு நகர்த்துக்கிறார் எழுத்தாளர். இங்கேயும் பெண் பாத்திரங்கள் வந்தாலும், அன்றைய வாழ்வியலில் எதிர் நோக்கிய சமூகச் சிக்கலையோ கையாளாது இன்னொரு கோணத்தில் விஸ்வம் என்ற ஆண் சமூகத்தில் இருந்து தன் அண்ணியின் மீதான அனுதாபப் பார்வையும், அது எப்படிக் கடக்கப்படுகிறது என்பதையும் அற்புதமாக வடிவமைத்திருக்கின்றார் எழுத்தாளர்.
எண்பதுகளின் வாழ்வியலில் இருந்தவர்களுக்கு இந்தப் படைப்பும், களமும் வெகு அந்நியோன்னியமாக இருக்கும். நாவலோட்டத்தில் வானொலியில் வரும் “இளைய பாரதம்” உட்பட. அங்கிருந்து இன்றைய உலக ஓட்டத்தோடு நாமும் ஓடுவதைப் பொருத்திக் கொண்டால் நாவலின் நிறைவுப் பாகத்தில் நிற்கும் விஸ்வம் போல ஆகி விடுவோம்.

நம்முடைய கற்பிதங்களும், வாழ்வியலும் எவ்விதம் இன்னொரு மனிதரால் வேறு வகையாக நோக்கப்படுகிறது என்பதையும், நாம் இன்னொருவர் மீது வைத்திருக்கும் மதிப்பீடு அவர் பார்வையில் எவ்விதம் சமரசம் செய்யப்படுகிறது என்பதையும் கொண்டு பயணிக்கும் விஸ்வத்துக்கும் அவன் அண்ணிக்கும், விஸ்வத்துக்கும் அவனது அண்ணுக்கும் இடையிலான உரையாடல்கள் வெகு யதார்த்தமாக அமைந்திருக்கும்.  அந்தந்த சம்பாஷணைகள் வரும் இடத்தில் அந்தக் களத்திலே நாமே இருந்தது போலொரு பிரமை.

“நண்பனாய், மந்திரியாய், நல்லா சிரியனுமாய்,
பண்பிலே தெய்வமாய்ப் பார்வையிலே சேவகனாய்,
எங்கிருந்தோ வந்தான்,
இடைச்சாதி யென்று சொன்னான்”

பாரதியாரின் கவிதை தான் ஞாபகத்துக்கு வந்தது விஸ்வத்துக்கும் அவன் அண்ணி ருக்மிணிக்கும் இடையிலான பந்தத்தைப் படித்த போது.
தமிழ் நாவல் இலக்கியத்தில் இந்த மாதிரியானதொரு கோணத்தில் கதை புனைந்ததும் புதுமை. இது எழுபதுகளில் (1977) முதற் பதிப்பு கண்ட படைப்பு என்பதைக் குறிப்பிட வேண்டியது முக்கியம்.
யாழ்ப்பாணத்தில் இருந்த காலத்தில் தூரதர்ஷன் தொலைக்காட்சியைப் பார்க்க அன்டெனா திருப்பி புள்ளிக் குவியல்களுக்குள் மங்கலாக வந்து போனதில் “தரையில் இறங்கும் விமானங்கள்” தொலைக்காட்சித் தொடரும் ஒன்று என்பது என் ஞாபகக் கிடங்கின் ஒரு மூலையில் இருக்கிறது. ஆனால் அந்தத் தொடரை முழுமையாகப் பார்க்க இயற்கை கைகொடுக்கவில்லை.
சமீபத்தில் இந்துமதி அவர்கள் இந்தத் தொலைக்காட்சித் தொடரில் நடிகர் ரகுவரன் அவர்கள் விஸ்வம் பாத்திரத்தில் நடிக்க, வித்யாசாகர் இசையில் எஸ்.பி.பாலசுப்ரமணியம் அவர்கள் பாரதியார் பாடல்கள் பாடியதைக் குறிப்பிட்டிருந்தார்.

இறுதி அத்தியாயங்களை என் வீட்டுப் பூந்தோட்டத்தில் படித்துக் கொண்டிருந்தவன் படித்து முடித்ததும் நூலை ஒரு பூக்கிடக்கையில் வைத்து அழகு பார்த்துக் கொண்டேன்.
இந்த நாவலைப் படித்து முடித்ததும் மீண்டும் முன்னோக்கிப் போய் இந்த இடத்தைப் படித்துப் பெருமூச்சு விட்டுக் கொண்டேன்.

“தூரத்தில் விமானம் ஒன்றி சிவப்பு விளக்குப் பளிச்சிட வட்டமடித்தது. கொஞ்சம் கொஞ்சமாகக் கீழே இறங்கிக் கொண்டிருந்தது. சிறிது நேரத்தில் அது மீனம்பாக்கத்தில் தரையில் இறங்கி விடும். பின், மூச்சு இரைக்கப் பிடிவாதமாக ஓடும், கடைசியில் நின்று போய் விடும்....!
விஸ்வத்தின் அடிவயிற்றிலிருந்து ஒரு பெருமூச்சு எழும்பித் தணிந்தது.

தரையில் இறங்கும் விமானங்கள்
தந்த எழுத்தாளர் இந்துமதி அவர்களுக்கு
இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்

கானா பிரபா
19.02.2022

No comments: