எழுத்தும் வாழ்க்கையும் ( இரண்டாம் பாகம் ) அங்கம் -03 “ காலமும் கணங்களும் “ நெடுங்கதையின் இரண்டாம் அத்தியாயம் தண்ணீரில் ருசி பேதம் – மாந்தரில் இனபேதம் ! முருகபூபதி

விசாலமான வெளிமண்டபத்துக்கு வந்த பின்னர், சந்திரனிடம் கட்டுப்பட்டு


நின்ற சுவாசம் பெருமூச்சுடன் எழுந்து பறந்தது.

பாலேந்திராவுக்கு  ‘ கோல்  ‘ கொடுப்பதாயின் சில்லறை வேண்டும். சில்லறை நாணயங்களுக்கு ட்ரவலர்ஸ் செக்கை மாற்றவேண்டும். எங்கே இந்த பேங்க்…?

கண்ணில் அது சிக்கவில்லை.

சுற்றும் முற்றும் பார்த்து அந்தரப்படும் அவன் கோலத்தைக் கண்டு ஒரு பெண் அருகே வந்தாள். அவளது சீருடை – அவள் அந்த மண்டபத்தில் ஏதோ ஒரு வேலையில் அமர்ந்திருப்பதாக இனம் காட்டுகிறது.

 “ஏதும் உதவி வேண்டுமா..?  “ அவளது ஆங்கில உச்சரிப்பை சிரமப்பட்டுத்தான் புரிந்துகொண்டான் சந்திரன்.

 “ தாங்ஸ்…. பேங்க்….. ?   “ என்று மட்டும்தான் கேட்டான்.

 “அந்தப்பக்கம் திரும்புங்கள்… பேங்க்… அங்கேதான் இருக்கிறது


. இவற்றையேன் இப்படி தூக்கி சுமக்கிறீர்கள். அந்த  ‘ட்ரொலி  ‘ யை எடுங்கள். “ – அவள் ஆலோசனையை உதிர்த்துவிட்டு,  ஹாய்… “ என்று எவனையோ பார்த்து கையசைத்துக்கொண்டு போய்விட்டாள். அவளுடன் இன்னும் சிறிது நேரம் பேச சந்தர்ப்பம் கிட்டவில்லையே என்ற தவிப்பு சந்திரனுக்கு.

முன்பின் தெரியாத அழகிய பெண் தானாக வலியவந்து கதைத்து, உதவ முன்வரும்போது ஏற்படும் சிலிர்ப்பு… அனுபவித்துப்பார்க்கும் போது தனிச்சுகம்தான்.

அவள் சுட்டிக்காட்டிய  ‘ ட்ரொலி  ‘ யை எடுக்கும்போது, இவ்வளவு நேரமும் இந்தச் சுமைகளை அநாவசியமாக சுமந்துகொண்டிருந்தேனே… இன்னும் நான் வழமைக்குத் திரும்பவில்லையா..? தன்னையே கேட்டுக்கொண்டான் சந்திரன்.

  பேங்கில் பாஸ்போர்ட்டைக்காட்டி ட்ரவலர்ஸ் செக்கில் பத்து அமெரிக்கன் டொலர்களை அவுஸ்திரேலிய நாணயத்துக்கு மாற்றி,  ஒரு டொலருக்கு சில்லறையும் எடுத்துக்கொண்டு, ரெலிபோன் பூத்துக்குள் நுழைந்து நாணயங்களை போட்டு, பாலேந்திரா வீட்டின் இலக்கத்தை சுழற்றியபோது,

 “ ஹலோ…. “ தான் லோ….சொல்லுமுன்னமே மறுமுனையில் கேட்ட பெண்குரலை இனம்காணமுடியாமல்,   “சந்திரன்…ஹியர்…  பேர்த் ஏயார்போட்டிலிருந்து பேசுகிறேன். பாலேந்திரா இருக்கிறாரா?  “ – சந்திரன் கேட்டான்.

 “ யெஸ்…. இது பாலேந்திரா வீடுதான். அவர் இப்போது இங்கே இல்லை. என்ன விஷயம்… என்று சொன்னால், அவருக்கு தகவல் அனுப்ப முடியும்.  “ சந்திரன் ஒருகணம் தயங்கினான்.

 “ நான் இப்போதுதான் வந்து இறங்கியிருக்கிறேன். மிஸ்டர்  சாமிநாதன், பாலேந்திராவின் ரெலிபோன் நம்பரைத்தந்தார். எனக்கு உதவமுடியுமா…? 

 “ ம்… உதவி… உதவி… என்றால்… என்ன மாதிரியான உதவி…? “

மூன்று தடவைகள் பெண் குரலில் ஒலித்த உதவி என்ற சொல் சந்திரனை கொஞ்சம் வாட்டியது.

“ பேர்த்தில் எனக்குத் தெரிந்த எவரும் இல்லை. மிஸ்டர் பாலேந்திராவையும் நான் நேரில் பார்த்தது இல்லை.  சாமிநாதன்தான் அவரது இலக்கத்தை தந்தவர்…    இழுத்து நிறுத்தினான் சந்திரன்.

 “மிஸ்டர்  சாமிநாதன்… ம்… ஓல்ரைட்… ஏயார்போர்ட்டுக்கு வெளியே வந்து நில்லும். வந்து கூட்டிப்போகிறேன் 

 “ தாங்ஸ்… பாலேந்திரா வருவாரா…? 

 “ வரமாட்டார். நான்தான் வரவேண்டும் 

 “ நீங்கள்…. “

 “ நான் மிஸிஸ் பாலேந்திரா… 

 “ தாங்ஸ் 

 “ தாங்ஸ் ஒரு தடவை சொன்னால் போதும்.  அர்த்தமின்றி


வீணாக்கவேண்டாம்.     இப்படி ஒரு பதிலை அவன் அதற்கு முன்பு கேட்டதேயில்லை. சிடு சிடுப்புக்காரியோ…?

 “ வெரி சொறி…. “

 “ ஓல் ரைட்.. வெளியில் வந்து நின்றால், உம்மை நான் எப்படி அடையாளம் காண்பது…,?   “ மிஸிஸ் பாலேந்திரா… இப்படி பலரை விமான நிலையம் வந்து அழைத்துபோன அனுபவத்துடன் பேசுவதாகவே சந்திரனுக்குப்பட்டது.

 “ ப்ளு கலர்  ‘ட்ரவுசரும்  ‘ செக்  ‘ போட்ட வைற் சேர்ட்டும் உடுத்தியிருக்கிறன். 

 “ சப்பாத்து…!?  “ மறுமுனையில் அப்பெண்குரல் இப்போது சிரித்துக்கொண்டே கேட்டது குறும்பாகவும் சுகமாகவும் இருந்தது சந்திரனுக்கு.

   நான் சொன்னபடி வெளியே வந்து நில்லும். இன்னும் பதினைந்து நிமிடங்களில் வருவேன்.  ‘ ஜம்பர்  ‘ இருந்தால் அணிந்துகொள்ளும்.   

 “ ஜம்பரா…? அது என்ன…? 

 “ ஜம்பர்… இங்கே ஸ்வெட்டருக்கு அப்படியும் ஒரு பெயர்… குளிரப்போகுது…    - ‘ பை  ‘ சொல்லிக்கொண்டு மறுமுனை துண்டிக்கப்பட்டது.

இந்தப்பெண் சொன்னபடி வருவாளா…? வாக்குத் தவறுவாளா…? சிடுசிடுப்பாய் பேசி… குளிரைக்காட்டி சிலிர்க்க வைத்து அக்கறை காண்பித்தாளே…!

பரிவும் கண்டிப்பும் கலந்தவளா…? யாரைப்போல் இருப்பாள்…? செம்மணி வீதியில்…  “ புதுப்பட கஸட் ஏதும் இருந்தா கொண்டுவந்து தாரும்  “ என்று கேட்கும் நளாயினி ரீச்சரைப்போல் இருப்பாளா..? படிக்கக்கொடுத்த  ‘ தீஸீஸை  ‘ மீட்டெடுக்க பல தடவைகள் அலையவைத்து, ஜெயகாந்தன் பிடிக்குமா..? ஜானகிராமன் பிடிக்குமா..? எனக்  கேட்டு, கதைப்புத்தகங்கள் கொடுத்த கச்சேரி – நல்லூர் வீதி ரோகிணியைப்போல் இருப்பாளா..? வாழ்நாளில் சந்திக்க நேர்ந்த அழகான பெண்களை  மனதிற்குள் அழைத்து மிஸிஸ் பாலேந்திராவுடன் ஒப்பிட்டுப்பார்த்தான் சந்திரன்.

சில நிமிடங்கள் கரைந்தன.

பதினைந்து நிமிடம் என்றாள். முப்பது கடந்துவிட்டதே.  மீண்டும் ஒரு கோல்


எடுத்தால்….

நேரம் நகர… நகர… சந்திரனுக்கு தவிப்பாக இருந்தது. மெல்பனிலிருக்கும் செல்வரத்தினத்தின் ரெலிபோன் இலக்கம் தெரியாதே…! முகவரியை மட்டும் வைத்துககொண்டு அவனை எங்கே தேடுவது…!? கால் பதித்த மண்ணில் ஒரு முகவரியை சொந்தம் கொண்டாடிய பின்புதானே… அம்முகவரியுடன் தொடர்புகொள்ளுமாறு கேட்டு அவனுக்கு எழுத முடியும். அதுவரையில்…. ? பேர்த்துக்கும் மெல்பனுக்கும் அதிக தூரம் இருக்குமா..?

ஏயார்போட்டுக்கு வெளியே கண்ணுக்கெட்டிய தூரம் வரையில் மனித நடமாட்டமே இல்லை.  வீதி மின் விளக்குகள் அழுதுகொண்டிருந்தன.

நிமிடத்துக்கொரு வாகனம், ஒன்றையொன்று விட்டேனா பார் என்பதுபோல் எதிரும் புதிருமாக ஓடிக்கொண்டிருக்கின்றன. அவற்றில் ஒன்று – தான் எதிர்பார்க்கும் மிஸிஸ் பாலேந்திராவினுடையதாக இருக்கமாட்டாதா…?

வீட்டை நினைத்தான். அம்மா இப்போது என்ன செய்துகொண்டிருப்பார்கள்..? மாலதி டியூட்டரிக்கு போயிருப்பாளா…? பெத்தம்மா ஏதும் புருபுருத்துக்கொண்டிருப்பா. தம்பி இப்போது எந்த  ‘சென்றியில்   நிற்பான்…? அவனைப்பார்த்துத்தான் எத்தனை மாதங்களாகிவிட்டன.  புறப்படுவது கூட அவனுக்குத் தெரியாதே..! தெரிந்திருப்பின் வழியனுப்ப வந்திருப்பானா..?

தம்பி… நெஞ்சை அடைத்தான். மீசைகூட அரும்பாத பருவத்தில்…

என்னை முதலில் அனுப்பி, பின்பு என்மூலம் தம்பியை… அடுத்து, மாலதியை… அப்படியாயின் அம்மா… பெத்தம்மா… ?  எங்காவது பிள்ளைகள் தப்பிப்போய் வாழட்டும் என்ற தாய்மையுணர்வா..? அல்லது, எல்லோரும் பிள்ளைகளை அனுப்பும்போது, அதன்மூலம் ஊரில் சமூக அந்தஸ்தை தேடிக்கொள்பவர்கள் மத்தியில் தானும் அப்படி ஒரு அந்தஸ்தை தேடிக்கொள்ள முடியும் என்ற மண்வாசனையா…?

பெத்தம்மாவுக்கு பிள்ளையார் கோயிலடியும் தபால் கட்டைச்சந்தி சந்தையும், அரியாலை கிழக்கு பாக்கியம் ஆச்சியும் இனி எஞ்சியுள்ள ஆயுளுக்குப்போதும்.

 “ நல்லூரானே… என்ர பிள்ளை போய்ச்சேரவேணும்  “ கோயிலடியில் வழிந்தோடிய கண்ணீருடன் அம்மா விடை தந்த காட்சி, கண்களிலே இன்னமும் நிற்கிறது. அப்பாவின் உடலை ஆஸ்பத்திரியில் அடையாளம் காட்டியபோதும் – செம்மணி மயானத்துக்கு அப்பா பட்டுவேட்டி சரிகைச்சால்வையோடு நிரந்தரத்துயிலுடன் பயணமானபோதும் அம்மா கதறியது… தம்பியை காணவில்லையென்றறிந்ததும் – அவன் மெய்கண்டான் கலண்டருக்குப் பின்புறம் எழுதி வைத்துவிட்டுப்போன வாசகங்களை படித்து கதறியது…. அம்மா கோயிலடியில் அவ்வாறு கதறவில்லைத்தான்.

அப்பாவும் போனபின்னர்,  ‘ அப்பாவின் உயிரைக் குடித்தவர்களை மட்டுமல்ல, இனத்தின் உயிரையும் குடித்துக்கொண்டிருப்பவர்களையும் வஞ்சம் தீர்க்கப் போகிறேன்   என்று தம்பியும் புறப்பட்ட பின்னர், இனி… அம்மாவுக்கு எல்லாமே நான்தான். அம்மாவை இனி கலங்க வைக்கக் கூடாது என பிரதிக்ஞை எடுத்த நானே இப்படி ஓடி வந்துவிட்டேனே…!?

சந்திரனை மோதவருவதுபோல் விரைந்து வந்து திடீர் பிரேக்போட்டு நின்றது அந்தக்கார்.

காரில், சாரதி ஆசனத்தில்… இவ…தான் மிஸிஸ் பாலேந்திராவா…? செம்மணி வீதி நளாயினி ரீச்சரைப்போலில்லாமலும ஜானகிராமனை அறிமுகப்படுத்திய ரோகிணியைப் போலில்லாமலும் மிஸிஸ் பாலேந்திராவாகவே அவள் காட்சியளித்தாள் சந்திரனுக்கு.

 லோ…. சந்திரன்…. “ சமீபத்தில் அறிமுகமானவரை வரவேற்கும் பாங்குடன் அவள் காரைத் திறந்து இறங்கினாள்.

 “ நீங்கள்தான்… மிஸிஸ்… பாலேந்திராவா…?   “ தயக்கத்துடன்தான் சந்திரன் கேட்டான்.

 “எப்படித் தெரியுது…?  உமக்குத் தெரியுமா ஒரு கதை…? இரண்டுபேர் தியேட்டருக்குப் போனார்களாம்… தனித்தனியாக… ஒருவரை ஒருவர் பார்த்திட்டு, எங்கே படம் பார்க்கவா வந்தாய் …? எனக்கேட்டாராம். இங்கே படம் பார்க்க வராமல் காய்கறி வாங்கவா வருவான். என மற்றவர் சொன்னாராம்.  அதுபோல்…  லோ…. சந்திரன்…. “ என்று உம்மை அடையாளம் கண்டு அழைத்தபின்பும் இப்படி அசட்டுத்தனமாக கேட்கிறீரே பிள்ளாய்…!  “ வேகமாகவும் வினோதமாகவும் அவள் பேசியதை சந்திரன் ரசித்தான்.

காரின் பின்புற டிக்கியில் பேக்குகளை வைத்துவிட்டு, பின் கதவைத் திறக்கப்போனான்.

 “ கமோன்… என்ன ஶ்ரீலங்காவின் எஜமான் புத்தியா…? நான் என்ன டாக்ஸியா ஓட்டுறன்…? சும்மா வெட்கப்படாமல் முன்னால் ஏறும்  “ மிஸிஸ் பாலேந்திரா வாசிப்பது மகுடியா…? கட்டுண்ட பாம்பாக பக்கத்தில் அமர்ந்தான்.

 “ சீட் பெல்டை போட்டுக்கொள்ளும்    காரை ஸ்டார்ட் செய்தவாறு தெருவைப்பார்த்து காரைத் திருப்பினாள்.

அப்போதுதான் கவனித்தான். அந்தப்பெண் ஏறி அமர்ந்ததுமே குறுக்காக நீண்டு ஓடும் பெல்டை அணிந்திருப்பதை.

 “நான் பிளேனிலும் சீட் பெல்ட் அணியவில்லை.  “ தைரியத்துடன் பேசுவதாக பாவனை காட்டினான்.

 “ இது பிளேன் இல்லை. கார்… சீட் பெல்ட் அணியாவிட்டால், 75 டொலர் தண்டம். ஶ்ரீலங்கா கணக்கில் கிட்டத்தட்ட ஆயிரத்து ஐநூறு ரூபா… இஷ்டமா…? “

 “ ஐயய்யோ… அதுவும் அப்படியா…?  “சந்திரன் சீட் பெல்டை அணிந்துகொண்டான். இன்னும் எத்தனையை இங்கே படித்துக்கொள்ள வேண்டியிருக்குமோ…?  என்று கவலைப்பட்டான். மிஸிஸ் பாலேந்திராவின் ஒவ்வொரு வார்த்தையும் வில்லிலிருந்து புறப்பட்ட அம்புகளாகவே புலப்பட்டன.

  “ யாழ்ப்பாணத்தில் எவ்விடம்…? 

 “ அரியாலை…. நீங்க…?  

 “ கோப்பாய்…. 

   உங்கட அவர்…?  

 “ கல்வியங்காடு… 

 “ பிள்ளைகள் இங்கே படிக்கிறார்களா…?  

 “ என்ன இன்டர்வியூவா…?  “ அவளது கேள்விகள் – பதில்கள் அனைத்துமே எதிர்பாராத சரங்களாகவே விழுகின்றன.

 “ என்ன… மௌனமா….? ஒரே ஒரு பிள்ளைதான். வேலைக்குப்போயிருக்கு…. “அவள் வேடிக்கையாகத்தான் சொல்கிறாள்.

 “ வேலைக்குப் போகும் வயதில் உங்களுக்குப்பிள்ளையா…? 

 “ ஏயார்போர்டிலிருந்து கேட்டீரே… அவர்தான் என்ர பிள்ளை 

இப்போதுதான் அவளது முகத்தை நன்கு கவனித்தான். நெற்றியில் சிறிய திலகம். மாலதி சிலசமயம் ஒட்டிக்கொண்டு நடமாடும்போது அத்தகைய திலகத்தை அவதானித்திருக்கிறான்.

மிஸிஸ் பாலேந்திராவும் அவனை கவனித்தவாறு காரின் வேகத்தை குறைத்து நிறுத்தினாள்.

எதிரே சிக்னல் சிவப்பை சிந்துகிறது.  

 “ எங்கே படித்தீர்…?  

 ஹிண்டுவில்…. “

“ அப்பா… மாஸ்டரா…? 

 “ இல்லை…. தோ…ட்டம்… செத்துப்போனார்…. “

சிக்னலில் பச்சை சிந்தப்படவும் கார் விரைந்தது. சிறிது மௌத்தின் பின்பு ,   “ என்ன வருத்தம்…?  “ என்று கேட்டாள்.

 1984 ஏப்ரில் பெரிய கடைப்பக்கம் போனார். இரண்டு நாட்களுக்குப்பிறகு ஆஸ்பத்திரியில் பிரேதத்தை எடுத்தோம். நாகவிகாரை சம்பவத்தில் சுட்டுப்போட்டான்கள். 

 “ உமக்குப்பின்னாலும் பெரிய கதை ஒண்டு இருக்குது எண்டு சொல்லும் “

 ‘ உமக்குப்பின்னாலும்…   ‘ என்ற அழுத்தம், இவளுக்குப்பின்னாலும் ஏதோ ஒரு சோகம் இருப்பதையே சந்திரனுக்கு உணர்த்தியது.

   சாமிநாதனுக்கு எவ்வளவு கொடுத்தீர்…?   “ மிஸிஸ் பாலேந்திரா கதையை திசைதிருப்புவதையே சந்திரனும் விரும்பினான்.

 “ எழுபத்தியைந்து 

 “ வட்டிக்கா எடுத்தீர்….? 

 “ ஓம்… ஆனால், அது பெரிய கதை.    என்று சொல்லிவிட்டு, காரின் பக்கக் கண்ணாடியூடாக தெருவைப்பார்க்கும் சந்திரனிடமிருந்து,    நீயும்… என்ன…,  என்னை இன்டர்வியூவிலா நிறுத்தி வைத்துக்கேள்வி கேட்கிறாய் …?  ‘ என்ற வினா துள்ளிப்பாயலாம் என்பதனால், அவளும் மேலும் பேச்சை வளர்க்காமல் தெருவிலேயே கண்ணாயிருந்தாள்.

சந்திரனின் கண்களிலிருந்து அழகான வீடுகளும் அவற்றின் முற்றத்தில் குருவிக்கூடுகளைப்போன்று சிறிய தபால் பெட்டிகளும் - ரோஜா செடிகளும் ஓடிக்கொண்டிருந்தன. இந்த வீடுகள் அனைத்தும் வானத்தில்  பறக்கும்போது கண்களுக்கு விருந்தாக அமைந்த காட்சிப்பொருட்களா…?

அவள் லாவகமாக காரை செலுத்துவது அவனுக்குப்பிடித்திருந்தது. சற்று நிமிர்ந்து சாய்ந்துகொண்டான்.

 “ இன்னும் தூரமா…?   “ ஏதாவது ஊன்றுகோல் வார்த்தையை தேடினான் சந்திரன்.

 “ இல்லை… அடுத்த சந்தியில் திரும்பினால், மூன்றாவது வீடு.  “ சில செக்கண்டுகளில கார் திரும்பியது.

காரை நிறுத்தி, பின்பு சிறிது முன்னே நகர்த்தி, ரிவர்ஸ் கியரைப்போட்டு பின்னால் நகர்த்தி பார்க்கில் நிறுத்தினாள்.

இறங்கும்போது,  “ என்ர பிள்ளையும் வந்திட்டுது  “ பக்கத்தில் நின்ற காரைக் காட்டினாள்.

 “ ஓ… இரண்டு கார்கள் இருக்கிறதா…? 

 “ இந்த ஊரில் கார் இல்லாமல் சமாளிக்க முடியாது சந்திரன்.  பேக்குகளை வந்து எடும்.. “ அவனுக்கு முன்பதாகவே அவள் காரின் பின்புறம் வந்துவிட்டாள்.

மிஸிஸ் பாலேந்திரா கதவைத்திறந்தாள். அப்போதுதான் அவள் உடுத்தியிருந்த உடையை நன்றாக கவனித்தான். இதனைத்தான் ஊரில்  ‘ ஜீன்ஸ்  ‘ என்று அழைப்பார்களோ..? யாழ்ப்பாணத்தில் மிகவும் அபூர்வமாக பார்த்த உடையாகப்பட்டது சந்திரனுக்கு. சிலருக்கு சில உடைகள் கச்சிதம்தான். இடத்துக்கு தகுந்தாற்போல் ஆடை நகரீகமும் மாறலாம்.

வீட்டுக்குள்ளே ஊதுவத்தி மணம் கமகமவென்றிருந்தது.

 “ இவர்தான் சந்திரனா…? லோ… எப்படி…?  “ கையிலிருந்த தடித்த டவலை தோளில் போட்டுக்கொண்டு, கைகுலுக்கினார் பாலேந்திரா. திடகாத்திரமான உடல். சிவந்த மேனி. நெஞ்சிலே சுருள் முடி. அளந்து வெட்டிய சிறிய மீசை. களையான முகம். பார்க்கும்போது இனம்புரியாத வசீகரம் கொண்ட தோற்றம். சிலரது முகத்தைப்பார்த்தால்…. பார்த்துக்கொண்டே இருக்கத் தோன்றுமே.. மிஸிஸ் பாலேந்திரா கொடுத்துவைத்தவள்தான்.  

சந்திரன் சப்பாத்தை கழற்றி, வாசல் கதவு ஓரமாக வைத்தான். உட்காரச்சொல்லும் வரையில், உட்காரலாமா என்ற தயக்கம் வேறு.

 “ சிட்… சிட்… வசந்தி டீ போடுமன். உங்களுக்கென்ன கோப்பியா.. டீயா…? அல்லது ஏதும் கூலா… ? 

சந்திரனுக்கு சங்கோஜம்.  “ நீங்கள் என்ன விரும்புகிறீர்களோ அதையே குடிப்போம்.  “ மிஸிஸ் பாலேந்திராவைப்பார்த்தவாறே சொன்னான். அப்பார்வை, உங்கள் பெயர்  ‘ வசந்தியா  ‘ எனக்கேட்பது போலிருந்தது. வசந்தி, இனைப்பார்த்தபோது கண்களை தாழ்த்திக்கொண்டான்.

இவர்கள் இருவரையும் எப்படி அழைக்கலாம். அக்கா… அண்ணன் என்றா… அல்லது நீங்கள்… நீங்கள்… என்றா… பெயரைச்சொல்லி கூப்பிடலாமா…?

அடக்கமான அழகான வீடு.  கூடம். கூடத்தின் மறுபுறத்தே சமையலறை. ஃ பிரிட்ஜ்… அருகே அது என்ன  ‘ மைக்ரோவேவ்  ‘ என்பது இதனைத்தானோ…?

 “ சந்திரன்… ஜஸ்ட் ஏ மினிட்… இப்பத்தான் நானும் வந்தனான். ட்ரஸ் மாத்திட்டு வாரன். நீரும் அந்த அறையில் போய் ட்ரஸ் மாத்தும். வோஷ்… எடுக்கப்போறீரா… இதோ… இதுதான் பாத்ரூம். வெட்கப்படாதேயும்…. ஓகே…. “ பாலேந்திரா,  அவர்களின் படுக்கை அறைக்குள் போயிருக்கவேண்டும்.

வசந்தி தேநீர் தயாரித்துக்கொண்டிருக்கிறாள்.

சந்திரன் அவ்வீட்டின் உட்புற அமைப்பையும் சுவரில் தொங்கும் அலங்காரங்களையும் ரஸனையுடன் பார்க்கிறான்.

இடதுபக்கச் சுவரில் புரூஸ்லியின் கம்பீரமான தோற்றப்படம். வலது பக்கம்…. எங்கேயோ பார்த்து அறிமுகமான படம்.  பத்திரிகைகைளில் பிரசுரமான முகம். அவ்வர்ண கலண்டர் படத்தின் அருகே சந்திரன் சென்றான்.

மாற்றுப்பெரிய இயக்கம் ஒன்றினால் சுட்டுக்கொல்லப்பட்டு, இரவோடிரவாக எரிக்கப்பட்ட இயக்கத்தலைவர் முறுவலித்துக்கொண்டு வர்ணக்கலண்டராக சுவரில் தொங்கிக்கொண்டிருக்கிறார்.

பாலேந்திரா… இவரின் ஆதரவாளரா…? அல்லது வசந்தியின் உறவினரா…? இந்தக்கலண்டர் இங்கிருப்பதிலிருந்து… இவர்களுக்கும் இவருக்கும் ஏதும் தொடர்புகள்….!?

சந்திரன் எதுவும் பேசாமல், டீப்போவில்  ‘ என்னை எடுத்துப்பார்  ‘ எனக்கிடந்த ஆங்கில சஞ்சிகையொன்றை எடுத்து பக்கங்களை புரட்டினான்.

பாலேந்திரா பிஜாமா ட்ரெஸ்ஸுடன் அவனுக்கு முன்னால்  வந்து அமர்ந்தார்.

நெற்றியில் விபூதிக்கீறல் பளிச்சிட்டது.

 “ குளிக்கலாமா… “ டீயைக் குடித்துவிட்டு எழுந்தான் சந்திரன்.

 “ ஓ… அலுப்பாக இருக்கும் இல்லையா…? போய் தாராளமாக குளியும்.  “ பாலேந்திரா எழுந்து அவனுடைய பேக்குகளை, அவன் வேண்டாம்… வேண்டாம்… எனத்தடுத்தும் கேளாமல் தூக்கிவந்து அந்த விருந்தினர் அறையில் வைத்தார்.

சந்திரன் குளியலைறக்குள் புகுந்து கதவை மூடிக்கொண்டான்.

மூன்று நாட்களுக்கு முன்னர், கொழும்பில், கொட்டாஞ்சேனை தண்ணீரில் குளித்ததன் பின்பு… இப்போது அந்நிய மண்ணில்… அந்நிய மண்ணில் ஊற்றெடுத்த தண்ணீரில் உற்சாகமாக குளித்தான். வாய் நிறைய தண்ணீரை ஏந்தி கொப்பளித்து துப்பியபோது… அரியாலைத் தண்ணீருக்கும்  ‘ பேர்த்  ‘ தண்ணீருக்குமிடையே சுவையில் தெரியும் வித்தியாசத்தை உணர்ந்தான்.

நிறமே இல்லாத தண்ணீர்… தண்ணீரில் நிறத்தை படைக்காத கடவுள் மனிதரிலும் மற்றும் ஜீவராசிகளிலும் எத்தனை நிறங்களை படைத்துவிட்டார்.  மனிதருக்கு மனிதர் குணங்களில் மாற்றத்தை வைத்தது போன்று  தண்ணீரிலும் ருசி பேதத்தை படைத்து வைத்துள்ளாரே…

இளஞ்சூடான நீரில் குளிப்பது சந்திரனுக்கு ஆனந்தமாக இருந்தது.

அவுஸ்திரேலியாவில் உழைத்து, மாலதிக்கு இப்படி அழகான  ஒரு  வீட்டை அரியாலையில் கட்டிக்கொடுக்க முடியுமா…? ஆனந்தக்குளிப்பிலும் கவலைகள் நீர்த்துளிகளாக தெறித்தன.

( தொடரும் )

 

 

 



 

 

 

 

 

No comments: