இலங்கையின் மேற்கு கரையில் இந்து சமுத்திரத்தாயின் அலையோசையுடன் எங்கள் நீர்கொழும்பூர் விழித்தெழும்போது, எமது வீட்டருகிலிருந்து பாரதியாரின் கண்ணன் பாட்டு ஒலிக்கும்.
ஆசிரியை திலகமணி தில்லைநாதன்
எமது வித்தியாலயத்தில் தமிழ், சமய பாடங்களை கற்பித்தவாறு மாணவிகளுக்கு பாடலும் ஆடலும்
பயிற்றுவித்தவர்.
இத்தனைக்கும் அவர் முறையாக
சங்கீதமோ, நடனமோ பயின்றவர் அல்ல. அனைத்தும் கேள்வி ஞானம்தான். அவரிடமிருந்த கற்பனை
வளத்தினால் தனது மாணவிகளை கலைத்துறையில் ஈடுபடுத்தி பயிற்றிவித்து வந்தவர்.
அக்காலப்பகுதியில் எமது பாடசாலையில் ( முன்னர் விவேகானந்த வித்தியாலயம்,
பின்னர் விஜயரத்தினம் இந்து மத்திய கல்லூரி ) நடந்த மாணவர் இலக்கிய மன்ற நிகழ்ச்சிகள், பெற்றோர்
தின விழாக்களில் ஆசிரியை திலகமணி எமக்கு சிறுவர்
நாடகமும் மாணவிகளுக்கு நடனமும் பயிற்றுவித்தார்.
அவரது வீடு எங்களுக்கு சமீபமாக இருந்தது. அவரது வீட்டிலிருந்து அடிக்கடி நாம் கேட்கும் பாடல்
பாரதியாரின் தீராத விளையாட்டுப்பிள்ளை.
எனக்கு ஒன்பது வயதாகவிருக்கும்போது, திலகமணி ஆசிரியையின் வீட்டில் அந்தப்பாடலுக்கு அவர் அபிநயம் பிடித்து ஆடியதை பார்த்தேன்.
தான் ஆசிரியை என்பதனால், பாடசாலை நிகழ்ச்சியில் தான்
ஆடாமல் எனது அக்கா “ செல்வி “ சண்முகவடிவம்பாளையும், அக்காவுடன் படித்த கமலா என்ற மாணவியையும் அழைத்து பயிற்றுவித்து மேடையேற்றினார்.
ஆசிரியையின் வீட்டில்
கிராமஃபோன் பெட்டி இருந்தது. அதிலிருந்து பாரதியின் அந்தப்பாடல் ஒலிக்கும்.
ஆசிரியையின் கணவர் தில்லைநாதன், கொழும்பு சென்று இலங்கை வானொலியில் இருந்து அந்தப்பாடலை குறிப்பிட்ட அந்த ஒத்திகை வேளையில் ஒலிபரப்பி வருகிறாரோ என்றும் அந்த அறியாப்பருவத்தில் யோசித்திருக்கின்றேன்.
அந்த வயதில்தான் இசைத்தட்டையும்
பார்த்து எங்கிருந்து எதிலிருந்து ஒலிக்கிறது
என்பதையும் அறிந்துகொண்டேன். நான் கேட்டு ரசித்த முதலாவது பாரதி பாடல் இசையோடு ஒலித்த அந்த தீராதவிளையாட்டுப்பிள்ளைதான்.
செல்வி அக்கா, அந்தப்பாடலுக்கு
துள்ளித்துள்ளி ஆடி அபிநயம் பிடித்த காட்சி இன்றளவும் கண்களில் தங்கியிருக்கிறது. அக்காவுக்கும்
கமலாவுக்கும் திலகமணி ஆசிரியை குறத்தி நடனமும் பயிற்றுவித்தார்.
அக்கா கடந்த 2020 ஆம் ஆண்டு எங்களிடமிருந்து நிரந்தரமாக விடைபெற்றுவிட்டார். திலகமணி ஆசிரியை இன்றும் எங்கள் ஊரில் பாலர் பாடசாலை ஒன்றை தனது இல்லத்தில் நடத்திவருகிறார்.
அன்று அக்காவுடன் ஆடிய
கமலா எங்கே இருக்கிறார் என்பது தெரியவில்லை.
பாரதியின் குறிப்பிட்ட
தீராதவிளையாட்டுப்பிள்ளை எழுதப்பட்டு பல வருடங்கள் கழித்தே, பாரதி இல்லாத காலத்தில்
கவியரசு கண்ணதாசன் , கண்ணன் மீது பல படல்களை இயற்றிவிட்டார்.
இவ்வாறு கவியரசர் கண்ணனை
கருப்பொருளாக வைத்து எழுதிய பாடல்கள் ஏராளம்.
பாரதியும் கண்ணனை பலவாறு
சித்திரித்துவிட்டார்.
கண்ணன் என் தோழன், என் தாய், என் தந்தை, என் சேவகன், என்
அரசன், என் சீடன், என் விளையாட்டுப்பிள்ளை, என் காதலன், என் காந்தன், என் ஆண்டான், இவ்வளவு எழுதியும் பாரதி ஓயவில்லை. பாஞ்சாலி சபதத்திலும் கீதையிலும் எழுதிவைத்துவிட்டார்.
அவரையடுத்து கவியரசு
கண்ணதாசனும் திரைப்படங்களுக்காக கண்ணனை தாராளமாக பயன்படுத்திவிட்டார்.
அவற்றுள் ரி. எம். சவுந்திரராஜன்
பாடி, மெல்லிசை மன்னர் எம். எஸ். விஸ்வநாதன் சிவரஞ்சனி ராகத்தில் இசையமைத்த புல்லாங்குழல் கொடுத்த மூங்கில்களே… பாடல் உலகப்புகழ் பெற்றது. கவியரசர் அத்துடன் நிற்கவில்லை. ஆயர்பாடி மாளிகையில்
என்ற பாடலையும் எஸ். பி, பாலசுப்பிரமணியம் குரலில் வரவாக்கிவிட்டுத்தான் சென்றார்.
இவற்றுக்கெல்லாம் ஊற்றுக்கண்ணாக
விளங்கியிருப்பவர் பாரதி. கவியரசரின் அனைத்து
கண்ணன் பாடல்களின் வரிகளையும் தனித்தனியாக
கூர்ந்து பார்த்தால், பாரதி கண்ணதாசனின் எழுத்துக்கு தந்திருக்கும் ஆதர்சம் புரியும்.
ஆசிரியை திலகமணி, எமது
குழந்தைப்பருவத்தில் சொல்லித்தந்த குழந்தைக்கவிஞர்
அழ. வள்ளியப்பாவின் ஒரு பாடல் இது:
கார்மேக
வண்ணனாம்
வெண்ணெய்
உண்ட கண்ணனாம்
மண்ணை
உண்ட கண்ணனாம்
குழலினாலே
மாடுகள்
கூடச்செய்த
கண்ணனாம்
கூட்டமாகக்
கோபியர்
கூடஆடும்
கண்ணனாம்
மழைக்கு
நல்ல குடையென
மலைபிடித்த
கண்ணனாம்
நச்சுப்
பாம்பு மீதிலே
நடனமாடும்
கண்ணனாம்
கொன்று
வென்ற கண்ணனாம்
தூதுசென்று
பாண்டவர் துயரம்
தீர்த்த
கண்ணனாம்
அர்ஜூனர்க்கு கீதையை
அருளிச் செய்த கண்ணனாம்
நல்லவர்க்கு அருளுவான்
நாங்கள் போற்றும் கண்ணனாம்.
கண்ணன் மண்ணை உண்ட கதையையும் ஆசிரியர் திலகமணி சொல்லித்தந்தார்கள்.
அந்த வயதில் வீட்டு முற்றத்தில் மண் அளைந்து விளையாடி ஏச்சும் திட்டும் கிடைத்தபோது, கண்ணன் மண்ணை உண்ட கதையை சொல்லியிருக்கின்றேனே தவிர, மண்ணை உண்டு பார்த்ததில்லை.
மண்ணையும் மக்களையும் ஆழமாக நேசித்த பாரதியார், கண்ணனை எவ்வாறெல்லாம் எப்படிப்பார்த்திருக்கிறார் பாருங்கள்.
பிற்காலத்தில் 1944 ஆம் ஆண்டில் தியாகராஜ பாகவதர் நடித்த ஹரிதாஸ் திரைப்படத்தில் பாபநாசம் சிவன் எழுதி இடம்பெற்ற இருபது பாடல்களில் இன்றளவும் மக்களின் மனதில் நிலைபெற்றுள்ளது “ கிருஷ்ணா முகுந்தா முராரே.. “ தான்.
கோகுலத்தில் சுட்டிக் குழந்தையாகவும் மற்றும் ஒரு பராயத்திலே
அசுரர்களை வதம் செய்தவராகவும் மகா பாரதத்தில் பாண்டவர்களுக்குத் தூதுவனாகவும் , துச்சாதனனால் பாஞ்சாலி துகிலுரியப்பட்டபோது, அவள் மானம் காக்க சேலை கொடுத்த ஆபத்பாந்தவனாகவும் குருக்ஷேத்திர போர்க் களத்தில் அருச்சுனனுக்கு தேரோட்டும் சாரதியாகவும் கண்ணன் தன்னை எப்படியெல்லாம் வெளிப்படுத்தியிருக்கிறார் என்பதை பாரதியார் தனது கவிதைகளில் வெளிப்படுத்தியிருக்கிறார்.
அவருக்குப்பின்னர் வந்த கவிஞர்களில் கவியரசு கண்ணதாசன்தான், கண்ணன் பற்றி நிறைய பாடல்களை எழுதினார்.
இவரது பாடல்கள் பெரும்பாலும் திரைப்படங்களிலே வெளிவந்து புகழ்பெற்றன.
பாரதி காலத்தில் திரைப்படம் இல்லை. அவர் இல்லாத காலத்தில் அவரது பாடல்கள் திரைக்கு வந்தன. திரைப்படங்களுக்கு பாடல்கள் எழுதிய பாபநாசம் சிவன் முதல் கண்ணதாசன் வரையில் அனைவருக்கும் கண்ணன் பாடல்களுக்கு ஊற்றுக்கண்ணாக விளங்கியவர் பாரதியார்தான்.
பாரதியின் அனைத்து கண்ணன் பாடல்களையும் பின்னாளில் எழுதவந்தவர்களின் கண்ணன் பாடல்களுடன் ஒப்பீடு செய்து பார்க்கலாம்.
படிக்காத மேதையில் வரும் எங்கிருந்தோ வந்தான் ( சீர்காழி கோவிந்தராஜன் பாடியது ) பாடலில், கண்ணன் வரும் இடங்களில் திரைப்பட நாயகன் ரங்கனின் பெயர் இணைக்கப்பட்டிருக்கும். இதன் மூலம் பாரதியின் “ கண்ணன் என் சேவகன்…. “ பாடல்தான் என்பது அறிந்ததே.
வியட்நாம்வீடு திரைப்படத்தில் வரும் உன் கண்ணில் நீர் வழிந்தால்… ( கண்ணதாசன் இயற்றி ரி. எம். சவுந்தரராஜன் பாடிய பாடல் ) பாடலும் பாரதியின் கவியூற்றிலிருந்து பிறந்திருக்கிறது.
திலகமணி ஆசிரியை அன்று சொல்லித்தந்த “கண்ணன் எங்கள் கண்ணனாம் “ பாடலை இயற்றியவர் யார் என்று தெரியவில்லை. எவருக்கும் தெரிந்தால் சொல்லுங்கள்.
ஊத்துக்காடு வேங்கட சுப்பையா இயற்றிய அலைபாயுதே கண்ணா பாடலும் புகழ்பெற்றது. இதனை நாதஸ்வரம், வீணை, ஆர்மோனியம், வயலின், புல்லாங்குழல் முதலான இசைக்கருவிகளிலும் வாசிக்கலாம்.
பித்துக்குளி முருகதாஸ் உட்பட பலரது நாவில் அலைபாயுதே… நாதம் எழுப்பியிருக்கிறது. பல நடன அரங்கேற்றங்களிலும் அபிநயத்திற்குள்ளான சாகாவரம் பெற்ற பாடல்தான் அலைபாயுதே….!
ஆனால், இதனையும் பலர், பாரதியார் இயற்றிய பாடல் என்றே நம்பியிருக்கின்றனர்.
மணிரத்தினம் இயக்கிய அலைபாயுதே திரைப்படத்தில் இந்த அலைபாயுதே கண்ணா பாடலை, பாடகி ஹரினி ஏ.ஆர். ரஃமானின் இசையில் பாடினார்.
ஆனால், அந்தத்திரைப்படத்தின் எழுத்தோட்டத்தில் ( Title Card ) குறிப்பிட்ட பாடலை இயற்றியவர் ஊத்துக்காடு வேங்கட சுப்பையாவின் பெயர் இடம்பெறவில்லை.
இச்செய்தி, இயக்குநர் மணிரத்தினத்திற்கோ, இசையமைப்பாளர் ரஃமானுக்கோ, பாடகி ஹரினிக்கோ தெரிந்திருக்குமா..?
( தொடரும் )
No comments:
Post a Comment