எழுத்தும் வாழ்க்கையும் – அங்கம் 64 எதிர்பாராத நிகழ்வுகளின் சங்கமம்தான் வாழ்க்கை ! “ கடந்து வந்த பாதையை மறப்போமேயானால் செல்லும் பாதையும் இருட்டாகிவிடும். “ முருகபூபதி


1985 ஆம் ஆண்டு நடுப்பகுதி. ஒருநாள் மதிய நேரம்.  வீரகேசரி ஆசிரிய பீடத்திலிருந்து ஒரு செய்தியை எழுதிக்கொண்டிருக்கின்றேன்.

எனக்கொரு தொலைபேசி அழைப்பு வருகிறது. மறுமுனையில் நண்பர் இராஜகுலேந்திரன். அவர் சோவியத் தூதரகத்தின் தகவல் பிரிவிலிருந்து தொடர்புகொண்டு,   “ பூபதி…. அலுவலகத்தில் மூன்று வாரங்கள் லீவு எடுக்க முடியுமா..? மாஸ்கோவில் நடைபெறவுள்ள 12 ஆவது உலக மாணவர் இளைஞர் விழாவுக்கு செல்லும் இலங்கைக்குழுவில் உமது பெயரையும் இணைக்கவிருக்கின்றோம்.  “ என்றார்.

இந்த அழைப்பு எனக்கு இன்ப அதிர்ச்சி தந்தது.

அவருக்கு யாதவன் என்றும் புனைபெயர் இருக்கிறது. மல்லிகையில் அந்தப்பெயரில் எழுதுபவர். எனது இனிய நண்பர்.

 “ யாதவன்… என்னிடம் பாஸ்போர்ட்  இருக்கிறது. ஆனால், அது இந்திய பயன்பாட்டுக்கு மாத்திரம். மாஸ்கோ செல்வதானால், அதனை சர்வதேச பயன்பாட்டுக்கு மாற்றவேண்டும்     என்றேன்.

   தாமதிக்காமல் அதனை  மாற்றப்பாரும்.  உமது பெயர்


தெரிவாகிவிட்டது  “ என்று சொல்லிவிட்டு இணைப்பினை துண்டித்துவிட்டார்.

அதற்கு சில வருடங்களுக்கு முன்னர்  11 ஆவது  அனைத்துலக விழா கியூபாவில் நடந்தபோது,  அதற்குச்சென்ற மக்கள் விடுதலை முன்னணி தலைவர் தோழர் ரோகண விஜேவீராவை வழியனுப்புவதற்கு விமான நிலையம் சென்றிருந்தேன்.

அவர் 1977 ஆம் ஆண்டு சிறையிலிருந்து விடுதலையாகிய பின்னர் மேற்கொண்ட  முதலாவது வெளிநாட்டுப்பயணம். விமானநிலையத்தில் புலனாய்வுத்துறையைச் சேர்ந்த சிலர் ஆங்காங்கே நின்றனர்.

அன்று அங்கே நடந்த பத்திரிகையாளர் சந்திப்பிலும் கலந்துகொண்டு செய்தி எழுதி வீரகேசரிக்கு கொடுத்திருந்தேன்.  அச்சமயம் நான் ஒப்புநோக்காளர் பிரிவிலிருந்தேன்.

கியூபாவுக்கு விஜேவீரா சென்றபோது,  தமிழ்நாட்டிலிருந்து தமிழரசுக்கட்சியின் சார்பில் கவிஞர் காசி . ஆனந்தன் அனுப்பிவைக்கப்பட்டார்.

1985 இலும் அவர் சென்னையில்தான்.  விஜேவீரா  1983 நடுப்பகுதியிலிருந்து தலைமறைவாகியிருந்தார். மக்கள் விடுதலை முன்னணி தடைசெய்யப்பட்டிருந்தது.

ராஜகுலேந்திரன் அன்று தகவல் சொல்லி சில மணி நேரங்களில்  இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய குழு உறுப்பினர் தோழர் அபுயூசுப் தொடர்புகொண்டார்.

அவரை ஏற்கனவே நன்கு அறிவேன். அவர் கட்சிப்பணிகளுடன் அரசாங்க பாடசாலை ஒன்றில் ஆசிரியராகவும் பணியாற்றிக்கொண்டிருந்தார்.

ஆங்கிலத்திலும் அரசியல் கட்டுரைகள் எழுதும் ஆற்றல் மிக்கவர். சில நூல்களை எழுதியிருந்தார்.


மாஸ்கோ விழாவுக்கு எனது பெயரும் பரிந்துரைக்கப்பட்டிருப்பதாகவும்,  அதற்கான உத்தியோகபூர்வ  அழைப்பிதழ் கடிதத்தை எனக்கு சேர்ப்பிக்கவேண்டும் எனவும், அன்று மாலை ஆமர் வீதி – கிராண்ட் பாஸ் வீதி சந்தியில் நடக்கவிருக்கும் கட்சியின் பிரசாரக்கூட்டத்திற்கு வந்தால், குறிப்பிட்ட கடிதத்தை தரமுடியும் என்றார்.

அன்று மாலை அவரைச் சந்தித்து அக்கடிதத்தை பெற்றுக்கொண்டேன்.  அந்தச்சந்தியில்தான் வாணி விலாஸ் – அம்பாள் கபே ஆகியனவும் ஒரு பொலிஸ் நிலையமும்  அமைந்துள்ளன.

அவ்விடத்தில்தான் பின்னாளில் இலங்கை ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாச தற்கொலைக்குண்டுதாரியினால் கொல்லப்பட்டார்.

தோழர் அபுயூசுப் , கவிஞர் நிதானிதாசனின் உறவினர். ஏற்கனவே நிதானிதாசனின் கவிதைத் தொகுதிகள் கொழும்பு சாகிரா கல்லூரியிலும்,  பிரதான வீதி முஸ்லிம் லீக் வாலிப முன்னணியிலும் நடந்தபோது அதில் கலந்துகொண்டு பேசியிருக்கின்றேன். அன்று முதல் அபுயூசுப்பும் எனது தோழரானார்.

சோவியத்துக்குச்செல்லும் குழுவினருக்கான அமைப்புக்குழுவின் செயலாளராக அவர் அச்சமயத்தில் இயங்கினார்.

அதற்கு முன்னர், அவர் பல நாடுகளில் நடந்திருக்கும் குறிப்பிட்ட உலகவிழாவுக்கு சென்று வந்த அனுபவம் மிக்கவர்.

அவர் தந்த அழைப்பிதழ் கடிதத்தை மறுநாள் அலுவலகம் வந்ததும், ஆசிரியர் சிவநேசச் செல்வனிடம் காண்பித்து லீவு அனுமதி கேட்டேன்.

அத்தகைய ஒரு வெளிநாட்டு அழைப்பு எனக்கு


கிடைத்திருந்ததையிட்டு அவர் மகிழ்ச்சி தெரிவித்தார். ஆனால், இத்தகைய ஒரு அழைப்பு வந்தால், அதற்கு வீரகேசரி நிறுவனத்தின்  நடைமுறைகள் எவ்வாறு இருக்கும் என்பது அவருக்குத் தெரியாது. அவர் ஆசிரியர் பீடத்திற்கு 1984 இல் தான் வந்தார்.

உடனே, வீரகேசரி வாரவெளியீட்டுக்குப்பொறுப்பான ஆசிரியர் பொன். இராஜகோபாலை அழைத்து அக்கடிதத்தை காண்பித்தார். அவரது முகமும் ஆச்சரியத்தால் விரிந்தது.

இத்தகைய  வௌிநாட்டுப்பயணங்கள் ஏற்கனவே ஆசிரிய பீடத்தில் பலருக்கும் சித்தமாகியிருக்கிறது.  வெளிநாட்டு தூதுவராலயங்களின் ஏற்பாடுதான் இத்தகைய  அழைப்புகள்.

 “ எதற்கும் முருகபூபதியை இக்கடிதத்துடன் பொது முகாமையாளர் பாலச்சந்திரனிடம் அனுப்புவோம். அவர் இறுதி முடிவு எடுப்பார்.   என்றார்.

நானும் அக்கடிதத்துடன் அவரிடம் சென்றேன். 

அப்போதுதான்,  மூலஸ்தானத்திலிருக்கும் இறைவனின் அருள் கிடைத்தாலும் குறுக்கே நிற்கும் பூசாரிகளை  கடந்து எதுவும் செய்துவிடமுடியாது என்பதையும் புரிந்துகொண்டேன்.

அங்கிருக்கும் ஊழியர் அதன் நிருவாக கட்டமைப்புக்கு ஏற்பத்தானே நடந்துகொள்ளவேண்டும்.

பொதுமுகாமையாளரை அவரது பிரத்தியேக அறையில்  பார்த்தேன். அவருடைய முகமும் மாறியது. விழியுயர்த்தி என்னைப்பார்த்தார்.


வாழ்த்துக்கள் கூறினார்.  அத்துடன் எனக்கு அதுவரையில் தெரியாத செய்தியும் சொன்னார்.

 “ இத்தகைய வெளிநாட்டு அழைப்புகள் வரும்போது, அதற்குச்செல்லும் எமது ஊழியர்களுக்கு நிருவாகம் ஐம்பது அமெரிக்க டொலர்கள் அன்பளிப்பாகத் தரும்.  இதுபற்றி நிருவாக இயக்குநருடன் பேசுகிறேன். எதற்கும் ஒரு கடிதம் எழுதித்தாரும்.  இராஜகோபால் அதனை எழுதித்தருவார்  “ என்று சொல்லி என்னை அனுப்பினார்.

மீண்டும் வந்து அவர் சொன்ன தகவலை இரண்டு ஆசிரியர்களிடமும் சொன்னேன்.

இராஜகோபாலும் கடிதம் எழுதித்தருவதாகச் சொன்னார்.

அதற்கிடையில் மறுநாளே அரைநாள் லீவு எடுத்துக்கொண்டு,  கோட்டையில் அப்போது அமைந்திருந்த  குடிவரவு – குடியகல்வு திணைக்களம் சென்று எனது  கடவுச்சீட்டை சர்வதேசப் பயணங்களுக்கு தகுதியான  கடவுச்சீட்டாக மாற்றினேன்.  அதற்கு ஒரு நண்பர் உதவினார். 

இராஜகோபால் நிருவாக இயக்குநருக்கு கடிதம் எழுதித்தந்தார். அதனை பொது முகாமையாளரிடம் கொடுத்தேன். இரண்டு நாட்களில் வந்த பதில் எனக்கும் ஆசிரியர்களுக்கும் அதிர்ச்சியளித்தது.

குறிப்பிட்ட ஐம்பது அமெரிக்க டொலர் அன்பளிப்பு தரமுடியாது.  அந்த அழைப்பு நிருவாகத்தின் ஊடாக முருகபூபதிக்கு தரப்படவில்லை. அந்தப்பயணத்திற்கான லீவை அவர் தனது சொந்த வருடாந்த லீவிலிருந்தே எடுத்துக்கொள்ளவேண்டும் என்ற தகவல்  மேலிடத்திலிருந்து வந்தது.

அதற்கு முன்னர் அத்தகைய வெளிநாட்டுப்பயணங்களை மேற்கொண்டவர்கள்: பிரதம ஆசிரியர் க. சிவப்பிரகாசம்,  அன்னலட்சுமி இராஜதுரை,  கார்மேகம்,  அன்டன் எட்வர்ட், இராஜகோபால், அஸ்வர், மற்றும் ஒரு துணை செய்தி ஆசிரியர் எட்வர்ட்.

எனக்கு இந்த தகவல்களை ஆசிரியபீடத்தில் சிலர் சொன்னார்கள். 

நிருவாக இயக்குநரின் முடிவை எவராலும் மீறமுடியாது.

மற்றும் ஒருநாள் தோழர் அபுயூசுப்பிடம் இருந்து தொலைபேசி அழைப்பு வந்தது.   அவர் ஒரு நாளைக்குறித்து, பொரளையில் கொட்டா வீதியில் அமைந்த இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமை அலுவலகத்திற்கு வந்து எனது கடவுச்சீட்டை ஒப்படைக்குமாறு சொன்னார்.

 மாஸ்கோவுக்கு வருபவர்களுக்குரிய விசாவை பதிவுசெய்யவேண்டியிருப்பதனால், வரச்சொன்னார். அவர் குறிப்பிட்ட நாளில் அங்கு சென்றேன்.   அப்போது அவர் சொன்ன தகவல் மற்றும் ஒரு அதிர்ச்சியை தந்தது.

“ குறிப்பிட்ட மாஸ்கோ விழாவுக்குச்செல்லும் பிரதிநிதிகள், அங்கு சென்றதும் அங்கத்துவப் பணம் செலுத்தவேண்டும். அதற்கும் தயாராக வாருங்கள்.  குறைந்தது நூறு அமெரிக்க டொலர்களுக்கு ட்ரவலர்ஸ்  காசோலை வாங்கி வாருங்கள்  “ என்றார்.  

அதற்கு நான் எங்கே செல்வேன்.  இந்தப்பயணமே வேண்டாமே. எனக்கு ஏமாற்றமும் சலிப்பும் வந்தது.

மறுநாள் அலுவலகம் திரும்பியதும் நண்பர் ராஜகுலேந்திரனுக்கு தகவல் தெரிவித்தேன்.

 “ நண்பரே நான் சிவனே என்று சும்மா இருந்தேன்.   என்னை இப்படி ஒரு இக்கட்டில் மாட்டிவிட்டீர்கள். இந்தப்பயணமே வேண்டாம் என்று சொல்லட்டுமா..?  “ என்றேன்.

 “ பூபதி.  கிடைத்திருக்கும் இந்த அரிய சந்தர்ப்பத்தை தவறவிடவேண்டாம்.  யாரிடமாவது கடன் பெற்று தோமஸ் குக்சென்று நூறு அமெரிக்க டொலருக்கு ட்ரவலர்ஸ்  காசோலை  வாங்குவதற்கு முயற்சி செய்யும்  “ என்று சொல்லிவிட்டு இணைப்பினை துண்டித்துவிட்டார்.

யோசித்துக்கொண்டிருந்தேன்.  நூறு அமெரிக்கன் டொலர்களுக்கு எப்படியும் இரண்டாயிரத்து ஐநூறு ரூபா தேவைப்படும். அதற்கு எங்கே போவது.

அச்சமயத்தில் எனக்கு ஆபத்பாந்தவனாக உதவ முன்வந்தார் நண்பர் வீரகத்தி தனபாலசிங்கம்.

 “ என்ன மச்சான் கடுமையாக யோசிக்கிறாய்..? “ எனக்கேட்டார்.

அவரும் நானும் 1977 இல் ஒன்றாக தெரிவுசெய்யப்பட்டு, அங்கே பணியில் அமர்த்தப்பட்டவர்கள். இருவரும்  தினம் தினம்  சர்வதேச – உள்நாட்டு அரசியல், சமூகம், கலை, இலக்கியம், சினிமா என்று பேசிக்கொண்டிருப்பவர்கள்.

எனது இக்கட்டான நிலையை அவரிடம் சொன்னேன்.

அவர் சற்றும் தாமதியாமல்,   “ எதற்கும் யோசிக்காதே… என்னால் உனக்கு உதவமுடியும்.   வீட்டுக்கு அனுப்புவதற்காக எனது சேமிப்பில் ஆயிரத்து ஐநூறு ரூபா இருக்கிறது.  அதனைத்தருகின்றேன். மிகுதி ஆயிரம் ரூபாவை வேறு எங்காவது தேடிக்கொள்  “ என்றார்.

அத்தகைய நட்பு கிடைப்பதற்கு நான் பாக்கியம் செய்திருக்கவேண்டும்.

தினம் தினம் வீரகேசரிக்கு செய்தி எழுதி, அதன் விற்பனையை பெருக்குவதற்கு உழைக்கும் எமக்கு கிடைத்த பலன் எத்தகையது..?  என்பதை வேறு வகையில் ஒரு சக ஊழிய நண்பரிடமிருந்து தெரிந்துகொண்டேன்.

வெளியூர் பயணங்கள் மேற்கொள்வதற்கு முன்னர் என்னை தொலைபேசியில் தொடர்புகொண்டு நாட்டு நிலைமை பற்றி கேட்டறியும் அன்பர் ஜெயம் விஜயரத்தினம் அவர்களை தொடர்புகொண்டு,   “ எனக்கு ஆயிரம் ரூபா கடனாகத் தரமுடியுமா..?  “ எனக்கேட்டேன்.

                     அவருக்கும் அதற்கான காரணத்தை சொன்னதும், முதலில் வாழ்த்தினார்.  “ கிடைத்துள்ள சந்தர்ப்பத்தை விட்டுவிடாதே. இன்று மாலை வேலை முடிந்ததும், வீட்டுக்கு வா. தருகின்றேன்.  “ என்றார்.

அங்கு சென்றேன். அவர் வீட்டில் இல்லை. வெளியே சென்றிருந்தார்.  அங்கிருந்த வேலையாளிடம் தகவல் சொல்லி எனது பெயரையும் ஒரு காகிதத்தில் எழுதிக்கொடுத்துவிட்டு,  கொழும்பு – 07 இலிருந்து கொழும்பு 14 இற்கு பஸ்ஸில் திரும்பி அலுவலகம் வந்தேன்.

அவ்வாறு வந்ததற்க்கும் ஒரு காரணம் இருந்தது.  வேறு யாரிடமாவது தொலைபேசி ஊடாக கேட்கலாம் என்ற எண்ணம்தான்.  அவ்வேளையில் கடந்த அங்கத்தில் குறிப்பிட்ட சிதம்பரம் முதலாளி நினைவுக்கு வந்தார்.

அவருக்கு தொலைபேசி அழைப்பு எடுக்கத்  தயாரானபோது,  வீரகேசரி வாயிலில் கடமையிலிருக்கும் வாயில் காப்போனான Security Guard  இடமிருந்து அழைப்பு வந்தது.                          “ என்னைப்பார்க்க ஒருவர் வந்துள்ளார்.  உடனே வரவும். 

இந்த நேரத்தில் யார் வருகிறார்கள்…?

விரைந்து வாசலுக்கு சென்றேன்.

அங்கே ஜெயம்விஜயரத்தினம்  அய்யா தனது துணைவியாருடன்  காரில் வந்து நிற்கிறார்.

 “ என்ன சேர்… திடீரென்று…. “

 “ மன்னிச்சுக்கொள்ளடாப்பா… நீ வரவிருப்பதையே மறந்துவிட்டேன். வெளியே போயிருந்தேன்.  நீ வந்து திரும்பியதை அறிந்து, காரை திருப்பிக்கொண்டு இங்கே வந்துவிட்டேன்.  இந்தா  “ என்று   சொல்லி எனது சேர்ட் பொக்கட்டுக்குள் ஒரு ஆயிரம் ரூபா தாளை திணித்துவிட்டு வாழ்த்துக்கூறி விடைபெற்றார்.

இத்தகைய சம்பவங்களினால்தான் நான் எனது எழுத்துக்களில் எப்போதும் மறக்காமல் இரண்டு வசனங்களை எழுதிவருகின்றேன்.

 “ எதிர்பாராத நிகழ்வுகளின் சங்கமம்தான் வாழ்க்கை. 

 “ கடந்து வந்த பாதையை மறப்போமேயானால் செல்லும் பாதையும் இருட்டாகிவிடும்.   

நான் எனது வாழ்வில் நிகழ்ந்த எதிர்பாராத சம்பவங்களையும் மறக்கவில்லை ! கடந்து வந்த பாதையையும் மறக்கவில்லை.

எமக்கெல்லாம் விசா வந்துவிட்டதாகவும், மீண்டும் வந்து  கடவுச்சீட்டை பெற்றுக்கொள்ளுமாறும் தோழர் அபு யூசுப் சொன்னார்.

மீண்டும் கட்சிக்காரியாலயம் சென்று அதனைப்பெற்றபோது,  கடவுச்சீட்டில் விசா பதிவு இல்லாமல், தனியாக சிவப்பு நிறத்தில் இரண்டு பக்க காகிதம் இணைக்கப்பட்டிருந்தது. அதுதான் ரஷ்யாவுக்கான விசா எனச்சொல்லப்பட்டது.

அந்தப்பயணத்தில் எனக்கு அனைத்தும் புதுமையாக இருந்தது. அதுவே எனது முதலாவது விமானப்பயணம்.

புறப்படும் நாள் நெருங்கியபோது,  கொழும்பு தோமஸ் குக் சென்று  இலங்கை நாணயம் கொடுத்து அமெரிக்க டொலர்களுக்கான ட்ரவலர்ஸ் காசோலைகளை வாங்கினேன்.

அங்கே ஒரு சிங்கள நபரும் என்னைப்போல் அதனை வாங்க வந்திருந்தார்.  அவரது முகத்தை மாத்திரம் கூர்ந்து அவதானித்தேன். ஏன் அவ்வாறு கூர்ந்து பார்த்தேன் என்பது இன்றளவும் புரியவில்லை.

புறப்படுவதற்கு முதல்நாள் வீரகேசரியில் அனைவரிடமும் சொல்லிக்கொண்டு விடைபெற்றேன்.

எனக்கு ஐம்பது  அமெரிக்கன் டொலர் தருவதற்கு மறுத்தவரும், சொந்த லீவில் செல்லுமாறு உத்தரவிட்டவருமான நிருவாக இயக்குநரின் மன நிலையைத்தான் புரிந்துகொள்ளமுடியாமல் போய்விட்டது.

அங்கிருந்த சுமார் பத்துவருடகாலத்தில் நான் அவருடன் ஒரு சில வார்த்தைகள்தான் பேசியிருப்பேன். எனது முகமும் அவருக்கு நினைவிருக்காது. 

ஒரு ஊழியரின் வேண்டுகோளை இடையிலிருந்த அதிகாரிகள் மூலமாகவே நிராகரித்துவிட்ட அவரது செயல்,  மேல்தட்டு முதலாளி வர்க்கத்திற்கேயுரிய பண்பாட்டுக்கோலமா..?  என்றும் சொல்வதற்கில்லை.

ஒரு செல்வந்த – புகழ்பெற்ற குடும்பப்பின்னணியில் வந்திருக்கும் ஜெயம் விஜயரத்தினம் அய்யா  என்னைத் தேடிவந்து உதவியதையும்,    என்னருகே அமர்ந்து பணியாற்றிய சக நண்பன் தனபாலசிங்கத்தின்  நட்புறவையும் ,  தினம் தினம் வந்து வீரகேசரியில் எழுதிக்குவித்து பணியாற்றிய என்னை -  எனது முதலாளி நடத்திய விதத்தையும் ஒப்பீடு செய்து பார்த்தேன்.

தோமஸ் குக்கில் நான் எதேச்சையாக கண்ட அந்த நபரும், நாம் ஏறிய ஏரோஃபுளட் விமானத்தில் வந்தார்.  ஆனால், அவர் எவருடனும் சுமுகமாகப் பேசவில்லை.  அவர் யார் என்பதை பின்னர்தான் ஊகித்தறிய முடிந்தது. அதுபற்றி அடுத்த அங்கத்தில் சொல்வேன்.

அந்த மாஸ்கோ பயணத்தில் அடுத்தடுத்து இரண்டு நாட்களில் புறப்பட்ட விமானங்களில் நாம் நூறு பிரதிநிதிகள் சென்றோம். நானும் சிலரும் முதல் விமானத்தில் புறப்பட்டோம்.

முக்கிய பிரதிநிதிகளின் பெயர்களை இங்கே சொல்கின்றேன்.

கல்வி, இளைஞர் விவகார அமைச்சர் ரணில் விக்கிரமசிங்கா,  ஜனநாயக தொழிலாளர் காங்கிரஸ் தலைவர் அஸீஸ்,  விஜயகுமாரணதுங்க,  ஒஸி அபேகுணசேகரா,  மகிந்த விஜேசேகர, பந்துல குணவர்தன, சிறில் மத்தியூவின் மருமகன் அநுரா பஸ்தியன், வஜிர பெல்பிட்ட,  அபுயூசுப், பொல்காவலை எம்.பி. சுனில் ரஞ்சன் ஜயக்கொடி, ஆனைமடுவ எம்.பி. வடிகமங்காவ, மற்றும் யூ. என். பி, ஶ்ரீல. சு.க, மக்கள் கட்சி, சமசமாஜக்கட்சி, நவசமாஜக்கட்சி, கம்யூனிஸ்ட் கட்சி, இலங்கை தொழிலாளர் காங்கிரஸ், இலங்கைக்கான யுனெஸ்கோ பிரதிநிதிகள் மற்றும்  தயான் ஜயதிலக்க. இவர்களுடன் நான்கு பத்திரிகையாளர்கள். அதில் நான் ஒருவன் மாத்திரமே தமிழன்.

மொத்தம் இலங்கையிலிருந்து நூறு பிரதிநிதிகள். 

அந்தப்பயணம் பற்றி பின்னர் நான் வீரகேசரி வாரவெளியீட்டில் 15 வாரங்கள் பயணத் தொடர் எழுதினேன். அந்தத் தொடர் சமதர்மப்பூங்காவில் என்ற பெயரில் புத்தகமாக வெளியானது.

அதன் இணைப்பினை வாசகர்கள் நூலகம் ஆவணகத்தில் பார்க்கலாம்.

https://noolaham.net/project/43/4278/4278.pdf

 ( தொடரும் )

No comments: