கொலின் பவல் காலமானார்
வடகொரியா நீர்மூழ்கிக் கப்பலில் இருந்து ஏவுகணை வீசி சோதனை
சீனா தாக்கினால் தாய்வானை பாதுகாப்பதற்கு பைடன் உறுதி
மிக மோசமான பொருளாதார, அகதி பிரச்சினையில் ஆப்கான்
சிரியாவில் காட்டுத் தீ வைத்த 24 பேருக்கு மரண தண்டனை
பிரிட்டனில் கொரோனா பரவல் தீவிரம்: கட்டுப்பாடுகளை கொண்டுவர அழுத்தம்
வெள்ளம், நிலச்சரிவால் இந்தியா நேபாளத்தில் 200 பேர் வரை பலி
கொலின் பவல் காலமானார்
Wednesday, October 20, 2021 - 6:00am
அமெரிக்காவின் முன்னாள் இராஜாங்கச் செயலாளர் கொலின் பவல் கொவிட்-19 நோய்த்தொற்றால் தனது 84 ஆவது வயதில் காலமானார்.
அமெரிக்காவின் முதல் கறுப்பின இராஜாங்கச் செயலாளர் பதவி வகித்தவர் பவல் ஆவார். “பவல் முழுமையாகத் தடுப்பூசி போட்டுக்கொண்டவர், அவரை அன்புடன் கவனித்து சிகிச்சை அளித்த மருத்துவர்களுக்கு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறோம்" என்று அவரது குடும்பம் பேஸ்புக் பக்கத்தில் தகவல் வெளியிட்டது.
அமெரிக்க இராணுவத் தளபதியாகப் பணியாற்றிய பவல் முன்னாள் ஜனாதிபதி ஜோர்ஜ் எச்.டபிள்யு புஷ்ஷின் ஆட்சியில் சில முக்கியப் பொறுப்புகளை வகித்தவர். நன்றி தினகரன்
வடகொரியா நீர்மூழ்கிக் கப்பலில் இருந்து ஏவுகணை வீசி சோதனை
வட கொரியா நீர்மூழ்கிக் கப்பலிலிருந்து புவியீர்ப்பு ஏவுகணையைச் சோதித்திருப்பதாக உறுதிசெய்துள்ளது.
புதிய வகை ஏவுகணை பாய்ச்சப்பட்டதாக அந்நாட்டு அரசாங்க ஊடகம் தெரிவித்தது. 2016இல் சோதனைக்குப் பயன்படுத்தப்பட்ட நீர்மூழ்கிக் கப்பலிலிருந்து புதிய சோதனை மேற்கொள்ளப்பட்டதாய் அது குறிப்பிட்டது.
இதற்கு முன்னதாகப் பாய்ச்சப்பட்ட ஏவுகணைகளைக் காட்டிலும் புதிய வகை மெல்லியதாக இருந்தது என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
ஆகவே, இன்னும் கூடுதலான, குறுகிய இலக்கு கொண்ட ஏவுகணைகளை ஒரே நீர்மூழ்கிக் கப்பலில் வைத்திருக்கும் வசதி செய்யப்பட்டிருக்கலாம் என்று கணிக்கப்படுகிறது.
வட கொரியத் தலைவர் கிம் ஜொங் உன் ஏவுகணைச் சோதனையில் கலந்துகொள்ளவில்லை என்று தெரிவிக்கப்பட்டது.
கடந்த சில வாரங்களில் வட கொரியா அடுத்தடுத்து பல ஏவுகணை சோதனைகளை நடத்தியது. இதில் ஹைபர் சோனிக் மற்றும் தொலைதூரம் சென்று தாக்கும் ஏவுகணைகளும் அடங்கும் என வட கொரியா தெரிவித்துள்ளது.
வட கொரியாவின் இந்த சோதனைகளில் சில, கடுமையான சர்வதேச தடைகளை மீறுவதாக உள்ளது.
வட கொரியா ஏவுகணை சோதனைகள் மற்றும் அணு ஆயுத சோதனைகள் நடத்துவதை ஐ.நா தடை செய்துள்ளது.
இதில் தற்போது சோதிக்கப்பட்டிருக்கும் பாலிஸ்டிக் ஏவுகணைகள் மிக ஆபத்தான ஒன்றாக ஐ.நா கருதுகிறது.
பாலிஸ்டிக் ஏவுகணைகளால் தொலைதூரம் இலக்கு வைக்க முடியும், வேகமாக செல்ல முடியும் மற்றும் அதிக சுமைகளை எடுத்துச் செல்ல முடியும். வட கொரியா பொதுவாக தனது நீர்மூழ்கி கப்பல்களை வைத்திருக்கும் சின்போ துறைமுகத்திலிருந்து ஏவுகணை ஏவப்பட்டதாக தென் கொரியா தெரிவித்தது. இந்த சின்போ துறைமுகம் வட கொரியாவின் கிழக்கு பகுதியில் உள்ளது. மேலும் அந்த ஏவுகணை `ஜப்பானின் கடற்கரை` என்ற பகுதியில் விழுந்துள்ளது.
இந்த ஏவுகணை சோதனையை அடுத்து அது பற்றி பேசுவதற்கு ஐ.நா பாதுகாப்பு சபை நேற்று அவசரக் கூட்டத்தை நடத்தியமை குறிப்பிடத்தக்கது. நன்றி தினகரன்
சீனா தாக்கினால் தாய்வானை பாதுகாப்பதற்கு பைடன் உறுதி
சீனா தாக்கினால் தாய்வானை அமெரிக்கா பாதுகாக்கும் என்று அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் தெரிவித்துள்ளார். தாய்வான் மற்றும் சீனா தொடர்பில் அமெரிக்காவின் நீண்ட கால வெளியுறவுக் கொள்கையில் இருந்து விலகிய ஓர் அறிவிப்பாகவே இது பார்க்கப்படுகிறது.
எனினும் ஜனாதிபதியின் இந்த கருத்து அமெரிக்க கொள்கைகளில் குறிப்பிடும்படியான மாற்றத்தை ஏற்படுத்தும் ஒன்றல்ல என்று வெள்ளை மாளிகை பேச்சாளர் ஒருவர் பின்னர் அமெரிக்க ஊடகங்களுக்கு தெரிவித்தார்.
தாய்வான் தம்மை தற்பாதுகாத்துக்கொள்ள அமெரிக்கா உதவும் என அமெரிக்கச் சட்டத்தில் உள்ளது. எனினும் தாய்வான் மீது சீனா தாக்குதல் தொடுத்தால் அமெரிக்காவின் நிலைப்பாடு பற்றி அந்தச் சட்டத்தில் தெளிவாகக் குறிப்பிடப்படவில்லை.
இந்நிலையில் அமெரிக்கா தாய்வானை பாதுகாக்குமா என டவுன் ஹோலில் பத்திரிகையாளர்கள் கேள்வி எழுப்பிய போது ‘ஆம், அதை செய்ய நாம் ஒப்புக் கொண்டுள்ளோம்’ என விடையளித்தார் ஜோ பைடன். நீண்ட காலமாகவே சீனா தாய்வானை தாக்கினால், அந்நாட்டை பாதுகாப்பது தொடர்பான விடயத்தில் அமெரிக்கா அமைதியாகவே இருந்து வந்தது. ஆனால் தற்போது தாய்வானை பாதுகாப்போம் என கூறியுள்ளது.
இந்நிலையில் பைடனின் கருத்துக்கு சீனாவிடம் இருந்து உடன் எந்த பதிலும் கூறப்படவில்லை.
அமெரிக்கா தாய்வானுடன் உத்தியோகபூர்வ இராஜதந்திர உறவுகளை பேணாதபோதும், தாய்வான் உறவுகள் சட்டத்தின் கீழ் அந்த நாட்டுக்கு ஆயுதங்களை விற்று வருகிறது.
மறுபுறம் சீனாவுடன் உத்தியோகபூர்வ இராஜதந்திர உறவுகளை பேணும் அமெரிக்கா, அதன்மூலம் ஒரே சீன அரசு இருப்பதையும் இராஜதந்திர ரீதியில் ஒப்புக்கொண்டுள்ளது.
தாய்வான் வான் பாதுகாப்பு வலயத்திற்கு மேலால் சீனாவின் பல டஜன் போர் விமானங்கள் அடிக்கடி பறந்த சம்பவத்தை தொடர்ந்து இந்த இரு நாடுகளுக்கும் இடையிலான பதற்றம் அண்மைய வாரங்களில் அதிகரித்துள்ளது.
தாய்வான் கடந்த சில மாதங்களாக சீனாவின் ஆக்கிரமிப்பு குறித்து தொடர்ந்து குற்றம் சாட்டி வருகிறது. சீனாவில் கடந்த 1949 இல் நடந்த உள்நாட்டுப் போருக்குப் பின்னர் தாய்வான் உருவானது. என்றாலும் தாய்வான், சீனாவின் ஒருங்கிணைந்த பகுதி என சீன அரசு கூறி வருகிறது.
தேவைப்பட்டால் தாய்வானைக் கைப்பற்ற, படை பலத்தைப் பயன்படுத்த தயங்கமாட்டோம் என்று சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங் சில மாதங்களுக்கு முன் கூறியது பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியது. நன்றி தினகரன்
மிக மோசமான பொருளாதார, அகதி பிரச்சினையில் ஆப்கான்
சர்வதேச நாணய சபை எச்சரிக்கை
ஆப்கானிஸ்தானில் ஏற்பட்டுள்ள அரசியல் மாற்றத்தையடுத்து இவ்வாண்டு அதன் பொருளாதாரம் 30 சதவீதத்தால் வீழ்ச்சி அடையலாம் என்றும் அந்நாட்டு மக்கள் அகதிகளாக வெளியேறிவருவது அண்டைய நாடுகளை மட்டுமின்றி துருக்கி, ஐரோப்பிய நாடுகளிலும் பாதிப்பை ஏற்படுத்தும் என்றும் சர்வதேச நாணய சபை தெரிவித்துள்ளது.
கடந்த செவ்வாயன்று சர்வதேச நாணய சபை வெளியிட்ட பிராந்திய பொருளாதார நிலைமைகள் தொடர்பிலான அறிக்கையில், ஆப்கானுக்குக் கிடைத்துவந்த வெளிநாட்டு உதவிகள் நிறுத்தப்பட்டுள்ளதையடுத்து பொருளாதார உதவிகளைச் சார்ந்திருந்த அந்நாடு மோசமான நிதி நெருக்கடியையும் கடன் திரும்பச் செலுத்தலில் பாரிய பிரச்சினையையும் எதிர்கொண்டிருப்பதாக காமாபிரஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஆப்கானில் காணப்படும் இந் நிலையானது அந்நாட்டு எல்லைகளையும் தாண்டி ஏனைய நாடுகளிலும் தாக்கம் செலுத்தலாம் என்றும் அகதிகள் பிரச்சினை பாரிய விளைவுகளை ஏற்படுத்தலாம் என்றும் எதிர்வு கூறியுள்ள சர்வதேச நாணய சபை, அகதிகளை வைத்திருக்கும் நாடுகளின் வளங்களிலும், உள்ளூர் தொழிலாளர் சந்தையிலும் தாக்கங்களை இப் பிரச்சினை ஏற்படுத்தி சமூக நெருக்கடிகளை உருவாக்கும் என்றும் கூறியுள்ளது.
ஆப்கான் மக்களின் வாழ்க்கைத்தரம் பெரும் சரிவை சந்தித்து பல லட்சக்கணக்கான மக்களை வறுமைக்குள் தள்ளும் என்பதால் சர்வதேச சமூகத்தின் உதவி அவசியப்படுவதாகவும் இந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நன்றி தினகரன்
சிரியாவில் காட்டுத் தீ வைத்த 24 பேருக்கு மரண தண்டனை
கடந்த ஆண்டில் உயிர்களை காவுகொண்ட காட்டுத் தீயை வேண்டுமென்று ஆரம்பித்ததாக குற்றங்காணப்பட்ட 24 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டதாக சிரிய அரசு குறிப்பிட்டுள்ளது.
இந்தக் குற்றச்சாட்டில் மேலும் பதினொரு பேருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டதோடு ஐந்து சிறார்களுக்கு 10 தொடக்கம் 12 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டதாக நீதி அமைச்சு வெளியிட்ட அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.
பயங்கரவாதச் செயலில் ஈடுபட்ட குற்றவாளிகளாக இவர்கள் விபரிக்கப்பட்டுள்ளனர்.
உள்நாட்டுப் போர் நீடிக்கும் சிரியாவின் மலைப்பாங்கான துறைமுக பிராந்தியங்களில் தீ வைப்புகளில் ஈடுபட்டதை இவர்கள் ஒப்புக்கொண்டுள்ளனர். 2020 ஒக்டோபரில் ஏற்பட்ட இந்த காட்டுத் தீயில் மூவர் கொல்லப்பட்டனர்.
இதன்போது லடக்கியா, டார்டூஸ், ஹோம்ஸ் மற்றும் ஹமா மாகாணங்களில் 187 காட்டுத் தீ சம்பங்கள் பதிவானதோடு 280 சிறு நகரங்கள் மற்றும் கிராமங்கள் பாதிக்கப்பட்டதாக நீதி அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
இதில் 13,000 ஹெக்டெயார் விவசாய நிலங்கள் மற்றும் 11,000 ஹெக்டெயார் காட்டு நிலங்கள் அழிவடைந்ததாகவும் கூறப்படுகிறது எனினும் காலநிலை மாற்றங்களால் கிழக்கு மத்தியதரை பிராந்தியத்தில் காட்டுத் தீ வருடாந்த நிகழ்வாக மாறியிருப்பதாக கூறப்படுகிறது.
2011 ஆம் ஆண்டு சிரியாவில் உள்நாட்டுப் போர் ஆரம்பித்தது தொடக்கம் ஜனாதிபதி பஷர் அல் அசாத் அரசினால் ஆயிரக்கணக்கானவர்கள் மீது மரண தண்டனை நிறைவேற்றப்பட்டிருப்பதாக மனித உரிமை குழுக்கள் கூறுகின்றன. நன்றி தினகரன்
பிரிட்டனில் கொரோனா பரவல் தீவிரம்: கட்டுப்பாடுகளை கொண்டுவர அழுத்தம்
பிரிட்டனில் கொரோனா தொற்று சம்பவங்கள் அதிகரித்துள்ள நிலையில் புதிய கட்டுப்பாடுகளைக் கொண்டுவருவதற்கும் தடுப்பூசி வழங்குவதை விரைவுபடுத்துவதற்கும் அரசு மீது அழுத்தம் அதிகரித்துள்ளது.
ஏற்கனவே ஐரோப்பாவில் அதிக நோய்த் தொற்று சம்பவங்கள் பதிவாகி வரும் பிரிட்டனில் கடந்த புதன்கிழமை 49,000க்கும் அதிகமான தொற்றுச் சம்பவங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. இந்த வாரத்தில் அங்கு தினசரி நோய்த் தொற்று சம்பவங்கள் சராசரியாக 43,000 என பதிவாகி இருப்பதோடு கடந்த வாரத்துடன் ஒப்பிடுகையில் அது 15 வீத அதிகரிப்பாகும்.
தேசிய புள்ளிவிபர அலுவலகம் கடந்த வாரம் மேற்கொண்ட கணிப்பின்படி பிரிட்டனில் 60 பேரில் ஒருவருக்கு நோய்த் தொற்று இருப்பதாக கூறப்பட்டுள்ளது. இது இந்த பெருந்தொற்று ஆரம்பித்ததில் இருந்து அதிக எண்ணிக்கையாக உள்ளது.
இந்த நோய்த்தொற்றுக்கு எதிரான அனைத்து சட்டரீதியான கட்டுப்பாடுகளையும் பிரதமர் பொரிஸ் ஜோன்சன் கடந்த ஜூலையில் நீக்கினார். இதில் மூடப்பட்ட பகுதிகளில் முகக்கவசம் அணிவது, சமூக இடைவெளியை பேணுவது போன்ற கட்டுப்பாடுகளும் அடங்கும்.
வைரஸ் தொற்று அதிகரிப்பதற்கு சாத்தியமான காரணிகள் பற்றி கூறப்பட்டுள்ளது. அதில் முகக்கவசம் அணிவோர் எண்ணிக்கை குறைந்தது, மக்கள் அதிகம் ஒருவரோடு ஒருவர் கலந்தது மற்றும் மக்களின் நோய் எதிர்ப்புச் சக்தி குறைந்தது என்ற காரணிகளும் அடங்கும்.
இந்நிலையில் நோயை கட்டுப்படுத்துவதற்கு பிரிட்டன் அரசு மாற்று திட்டத்திற்கு செல்ல வேண்டும் என்று விஞ்ஞானிகள் ஆலோசனை வழங்கியுள்ளனர். நன்றி தினகரன்
வெள்ளம், நிலச்சரிவால் இந்தியா நேபாளத்தில் 200 பேர் வரை பலி
இந்தியாவிலும் நேபாளத்திலும் பெய்துவரும் கனத்த மழையால் ஏற்பட்டுள்ள வெள்ளத்திலும் நிலச்சரிவுகளிலும் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 200ஐ நெருங்கியுள்ளது.
கேரள மாநிலத்தில் கடந்த வெள்ளிக்கிழமையிலிருந்து கனத்த மழை பெய்துவருகிறது. அதில் குறைந்தது 42 பேர் உயிரிழந்துள்ளனர். உத்தர்காண்ட் மாநிலத்தில் குறைந்தது 55 பேர் உயிரிழந்து, 11 பேரைக் காணவில்லை. இதில் பாரிய நிலச்சரிவில் வீடு ஒன்று புதையுண்டதில் ஒரே குடும்பத்தின் ஐந்து பேர் பலியாகினர்.
மேற்கு வங்காளத்தில் ஐவர் உயிரிழந்துள்ளனர். ஒரே குடும்பத்தின் எட்டு மற்றும் பத்து வயதுடைய இரு சிறுமிகள் மழை நீரில் அடித்துச் செல்லப்பட்டுள்ளனர். கனத்த மழையால் ஏற்பட்ட நிலச்சரிவுகளில் வீடுகள் மூழ்கின.
இதற்கிடையே நேபாளத்தில், திடீர் வெள்ளத்தில் சிக்கி குறைந்தது 88 பேர் பலியாகியுள்ளனர். மண் மற்றும் குப்பைகளுடன் ஏற்பட்ட திடீர் பனிச்சரிவினால் வீடு ஒன்று புதையுண்டதில் மூன்று சிறுவர்கள் உட்பட ஒரே குடும்பத்தில் ஆறு பேர் உயிரிழந்ததும் இதில் அடங்கும். தொடர்ந்து பெய்துவரும் கடும் மழையால் வெள்ளத்தில் மூழ்கியுள்ள கிராமங்களுக்குச் செல்வதற்கான முயற்சிகள் தோல்வியில் முடிந்துள்ளன.
வெள்ளத்தில் உயிரிழந்த ஒவ்வொருவரின் குடும்பத்துக்கும் 1700 டொலர் நிவாரண நிதி வழங்கப்படும் என்றும் காயமுற்றோருக்கு இலவச சிகிச்சை அளிக்கப்படும் என்றும் நேபாள அரசாங்கம் தெரிவித்தது.
அடுத்த சில நாட்களில் மழை தொடரும் என்று எதிர்வுகூறப்பட்டுள்ளது.
பருவநிலை மாற்றம், அளவுக்கு அதிகமான மேம்பாட்டுப் பணிகள் காரணமாக தெற்காசியாவில் அண்மைய ஆண்டுகளாக மோசமான வானிலை நிலவுவதாக நிபுணர்கள் தெரிவித்தனர். நன்றி தினகரன்
No comments:
Post a Comment