பொன் விழா ஆண்டில் இந்தப் படங்கள் - ரிக்ஸாக்காரன் - ச. சுந்தரதாஸ் - பகுதி 17

 .

தமிழ் திரை உலகில் உச்ச நடிகர்களாக திகழ்ந்த புரட்சி நடிகர் எம் ஜீ ஆரும் நடிகர் திலக சிவாஜி கணேசனும் 1971ம் ஆண்டு ரிக்ஸாக்காரன் வேடத்தில் இரண்டு படங்களில் நடித்தார்கள் .சிவாஜி நடித்த பாபு படம் கருப்பு வெள்ளையாக சிவாஜியின் குணச்சித்திர நடிப்புக்கு தீனி போடும் படமாக வெளிவந்தது .எம் ஜீ ஆரின் நடிப்பில் வெளிவந்த ரிக்ஸாக்காரன் ஈஸ்ட்மென் கலரில் பிரம்மாண்டமான அரங்க அமைப்போடு ஜனரஞ்சக முத்திரையோடு திரைக்கு வந்து கலக்கியது.

எம் ஜீ ஆரின் மானேஜராக பல ஆண்டுகள் பணியாற்றிய ஆர் எம் வீரப்பன் எம் ஜீ ஆரின் அனுசரணையோடு அவர் நடிப்பில் சில படங்களை தயாரித்தார் அந்த வரிசையில் முதல் தடவையாக கலரில் தனது சத்யா மூவிஸ் சார்பில் அவர் தயாரித்த படம் தான் ரிக்ஸாக்காரன்.இப் படம் உருவான கால கட்டத்தில் எம் ஜி ஆருடன் பல படங்களில் ஜோடியாக நடித்துக் கொண்டிருந்தவர் ஜெயலலிதா ஆனால் ஆரம்ப காலம் தொட்டே வீரப்பனுக்கு ஜெயலலிதாவுக்கும் இடையே சுமுக உறவு இருந்ததே இல்லை.குறிப்பாக தான் இதற்கு முன் தயாரித்த கண்ணன் என் காதலன் படம் எதிர் பார்த்த வெற்றியைப் பெறாததற்கு அப் படத்தில் ஜெயலலிதா பிடிவாதம் பிடித்து பெற்று நடித்த கதாபாத்திரமே காரணம் என்று வீரப்பன் நம்பினார் அதே சமயம் எம் ஜி ஆர் மீது ஜெயலலிதா செலுத்தி வந்த செல்வாக்கையும் அவர் வெறுத்தார் . இந்த நிலையில் ரிக்ஸாக்காரன் ஆரம்பிக்கப் பட்ட போது அதில் ஜெயலலிதா நடிக்க மாட்டார் என்பதில் திடசங்கற்பம் பூண்ட வீரப்பன் அப்போது தான் திரை உலகில் நுழைந்து துணை நடிகையாக விளங்கிய மஞ்சுளாவை படத்தின் கதாநாயகியாக ஒப்பந்தம் செய்தார்.இதனால் ஏற்றப்பட்ட மன வடு பிற்காலத்தில் அரசியலில் ஈடுபட்டு முதல்வர் ஆன பின்பும் ஜெயலலிதா மனதில் நீங்காதிருந்து வீரப்பனின் அமைச்சர் பதவி பறி போவதத்கு ஒரு காரணமாக அமைத்தது.





புது கதாநாயகியுடன் எம் ஜி ஆர் நடிக்கும் படம் என்பதால் ஏனைய நடிகர் தெரிவில் வீரப்பன் கவனமான இருந்தார்.பத்தாண்டு இடை வெளிக்கு பிறகு நாட்டிய பேரொளி பத்மினி இந்த படத்தில் எம் ஜி ஆருடன் குணச்சித்திர பாத்திரம் ஒன்றில் நடித்தார் அதே போல் நீதிபதி வேடத்தில் மேஜர் சுந்தரராஜன் நடித்தார் நகைச்சுவை வேடங்களில் தேங்காய் சீனிவாசன் சோ இருவருடன் புதிதாக அறிமுகமான ஐசரி வேலனும் நடித்து ரசிகர் கவனத்தை தன பக்கம் ஈர்த்துக் கொண்டார்.

இராணுவத்தில் பணி புரிந்து விட்டு வரும் செல்வம் பிழைப்புக்காக சைக்கிள் ரிக்ஸா இழுத்து வாழுகிறான் சக
ரிக்ஸாக்காரனான மாணிக்கத்தை கைலாசம் என்ற கொடியவன் சுட்டு கொன்றதை அறிந்து அதற்காக நீதி கேட்டு சட்டத்தரணி தர்மராஜின் உதவியை நாடுகிறான்.ஆனால் தர்மராஜோ தன உறவினனான கைலாசத்திட்கு சார்பாக வாதாடி அவனை கொலை குற்றத்தில் இருந்து விடுவிக்கின்றான் .இந் நிலையில் கல்லூரி மாணவியான உமாவை கைலாசத்தில் கூட்டத்திடம் இருந்து போராடி காப்பாற்றுகிறான் .ஆனால் சட்டமோ அவனை தண்டிக்கிறது உமாவின் காதலோ அவனை நாடுகிறது .


இப்படி அமைந்த இப் படத்தின் திரைக்கதையை வீரப்பனே எழுதியிருந்தார்.வசனங்களை ஆர் கே சண்முகம் தீட்டியிருந்தார் வசனங்கள் சில இடங்களில் கூர்மையாக வந்து விழுந்தன.நீதிமன்ற வழக்கின் போது நீ என்ன சொல்ல விரும்புகிறான் என்று நீதிபதி செல்வதை கேட்க,நடந்ததை நான் சொல்லி விட்டேன் நடக்காததை வக்கீல் சொல்லி விட்டார் நடக்க வேண்டியதை நீங்கள் தான் சொல்ல வேண்டும் என்று செல்வம் நீதிபதியிடம் சொல்லும் போது ரசிகர்களின் கரகோஷம் அரங்கை நிறைத்தது.படத்திற்கான அரங்க அமைப்பை கிருஷ்ணா ராவ் ஏற்றிருந்தார் படத் தொகுப்பை ஜம்புலிங்கம் கவனித்துக்கொண்டார் .எம் ஜீ ஆரின் பல படங்களுக்கு தொடர்ந்து ஒளிப்பதிவு செய்து வந்த வீ ராமமூர்த்தி இப் படத்தின் ஒளிப்பதிவையும் மேற்கொண்டார் .

எம் ஜீ ஆர் படம் என்றால் வில்லன்களுக்கு முக்கியத்துவம் இல்லாதிருக்காது இதில் கைலாசமாக வரும் எஸ் எ அசோகன் தனது வில்லன் நடிப்பால் பட்டையை கிளப்பி இருந்தார் அவருடைய முக பாவம் காய் அசைவுகள் இமையை நீவி விடுவது என்று பல வித ஸ்டைல்களை அவர் காட்சிக்கு காட்சி காட்டியிருந்தார்.துணை வில்லனாக வரும் ஆர் எஸ் மனோகர் கத்திக்குத்து கார்மேகம் என்ற முரடன் வேடத்தில் வந்து எம் ஜீ ஆருடன் மோதுகிறார் அதே போல் வித்தியாசமான மேக்கப்புடன் வரும் ஜஸ்டின் எம் ஜீ ஆருடன் பயங்கரமாக சண்டை போடுகிறார் இதே போல் சைக்கிள் ரிக்சாவில் அமர்ந்த வண்ணம் வில்லன்களுடன் எம் ஜீ ஆர் கம்பு சுற்றுவது தியேட்டரில் ரசிகர்களை ஆர்ப்பரிக்க வைத்தது . ஸ்டண்ட் மாஸ்டர் ஷியாம்சுந்தர் பாராட்டும் படி சண்டை காட்சிகளை அமைத்திருந்தார்.

படத்தில் மெல்லிசை மன்னர் எம் எஸ் விஸ்வநாதனின் இசையில் உருவான அழகிய தமிழ் மகள் இவள் ,கடலோரம் வாங்கிய காற்று,அங்கே சிரிப்பவர்கள் சிரிக்கட்டும் ஆகிய பாடல்கள் பெரும் வரவேற்பை பெற்றன பாடல்களை வாலி அவினாசிமணி ஆகியோர் எழுதி இருந்தார்கள்.எம் கிருஷ்ணன் இயக்கத்தில் வெளி வந்த ரிக்ஸாக்காரன் தமிழகத்திலும் இலங்கையிலும் ஓடி வெற்றி படமானது.

அது மற்றுமன்றி இப் படத்தில் நடித்ததற்காக அகில இந்திய சிறந்த நடிகருக்கான பாரத் விருது இந்திய அரசினால் எம் ஜீ ஆருக்கு வழங்கப்பட்டது.
.






No comments: