Thursday, October 21, 2021 - 8:06pm
13ஆவது அரசியலமைப்பு திருத்தத்தில் தமிழுக்கும் உரிமை 1965 ஆம் ஆண்டுகளில் உருவாக்குவதற்கு இணங்கப்பட்ட மாவட்ட சபைகள் யோசனை குப்பைக் கூடைக்குள் வீசப்பட்டது. இதுவே உண்மை வரலாறு. மறுக்கவோ மறைக்கவோ முடியாத தெளிவான வரலாறு.
இலங்கையில் சிறுபான்மையினராக வாழும் தமிழர்கள் பல அடிப்படை உரிமைகளை இதுவரை பெற்றுக் கொள்ளாததால் அவற்றை அடையும் பகீரதப் பிரயத்தனத்தில் கடந்த ஏழு தசாப்தங்களுக்கும் மேலாக ஈடுபட்டு வருகின்றனர். தமிழர் பிரச்சினைகள் முடிவுறாது தொடர்வதற்கு இரு காரணங்கள் உள்ளன. ஒன்று, தமிழர் பிரச்சினைக்குத் தீர்வு கிட்டுவதைத் தடுப்பதும், உள்ளவற்றைப் பறிப்பதுமான ஒரு தரப்பு. மற்றது தமிழர் தரப்பு. தமிழர் பிரச்சினைகள் எவை? அவற்றுக்கு எவ்வாறு தீர்வு காண்பது? என்பது பற்றி உரியபடி சிந்தித்துச் செயற்படாத தரப்பு இந்த யதார்த்தத்தை ஏற்க வேண்டும்.
தமிழ் அரசியல்வாதிகளில் அநேகமானோருக்கு அரசியலென்பது பொழுதுபோக்கு விளையாட்டாகவும் உள்ளது. பொறுப்பற்ற, பொருத்தமற்ற அரசியல்வாதிகளால் மக்களின் அன்றாடப் பிரச்சினைகளுக்கோ அடிப்படைப் பிரச்சினைகளுக்கோ தீர்வு காண முடியாது. தமிழர்களின பின்னடைவுக்கு அதுவே ஏதுவாக அமைந்து விட்டது.
இன்று இலங்கையின் அரசியலமைப்பு தொடர்பாக நாட்டிற்குள்ளும், வெளியிலும் பேசப்படுகின்றது. தமிழ் அரசியல்வாதிகளும் தற்போது நடைமுறையிலுள்ள அரசியலமைப்பு மாற்றப்படுமானால் தமிழர் பிரச்சினை தீர்க்கப்படும் என்கின்றனர்.
புதிய அரசியலமைப்பு உருவானால் சகலதும் தீர்ந்து விடுமென்பது விதண்டாவாதமன்றி வேறல்ல.
தற்போதைய அரசியலமைப்பின் பதின்மூன்றாவது திருத்தத்தை உரியபடி நடைமுறைப்படுத்தினால் தமிழர் பிரச்சினைக்கு பெருமளவு தீர்வு எட்டப்படும் என்ற நம்பிக்கையையே நமது அண்டை நாடான இந்தியா கொண்டுள்ளது. எனவேதான் குறித்த திருத்தத்தை அரசியலமைப்பில் மேற்கொள்ளுமாறு இலங்கை அரசாங்கத்திற்கு இந்தியா அழுத்தம் கொடுத்தது. இந்தியா இன்றும் அழுத்தம் கொடுத்து வருகின்றது.
இந்தியாவால் தமிழர்கள் மீதும், இலங்கையின் மீதும் திணிக்கப்பட்டதாகக் கூறப்படும் பதின்மூன்றாவது அரசியலமைப்புத் திருத்தத்தால் வடக்கு, கிழக்கு மாகாணங்களின் முதன்மை நிர்வாக மொழி தமிழென்றும் அம்மாகாணங்கள் இரண்டிலும் அரச ஆவணங்கள் தமிழ் மொழியில் பேணப்பட வேண்டுமென்றும் விதிகள் உள்ளடக்கப்பட்டுள்ளன. அது தமிழர்களுக்கு பாதிப்பானதல்ல.
அதிகாரப் பரவலாக்கல் மூலம் தமது பகுதிகளைத் தாமே ஆளக் கூடியதாக பிரதேச உரிமை கேட்ட தமிழர்களுக்கு அவர்களது எந்தவொரு முயற்சியாலும் அதை அடைய முடியவில்லை. 1965 இல் ஆட்சிபீடமேறிய டட்லிசேனாநாயக்க அரசாங்கம் டட்லி – செல்வா ஒப்பந்தம் மூலம் மாவட்ட சபைகள் உருவாக்குவதற்கான சட்டமூலம் தயாரித்து அதற்கான வெள்ளையறிக்கையையும் வெளியிட்டது.
1965 ஆம் ஆண்டுகளில் உருவாக்குவதற்கு இணங்கப்பட்ட மாவட்ட சபைகள் யோசனை குப்பைக் கூடைக்குள் வீசப்பட்டது. இதுவே உண்மை வரலாறு. மறுக்கவோ மறைக்கவோ முடியாத தெளிவான வரலாறு. தமிழருக்கு எதுவித நிர்வாக அலகும் அற்ற நிலையில் கொடுபடுவதை விரும்பாத நிலையில் இந்தியாவால் திணிக்கப்பட்டதென்று தமிழர் தரப்பின் சிலராலும் கூறப்படும் பதின்மூன்றாவது திருத்தத்தின் மூலம் தமிழர்களும் தமது பகுதிகளை ஓரளவாவது சுயமாக ஆளும் உரிமையை ஏற்படுத்திய மாகாண சபைகள் உருவாக்கப்பட்டன. மாவட்ட சபைகளை எதிர்த்தவர்கள் மாகாண சபைகளை எதிர்ப்பதில் ஆச்சரியமில்லை. மாகாண சபைகளை முறையாக நடத்திச் செல்லாமல் பல பிரச்சினைகள் தமிழர் பகுதியில் ஏற்பட்டன. எடுத்துக்காட்டாக வடமாகாணத்திற்கான பொருளாதார வலயத்தைக் கொள்ளலாம். ஒரே கட்சியைச் சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர்களும் மாகாணசபை நிர்வாகத்தினரும் தமக்குள்ளேயே முட்டி மோதியதால் வடமாகாணத்திற்கான பொருளாதார மத்திய நிலையம் உருவாக்கப்படவில்லை.
இதனால் நட்டமடைந்தது வடமாகாண விவசாயிகளும், பொதுமக்களுமே. பதின்மூன்றாவது அரசியலமைப்பு திருத்தத்தில் உட்படுத்தப்பட்டும் இதுவரை வழங்கப்படாமல் நடைமுறைப்படுத்தப்படாமலுள்ள காணி, பொலிஸ் அதிகாரங்கள் எழுத்துருவில் பதியப்பட்டுள்ளன.
அவை காலமாற்றத்தால் களமாற்றத்தால் அடையக் கூடிய நில ஏற்படலாம். இவற்றுக்கப்பால் கல்வி, சுகாதாரம், விவசாயம், போக்குவரத்து உட்படப் பல அதிகாரங்களைக் கொண்டதாக பதின்மூன்றாவது திருத்தமுள்ளது. தமிழ் அரசியல்வாதிகள் தமக்குள்ளே மோதிக் கொண்டு உரியபடி மாகாண சபைகளை இயங்க விடாது தடுத்தமையை எவரும் மறுக்க முடியாது. மறைக்க முடியாது. சுயநல பதவி பணநலன்களுக்காக அரசியல் அரங்கில் நாடகமாடுபவர்களால் சமுதாயம் பெறும் நன்மையென்ன?
பதின்மூன்றாவது அரசியலமைப்பு திருத்தத்தை உரியபடி நிறைவேற்றுமாறு இந்தியப் பிரதமர் நரேந்திரமோடி இலங்கையிடம் நேரடியாகக் கூறியிருப்பதும், அரசியலமைப்பில் உள்வாக்கப்பட்டுள்ள விதிகளை நடைமுறைப்படுத்துவதாக இலங்கை கூறியிருப்பதும் வரவேற்கப்பட வேண்டியவை. அண்மையில் இந்திய வெளிவிவகாரச் செயலாளர் இலங்கை வந்த போது 13 ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துமாறு வலியுறுத்தியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
இவ்வாறுள்ள நிலையில் குறித்த 13ஆவது அரசியலமைப்பு திருத்தத்தில் உறுதி செய்யப்பட்டுள்ள தமிழ்மொழியுரிமை பற்றி எவருமே கவனத்தில் கொள்ளாதிருப்பது வேதனைக்குரியது. இலங்கையின் ஆளும் தரப்போ, பெரும்பான்மையினத்தவரோ தமிழ் மொழியுரிமை பற்றி அக்கறையற்றிருப்பது போன்று தமிழ் அரசியல்வாதிகளும், மக்கள் பிரதிநிதிகளும் உதாசீனமாயிருப்பது கண்டிக்கப்பட வேண்டியதாகும். நாடு சுபீட்சமடைய தேசிய பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட, சமத்துவ மற்றும் இன உறவு ஏற்பட பலவழிகளிலும் உதவுவதாகப் பதின்மூன்றாவது அரசியலமைப்புத் திருத்தமுள்ளது. அதற்கு உலகளாவிய அங்கீகாரம் உள்ளது.
த. மனோகரன் - நன்றி தினகரன்
No comments:
Post a Comment