புதர்க் காடுகளில் ( சிறுகதை ) முருகபூபதி

( முன்கதைச்சுருக்கம் :   வீரகேசரியில் 1988   ஆம் ஆண்டு


வெளியான  இச் சிறுகதை,  சிங்கப்பூர்  தமிழ் முரசுவிலும் மறுபிரசுரமானது.  அவுஸ்திரேலியா,  விக்ரோரியா மெல்பன்
3 E A வானொலி ,  குவின்ஸ்லாந்து பிரிஸ்பேர்ண்  தமிழ் ஒலி வானொலி ஆகியவற்றில்  ஒலிபரப்பப்பட்டது.

 இலங்கையில் The Island பத்திரிகையில் Bush walk என்ற பெயரில் ஆங்கிலத்தில் வெளியானது. மொழிபெயர்த்தவர் திருமதி ரேணுகா தனஸ்கந்தா )

 புதர்க் காடுகளில்   

 நெடிதுயர்ந்த பைன் மரங்கள் செறிந்து வளர்ந்து வாழும் புதர்க்காடுகளுக்குள் நுழையும்போது மாலை ஆறு மணியும் கடந்துவிட்டது. 

வசந்த காலத்தை விரட்டியடித்துக் கொண்டு முன்னே

வந்த கோடை காலத்தினால் ஆறு மணியாகியும் சூரியன்

இன்னமும் உறங்கப்போகவில்லை.

புஷ்வோர்க் செல்வதற்கு இதுவே உகந்த நேரமென்று பிரேம்குமார் சொன்னதை நான் முதலில் நம்பவே இல்லை.


 ‘ புஷ்வோர்க்    மச்சான் அதனைத் தமிழ்ப்படுத்து பார்ப்போம்.  சாமைக் கேட்ட போது  “ புதர்க்காடுகளில் நடத்தலாக்கும்   “ சந்தேகம் தொக்கி நிற்கப் பதில் பிறந்தது.

பச்சைப்பசேலென எங்கும் நெடிதுயர்ந்த மரங்களும் குளிர்மையாக மதர்த்து நின்ற புதர்களுமாக பனிப்புகாரைப் போர்த்திக்கொண்டு காட்சியளித்த பெல்கிரேவ் பிராந்தி யத்தின் "ஷேர்புரூக் ஃபொரஸ்ட் பார்க்" கிற்குப் போக வேண்டும்.  அங்கே சில மணி நேரம் நடந்து திரிந்து பொழுதைப்போக்க வேண்டும் என்று எத்தனை நாட்கள்தான் திட்டம் போட்டிருப்போம்.

பாலா தனது காரைக் கொண்டு வந்தான். 

இப்படி எங்காவது உல்லாசமாக நண்பர்களுடன்

சுற்றுவதென்றால் அவனுக்கு அலாதிப் பிரியம்.

வாரத்தில் ஆறுநாட்களும் இயந்திரமாகிவிடும் எங்களுக்கு வாராந்த


விடுமுறை வரப்பிரசாதம்தான்.

ஞாயிறு வந்தது.

பாலாவின் காரில் ஏறும்போதே,  " மச்சான்  இந்த புஷ்வோர்க்குக்கு  இங்கத்தைய பெட்டைகள் வருமா?   “ எனக்கேட்டான் பிரேம்குமார்.

 ‘ பிரேம் குமார் எப்போதும் இப்படித்தான். ஏன்தான் இப்படி                          எரிச்சலூட்டுகிறானோ..?  எங்கே போனாலும் அவனுக்கு ஏன் இந்த அற்பத்தனமான எதிர்பார்ப்பு.    

இத்தாலி, கிறீக், பிலிப்பைன்ஸ்  என்று தான் ருசி                                 பார்த்ததையெல்லாம் பட்டியலிட்டு வர்ணித்து வம்பளப்பதையே பொழுதுபோக்காக்கிக் கொண்டவனை இந்த உலாத்தலுக்கு அழைத்திருக்கக் கூடாதுதான்.


தானும் வருவதாகக் காரில் ஏறிக்கொண்டவனை எவராலும் தடுக்கவும் முடியவில்லை. " பிரேம் வந்தால் கலகலப்பாக இருக்கும்  “ -அனுபவிக்க தயக்கமிருந்தாலும் அனுபவித்தவர்களிடம் கேட்டு ரசிப்பதில் ஏதோ இன்பத்தை நுகரமுடியுமென்ற ஆவல் பாலாவுக்கு.

பர்வூட்  நெடுஞ்சாலையில் கார் விரையும்போது

கலகலப்புக்கு உண்மையிலேயே குறைவில்லைதான்.  பதுளை-பண்டாரவளை வீதியில் பறப்பது போன்ற உணர்வு.

 ஒருவன்     கண்டிக்குப் போகிறோம் " என்றான். மற்றும் ஒருவன்,    நுவரேலியாவுக்கு  “ என்றான்.

 

எங்கிருந்தாலும் சிந்தை இன்னமும் சர்வதேசப் புகழ்பெற்ற தாய்த் திருநாட்டில்தான்.

 

சென். கில்டாவுக்கு அருகே பெற்றோலுக்காக பாலா காரை


நிறுத்தியபோது,  "  முறிகண்டி…..முறிகண்டி                                           வந்திட்டுது.   இறங்குங்கோ.    கச்சான் கடலை  வாங்குவோம்    சாம் உற்சாகம் மேலிட கூவியதைக் கேட்டு எழுந்த சிரிப்பலை ஃபொரஸ்ட்பார்க்  வாயிலில்தான் ஓய்ந்தது.

 

 பிக்னிக்  வந்த குடும்பங்களைப் பார்த்து,     கொடுத்து

வைத்தவர்கள்    என்று வாழ்த்தினான் பாலா,

பிரியமாக வளர்க்கப்படும் நாய்கள், பூனைகள் அக்குடும் பங்களின் அங்கத்தினர்களாகவே காட்சியளித்தன.

 


மூலைக்கு மூலை மரக்குற்றிகளில் அமர்ந்து தழுவிக் கொண்டும்,  அலுப்புத் தட்டாமல் முத்தமிட்டுக் கொண்டு மிருக்கும் சோடிகளை பிரேம்குமாரின் கண்கள் வேட்டையாடு கின்றன.

" மச்சான்….இந்தத் தெற்கு திசையால் நடப்போம்.  “ ஆங்கிலத்தில் " பத்து நிமிட நடை என்று எழுதப்பட்டிருந்த பலகை நின்ற திக்கினைக் காட்டினான் சாம்.

மெல்பன் தாவரவியல்  பூங்காவை  அந்த  நிலக்காட்சி  நினைவுபடுத்தியது.

 " நான் கிழக்குத் திசைப்பக்கம் நடக்கிறேன்.  நீங்கள் அந்தத் திசையால் போங்க. எத்தனை நிமிடத்தில் மீண்டும் சந்திக்கிறோம் எனப்பார்ப்போம்   “ என்ற எனது ஆவல் மீதூறிய ஆலோசனைக்கு அங்கீகாரம் கிட்டியது.

அவரவர் விருப்பத்தின் பிரகாரம் ஒவ்வொரு திசையிலும் திரும்ப முனைந்தபோது,  ஐந்து யுவதிகள் ஐஸ்கிறீமை சுவைத்தவாறு தெற்குத் திசையில் தோன்றினர்.

 

 “ பாலா…. அந்தப் பக்கம்  ஐஸ்கிறீம் பார் இருப்பது போலத் தெரியுது.  நாங்களும் போய் வாங்கி வருவோம். 

 

பிரேம்குமாரின் அவசரம் எனக்குப் புரிந்தது. அந்த யுவதிகளைக் கண்டதும் அவனுக்கு உற்சாகம் பிறந்திருக்க வேண்டும்.

 

முன்பு எங்கேயும் பார்த்திராத பல வர்ண கிளியொன்று ஒருத்தி சுவைத்துக் கொண்டிருந்த ஐஸ்கிறீம் குழலைத் தட்டி விட்டது. வாய்க்கும் இன்றி வயிற்றுக்கும் இன்றி அது பறந்து போனது.

 

இந்த எதிர்பாராத பறவையின் அடவாடித்தனம் அந்த யுவதிகளைச் சிரித்துக் கும்மாளமிட வைத்தது.

எல்லாம் சிவப்புத் தோல் சிங்காரிகள்தான். எந்தெந்த தேசமென்றும் தெரியவில்லை. கல்லூரி மாணவிகளா….? அல்லது அரசு வழங்கும் ஷோஸியல் செக்கியூரிட்டி பணத்தில் பொழுதைக் கழிக்கும் ஆரணங்குகளா….? தெரியவில்லை.

சில்லென்ற குளிர்ந்த காற்றுக்கும் நெடிதுயர்ந்த பைன்


மரங்களுக்கும் மத்தியில் கண்ணுக்குத் தெரியாத பட்சிகள் எழுப்பும் இனம் புரியாத ஓசைகள் சிவரஞ்சனி ராகத்தை இசைப்பது போன்ற உணர்வைத்தந்தது.

பிரேம்குமாரும், சாமும், பாலாவும் தெற்குத் திசைக்கே போய்விட்டனர்.

  ஒல்கா…. ஒல்கா…. ஐஸ்கிறீம் இழந்த ஒல்கா...  “ பலவர்ணக்கிளியிடம் ஐஸ்கிறீமை இழந்தவளைப் பார்த்து அந்தத் தோழிகள் கிண்டல் செய்கின்றனர்.

 அவளும் சிரித்துக் கொண்டுதான் நிற்கிறாள்.

ஓல்காவா... அப்படித்தான் கேட்டது.  நான் திரும்பிய கிழக்குத் திசையிலேயே அந்த யுவதிகளும் வருகின்றனர்.

தனிமையில் இனிமை காணும் உணர்வோடு நடக்கத் தொடங்கினாலும், பின்னால் தொடரும் யுவதிகளை நடை பாதையின் இருமங்கிலும் புதர்களை ஊடுருவி ஓடும் ஊற்று நீரை ரசிக்கும் பாங்கில் கடைக்கண்ணால் பார்த்துக்                  கொள்கிறேன்.

சில நிமிடங்கள் கரைந்திருக்கும்.  அந்த ஒல்கா மட்டும் மெதுவாக நடந்து வருகிறாள், மற்றவர்கள்….?

ஊற்று நீரில் கால் நனைத்து விளையாட புதர்களுக்குள் புகுந்து விட்டனர் போலும்.

பட்டை பட்டையாகத் தோல்களை, அங்கி களைவதுபோல் உரித்துக்கொண்டு வாழும் பைன் மரங்களை குழந்தையை தடவுவதுபோல் மிருதுவாக தடவிக்கொண்டு வருகிறாள் அந்த ஓல்கா.

என்னருகே வந்ததும் முகத்தில் புன்னகை உதிர்ந்தது. சம்பிரதாயபூர்வமாக " ஹவ் ஆர்  யூ? " உதடுகள் சிந்தின.

 “ வெரி குட்…. நீங்களும் ஆசிய நாட்டவரா.?   வித்தியாசமான நிறத் தோல் என்பதனால் தொடர்ந்த கேள்வியோ?

 “ ஆம்…. ஶ்ரீலங்கா…. நீங்கள்..? 

 “ வியட்நாம்"   குரலில் வீணைத் தந்தியின் நாதம்.

 ஓ…. வியட்நாம். கண்டதில் மிக்க மகிழ்ச்சி."

 “ இன்று உங்கள் நாட்டைப்போல் ஒரு காலத்தில் உலகப் புகழ் பெற்ற நாடு எங்கள் வியட்நாம்." தோளைக் குலுக்கிக் கொள்கிறாள்.

    “ உங்களுடன் வந்தவர்களை விட்டு விட்டு இப்படி தனியே நடக்கிறீர்களே…?    எனக்கேட்டேன்.

 “ இது திக்குத்தெரியாத காடில்லை.   திக்குகள் தெரிந்த காடுதான். "  ஆங்கிலம் அழுத்தம் திருத்தமாக, உதிர்ந்தது.

 ‘ உலகப் புகழ் பெற்றநாடு' என்ற அங்கீகாரத்துக்குள் தன் தாயகத்தை மட்டுமல்லாது,  எனது நாட்டையும் சேர்த்துக் கொண்டிருக்கிறாளென்றால். இலங்கையைப்பற்றி இவளும் ஏதும் தெரிந்து வைத்திருக்க வேண்டும்.

பைன் மரத்திலிருந்து உரித்தெடுத்த மரப்பட்டையை முகர்ந்து ரசிக்கும் அவளின் தாமதம் என்னை எட்டி நடக்க விடாமல் தடுத்தது.

    உங்களின் பெயரென்ன?  “ அவளின் சிநேகிதிகள் ' ஓல்கா…. ஓல்கா..." என அழைத்தமை நன்கு தெரிந்தும் கேட்டு ஊர்ஜிதப்படுத்திக் கொள்ளும் ஆவல் எனக்கு.

   வோல்கா 

   என்ன….?  வோல்காவா….?   ஓல்கா என்றல்லவா நினைத்தேன். உங்கள் சிநேகிதிகள், அந்தப் பறவையிடம் நீங்கள் ஐஸ்கிறீமை இழந்தபோது ஓல்கா என்றுதானே அழைத்தார்கள். “ 

 “ ஓ …. அந்த வேடிக்கையை நீங்களும் பார்த்தீர்களா…?   அவர்களின் உச்சரிப்பு உங்களுக்கு அப்படிக் கேட்டிருக்கிறது. என் பெயர் வோல்காதான். " மீண்டும் வீணைத் தந்தி சுரமீட்டியது.

முகர்ந்த மரப்பட்டையை சலசலத்து ஓடும் தெளிந்த ஊற்று நீருக்குள் விட்டெறிந்து, அது மிதந்து நெளிவதை வைத்த கண் வாங்காமல் பார்த்தபடி, கைகளைக் கட்டிக் கொண்டு நின்றாள் வோல்கா.

  வோல்கா…. எங்கேயோ கேட்ட பெயர்.  படித்த பெயர்.  “ நினைவுக்கு வராமல் விழித்தேன்.

 “ ஆம்…. எனது பெயர் வோல்கா….  நல்ல பெயரா. அது நதியின் பெயர். ஆனால்,  அந்த நதி வியட்நாமில் இல்லை. ரஷ்யாவில் தான் ஓடுகிறது, ஹொங்கா நதி,  சைகோன் நதியென் றெல்லாம் எங்கள் நாட்டில் எத்தனையோ நதிகள் இருக்கும் போது,  என் தந்தையார் அந்நிய நாட்டில் ஓடும் நதியின் பெயரைக் காரணத்தோடுதான் எனக்குச் சூட்டியதாகத் தாயார் அடிக்கடி சொல்வார். உங்களின் நாட்டில் நதிகளின் பெயரைப் பிள்ளைகளுக்கு வைப்பதுண்டா?'  “ அவளின் அர்த்தம் பொதிந்த கேள்வி சுவாரஸ்யமான உரையாடலுக்கு வழி கோலியது.

 “ ஆமாம். கங்கா, காவேரி, யமுனா, நர்மதா… இப்படியெல்லாம் வைப்பார்கள்.    பெயர்களை அவள் புரிந்து கொள்ளத்தக்கதாக மீண்டும் மீண்டும் சொல்கிறேன்.

அவளும் உதடுகளைப் பிரித்து சொல்லிப்பார்க்கிறாள். முற்றிலும் மாறுபட்ட குரலிலிருந்து ஒலித்தன  இந்திய நதிகள்.

 “ அந்த நதிகள் உங்கள் நாட்டிலா... ?

“இல்லை. இல்லை. அண்டை நாடான இந்தியாவில் ஓடுகிறது. “

 “ உங்கள் நாட்டில் நதிகள் இல்லையா..?"

" ஏன் இல்லை. தாராளமாக உண்டு. மகாவலி, களனி….பட்டியலைத் தொடர்கிறேன்.

   இவ்வளவு நதிகள் இருக்கும்போது. அண்டை நாட்டு நதிகளை ஏன் சுவீகரித்துக் கொண்டீர்கள்...? 

  உங்களுக்கு, உங்கள் தந்தையார் ரஷ்யாவின் நதியை சூட்டியிருப்பதற்கு ஏதோ காரணம் இருப்பதாகச் சொன்னீர் கள். அதுபோல் எங்கள் மூதாதையர்களும் இந்தியாவிலிருந்து வந்தமையால்,  குறிப்பிட்ட நதிகளின் பெயர்களை தம் பிள்ளைகளுக்கு வைத்திருக்கலாம் இல்லையா…? 

 “ ஒஹோ. உங்கள் மூதாதையர்கள் இந்தியர்கள் என்று சொல்லுங்கள். அதனால்தானோ, இப்போதும் அங்கிருந்து உங்கள் நாட்டுக்கு மற்றவர்கள் வருகிறார்கள்... “

மற்றவர்கள் என்று யாரைக் குறிக்கிறாள் இவள்.?

" மற்றவர்களா…. யார்..? "

" அதுதான் சீருடை அணிந்த சிப்பாய்கள். ஆயுதம் ஏந்தியவர்கள்." மீண்டும் தோளைக் குலுக்கி சிரிக்கிறாள்.

இவள் ஒரு மாணவியாக இருக்க வேண்டும்.  அல்லது ஏதேனும் துறையின் ஆராய்ச்சியாளராக இருக்க வேண்டும்.  இவள் ஜஸ்கிறீம் சுவைக்கும் போது இவள் மீது கொண்டிருந்த கணிப்பு அவுஸ்திரேலியாவின் விக்டோரியா மாநிலத்துப் பருவகாலத்தைப் போன்று படிப்படியாக மாறியது.

 “ நீங்கள் படிக்கிறீர்களா? 

 “ தாவரவியல் ஆராய்ச்சி மாணவி.  இன்னும் ஒருவருடம் பயிற்சி உள்ளது.  இந்த புதர்க்காட்டுக்கு அடிக்கடி வருவேன்.  இன்று ஆராய்ச்சிக்காக வரவில்லை. இரசாயனவியல் படிக்கும் சக தோழிகளுக்காக,  பொழுதைக் கழிக்க வந்தேன். இந்த நாட்டில் இப்படிப் புதர்க்காடுகளுக்குள் நடத்தல் என்பது நல்ல பொழுதுபோக்காகக் கருதப்படுகிறது. “

 “ நீச்சல் விளையாட்டு, படகோட்டம்….இப்படியென்று நினைக்கிறேன். ஒரு மனிதனுக்கு உழைப்பு மட்டும் முக்கியமில்லை. ஒய்வும் முக்கியம். பொழுதுபோக்கும் அவசியமாகிவிட்ட தேசங்களில் நாளுக்கொரு பெழுதுபோக்கு களைத் தேடிக்கொள்ளும் மாந்தர்."

 “ வாழ்க்கை குறுகியது. அதனால் அதன் இனிமையை அனுபவிக்கப் பழகிக்கொள்ளுங்கள் -  என்ற ஆங்கிலப் பழமொழிக்கு இலக்கணமாகிய தேசம் இந்த நாடு 

மரங்கள் சடசடத்து, வீசிய குளிர்காற்றினால்  எனது உடலில் சிறிது நடுக்கம், கைகளை நெஞ்சோடு அணைத்து இறுகக் கட்டிக் கொண்டேன்.

அவளை இந்தக் குளிர் எதுவும் செய்து விடவில்லை. புன்னகை தவழ என்னை விசித்திரமாகப் பார்த்தாள்.

" இந்த நாட்டின் சீதோஷ்ணம் உங்களுக்கு ஒத்துக் கொள்கிறதா..?"  எனக்கேட்டாள்.

" என் கடவுளே… அதையேன் கேட்கிறீர்கள்….இந்தக் கண்டத்தின் பருவகால மாற்றங்கள் என்னை வதைக்கிறது. சில மாதங்களாக எனது கைகளும் விரல்களும் விறைக் கின்றன. பாவித்த மருந்துகளுக்கும் பலன் இல்லை "

நான்  அனுபவிக்கும் துயரத்தைப் பகிர்ந்தேன்.

  கவலைப்படாதீர்கள்….இந்தக் கை, கால் விறைப்பு இங்கு பலருக்குண்டு. உங்களுக்காவது  பருவகாலத்தினால் கைகள் விறைக்கின்றன. ஆனால்,  எனக்கோ வாழ்நாள்

பூராவுமே வலது கை விறைத்துக் கொண்டுதானிருக்கிறது. எனது மரணத்தில்தான் அந்த விறைப்பும் ஓய்வுபெறும். என்னால் எந்த வேலையையும் இடது கையினால்தான் செய்ய முடியும் 

அவள் நீட்டிக் காண்பித்த வலது கையின் விரல்கள் இயற்கைக்கு மாறாக சூம்பிய நிலையில். வெளிறிப்போய் இருந்தன.

  “ இரண்டு கைகளையும் காட்டுங்கள்?  “ ஆர்வமுடன் நெருங்கினேன். இரண்டு கைகளையும் ஒருங்கு சேர்த்து நீட்டினாள்.

 “ தனித் தனியாகத் தொட்டுப்பாருங்கள்… வித்தியாசம் தெரியும்."  என்றாள் வோல்கா.

வலது கரத்தில் இயல்புக்கு மாறான குளிர்மையையும், இடக்கரத்தில் இயல்பான சூட்டையும் உணர முடிந்தது.

 “ ஏதும் விபத்தா…. அல்லது பிறப்பிலேயே இப்படியா..?

 “ இல்லை…. இல்லை….அமெரிக்க விமானங்கள் பொழிந்த நேபாம் குண்டுகள் அளித்த முத்தங்கள்  

அதிர்ச்சியும் சோகமும் கலந்த நிகழ்ச்சியை வெகு சாதாரணமாக சொல்லத் தக்க மனப்பக்குவம் வளர்ந்துவிட்ட அவளை மனதுக்குள் வியந்தேன்.

 “ ஹனோய் நகரில் நான் பிறந்து சில நிமிடங்களில் என் தாயும் தந்தையும் அளித்த முத்தங்களை அடுத்து, சில வாரங்களில்  நேபாம் அளித்த முத்தத் தழும்புகள் இவை. நல்லவேளை…. என் பெற்றோரைப்போல்…..அவை என் முகத்தில் முத்தம் பொழியவில்லை.   பொழிந்திருப்பின்…..இன்று பெரும்பாலும் நான் இல்லைத்தான்."

பக்கத்து வீட்டு ராஜேஸ்வரி காதல் தோல்வியினால் தற்கொலைக்கு முயன்ற சமயம் அவள் தேடிச் சென்ற மரணத்தை விரட்டியடிக்க உள்ளங்கையில் பிளேடினால் கீறி, கீறலிலிருந்து பிதுங்கிய இரத்தத்தில் சத்திய வாக்கு

கேட்டு, இன்றும் அந்தப் பாசத் தழும்புடன் நிற்கும் நான் எங்கே…? பூமியில் வந்து விழுந்து பால் ருசி உணரு முன்பு நேபாம் குண்டுகளினால் வீரத்தழும்புகளை ஏற்றுக் கொண்ட இவள் எங்கே….?

பைன் மரம் போன்று நெடிதுயர்ந்து நிற்கும் அவளருகே கூனிக்குறுகிய சிறியவனாகிவிட்டேனா..?

" எங்கள் நகரம் பாதிக்கப்பட்ட சமயம்தான் நான் பிறந்திருக்கிறேன்.  எனது  தாயார் அப்பொழுது பட்ட துயரங்களை இப்போதும் கதை கதையாகச் சொல்வார். “

“ உங்கள் தந்தை….?

 " அவரா….? பாவம்….அதன் பின்பும் ஓய்வு எடுக்காத அமெரிக்காவின் பி-52 விமானம் வீசிய குண்டுகளில் பலி யாகிப்போன பலருள் அவரும் ஒருவராகிவிட்டார். சடலத்தைக் கூட  தாயார் பார்க்கவில்லையாம். அவரின் முகத்தைப் புகைப்படத்தில் தான் நான் பார்த்திருக்கிறேன். மலேஷியா வுக்கு அகதிகளோடு அகதிகளாகப் படகில் வந்து சேர்ந்து, பின்பு.இந்த நாட்டுக்கு வந்தோம். “

 “ மிகவும் மோசமான அத்தியாயங்கள்தான். இந்த அத்தியாயங்கள் இப்போது எங்கள் தாய் நாட்டிலும் தொடருகின்றதோ என்ற கவலைதான் எனக்கு இங்கு எப்பொழுதும். “

" ஆசியா… பாவம் செய்த கண்டம்.  இன்னமும் அதற்கு நிம்மதியில்லை. எங்கள் வியட்நாமில் தென்பகுதிக்கு உதவ வந்தவர்கள்,  வடபகுதிக்குள் ஊடுருவி புரிந்த நாசங்களை சொல்ல வார்த்தைகள் இல்லையென்று தாயார் சொல்லுவார். ஆசியாவின் ஊழ்வினையா? "

ஊழ்வினையில் இவளுக்கும் நம்பிக்கையா..? எதுவும் பேசத் தோன்றாமல் அவள் முகத்தையே பார்த்தேன்.

 “ வியட்நாம், பங்களாதேஷ், கம்பூச்சியா, ஶ்ரீலங்கா… இப்படியே ஆசியாவில் சோகம் தொடருகிறதல்லவா…? 

இங்குள்ள பொதுசனத் தொடர்பு சாதனங்களினால் உங்கள் நாட்டில் என்ன நடக்கிறதென்பதை அறிகிறேன். ரஷ்யாவின் துணையால் வியட்நாமில் நிம்மதிப் பெருமூச்சு எழுந்தது. நாம் என்றாவது ஒரு நாள் அந்தப் பெருமூச்சை விடுவோம் என்று தந்தையார் சொல்லுவாராம். அதனால் எனக்கு வோல்கா எனப் பெயரிட்டதாகவும் தாயார் சொன்னார்கள்."

அந்தப் பெயருக்குப் பின்னால் நின்ற கதையைக் கேட்ட போது.

கங்கா -  காவேரி-  யமுனா  - நர்மதா -  வற்றாத இந்த ஜீவநதிகள் பாரதப்பூமியின் செழிப்புக்காக ஒடிக்கொண்டிருக் கையில்,  தாய்த் திருநாட்டின் தவப்புதல்விகள்,  சகோதரிகள்,  கங்கா,  காவேரி,  யமுனா, நர்மதா  உயிரைப் பாதுகாக்க, உயிரிலும் மேலான புனிதத்தைப் பாதுகாக்க எங்கெங்கே. ஓடினார்களோ….?  ஓடுகிறார்களோ….?  நெஞ்சம் அடைக்கிறது. பொங்கிப் பெருகிய விம்மலை அடக்கினேன்.

  என்ன…. பேசாமல் வருகிறீர்கள். என் கதையின் அதிர்ச்சியிலிருந்து இன்னமும் நீங்கள்  மீளவில்லையா...? 

 “ எங்கள்  தாய்நாட்டை,  எங்கள் மக்களை நினைத்தேன்."

  கவலைப்படாதீர்கள். இந்த பைன் மரங்களைப் போலத்தான் மனித வாழ்க்கையும். எந்த நிமிடமும் உரிந்து விழத் தயாரான நிலையில் அதன் மரப்பட்டைகள் அந்தரித்துக் கொண்டிருக்கின்றபோதிலும்,  அது நெடிதுயர்ந்து வளர்ந்து கொண்டுதானிருக்கிறது தன்னம்பிக்கையுடன். தான் நாளை வெட்டி வீழ்த்தப்பட்டாலும். மின் கம்பத்துக்கு உதவுவேன்-என்ற கம்பீரம் அதற்கு. "

" எம்மைவிடப் பயன் மிக்கது இந்த பைன் மரம். அது செத்தாலும் மின்கம்பமாகும். நாமோ?  “ விரக்தி மேலிட சிரித்தேன்.

 “ நாமா. நாம்…. பசளையாகின்றோம். இந்த மரங்களுக்கு." தோளைக் குலுக்கி, குலுக்கி சிரித்தாள் வோல்கா.

வீணைத்தந்தியில் புதிய நாதம்.

நாம் நடந்து சென்ற கிழக்குத் திசை நடைபாதை தெற்குத் திசையின் தொடக்கத்தில் முடிந்தது.

 “ எனது  சிநேகிதிகள் தேடப் போகிறார்கள். ஊற்று நீரில் கால் நனைப்பதென்றால் அவர்களுக்கு மிகவும் விருப்பம்."

விடைபெற முயன்றவளைப் பிரிய மனமில்லாமல்,  “ உங்களை மீண்டும் சந்திக்க விரும்புகிறேன். தொலைபேசி இலக்கத்தை தரட்டுமா?  

துண்டில் எழுதிக் கொடுத்ததை ஆர்வமுடன் பார்த்து விட்டு, கைகுலுக்கி விடை பெற்றாள் வோல்கா. என் கையும் குளிர்ந்தது.

தெற்குத் திசையின் தொடக்கத்தில் என் வரவுக்காக காத்து நின்ற நண்பர்களை நோக்கிக் கையசைத்தவாறு செல்கிறேன்.

 “ மச்சான்…. புதர்க் காட்டுக்குள்ளே… திருவிழாவா…. மறைந்து நின்று எல்லா வேடிக்கையும் பார்த்தோம்    பாலா ஏதோ பார்க்காததைப் பார்த்துவிட்ட  புளகாங்கிதத்துடன் பேசுவதாகப் பட்டது  எனக்கு.

காரில் ஏறும் போது,    எப்படி மச்சான்….?  அந்த வியட்நாம் சரக்கு….?     உதட்டை நெளித்துக் கொண்டு கேட்ட  பிரேம் குமாருக்கு,   “ அவள்  சரக்கு அல்ல,   சகோதரி     என்றேன் வெகு

நிதானமாக.

 

---0---

 

 

 

 

 

 

No comments: