ஈஸ்டர் தாக்குதலின் சூத்திரதாரி யார்..? சர்வதேச சமூகத்தை நாடும் பேராயர் ! அவதானி


இலங்கையில் எது நடந்தாலும், இறுதியில் சர்வதேச சமூகத்திடம் பாதிக்கப்பட்டவர்களின் தரப்பு முறையிட்டுவரும் காட்சிகள்தான் தொடர்ந்து வந்துகொண்டிருக்கின்றன.

வன்னி பெருநிலப்பரப்பில் தமிழ்மக்கள் கொன்றழிக்கப்பட்டபோதும்  இந்த முறையீடு நடந்தது. இன்றுவரை இந்தக்குரல் ஓயவில்லை.

வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் தரப்பில் முன்வைக்கப்பட்ட  கோரிக்கையையும்  சர்வதேச சமூகம் கவனத்தில் எடுத்தல் வேண்டும் எனவும் தொடர்ச்சியாக சொல்லப்பட்டு வருகிறது.

தென்னிலங்கையில் முஸ்லிம்கள் தாக்கப்பட்ட வேளையிலும் இதுபோன்ற குரல்கள் உலக அரங்கில் இஸ்லாமிய நாடுகளை நோக்கி எழுந்தன.

இலங்கை அரசிடம் சொல்லிச்  சொல்லிக்களைத்துப்போனவராக கொழும்பு கத்தோலிக்க பேராயர் மல்கம் ரஞ்சித் ஆண்டகை,   கடந்த 2019 ஆம் ஆண்டு நடந்த ஈஸ்டர் தாக்குதலின் பின்னணியிலிருந்து செயற்பட்டவர்களை கண்டறிவதற்கு சர்வதேச சமூகம் உதவவேண்டும்   என்று  தற்போது கோரிக்கை விடுத்துள்ளார்.

 “ ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலில் ஈடுபட்டவர்களை கண்டறிந்து உரிய


தண்டனை வழங்கப்படும், பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி பெற்றுத்தரப்படும் எனச்சொல்லி பல வாக்குறுதிகளை வழங்கியே இன்றைய ஜனாதிபதி,  தேர்தலில் வெற்றி பெற்றதாகவும், அவரை ஆதரித்த மொட்டு அணியினரே அரசுப்பதவிக்கு வந்திருப்பதாகவும், ஆனால் -  ஜனாதிபதியோ, இன்றைய அரசோ குற்றவாளிகளை கண்டறிந்து தண்டனை வழங்காமல் விசாரணை என்ற பெயரில் காலத்தை இழுத்தடித்துக்கொண்டிருப்பதனால்,  சர்வதேச சமூகத்தை நாடவேண்டியிருக்கிறது    என்ற தொனியே பேராயர் மல்கம் ரஞ்சித் ஆண்டகையின் ஆதங்கத்தில் எதிரொலிக்கிறது.

கடந்த மைத்திரி – ரணில் நல்லாட்சி ( ? ) காலத்தில் 2019 ஆம் ஆண்டு ஏப்ரில் மாதம் 21 ஆம் திகதி இந்த தாக்குதல் சம்பவம் நடந்தது. தலைநகரம் உட்பட மூன்று நகரங்களில் மூன்று கத்தோலிக்க தேவாலயங்களிலும், தலைநகரில் மூன்று – ஐந்து நட்சத்திர விடுதிகளிலும் இந்தத் தொடர் தற்கொலை குண்டுத்தாக்குதல்கள் நடந்தன. இதில் வெளிநாட்டவர்கள் உட்பட  250 இற்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். ஐநூறுக்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.

இச்சம்பவம் தொடர்பாக சந்தேகத்தின்பேரில் பலர் கைதுசெய்யப்பட்டனர்.  விசாரணை இரண்டு ஆண்டுகளையும் கடந்து தொடருகின்றது.


இடையில் நாடாளுமன்றத்தின் தெரிவுக்குழுவும் தொடர் விசாரணையை நடத்தியது.  ஆனால், இன்னமும் குற்றவாளிகள் யார்..? என்பது கண்டறியப்படவில்லை ! எவருக்கும் உரிய தண்டனை வழங்கப்படவில்லை..! பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதியும் கிடைக்கவில்லை.

குறிப்பிட்ட   2019 ஆம் ஆண்டு இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு தாக்குதல் நடப்பதற்கு முன்பே, புலனாய்வுப்பிரிவுக்கு தகவல் கிடைத்திருந்தும், எதனையும் செய்யாமல் கையாலாகத்தனமாக இருந்தவர்களையும் தாக்குதல்களின் சூத்திரதாரிகளையும் விசாரிப்பதற்காக நாடாளுமன்றத்தினால் ஒரு விசாரணை தெரிவுக்குழுவும் முன்னைய அரசில் நியமிக்கப்பட்டது.

அதிலும் பெரிய இழுபறிகள் நிகழ்ந்தன.
தேசிய புலனாய்வு பிரிவின் பொறுப்பதிகாரி சிசிர மெண்டிஸ் அந்த விசாரணைக்குழுவின் முன்னால் தோன்றி சாட்சியமளித்தார். அதனை அவதானித்தார்  சம்பவங்கள் நடந்தவேளையில் நாட்டிலிருக்காத தேசத்தின்  அதிபர் மைத்திரியார். உடனே என்ன செய்தார்?

“ நாடாளுமன்ற தெரிவுக்குழு முன்னிலையில் சாட்சியமளித்தவர்கள், பாதுகாப்பு துறையிலிருந்து வெளியேறியவர்கள் “  என்று ஒரு பெரிய குண்டைப்போட்டார்.  அது தேவாலயங்களில் பாவிக்கப்பட்ட குண்டுகளை விட மிகவும் வலிமையானது.


அந்த பொன்னான வாக்கைக்கேட்டதும்   சிசிர மெண்டிஸ் தனது ராஜினாமா கடிதத்தை   பாதுகாப்பு செயலாளர் ஷாந்த கோட்டேகொடவிடம் கையளித்துவிட்டு, தனக்கு சுகமில்லை எனச்சொல்லி ஓய்வுக்குச்சென்றார்.

“ நாடாளுமன்ற தெரிவுக்குழு முன்னிலையில் புலனாய்வு அதிகாரிகள் வரவழைக்கப்பட்டு, விசாரணைக்கு உட்படுத்துவதை தான் ஒருபோதும் ஏற்றுக் கொள்ளப் போவதில்லை   “  என்றும் மற்றும் ஒரு அதிரடிக்குண்டைப்போட்டார்   மைத்திரியார். 
இவ்வாறெல்லாம் அவர் செய்யப்போகிறார் என்பதைத் தெரிந்துகொண்டே தெரிவுக்குழு பல வாரங்களாக விசாரணை செய்துகொண்டிருந்தது. ஊடகங்களும் அந்த விசாரணை வாக்குமூலங்களுக்காக பக்கங்களை நிரப்பிக்கொண்டிருந்தன.                              நாமும் படித்துத்தொலைத்( ந்)து  கொண்டிருந்தோம்.

அங்கு சாட்சியமளித்த முஸ்லிம் அமைப்புகளின் பிரதிநிதிகள் பேசிய சுத்தமான சிங்கள மொழியை  கேட்டு வியந்துபோன –  எதிர்காலத்தின் பாதுகாப்பு அமைச்சர் பதவிக்  கனவில் மிதந்த ஃபீல்ட் மார்ஷல் சரத்பொன்சேக்கா, “  தம்மால் கூட அவ்வாறு அழகாக சிங்களம் பேசமுடியவில்லையே   “ என்று தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்.

தேசிய பாதுகாப்பு சபையை உரிய முறையில்  ( முன்னாள் ) ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கூட்ட வில்லை என பாதுகாப்பு முன்னாள் செயலாளர் ஹேமசிறி பெர்ணான்டோ நாடாளுமன்ற தெரிவுக்குழு முன்னிலையில் சாட்சியமளித்திருந்தார்.


“  தன்னை பதவி விலகுமாறும், அவ்வாறு பதவி விலகினால் தனக்கு இராஜதந்திர பதவியொன்றை வழங்குவதாகவும்  “ ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தனக்கு அழுத்தங்களை பிரயோகித்திருந்ததாக அன்றைய  பொலிஸ் மாஅதிபர் பூஜித்த  ஜயசுந்தர சாட்சியமளித்திருந்தார்.

இறுதியில் என்ன நடந்தது…? அந்த விசாரணைக்குழுவின் அறிக்கையை மைத்திரியார் கிடப்பில் போட்டார்.

அன்றைய அரசு, மைத்திரி அணி – ரணில் அணி என்று இரண்டாக பிளவுபட்டு நின்றபோது,  “ ஊர் இரண்டுபட்டால், கூத்தாடிக்கு கொண்டாட்டம்   “ என்பதுபோன்று அந்த உயிர்த்த ஞாயிறு தாக்குதலை வைத்தே மீள் புனர்நிர்மாணம் செய்துகொண்டது ராஜபக்ஷக்களின் பரம்பரை.

 “ தாம் பதவிக்கு வந்தால் உரிய விசாரணை நடத்தப்படும்,  நீடித்த ஈழப்போரை முடிவுக்கு கொண்டுவந்தது தாங்களே , எனவே எமக்கு வாக்களியுங்கள், எமது ஆட்சியில் அனைவருக்கும் நீதி கிடைக்கும்  “ என்றார்கள், பெரும்பான்மை சிங்கள மக்கள் ஆதரித்தனர். இவர்களில் கத்தோலிக்கரும் அடக்கம்.

கொழும்பு பேராயர் மல்க்கம் ரஞ்சித் ஆண்டகையும் இவர்களில் நம்பிக்கை வைத்தார்.

ஆனால், அவரது நம்பிக்கையும் கானல் நீரானது. அதனால்,  இனி இதில் சர்வதேச சமூகம்தான் தலையிடவேண்டும் என்று குரல் எழுப்புகிறார்.

2009 முள்ளிவாய்க்கால் படுகொலைகள் நடந்து எத்தனை வருடங்களாகிவிட்டன..?  அதற்கு சர்வதேச சமூகம் என்ன செய்தது..?

இந்த இலட்சணத்தில் அதன்பின்னர் பத்து ஆண்டுகள்  கழித்து 2019 இல் நடந்த ஈஸ்டர் தாக்குதலில் கொல்லப்பட்டவர்களுக்காக இந்த சர்வதேச சமூகம் ஏதும் உருப்படியான நீதியை பெற்றுத்தரும் என்று ஆண்டகை நம்புகிறாரா..?

பாதிக்கப்பட்டவர்கள் இனி மாற்றுவழியை கண்டறியவேண்டும்.

---0---

 

 

 

 

No comments: