தேடப்படாத இலக்கியமாய் இருக்கும் குண்டலகேசியும் வளையாபதியும் ! [ தேடல் ஒன்று ]

 


மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா

 மேனாள் தமிழ்மொழிக்கல்வி இயக்குநர்
 மெல்பேண் .... அவுஸ்திரேலியா 

 


தமிழ் தொடர்பான எந்த நிகழ்ச்சிகளாக இருந்தாலும்  தமிழ்த்தாயை வாழ்த்திப் பாடிய பின்னர்தான் ஆரம்பிப்பது என்பது வழமையாக இருந்து வருகிறது. தேடப்படாத இலக்கியமாக இருக்கின்ற குண்டலகேசியையும், வளையாபதியையும் பற்றி உங்கள் யாவருக்கும் எடுத்துச் சொல்ல வந்திருக்கும் இவ்வேளையில் - தமிழ் வாழ்த்தினை சொல்லாமல் ஆரம்பித்தால் அது சிறப்பாய இருக்காதல்லவா ! ஆதாலால் தமிழ் அன்னைக்கான வாழ்த்தினை வழங்கி தேடப்படாத இலக்கியத்தை தேடலாம் என்று எண்ணுகின்றேன்.

           
             காதொளிரும் குண்டலத்தாள்

            கனிமொழியாள் வாழ்க

            கைக்கு வளையாபதி கொள்

            கன்னிகையாள் வாழ்க

            மேதகு மென்மார்பிடைச்

            சிந்தாமணியாள் வாழ்க

           மின்னுமணி மேகலை சூழ்

           மெல்லிடையாள் வாழ்க

           சீதமலர்ப் பாதமொலி

           சிலம்புடையாள் வாழ்க

 


வாழ்த்துப் பாடி ஆகிவிட்டது. இனி விஷயத்துக்கு வருவோம்.

  காணக்கிடைக்காத காப்பியங்கள் என்று கருதப்படுவனதான் வளையாபதியும் குண்டல கேசியுமாகும். சிலம்பதிகாரத்துக்கோ மணிமேகலைக்கோசீவக சிந்தாமணிக்கோ கொடுக் கப்படுகின்ற முக்கியத்துவங்கள் வளையாபதிக்கோ குண்டலகேசிக்கோ கொடுக்கப்படுவதி ல்லை. இவை இரண்டைப் பற்றியும் யாருமே பெரிதாய் பேசுவதும் இல்லை.ஐம்பெரும் காப்பியங்கள் என்னும் நிலையில் இக்காப்பியங்கள் இரண்டும் காப்பிய வரிசையில் கடை சியாகவே வைக்கப் பட்டிருப்பதையும் கருத்திருத்த வேண்டும்.

  சிலம்புக்காவலர்சிலம்புச் செல்வர்என்றுதான் பட்டங்கள் வழங்கப்படுகின்றன. மணிமே கலையானது சிலம்போடு இணைக்கப்பட்டு " இரட்டைக் காப்பியங்கள் " என்று வியந்து கூறப்படுவதையும் காண் கின்றோம். இரட்டைக் காப்பியம் என்னும் பெயர் எப்படி வந்தது யார் இவ்வாறு இணைத்தார்கள் என்பதும் கேள்விக்குரியதாகவே இருக்கிறது அநபாயச் சோழ மன்னன் மிகவும் விரும்பிப் படித்த காப்பியமாக சீவகசிந்தாமணி இருந்தது என்று அறிய முடிகிறது. சிற்றின்ப ரசம் பொருந்திய சிந்தாமணியினை அரசன் விடாமல் படித்துச்


சுவைப்பதை சேக்கிழாரின் மனம் ஏற்றுக்கொள்ள மறுத்தது. அநபாயனின் போக்கினை மாற்ற வேண்டுமென்று அல்லும் பகலும்  அமைச்சராய் இருந்த சேக்கிழார் எண்னினார். சேக்கிழாரின் எண்ணம் ஈடேறியதால் அநபாயன் மனம் மாறினான் என்றும் - இந்த மடை மாற்றத்துக்கு சேக்கிழாரின் பெரியபுராணம் என்னும் சைவசமயக் காப்பியம் காரணமாய் அமைந்தது என்பதையும் அறிகின்றோம்.

  ஆனால் காப்பிய வரிசையில் இடம் பெற்று நிற்கும் வளையாபதிக்கோகுண்டல கேசி க்கோ இப்படியான ஒரு நிலை வரவில்லை என்பதையும் கருத்திருத்தல்  வேண்டும். என்றாலும் இவற்றை எல்லாம் மீறி இந்த இரண்டு காப்பியங்களும் பேசு பொருளாக இருக்கின்றன என்பதும் கருத்திருத்த வேண்டியதே.அந்தக் காப்பியங்களைப் பற்றிப் பேசும் நிலையும் இன்று எனக்கும் வாய்த்திருக்கிறது என்பதும் நோக்கத்தக்கதே !

  ஆரம்பத்திலே பாடப்பட்ட தமிழ் வாழ்த்தினை எழுதியவருக்கும்-  குண்டலகேசி , வளையாபதி பற்றிய ஒரு ஆதங்கம் இருந்தே இருந்திருக்கிறது.அவரின் மனமிருந்த கருத்தே வாழ்த்தாய் மலர்ந்திருக்கிறது." நெஞ்சையள்ளும் சிலப்பதிகாரம் " என்றுபாரதி போற்றுகின்றார்.ஆனால் இந்த வாழ்த்துப் பாடியவரோ சற்று வித்தியாசமாய் பார்க்கிறார். தமிழ் அன்னை என்றவுடன் முதலில் தெரிவது அவளின் முகம்தானே ! முகத்துக்குப் பின்தான் மற்றைய உறுப்புகள் வந்தமையும். பார்க்கப்டாத முக்கியத்துவம் கொடுக்கப்படாத குண்டலகேசியை " காதொளிரும் குண்டலத்தாள் " என்று முதலில் காட்டுகிறார். பின்னர் அடுத்த நிலையில் வளையாபதியினை " கைக்குவளையா பதிகொள் "

கனிமொழியாள் வாழ்க " என்று 
காட்டி தனது மனக்கிடக்கையினை வெளிப்படுத்திய பின்புதான் - மென்மார்பிடைச் சிந்தாமணி என்றும்மின்னும் மேகலைசூழ் மெல்லிடை என்றும்  கடைசிசியில்த்தான் " சீதமலிப் பாதமலர் சிலம்புடையாள்" என்று ஐம்பெரும் காப்பிய வரிசையினையே மாற்றிப் பார்க்கும் ஒரு புதுமையை இப்புலவர் செய்திருக்கிறார் என்பதையும் கருத்திருத்தல் அவசியம் என்று எண்ணுகின்றேன்.பார்க்கப்படாத தேடப்படாத நிலையில்  குண்டலகேசியும் ,வளையாபதியும், இருக்கக் கூடாது என்னும் மனக்குறை யினைப் போக்குவதாய் இந்த வாழ்த்து அமைகிறதல்லவா !                                                       
   கல்லூரிகளில் படிக்கும் காலத்தும், பல்கலைக்கழகங்களில் பயிலும் காலத்தும் - சிலம் பையும்,மணிமேகலையும், சிந்தாமணியையுமே முக்கியத்துவப்படுத்தி கற்பித்தார்கள். ஐம்பெரும் காப்பியம் என்று தமிழ் வகுப்புகளில் பாடம் நடத்தும் வேளையில் மட்டுமே  , குண்டலகேசியினதும் ,வளையாபதியினதும் , பெயர் உச்சரிக்கப்பட்டிருக்கிறது.ஆனால் இவ்விரண்டையும் பற்றிப் பெரிதாகப் பேசப்படவில்லை என்பதையும் சுட்டாமல் இருக் கவே  இயலவில்லை.அந்த அளவுக்கு குண்டலகேசியும் , வளையாபதியும், பார்க்கப்படாத காப்பியங்களாகவே இருந்திருக்கின்றன.படிக்கின்ற காலத்தில் எனக்குள் ஒரு ஐயம் எழுந் தது. ஐம்பெரும் காப்பியங்கள் வரிசையில் இடம்பெறும் வளையாபதியும் , குண்டல கேசியும் அனாதை நிலையில் ஏன் பார்க்கப்படுகின்றன என்பதுதான் அது !

எனக்கு ஆசான்களாய் அமைந்த ஒரு பேராசிரியரிடம் இதனைப் பற்றித் துணிந்து கேட்டுவிட்டேன். எனது ஐயத்தைக் கேட்ட பேராசான் சற்று யோசித்து விட்டு " நாங்கள் பாடம் நடத்தாவிட்டால் என்ன ? பாடப்பகுதியில் சேர்க்கப்படாவிட்டால்த்தான் என்ன ? வளையாபதியும், குண்டலகேசியும் இல்லை என்றுதான் ஆகிவிடுமா ? ஐம்பெரும் காப்பி யங்கள் என்னும் வரிசையிலிருந்தும் அகற்றப்பட்டுத்தான் போய்விடுமா ? ஒருக்காலும் போகவே மாட்டாது.பொது மக்கள் மத்தியில் அந்த இரண்டுமே மிகவும் சிறப்பாகப் போய் ச்சேர்ந்தே விட்டது.உனக்கு அது தெரியுமா ? என்று என்னை நோக்கி ஒரு கேள்விச் சர த்தை எனது ஐயப்பாட்டுக்கு மறுமொழியாக அவர் விடுத்தார் "

 " நான் மெளனமாய் இருந்தேன் " . என் ஆசானே பேசத் தொடங்கினார். தமிழ்நாட்டின் முதலமைச்சராக இருந்தவர் கலைஞர் அவர்கள். அவர் முதலமைச்சர் நிலைக்கு வருவதற்கு முன்பே தேடப்படாத இலக்கியம் என்னும் குண்டலகேசியைத் தேர்ந்தெடுத்து நன்றாக உள்வாங்கியும் விட்டார்.குண்டகேசியை யாவரும் அறியச் செய்வதற்கு உகந்த வழி எது என்பதை மனமெண்ணி அவர் தேர்ந்தெடுத்த வழிதான் திரைத்துறையாகும். திரையில் வந்தால் அது எல்லாவிடத்தும் செறிந்தும் பரந்தும் நிறைந்தும் விடு மென்று அவர் நம்பினார்.அந்த நம்பிக்கையின் அடிப்படையில் குண்டலகேசியைஉள்வாங்கி  " மந்திரிகுமாரி " என்னும் திரைக்காவியத்துக்கு வித்திட்டார். அவரே திரைக்கதை வசனமும் எழுதினார். அவரின் எண்ணத்தில் குண்டலகேசி காவியம் 1950 ஆம் ஆண்டில் மந்திரிகுமாரி என்னும் பெயரில் வெள்ளித்திரையில் வலம் வந்தது என்று என் ஆசான் மூச்சுவிடாமல் சொல்லி நின்றார் ". அந்தப் படத்தைப் பார்த்தால் புரியும் குண்டல கேசியின் கதை என்றார்.

 அத்துடன் நிற்காமல் எனது அடுத்த ஐயத்தையும் போக்கினார் ஆசான். வளையாபதியும் தேடாத இலக்கியமாய் இருக்கக் கூடாது என்று எண்ணினார் புரட்சிக்கவி பாரதியின் சீடர் பாரதிதாசன். கலைஞருக்கு மிகவும் பிடித்தமான தமிழ்க் கவிஞன்தான் புதுவைக்கவி பாரதிதாசன். அந்தப் புதுவைப் புயல் பாரதிதாசன் திரைக்கதை வசனம் எழுதி திரையில் வளையாபதியை வெளிபரப் பண்ணினார் . " வளையாபதி "என்னும் பெயருடனேயே 1952 ஆம் ஆண்டில் வெள்ளித் திரையில் தேடப்படாத இலக்கியம் வந்தது " என்று எனது மனத்தெழுந்த ஐயங்களெலாம் விளங்கும் வகையில் - விளங்கும் உதாரணத்துடன் ஆசான் அவர்கள் சொன்னதும் - எனக்கு நல்ல திருப்தி கிடைத்தது.பள்ளிக்கூடமும் பல்கலைக் கழகமும் செய்யாததை வெள்ளித்திரை செய்து விட்டதே என்பது பெரும் ஆறுதலாய் எனக்கு இருந்தது.

                ( இன்னும் வரும் )

No comments: