Saturday, September 4, 2021 - 6:16pm
ஆப்கானிஸ்தானில் நிலவும் கடுமையான பொருளாதாரப் பிரச்சினைகளைத் தீர்க்க வேண்டிய பொறுப்பு தலிபான்களுக்கு இப்போது உள்ளது. அந்நாட்டையே முடக்கி விடக் கூடிய பயங்கரமான பாதுகாப்பு மற்றும் படுமோசமான பொருளாதார பிரச்சினைகளுக்கு தலிபான்கள் முகம் கொடுத்து வருகின்றார்கள்.
ஆப்கானிஸ்தான் குறித்து சர்வதேச ஊடகங்கள் உண்மையை மறைப்பதற்கே பாடுபடுகின்றன. ஜேம்ஸ் போவர்ட் பல புத்தகங்களுக்கு சொந்தமான ஒரு எழுத்தாளர். அவர் யூ.எஸ்.ஏ டுடே, தி நியூயோர்க் டைம்ஸ், தி வோல் ஸ்ட்ரீட் ஜேர்னல் மற்றும் வோஷிங்டன் போஸ்ட் ஆகியவற்றுக்கு வழக்கமாக எழுத்து மூலம் பங்களிப்பு செய்யும் பத்தி எழுத்தாளர். 2002 ஜனவரி 22 அன்று ஜோர்ஜ் புஷ் தனது தேசிய உரையில் பின்வருமாறு கூறியதாக போவர்ட் மேற்கோள் காட்டியுள்ளார். அதாவது புஷ் அமெரிக்கர்களை ஒரு தவறான அணு அச்சுறுத்தலால் மிரட்டியதாக கூறினார்.
'ஆப்கானிஸ்தானின் கண்டுபிடிப்புகள் கடுமையான பயத்தை எமக்கு உறுதிப்படுத்துகின்றன. அல்காயிதா பயன்படுத்திய குகைகளில் அமெரிக்க அணுமின் நிலையங்கள் மற்றும் பொது நீர் வசதிகளின் வரைபடங்களைக் கண்டோம்' என ஜோர்ஜ் புஷ் கூறியிருந்தார். மூத்த அமெரிக்க புலனாய்வு மற்றும் எப்.பி.ஐ அதிகாரிகள் ஊடகங்களுக்கு சுருக்கமான பின்னணி தகவல்களை வழங்கியதாக போவர்ட் கூறுகிறார்.
இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு ஜனாதிபதியின் அறிக்கை தவறானது என்றும் ஆப்கானிஸ்தானின் அணுமின் நிலையங்களின் வரைபடங்கள் எதுவும் கிடைக்கவில்லை என்றும் புஷ் நிர்வாக அதிகாரிகள் அறிவித்தனர். கேபிடல் ஹில்லில் நடந்த விசாரணையின் போது, அணுசக்தி ஒழுங்குமுறை ஆணையாளர் எட்வர்ட் மெக் காபிங்கின் இது பொய்த் தகவல் என்பதற்காக முன்வைத்த ஆதாரங்களை போவார்ட் மேற்கோள் காட்டியுள்ளார்.
சதாம் ஹுஸைன் பிரிட்டனை 45 நிமிடங்களில் தாக்க முடியும் என்ற டோனி பிளேயர் கூறியிருந்தார். அமெரிக்கா மற்றும் பிரிட்டனுக்கு ஐ.நா. சபையின் செயற்குழு உயரதிகாரிகள் ஆதரவு உள்ளது.
புஷ் தனது 2002 தேசிய உரையில், நவீன கால 'மகளிர் விடுதலையின்' மிகப் பெரிய வெற்றி ஆப்கான் போர் என்று கூறினார். மேலும் 'ஆப்கானிஸ்தானில் தாய்மார்கள் மற்றும் பெண்கள் தங்கள் சொந்த வீடுகளில் அடிமைப்படுத்தப்பட்டனர். ஆனால் இன்று பெண்கள் சுதந்திரமாக உள்ளனர்' என புஷ் கூறினார். ஆனால் இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு ஆப்கானிஸ்தானுக்குச் சென்ற நியூயோர்க் டைம்ஸ் பத்தி எழுத்தாளர் நிக்கோலஸ் கிறிஸ்டோப், 2004 இல் அங்குள்ள களநிலைவரத்தைப் பற்றி விபரிக்கும் போது 'பல ஆப்கானிஸ்தான் பெண்கள் இன்னும் தங்கள் வீடுகளில் சிறைப்பிடிக்கப்பட்டு இருக்கிறார்கள். கொள்ளை மற்றும் பாலியல் வல்லுறவு அதிகரித்துள்ளது. குறிப்பாக பெண்கள் பேரழிவை எதிர்நோக்கியுள்ளனர். பட்டப்பகலில் கூட வீதிகள் பாதுகாப்பாக இல்லை. பெண்கள் பள்ளிக்கூடங்களுக்கு செல்லவோ அல்லது தாய்மார்கள் சுகாதார மையங்களுக்கு செல்லவோ துணிவதில்லை' இது ஆப்கானிஸ்தானில் அமெரிக்க-நேட்டோ கட்டுப்பாட்டில் உள்ள பகுதியின் நிலையாகும்’ என்றார்.
போவர்ட்டின் கூற்றுப்படி, ஆப்கானிஸ்தானில் அமெரிக்கப் படைகள் கால் பதித்ததில் இருந்து சிறுவர்களை பாலியல் அடிமைகளாக பயன்படுத்தும் குற்றச் செயல்களை மறைப்பதற்காக அமெரிக்க இராணுவம் ஆப்கானிஸ்தான் அரசாங்க செயற்பாடுகளுக்கு பெருந்தொகையான பணத்தை அள்ளி வீசினார்கள். 2015 ஆம் ஆண்டு நியூயோர்க் டைம்ஸ் சிறுவர் துஷ்பிரயோகத்திற்கு எதிராக தண்டிக்கப்பட்ட அமெரிக்க இராணுவ வீரர்களை அம்பலப்படுத்தும் வரை பென்டகன் இந்த துஷ்பிரயோகத்தை கண்டுகொள்ளவில்லை. 2017 பென்டகன் இன்ஸ்பெக்டர் ஜெனரலின் அறிக்கையின்படி ஆப்கானிஸ்தான் ஒரு இறையாண்மை கொண்ட நாடு என்றும் சிறுவர் பாலியல் துஷ்பிரயோகம் குறித்து ஏதும் செய்ய முடியாது என்றும் இது கட்டளை பிறப்பிக்கும் அளவிற்கு முக்கியத்துவம் வாய்ந்த சமாச்சாரம் அல்ல என்றும் இவை கண்டும் காணாதது போல விட்டுவிட வேண்டிய சமாச்சாரம் எனவும் சில அமெரிக்க துருப்புக்களுக்கு கூறப்பட்டுள்ளது.
இதேவேளை அமெரிக்க இராணுவமும் அதன் முக்கிய உளவு நிறுவனமுமான சி.ஐ.ஏயும் ஆப்கானியர்களை சித்திரவதை செய்தனர். இந்த கொடூரங்கள் குறித்து டிசம்பர் 2002 க்கு முன்பே தெரிவிக்கப்பட்டும் கூட அதனை ஜனாதிபதி புஷ் தொடர்ந்து மறுத்து வந்தார். 2004 ஆம் ஆண்டில் வெளிவந்த லொஸ் ஏஞ்சல்ஸ் டைம்ஸ் செய்தியின்படி அமெரிக்க அரசாங்கத்தால் தடுத்து வைக்கப்பட்ட ஆப்கானிஸ்தான் வீரர்கள் மீது வதைகளை செய்ததாக குற்றம் சாட்டப்பட்டிருந்தது.
அமெரிக்கா மற்றும் நேட்டோ கூட்டுப் படைகள் பிற நாடுகளின் மீது படையெடுப்பதை நிறுத்தினால் அல்காயிதா மற்றும் ஐ.எஸ்.ஐ.எஸ் ஆயுதக் குழுக்களை பூண்டோடு ஒழித்துக் கட்டலாம். ஆனால் அதுதான் நடக்காது. காரணம் கோடீஸ்வரர்களுக்கு என்றும் எப்பொழுதும் அற்புதமான முறையில் சுரந்து கொண்டே இருக்கும் அபரிமிதமான செல்வங்களை தரும் ஆயுதத் தொழிற்சாலைகளும், உயிரைப் பணயம் வைத்துப் போராடும் மில்லியன் கணக்கான படை வீரர்களுக்கு தொழில் வாய்ப்பை தந்து கொண்டிருக்கும் போரும் ஒரு போதும் முடிவு பெறுவதில்லை.
ஜனாதிபதி சட்டத்தரணி
எம்.எம்.சுஹைர்
நன்றி தினகரன்
No comments:
Post a Comment