நினைவில் வாழும் அருட்தந்தை மரியசேவியர் அடிகளார் - முருகபூபதி


ன்பால் அனைவரையும் அரவணைத்த பண்பாளர் கலைத்தூது அருட்தந்தை மரியசேவியர் அடிகளார், இப்பூவுலகைவிட்டு மறைந்தாலும்  அவரால் நேசிக்கப்பட்ட மக்களாலும் நண்பர்கள் மற்றும் கலை, இலக்கியவாதிகளினாலும்  மறக்கப்பட முடியாத அற்புதமான பிறவி.

தனது சமயப்பணிகளுக்கும் அப்பால், தமிழ்க்கலை வளர்த்த கர்மயோகி. தேடல் மனப்பான்மையுடன் அவர் தேடியது பணம், பொருள் அல்ல.

எங்கள் தமிழின் தொன்மையைத் தேடியவர். “ தான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்  “ என்ற கூற்றுக்கு அமைய, தான் தேடிப்பெற்றதையும் கற்றுக்கொண்டதையும் தமிழ்மக்களுக்கு நினைவூட்டிச்சொல்லிவந்த பெருந்தகை.

 “கன்னித் தமிழ் வேர்களுக்குள் முத்தெடுப்போம் , காலமெல்லாம் முத்தம் பதிப்போம்.  “ என்ற தாரகமந்திரத்துடன், இலங்கையில் திருமறைக் கலாமன்றத்தை தங்கு தடையின்றி இயக்கிவந்தவர்.

 “ மனிதநேயமொன்றையே இவரிடம் காணமுடிகிறது. கலை என்ற புனிதமான பாதையில் மனிதநேயம் என்ற ஒளியைத்தேடி,  பூரணத்துவமான பாதையில் சலசலப்பின்றி தெளிந்த நீரோடைபோல் தனது பயணத்தை தொடர்பவர்  “ என்று 1998 ஆம் ஆண்டு ஜூன் மாதம் மல்லிகை கலை, இலக்கிய மாத இதழில் இவர் பற்றி பதிவாகியிருந்தது. அந்த இதழின் முகப்பை அலங்கரித்தவர் மரியசேவியர் அடிகளார்தான்.  அட்டைப்பட அதிதியாக இவர் பற்றிய பதிவை பேராதனை ஏ. ஏ. ஜுனைதீன் எழுதியிருந்தார்.

அதனைப்படித்தது முதல், அடிகளாரை சந்திக்கவேண்டும் என


விரும்பியிருந்தேன்.  நான் 1987 ஆம் ஆண்டே அவுஸ்திரேலியாவுக்கு வந்துவிட்ட பரதேசி. அதனால், அடிகளாரின் அருமை பெருமைகளை மல்லிகையின் குறிப்பிட்ட இதழிலிலேயே தெரிந்துகொண்டேன்.

எனது ஆவல்  காலம் கடந்து அவுஸ்திரேலியாவில் நிறைவேறியது.  2000 ஆம் ஆண்டு காலப்பகுதியென நினைக்கிறேன். 

அவர் அவுஸ்திரேலியாவில்  நான் வதியும் விக்ரோரியா மாநிலத்தில் மெல்பன் மாநகருக்கு வந்திருந்தார். அச்சமயம் எனது நண்பர் கொர்னேலியஸ் செபஸ்தியான் அவர்களின் இல்லத்திற்கு வருகை தந்திருந்த அடிகளாரை சந்தித்தேன். அச்சமயம் மெல்பனில் திருமறைக்கலா மன்றத்தின் கிளை அமைக்கப்பட்டது.

நண்பர் அன்டனி கிறேஷியன் உட்பட வேறும் சிலர் இச்சந்திப்பில் பங்கேற்றனர்.

அடிகளார் மறைந்தபின்னர் மெல்பன் வானமுதம் வானொலியில் அதன் நிகழ்ச்சித்தயாரிப்பாளர்,  திரு. வில்லியம் ராஜேந்திரன் ஒருங்கிணைத்த நினைவேந்தல் நிகழ்விலும் இந்த நண்பர்கள்  அடிகளார் பற்றி  நினைவுரையாற்றினார்கள்.

 முதல் சந்திப்பிலேயே அடிகளார் எனதும் நண்பரானார். அவரை அட்டைப்பட அதிதியாக  மல்லிகையில் பாராட்டி கௌரவித்த மல்லிகை ஆசிரியர் டொமினிக்ஜீவாவுக்கு 2002 ஆம் ஆண்டு பவளவிழா வந்தது. அந்த விழா 2003 ஆம் ஆண்டுவரை நீடித்தது.

குறிப்பிட்ட 2003 ஆம் ஆண்டு  இலங்கையில் நடந்த  தேசிய சாகித்திய விழாவுக்காக  நான் வந்திருந்தபோது,  அடிகளார் என்னைத்  தொடர்புகொண்டு,  அந்த விழாவுக்கு முதல்நாள் பம்பலப்பிட்டி கதிரேசன் மண்டபத்தில் நடந்த திருமறைக் கலாமன்றத்தின் காப்பிய விழாவுக்கு அழைத்தார். அத்துடன் ஒரு வேண்டுகோளையும் என்னிடம் விடுத்தார்.


இந்த காப்பிய விழாவில் மல்லிகை ஆசிரியரை பாராட்டி கௌரவிக்கவிருக்கிறோம்.  வெளிநாட்டிலிருந்து வந்திருக்கும் நீங்கள், மல்லிகையால் இலக்கிய உலகிற்கு அறிமுகமானவர் என்பதை அறிவேன். நீங்களே வந்து ஜீவா பற்றி உரையாற்றவேண்டும் என்றார்.

இந்த எதிர்பாராத அழைப்பு எனக்கு இன்ப அதிர்ச்சியை தந்தது. அடிகளாரின் வேண்டுகோளை அன்றைய தினம் அங்கே சென்று பூர்த்திசெய்தேன்.

அன்று நடந்த முழுநாள் விழாவில் ஐம்பெரும் காப்பியங்களே அரங்கேறின. குண்டலகேசி, வளையாபதி, சிலப்பதிகாரம், மணிமேகலை, சீவக சிந்தாமணி முதலானவற்றை கூத்துப்பாணியில் திருமறைக்கலாமன்ற கலைஞர்கள் நிகழ்த்தினர்.

என்றைக்குமே நான்  பார்த்து ரசித்திராத ஐம்பெரும் காப்பியங்களின் கூத்து வடிவத்தை அன்றைய தினம் பார்த்து வியந்தேன். அந்த காப்பிய விழாவில் மூவினக்கலைஞர்களும் மூவின மக்களும் நாட்டின் பல பாகங்களிலுமிருந்து கலந்துகொண்டிருந்தனர்.

திருமறைக்கலாமன்றம் இன, மத , மொழி நல்லிணக்கத்திற்காக


 எவ்வாறு அடிகளாரினதும் அவரோடு இணைந்த கலைஞர்களினதும் அர்ப்பணிப்போடு இயங்குகிறது என்பதை அன்று நேரில் கண்டு சிலிர்த்துப்போனேன்.

சிங்கள பாரம்பரிய நடனக்கலையான கண்டிய நடனங்களும் அன்றைய தினம் மேடையேறின.

மல்லிகை ஜீவாவைப்பற்றி நான் தமிழிலும் சிங்களத்திலும் பேசினேன். அதில் அடிகளார் பற்றியும் அவரது அயராத சேவைகள் பற்றியும் விதந்து குறிப்பிட்டேன்.

இந்த நிகழ்வுக்கு முன்னர் அடிகளாரை எமது மெல்பனில் வேறு நிகழ்ச்சிகளிலும் கண்டு உரையாடி மகிழ்ந்திருக்கின்றேன். ஒரு சமயம் அவர் திருமறைக்கலாமன்ற கலைஞர் சாம் பிரதீபனுடன் வருகை தந்திருந்தார்.

சாம் பிரதீபனின் தனி நபர் அரங்காற்றுகையாக இரண்டு நாடகங்கள் மெல்பனில் ஓக்லி மண்டபத்தில் நடந்தது. அடிகளாரே பின்னணியிலிருந்து இறுவட்டு மூலம் ஒலிச்சேர்க்கைகளை பரவச்செய்தார்.

நெறியாளராக, அரங்க நிர்மாணச்செயற்பாட்டாளராக அவர் இயங்கியதை நேரில் பார்த்து வியந்தேன்.


தமிழர் புலம்பெயர்ந்து வாழும் தேசங்களில் பரதக்கலையும் வளர்ந்துள்ளது. தமிழ்பேசும் மக்கள் மத்தியில், அவர்கள் சைவர்களாயினும் வைணவர்களாயினும் கிறீஸ்தவர்களாயினும் பரத நாட்டியக்கலையிலும் ஈடுபாடு காண்பித்து வருகின்றனர். அத்துடன் பிறமொழிபேசும் பிற இனத்தவர்களின் பிள்ளைகளும் பரதம் பயின்று வருகின்றனர்.

இவர்களின்  அரங்கேற்றத்தின்போது, அரங்கமேடையின் வலது புறத்தில் நடராஜர் சிலை வைக்கப்பட்டு, பிரார்த்தனையின் பின்பே நடனம் தொடங்கும்.

பரதக்கலையின் நாயகரின் அந்த   நடராஜ தத்துவம் நடன ஆசிரியர்களுக்கு தெரிந்திருக்கும். ஆனால்,  நடனம் பயிலும் எத்தனை மாணாக்கருக்கு தெரியும் என்பது எமக்குத் தெரியாது.

சில வருடங்களுக்கு முன்னர் நான் மலேசிய சென்றிருந்தபோது,  அங்கு வதியும் எழுத்தாளர் பீர்முகம்மது தான் எழுதிய மண்ணும் மனிதர்களும் என்ற  பயண இலக்கிய நூலை எனக்குத்தந்தார். அது சுமார் 400 பக்கங்களைக்கொண்டது.

அது இந்திய பயண இலக்கிய நூல். அதில் நடராஜ தத்துவம் பற்றியும் அவர் விரிவாக எழுதியிருக்கிறார்.

தோற்றம் – நிலைத்தல் – மறைத்தல் – அருளல் – அழித்தல் இவையே அந்த ஐவகைத்தத்துவங்கள்.

சற்று யோசித்துப்பாருங்கள்.  ஒரு இஸ்லாமியரான பீர்முகம்மது


, நடராஜ தத்துவம் பற்றி ஆய்வுசெய்து எழுதியவாறு,  எங்கள் அடிகளார் மரியசேவியர் சில வருடங்களுக்கு முன்னர் தனது மதுரமான கம்பீரக்குரலுடன் பதிவுசெய்து வெளியிட்ட இறுவட்டில் இறைவனின் திருக்கூத்தையும் ஆய்வுக்கு எடுத்துக்கொண்டு, மனவாசகங் கடந்தாரிடமிருந்து தான் காணும் உண்மை விளக்கத்தை கூறியிருந்தார்.

அந்த இறுவட்டு மெல்பனில் வெளியிடப்பட்டபோது நண்பர்கள் அன்டனி கிறேஷியனும் கொர்னேலியஸும் என்னையும் வந்து உரையாற்றுமாறு அழைத்தார்கள்.

தவிர்க்கமுடியாத காரணங்களினால், அடிகளாரால் அந்த நிகழ்வுக்கு வரமுடியாதுபோய்விட்டது.

எமது இலக்கிய நண்பர் மகாதேவ ஐயர் ஜெயராம சர்மா அவர்கள் மாவிலைகளுடன் வந்து கலந்துகொண்டு உரையாற்றி சிறப்பித்தார்.


எனக்கு அந்த நிகழ்ச்சி ஓர் அதிசயமாக இன்றும் மனதில் நிழலாடுகிறது.  அருட் தந்தை மரியசேவியர் அடிகளாரின்  சிந்தனைகள் எவ்வாறு இன, மத நல்லிணக்கத்திற்கு வழிசமைக்கிறது பாருங்கள்.

தமிழ் ஒப்பிலக்கிய – இலக்கண ஆய்வு முன்னோடி அயர்லாந்தைச்சேர்ந்த கால்டுவேல் பாதிரியார், பிரிட்டனைச்சேர்ந்த எல்லீஸ் டாக்டர் ஜீ. யூ. போப், இத்தாலியரான கொன்ஸ்ரன்டைன் ஜோசப் பெஸ்கி என்ற வீரமாமுனிவர், அமெரிக்கரான தமிழ் மருத்துவ முன்னோடி டாக்டர் கிறீன், தமிழ் ஆராய்ச்சி மாநாட்டுக்கு வித்திட்ட அருட் தந்தை தனிநாயகம் அடிகளார், அயர்லாந்தின் யாழ்ப்பாணத்தான் என வர்ணிக்கப்பட்ட அதி. வண. லோங் அடிகளார்,  ‘ தன்னிலே தானே பெறுமதியுடைய ஆய்வாளன்  ‘ என்று தனிநாயகம் அடிகளாரால் விந்துரைக்கப்பட்ட தாவீது அடிகள், தமிழ் மக்களின் உரிமைக்காக குரல்கொடுத்து அதற்காகவே கொடிய சிறைவாசம் அனுபவித்து சித்திரவதைகளுக்குள்ளான வண.  பிதா ஆபரணம் சிங்கராயர், மக்கள் சேவையே மகேசன் சேவை என வாழ்ந்து அடக்குமறைக்குப்பலியாகி காணாமல்போன வண. பிதா மேரி பஸ்ரியன் அடிகளார், சமூக சேவைக்கே தன்னை அர்ப்பணித்து இறுதியில் துப்பாக்கிக்குண்டுகளை பரிசாக ஏற்று மடிந்துவிட்ட வண. பிதா சந்திரா பெர்னாண்டோ அடிகள், வெளிநாட்டில் சென்று நிம்மதியாக வாழ்வதற்கான வசதி வாய்ப்புகள் இருந்தபோதிலும்  வன்னி பெரு நிலப்பரப்பில் பாதிக்கப்பட்ட மக்களுக்காகவே இறுதிவரையில் வாழ்ந்து மறைந்துவிட்ட வண. பிதா ஜேம்ஸ் பத்திநாதர் அடிகளார் , வடபுலத்தில் தாழ்த்தப்பட்ட அடிநிலை மக்களுக்கெல்லாம் ஆதர்ச புருஷராக விளங்கிய சுவாமி ஞானப்பிரகாசர்… இவர்களைப்பற்றியெல்லாம் அறிந்திருப்பீர்கள்.

இவர்கள் அனைவருமே தாம் சார்ந்த சமயப்பணிகளுக்கு அப்பால், சதா காலமும் மக்களைப்பற்றியே சிந்தித்து வாழ்ந்தவர்கள்.  அவர்களின் வரிசையில்  மரியசேவியர் அடிகளாரும் தமிழ் மக்களையும் தமிழர்களின் தொன்மைக்கலைகளையும் நேசித்து தனது வாழ்வை அதற்காகவே அர்ப்பணித்தவர்.

புலம்பெயர்ந்து வாழும் நாம் எமது இன அடையாளம் குறித்து பேசியும் எழுதியும் சிந்தித்தும் வருகின்றோம். அதற்கு அடிப்படைக்காரணம், எமக்கு முன்பே தென்னாபிரிக்காவுக்கும் பிஜித்தீவுக்கும் மொரிஸியஸுக்கும் சென்ற தமிழ் மக்களுக்கு நேர்ந்த கதிதான் !

 அப்படியிருக்கும்போது, நூற்றாண்டு காலங்களுக்கு முன்னர் அதாவது 13 ஆம் நூற்றாண்டு காலத்து தமிழ்ச்சொத்தை – தமிழின் மூலதனத்தை 21 ஆம் நூற்றாண்டு மக்களுக்கு அறிமுகப்படுத்த முன்வந்தவர் மரியசேவியர் அடிகளார் என்று அன்று அவரது இறுவட்டு வெளியீட்டு நிகழ்வில் பேசினேன்.

மெய்கண்ட தேவர் அருளிய சிவஞானபோதத்தை கேட்டுத் தெளிந்த நாற்பத்தொன்பது மாணாக்கரில் ஒருவரான தமிழ்நாட்டில் திருவதிகை என்ற ஊரைச்சேர்ந்த                                           மனவாசகங் கடந்தார்  என்பவர் எழுதிய உண்மை விளக்கம் குறித்து அடிகளார் ஆய்வுசெய்திருந்தார்.

குறிப்பிட்ட இறுவட்டு வெளியிடப்பட்ட மெல்பன் பொக்ஸிலில் புனித பஸ்கஸ் தேவாலய மண்டபத்தில் அதற்குச் சிலவருடங்களுக்கு முன்னர் அடிகளார் ஒரு சந்திப்புக்கு வந்திருந்தார். அவ்வேளையில் விக்ரோரியா  தமிழ்ச்சங்கத்தின் முன்னாள் தலைவர்      “ சோமா “   சோமசுந்தரம் அவர்கள்,   “ ஒரு கிறீஸ்தவ பாதிரியார் சைவசித்தாந்தம் குறித்து தௌிந்த ஞானம் பெற்று விளங்குகிறராரே …! ? – இது எப்படி சாத்தியமானது..?  “ என்று கேட்டிருந்தார்.

பின்னர் மெல்பன் 3 C R தமிழ்க்குரல் வானொலி ஊடகவியலாளர் சண்முகம் சபேசனும் அவரை நேர்கண்டு ஒலிபரப்பியபோது அதே கேள்வியை எழுப்பியிருந்தார்.

அதற்கு அடிகளார், சிறந்த விளக்கமளித்தார்.

 “ சைவ சித்தாந்தத்தை மூன்று தளங்களாகப் பிரிக்கலாம்.  ஒன்று இறையியல், இரண்டாவது மறையியல், மூன்றாவது மெய்யியல். இம்மூன்றுமே சைவ சித்தாந்தத்தில் பின்னிப்பிணைந்துள்ளது. இந்த மெய்யியல்தான் தமிழ் மக்களின் பாரம்பரிய மெய்யியல்.

சங்க காலத்திற்கு முற்பட்ட காலம் முதல் தமிழ்மக்களின் வாழ்வியலை , இறையியலை, மறையியலை, மெய்யியலாக்கியவர்கள் சைவசித்தாந்த ஆசாரியார்கள்.  இந்த ஆசாரியார்கள் ஏனைய  சமயங்களிலிருந்தும் பெற்றுக்கொண்ட அறிவையும் பிரயோகித்து தமிழ் மக்களின் மெய்யியலாக்கியிருக்கிறார்கள்.

இது தமிழர்களின் மெய்யியல். நானும் ஒரு தமிழன் என்பதனால், தமிழர்களின் இந்த தொன்மையான சொத்தை  தமிழர்களுக்கு அறிமுகப்படுத்த விரும்பினேன்.    என்றார்.

 நாம் 2011 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் தொடக்கத்தில் நடத்திய நான்குநாள் சர்வதேச தமிழ் எழுத்தாளர் மாநாட்டின் இறுதி நிகழ்வு வெள்ளவத்தை இராமகிருஷ்ண மண்டபத்தில் நடந்தபோதும் பிரதம விருந்தினராக வருகை தந்த  அடிகளார் , உரையாற்றுகையில்  மாநாட்டிற்கு  வெளிநாடுகளிலிருந்தும் உள்நாட்டிலிருந்தும் கலந்துகொண்ட பேராளர்கள், பார்வையாளர்களை வாழ்த்தினார்.

அதன் பின்னர் அவரை சந்திப்பதற்கான வாய்ப்பு எனக்கு கிடைக்கவில்லை.

அவரைப்பற்றிய நினைவுகள் சாசுவதமானவை.

( நன்றி:  கலைமுகம் 72 ஆவது மலர் )

---0---

letchumananm@gmail.com

 

 

 

No comments: