சீட்டுக்காரி – சம்பவம் (5) கே.எஸ்.சுதாகர்


“கடையளுக்கு ரொயிலற் ரிசு வந்திட்டுதாம். நான் வேலை விட்டு வரேக்கை எல்லாம் முடிஞ்சு போம். நீ போய்க் கொஞ்சம் வாங்கி வை” ராசு சாம்பவிக்கு ரெலிபோனில் சொன்னான்.

கொரோனாக் காலம். சாம்பவி மாஸ்க்கை அணிந்துகொண்டாள். பிறாமை எடுத்துக் கொண்டாள்.

`பிறாம்’ என்பது குழந்தைத் தள்ளுவண்டி. சாம்பவி தன் மூன்று பிள்ளைகளையும், பிறந்தது முதற்கொண்டு அவர்கள் நடக்கத் தொடங்கும் வரையும், அதற்குள்ளே வைத்துத்தான் இழுத்து வந்தாள். சொப்பிங் சென்ரர் போவதென்றாலும் சரி, பூங்காவென்றாலும் சரி அதுவே அவளுக்குக் கை கொடுத்தது. பிள்ளைகள் இன்று வளர்ந்து, பல்கலைக்கழகம் வரை சென்று வேலையும் பார்க்கத் தொடங்கிவிட்டார்கள். இருந்தாலும் சாம்பவி அந்தப் பிறாமைக் கைவிடவில்லை. இன்றும் மாதம் ஒரு தடவையாவது பிறாமுடன் சொப்பிங் சென்ரர் போய் வராவிட்டால் சாம்பவிக்குப் பத்தியப்படாது. அவள் பிறாமுடன் புறப்படும் காலம் நேரம் பற்றி யாராலும் அறுதியிட்டுச் சொல்லமுடியாது.

கணவன் ராசு பிளாஸ்ரிக் தொழிற்சாலையில் வேலை செய்தாலும், அவனது பிரதான தொழில் வட்டிக்குக் காசு குடுப்பது, சீட்டுப் பிடிப்பது. சீட்டுப் பிடிக்கும்போது சாம்பவி ஒரு மூலையில் சிம்மாசனம் போன்றதொரு கதிரையில் வீற்றிருப்பாள். சீட்டுக்கான கணக்கு வழக்குகள் முழுவதும் அவள் கையில் தான். அவளுக்கு ஏலச்சீட்டில் தான் விருப்பம். குலுக்கல் சீட்டு குழந்தைப்பிள்ளை விளையாட்டு என்பாள். நாட்டில் ஏமாற்றுப் பேர்வழிகள் அதிகம் என்பதால் எல்லாரிடமும் ஒரு பாதுகாப்புக்காக நகை வாங்கி வைத்துக் கொள்வான் ராசு. வீட்டின் சுவர்களில் இரண்டு மூன்று ரகசியப்பெட்டிகள், சாதாரணமானவர்களின் கண்களுக்குத் தெரியாமல் இருக்கின்றன. பூட்டுத்திறப்பு இல்லாத அவற்றை இயக்கும் மாயவித்தை இலக்றோனிக் விளையாட்டு. வீட்டில் எப்பொழுதும் யாராவது ஒருவர் நிற்பார். ஆனால் இன்று?

சாம்பவி கடை கடையாக ஏறி இறங்கி, மூன்று ரொயிலற் ரிசுப் பக்கற்றுகள் வாங்கிவிட்டாள். அவளுக்கு மூச்சு இரைத்தது. தாகம் வாட்டியது. `இந்த நாசமாப்போன ரொயிலற் ரிசுவை வாங்கிறதை விட, ரொயிலற் இருக்காமலே விட்டுவிடலாம்’ மனதினுள் எண்ணிக் கொண்டாள். காரின் பூற்லிட்டைத் திறந்து விட்டாள். பிறாமை மடித்து உள்ளே வைக்க அவளால் முடியவில்லை. பிறாமைத் தூக்குவதும், பின்னர் நிலத்திலே வைப்பதுமாக இருந்தாள்.

கார்த் தரிப்பிடத்தில் குந்திக்கொண்டிருந்த ஹிப்பி போன்ற ஒருவன் அந்தக் காட்சியைக் கண்டுவிட்டான். சாம்பவிக்கு உதவ முன் வந்தான். சொப்பிங் சென்ரரைச் சுற்றி சில விசர்பிடித்த மனிதர்கள் குடுவும் கொள்ளையுமாக அலைந்து திரிவதைப் பற்றிக் கேள்விப்பட்டிருந்த சாம்பவிக்கு அவனைப் பார்க்கப் பயமாகவிருந்தது. முதலில் மறுத்தாலும், “இந்தா பிடி. இதை வைச்சுக்கொள்” என ஐந்து டொலர் தாளை நீட்டினாள்.

பிறாமைத் தூக்கிய ஹிப்பி திகைத்தான். இந்த ரொயிலற் ரிசுக்களுக்கு இத்தனை பாரமா? சந்தேகம் கொண்டான். மீண்டும் தூக்கிப் பார்த்த அவனுக்கு தோல்வியே மிஞ்சியது.

அப்போதுதான் சாம்பவி அவனைக் கவனித்தாள். ஹிப்பி முகக்கவசம் அணிந்திருக்கவில்லை. “முதலிலை மாஸ்கைப் போடு” உத்தரவிட்டாள். அவன் திரும்பி சாம்பவியின் முகத்துக்கு ஒரு குத்து விட்டான். பொய் மூக்கு உடைய, தன் பூசணிக்காய் உடம்பை நிலத்திலே சரித்தாள் சாம்பவி. அவன் பிறாமைத் தள்ளிக்கொண்டு விர்ரென ஓட்டம் பிடித்தான். விழுந்த அதிர்ச்சியில் சாம்பவியின் ரெலிபோன் ராசுவுக்கு சமிக்கை செய்தது.

“என்னப்பா… போன் எடுத்தனீரா?” என்றான் ராசு.

“எல்லா நகையும் போட்டுதப்பா” என்று முனகினாள் சாம்பவி.


நன்றி : வெற்றிமணி

No comments: