தந்தையர் தினம் - நாட்டியக் கலாநிதி கார்த்திகா கணேசர்

   

புலம்பெயர்ந்து வாழும் எம்மவரும் தந்தையர் தினம் கொண்டாடுவது வழமையாகிவிட்டது. இதுவோ எமது பண்பாட்டிற்கு புதியது. நல்லவை எங்கிருந்தாலும் அவற்றைப் பின்பற்றுவது வரவேற்க வேண்டியதே.

தந்தையர் தினம் என்றதும் எனது சிந்தனையில் தோன்றிய சிலவற்றை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.

நாம் தந்தையாரையோ அல்லது அவரைப் போன்ற பெரியவர்ளையோ கண்டால் எழுந்து நின்று மரியாதை செலுத்துவோம். பெரியவர்களின் முன் புகைப்பிடிக்கக் கூடாது. அப்படி தற்செயலாக அவர் வர நேர்ந்தால் அதை மறைத்து விடுவார்கள். காலுக்கு மேல் கால்போட்டு அமரக்கூடாது. மரியாதை கருதி இவற்றையெல்லாம் செய்தவர்கள் இன்று அருகி வருகிறார்கள்.

எனது சினேகிதி ஒருத்தியின் குடும்பம் சிட்னியில் உள்ள வென்ற்வெத்வில்லில் வாழ்ந்து வருகிறார்கள். இவர்கள், தாய் தந்தையருடன் மூன்று தலைமுறையினர் ஒன்றாகவே வாழ்ந்து வருகிறார்கள். இவர்கட்கு 16 வயதில் ஒரு மகள் உண்டு. எமது பண்பாடுகளைத் தெரிந்து கொள்வதற்கு ஒரு ஜப்பானியப் பெண் வந்துள்ளதாகக் கூறினாள். வருமுன், தமது குடும்பத்தினர் அனைவரையும்பற்றி அக்கறையுடன் விசாரித்து அறிந்து வைத்திருந்தாகவும், வந்து சேர்ந்ததும் முதலில் அப்பெண்ணின் தாத்தாவைப் பார்க்க வேண்டும் என்றாளாம். தாத்தாவைக் கண்டவள், அவருக்கு ஒரு பரிசுப் பொருள் கொடுத்து வணங்கினாளாம். அவள் மற்றவர்களுக்கு கொண்டு வந்த பொருட்களைவிட அப்பரிசே மிக விலையுயர்ந்த சிறந்த பரிசாக இருந்ததாம். வீட்டில் உள்ள மூத்தவருக்கே முதலில் மரியாதை செலுத்த வேண்டும் என்பது இந்திய, ஜப்பானிய, சீன, இலங்கை பௌத்த மதத்தினரான சிங்களவரிடமும் உண்டு.

எனது நண்பர் ஒருவர் ஆபிரிக்காவில் உள்ள Tanzania என்னும் நாட்டின் விவசாய இலாகாவில் பணிபுரிந்தார். அவரது அலுவலகம் ஓர் ஆபிரிக்கரின் கீழ் இயங்கி வந்தது. காலையில் அந்த அதிகாரியின் அறையை சுத்தம் பண்ண ஓர் வயது முதிர்ந்தவர் வருவாராம். உடன் அந்த அதிகாரி இருக்கையை விட்டு எழுந்து பெரியவரை நோக்கி வந்து, காலை வணக்கம் என அவர்கள் மொழியில் கூறி, பெரியவரே உமது பாதங்களைத் தொட்டு வணங்குகிறேன் எனக் கூற, பெரியவரும் உனக்கு என் ஆசீர்வாதங்கள் எனக் கூறுவாராம். இது தினம் காலையில் நடைபெற்றதாக நண்பர் கூறினார்.


இதன் மூலம் எமது பண்பாடுகளிலும் உயர்ந்த பண்பாட்டைக் கொண்டவர் உலகின் பல பாகங்களிலும் வாழ்கிறார்கள் என்பதை நாம் அறிய முடிகிறது.

லண்டனில் வாழும் எமது நண்பரின் மகள், தனது பாடசாலை இறுதிப் பரீட்சையைச் செய்தபின் விடுமுறையைக் கழிக்க சென்னை வந்து எம்முடன் தங்கினாள். தமிழ்க் கலாசாரத்தை அறிவதிலும் அவற்றை ஏனைய கலாசாரங்களுடன் ஒப்பு நோக்குவதிலும் வெகு ஆர்வம் கொண்டவள் சிவானி.

மதுரை மீனாட்சி அம்மன் கோவில் அழகையும், சிற்பங்களின் சிறப்பையும் காட்ட அவளை மதுரைக்கு அழைத்துப் போனேன். நண்பர் தனது சொந்த ஊர் மதுரையாதலால், தமது பெற்றோர் வீட்டிலேயே போய்த் தங்கும்படி உபசரித்தார். நாமும் அதிகாலை அவர்கள் வீடு போய் சேர்ந்தோம். அங்கு நண்பர் தம்பியும், மனைவியும் எம்மை உபசரித்துக் காப்பி தந்து அளவளாவினார்கள். அரை மணி நேரம் கடந்தது. எமது பெட்டி படுக்கையை எங்கே வைப்பது, நாம் எந்த அறையில் தங்குகிறோம் என எதுவும் கூறப்படவில்லை, ஆனால் வெகு அன்பாகப் பேசிய வண்ணம் இருந்தார்கள். எமக்கொன்றும் புரியவில்லை. சிவானி ஓர் அவசரக்காறி, இங்கு தங்கமுடியாது, வாங்கோ விடுதியொன்றிற்குப் போய்விடுவோம் என என் காதுகளில் கிசுகிசுத்தாள். அப்பொழுது வெளியே போயிருந்த ஷண்முகத்தின் தகப்பனார் வந்தார். எம்மைக் கண்டதும் “வாங்கோ, வாங்கோ ஷண்முகம் எல்லாம் சொன்னான். களைப்புத்தீரக் குளித்து விட்டு காலை ஆகாரம் உண்ணலாம்” என்றார். “அம்மா சுமதி, இவங்க பெட்டி படுக்கையெல்லாம் எடுத்துப்போய் அறையில் வை” என மருமகளிடம் அன்புக் கட்டளையிட்டார்.

சென்னை வாசிகளைப்போல அல்ல, மதுரை மக்களிடம் வேறுசில பண்பாடுகள் உண்டு. வீட்டுப் பெரியவர் அல்லது பெரியம்மாதான் சம்பிரதாயமாக வரவேற்க வேண்டும். அது அவர்கள் தலையாய கடமை. அவர்கள் இருக்கும் போது மற்றவர்கள் அதைச் செய்யக்கூடாது. இது வீட்டுப் பெரியவருக்கு கொடுக்கும் மரியாதையாகும், இதுதான் அங்கு நடந்தது. அந்தப் பண்பாடு தெரியாது நாம் பட்ட திண்டாட்டத்தை மறக்கமுடியுமா? சிவானியும் ஒரு பண்பாட்டை அறிந்து கொண்டாள்.

எனது நண்பர் Dr தெய்வநாயகம், ஒரு சம்பிரதாயமான கூட்டுக் குடும்பத்தில் வாழ்பவர். சுவாசம் சம்பந்தமான வைத்தியத்தில் நிபுணத்துவம் பெற்றவர். ஆனாலும் பழைய பண்பாடுகளைப் போற்றி மதிப்பவர். அவர் எனது மகனிடம் பேசும் போது கூறியது எனது மனதில் ஆழமாகப் பதிந்துள்ளது. “வயதில் பெரியவர் எனும் போது, அவர் இந்த உலகில் நீண்ட நாட்கள் வாழ்ந்து, அனுபவம் என்ற படிப்பால் பலதையும் கற்று உணர்ந்தவர்கள். அவர்கள் பெற்ற அனுபவத்தை எந்தக் கல்லூரியும் எமக்கு அளித்துவிட முடியாது. அதற்கே பெரியவர்களைத் தலை வணங்குகிறோம்” என்றார்.

நான் கூறப்போகும் இந்த நிகழ்வு நடந்தது 75, 76 களில் என எண்ணுகிறேன். எமது உறவினர் பெயர் சொக்கலிங்கம். அரச நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்து ஓய்வு பெற்றவர். அவரது தம்பி லண்டனில் வசித்து வந்தார். கொழும்புக்கு வந்திருந்த தம்பி மகன், பெரியப்பாவை பார்க்க வந்திருந்தான். 18 வயது மதிக்கத்தக்க இளைஞன். பெரியவர் தனது தம்பி மகனிடம் ஆங்கிலத்தில் “How is your dad?” என வினாவினார். பையனோ “Old man is doing well” என்றான். பெரியவருக்கு பொறுக்கவில்லை. பையன் தந்தைக்கு மரியாதை கொடாது old man என்றது அவரைக் கொதிப்படையச் செய்தது. திரும்பவும் அவன் old man எனக் கூறமாட்டான் என எதிர்பார்த்து, தொனியில் சிறிது கடுமையை வரவழைத்துக் கொண்டு “How is your dad?” என்றார். பையனோ வெகு சாதாரணமாக “Old man is fine” என்றான். பெரியவரால் பொறுக்க முடியவில்லை, ஓங்கி அறைந்துவிட்டார். அங்கு இருந்தவர்கள் நிலமையை சமாளித்தார்கள்.

மேற்கத்திய பண்பாட்டில் வளர்ந்தவனுக்கு தந்தையை old man என்பது வெகு சாதாரண பழக்கம். அதாவது தான் பெரியவனாக வளர்ந்து விட்டால், தந்தையைப்பற்றிப் பேசும்போது dad எனப் பேசுவது சிறுபிள்ளைத்தனம் என எண்ணும் சமுதாயத்தின் வாரிசு அவன். அவன் வளர்ந்த சூழலில் அவன் அவ்வாறு கூறுவது தப்பே அல்ல. எமது சமூதாயம்கூட “தோளுக்கு மேல் வளர்ந்தவன் தோழன்” எனக் கூறவில்லையா? பண்பாட்டுச் சிந்தனையின் மாறுபாட்டையே இங்கு கண்டோம்.

வேறுபட்ட சமுதாயங்களின் மாறுபட்ட பண்பாடுகளில் பெரியவர்களை எவ்வாறு கனம் பண்ணுகிறார்கள் என்பதைக் கண்டோம். எமது பண்பாடும் “தந்தை சொல் மிக்க மந்திரம் வேறு இல்லை” என்கிறது. எமது பண்பாட்டுடன் தந்தையர் தினத்தையும் இணைத்து மகிழ்வோம்.

No comments: