ஊருக்கு ஊர் மீட்பர்கள் தேவை - அவதானி


கடந்த இருபது மாதங்களுக்கும் மேலாக முழு உலகையும் அச்சுறுத்தி, இலட்சக்கணக்கானோரை பலியெடுத்து வந்திருக்கும் கண்ணுக்குத் தெரியாத எதிரியான கொரோனோ, தற்போது தனது குடும்பத்திலிருந்து டெல்டா என்ற மற்றும் ஒரு திரிபடைந்த வைரஸுடன் கோரத்தாண்டவமாடிக்கொண்டிருக்கிறது.

இனிவரும் காலங்களில் இந்த வைரஸ்களுடன் போராடும் வாழ்வுக்கு எம்மை பழக்கப்படுத்திக்கொள்ளவேண்டிய தேவையையே அவை எமக்கு உணர்ந்தியுள்ளன.

அணுவாயுதங்களுக்காகவும் எறிகணைகளுக்காகவும்  கொடிய உயிர்கொல்லிகளான ஆயுதங்களுக்காகவும்  பல வல்லரசுகள் தமது வருடாந்த பாதுகாப்பு செலவீனங்களுக்கு பெருந்தொகையான நிதியை  ஒதுக்கிவந்தன.

அந்த வல்லரசுகளிலிருந்த ஆயுதத்தரகர்கள், அடுத்தவேளைக்கு கையேந்தும் ஏழை நாடுகள் உட்பட  மூன்றாம் உலக நாடுகளுக்கும்  ஆயுதங்களை விநியோகித்துவந்தனர்.

அதனால், உள்நாட்டு கலவரங்கள் வீச்சுடன் வளர்ந்து அகதிகளின்


எண்ணிக்கையைத்தான் பெருக்கினவேயன்றி, வேறு எந்த உருப்படியான சேவையையும் மக்களுக்கு வழங்கவில்லை.

இன்று ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேறியிருக்கும் அமெரிக்கப்படைகளுக்காக, அமெரிக்கா அங்கு செலவிட்டுள்ள மில்லியன் கணக்கான டொலர்கள் பற்றி ஊடகங்கள் பேசுகின்றன.

கடந்த ஒன்றரை வருடத்திற்கும் மேலாக இந்த கொரோனோ தொற்றினால் அதிகளவான மரணங்கள் நேர்ந்திருப்பதும் அமெரிக்காவில்தான் என்று புள்ளிவிபரங்கள் கூறுகின்றன.

 வறிய நாடுகளுக்கும் வளர்முக நாடுகளுக்கும் முன்னர்  ஆயுதங்களை விநியோகித்து வந்த வல்லரசுகள் தற்போது வெவ்வேறு பெயர்களில், மக்களை மீட்பதற்காக தடுப்பூசி மருந்துகளை அனுப்பிக்கொண்டிருக்கின்றன.

அங்கும் பூகோள அரசியல்தான் துலாம்பரமாகியுள்ளது.

இலங்கையில் கடந்த ஆண்டின் முற்பகுதியில் கட்டுப்பாடு வெற்றிகரமாக நிலவியசூழலில்,  மீண்டும் திரிபடைந்த வைரஸின் தாக்கம் வரும் என்று எவரும் எதிர்பார்த்திருக்கவில்லை.


ஆனால்,  அபாயம் வந்தேவிட்டது.  இந்தப்பதிவு எழுதும்போது இதுவரையில் இலங்கையில் இந்த தொற்றினால் 7 ஆயிரத்து 560 பேர் பலியாகியுள்ளனர் எனவும் தொற்று உறுதிப்படுத்தப்பட்டவர்களின் எண்ணிக்கை நான்கு இலட்சத்திற்கும் அதிகம் எனவும் அறியப்படுகிறது.

இலங்கையின் மக்கள் தொகையிலிருந்து பார்க்கும்போது    எங்கள் தேசம் அபாய வலயத்திற்குள் சிக்குண்டிருப்பதையே இது உணர்த்துகிறது.

இந்த பேரவலத்திலிருந்து எவ்வாறு மீளமுடியும் என்று  அரசு தொடக்கம், எதிரணி வரையில் மட்டுமன்றி,  தன்னார்வத் தொண்டு நிறுவனங்களும் சமூக நலன்பேணும் அமைப்புகளும் அரசியல் கட்சிகளுக்கும்   பாதுகாப்புத்துறை மற்றும் சுகாதார நலத்துறை – அரச அதிபர்கள், ஆளுநர்கள் மட்டத்திலான அதிகாரிகளும் கருத்துக்களை வெளியிட்டு வருகின்றனர்.

சமூக இடைவெளி பேணுமாறு கேட்கப்பட்டாலும்,  மக்கள்


அதனைக்கேட்டு நடப்பதாகத் தெரியவில்லை.  இரவில் ஊரடங்கு அமுலுக்கு வந்தால்,  பேய்கள் நடமாடும் அகால வேளையில் எதற்கு ஊரடங்கு என்று கேட்கும் அதிமேதாவிகளைத்தான் நாம் பார்க்கின்றோம்.

தலைநகரத்தில்  நடு இரவும் கடந்த நிலையில்  இயங்கிவரும்  உல்லாச விடுதிகள் பற்றியோ,  போதை வஸ்து கடத்தல் உட்பட பல சமூக விரோதச்செயல்களுக்கு இந்த நடு இரவு வேளை சாதகமாக இருப்பது பற்றியோ,  அவர்களுக்கு எள்ளளவும் கவலை இல்லை.

பல தரப்பினரதும் கடும் அழுத்தத்தையடுத்து இலங்கை அரசு நாட்டையும் முடக்கி,  ஊரடங்கு உத்தரவையும் அமுல்படுத்தியிருக்கிறது. இதனை வெள்ளம் வரு முன்பே அணைகட்டும் செயலாக நடைமுறைப்படுத்தியிருக்கலாம்.

அன்றாட தொழில் செய்து குடும்பங்களை காப்பாற்றுபவர்களின் வாழ்க்கை பாதிக்கப்படும் எனச்சொன்ன அரசு, தற்போது நாட்டை முடக்கியிருக்கும் வேளையில்,  அதனால்  நாளொன்றுக்கு ஆயிரத்து ஐநூறு கோடி ரூபா நட்டம் என்று சொல்கிறார் நிதி இராஜாங்க அமைச்சர் அஜித் நிவாட் கப்ரால்.

கொவிட் தொற்றின் காரணமாக நாட்டை முடக்கியதனால் மாத்திரமே பொருளாதார நெருக்கடி வந்துள்ளது என்பதை ஏற்கமுடியாது என்றும் அரசிடம் இது விடயத்தில் முறையான தீர்க்கதரிசனக்கண்ணோட்டத்துடன் கூடிய வேலைத்திட்டம் இல்லாமல்போனதே பிரதான காரணம் என்றும் எதிரணியைச்சேர்ந்த திஸ்ஸ அத்தநாயக்க தெரிவிக்கிறார்.

நாட்டை முடக்குவதுதொடர்பாக கடந்த காலங்களில் ஆளும் தரப்பு அமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்கள், பாதுகாப்புத்துறையினர்,  மற்றும்  நோயாளர்களுக்காக அல்லும் பகலும்  தமது உயிரையும் மதிக்காமல் போராடிவரும் அரச மருத்துவர்கள் – தாதியர்களும்  ஆளுக்கொரு கருத்துக்களை வெளியிட்டு வந்தனர்.

இந்தப்பின்னணிகளுடன் வெளிநாடுகளிலிருந்து அடுத்தடுத்து தடுப்பூசிகள் விதம் விதமான பெயர்களில் வந்து குவிந்துகொண்டிருக்கின்றன.

சில மாதங்களுக்கு முன்னர் வடபிரதேசத்திற்கு தடுப்பூசிகளை வழங்கும் நிகழ்வை ஒரு திருவிழாவாக கொண்டாடி மகிழ்ந்தார், பிரதமரின் புத்திரன் நாமல் இராஜபக்‌ஷ.

இப்போது 12 வயது பிள்ளைகளுக்கும் தடுப்பூசி செலுத்தவேண்டிய தேவை எற்பட்டிருப்பதாக பேசப்படுகிறது.

வறுமைக்கோட்டின் கீழே வாழும் மக்களின்  நிலை பற்றி,  அரசாங்க அதிபர்கள், உதவி அரசாங்க அதிபர்கள், மற்றும் கிராமசேவையாளர்கள்  நன்கு அறிந்தவர்கள். அத்துடன் சமுர்த்தி பயனாளர்கள் யார் யார் என்பதும் அவர்கள் அறியாததல்ல.

அன்றாடங்காய்ச்சிகளின் குடும்பங்களுக்கு ஒரு மாத காலத்திற்கு தேவையானதை இவர்கள் பெற்றுக்கொடுப்பதற்கு நடவடிக்கை எடுத்துவிட்டு,  நாட்டை சில வாரங்களுக்கு அரசு முடக்கியிருக்கலாம்.

நிலைமை கட்டு மீறியபின்னர்,  தேசத்தின் பொருளாதாரத்தை மீட்க வந்தவர்கள் போன்று ஆளும் தரப்பு – எதிர் தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் தமது மாதச்சம்பளத்தை வழங்க முன்வந்துள்ளார்கள்.

இவர்கள், தத்தமது தொகுதிகளுக்கு இறுதியாக எப்போது சென்றார்கள்..? அங்கே தமக்கு வாக்களித்த மக்களின் தற்போதைய ( அதாவது கடந்த 2020 ஜனவரி முதல் 2021 ஓகஸ்ட் வரையில் )  நிலை எப்படி இருக்கிறது ? என்று ஆராய்ந்தார்களா..?

அடிக்கடி நாடாளுமன்றம் சென்று கையொப்பம் இட்டு , வரவேட்டில் பதிவு செய்து அதற்கான வேதனம் பெற்றுக்கொண்ட இவர்கள் தேர்தலுக்குப்பின்னர் எத்தனை தடவை தத்தம் தொகுதிகளுக்குச்சென்றார்கள்.

இவர்கள் ஒவ்வொருவருக்கும் வருடாந்தம் வரவு – செலவு நிதியறிக்கை நாடாளுமன்றத்திற்கு வரும்போது கிடைக்கப்பெறும் தொகுதி அபிவிருத்திக்கான நிதித் தொகை எவ்வளவு..? இதுபற்றி அவர்களுக்கு வாக்களித்த மக்களும் கேட்பதில்லை.!

இன்று அபாயம் சூழ்ந்துள்ளவேளையில் மக்கள் தம்மைத்தாமே பாதுகாத்துக்கொள்வதைத்தவிர வேறு மார்க்கம் இல்லை.

ஆலயங்களில் திருவிழா நடத்தமுடியவில்லையே திருமண , பிறந்த தின ஒன்றுகூடல்களை கொண்டாட முடியவில்லையே என்று கலங்காதிரு மனமே என்றுதான் மக்களைப்பார்த்து சொல்லத்தோன்றுகிறது.

இறைவன் கோபிக்கமாட்டார்.  சொந்த பந்தங்கள் உங்களை வெறுக்கப்போவதில்லை. இறைவன் உட்பட அனைவருக்கும் நிலைமை தெரியும்.

மக்கள்தான் ஒருவருக்கு ஒருவர் உதவும் மனப்பான்மையை வளர்த்துக்கொண்டு ஒருவரை ஒருவர் மீட்கும் மீட்பர்களாக மாறவேண்டும்.

இன்று இலங்கையில்  ஊருக்கு ஊர் தன்னலம் கருதாத மீட்பர்கள்தான் தேவை.  அந்த மீட்பர்கள் மக்களிடம் விழிப்புணர்வு வேலைத்திட்டங்களையும் நடைமுறைப்படுத்தல் வேண்டும்.

----0----

 

No comments: