எனது எழுத்துலக வாழ்க்கை பற்றிய இந்தத் தொடரை எழுதும் காலப்பகுதியில் இலங்கையிலிருந்து வெளிவரும் தமிழ் – சிங்கள – ஆங்கில நாளேடுகளும், இணைய இதழ்களும் தினம் தினம் எனது மின்னஞ்சலுக்கும் வாட்ஸ் அப்பிற்கும் வந்துகொண்டிருக்கின்றன.
அனைத்து ஊடகங்களிலும்
கண்ணுக்குத் தெரியாத எதிரிபற்றிய செய்திகள்தான் ஆக்கிரமித்துள்ளன.
யாழ்ப்பாணத்திலிருந்து
காலைக்கதிரும் ஈழநாடுவும் மற்றும் வார இதழ் தீம்புனலும் எனது மின்னஞ்சலுக்கு தவறாமல் வந்துவிடும். நானும்
அவற்றை படித்துவிட்டு, பலருக்கும் பகிர்ந்துகொள்வேன்.
அந்த வாசகர்கள், நான் வாழும் அவுஸ்திரேலியாவிலும், மற்றும் இலங்கை, இந்தியா, அமெரிக்கா, உட்பட ஐரோப்பிய நாடுகளிலும்
வசிக்கிறார்கள்.
கொழும்பில் வதியும் எனது
நீண்டகால நண்பர் – பூபாலசிங்கம் புத்தகசாலை அதிபர் - ஶ்ரீதரசிங், எனது வாட்ஸ் அப்பிற்கு இலங்கையில் வெளியாகும்
அனைத்து - மும்மொழி
நாளேடுகளையும் தமிழக இதழ்களையும் அனுப்பிவிடுவார்.
இவற்றை சமகால நெருக்கடிகளுக்கு மத்தியிலும் அயராமல் நடத்திவரும் நிறுவனங்களுக்கும் ஆசிரியர்களுக்கும், ஆசிரிய பீடத்தில் பணியாற்றுபவர்களுக்கும், பிரதேச நிருபர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றியையும் வாழ்த்துக்களையும் கூறியவாறே இந்த 57 ஆம் அங்கத்திற்குள் பிரவேசிக்கின்றேன்.
இவர்கள் எனது வர்க்கத்தைச் சேர்ந்தவர்கள். அதனால், இவர்கள் மீது
எனக்கு ஆழ்ந்த நேசம் என்றைக்கும் இருக்கிறது.
அரசியல்வாதிகள் கூட பத்திரிகையாளர்களை
பகைத்துக்கொள்ள மாட்டார்கள். அவர்களுக்கு இவர்கள்
அவசியம் தேவை.
தங்கள் செய்திகளையும்
அறிக்கைகளையும் வெளியிடுவதற்காக அரசியல்வாதிகள்
தங்களால் முடிந்த முயற்சிகளையும் மேற்கொள்வார்கள்.
நான் 1984 ஆம் ஆண்டு வீரகேசரி ஆசிரியபீடத்தில் துணை ஆசிரியர் பொறுப்பினை ஏற்றுக்கொண்டவேளையில்
செய்தி ஆசிரியராக பணியிலிருந்தவர் நடராஜா.
அவரது மேசைக்கு தினமும்
வரும் பிரதேச நிருபர்கள் தபால் மூலம் அனுப்பும் செய்திகளை துணை ஆசிரியர்களிடம் பிரித்துக்கொடுப்பார்.
ஏற்கனவே நான் நீர்கொழும்பு
பிரதேச நிருபராக பணியாற்றியிருந்தமையாலும்,
இலக்கியப்பிரதிகளை தொடர்ந்தும் சிற்றிதழ்களிலும்,
வீரகேசரியிலும் எழுதிவந்தமையாலும், அவர் என்மீது பூரண நம்பிக்கை வைத்திருந்தார்.
அந்த நம்பிக்கையை அங்கிருந்து வெளியேறும் வரையில் மாத்திரம்
அல்ல, அதன்பின்னரும் ஊடகவியலாளனாக… எனது எழுத்துக்கான
ஊதியம் எதுவுமின்றி புகலிட நாட்டில் வாழும்வேளையிலும் காப்பாற்றி வருகின்றேன்.
அண்மையில் கொழும்பிலிருந்து வெளிவரும் ஒரு தமிழ்ப்பத்திரிகையில் வெளியான செய்தி எந்தவொரு தமிழ்வாசகருக்கும் முதலில் அதிர்ச்சியைத்தான் ஏற்படுத்தியிருக்கும்.
ஒரு செக்கண்டில் மறைந்துவிடக்கூடிய
அதிர்ச்சி தரும் செய்திகளை வெளியிட்டு, தங்கள்
ஆர்வக்கோளாறை அற்பத்தனமாக வெளியிடும் பத்திரிகைகள் மட்டுமன்றி பத்திரிகையாளர்களும் பெருகிவிட்டனர்.
அந்தப்பத்திரிகை “ சந்திரிக்கா கைது “ என்று தலைப்பிட்டு ஒரு செய்தியை முன்பக்கத்தில் வெளியிட்டிருந்தது. வாசகர்கள் உடனடியாக என்ன கருதியிருப்பார்கள் என்பது
புரிந்துகொள்ளத்தக்கது.
அந்தச் செய்தியின் உள்ளே சென்றால், கைதான சந்திரிக்கா என்ற பெண் ஒரு
போதை வஸ்து கடத்தல்காரி என்பது தெரியவரும்
!
இது இவ்விதமிருக்க, நான் வீரகேசரியில் பணியாற்றிய காலப்பகுதியில் கொழும்பிலிருந்து
மும்மொழியிலும் பல பத்திரிகைகளை வெளியிட்ட
குணசேனா நிறுவனத்திலிருந்து வெளியான ஒரு தமிழ் நாளேடு, அமிர்தலிங்கம் எதிர்க்கட்சித்தலைவராக தெரிவான செய்தியை
வெளியிடும்போது,
செய்தியின் தலைப்பின்
இடதுபுறம் ஒரு காரின் படத்தையும் வலதுபுறம் ஒரு வீட்டின் படத்தையும் பிரசுரித்து, “ தமிழ் ஈழம் கேட்ட அமிர் - கொழும்பில் காரும் வீடும் ஏற்பாரா..? “ என்று வெளியிட்டிருந்தது.
செய்தி ( News ) எது..? – கருத்து ( Views ) எது…? என்ற வேறுபாடின்றி
ஊடகங்களில் மக்களை சென்றடையவேண்டிய தகவல்களை பகிர்ந்த ஊடகவியலாளர்கள் பலரை நாம் இனம் காணமுடிகிறது.
ஆசிரியபீடத்தில் எனக்கு
நியமனம் கிடைத்தன்று கடமை முடிந்து வீடு திரும்பியதும் எனது தனிப்பட்ட கோவையை எடுத்துப்பார்த்தேன்.
அதில் பல முக்கியமான
கடிதங்கள் இருந்தன. இன்றளவும் அக்கடிதங்கள் அவுஸ்திரேலியாவிலும் என்வசம் பாதுகாப்பாக
உள்ளன.
நான் வீரகேசரி பிரதேச
நிருபராக பணியாற்றிய வேளையில் செய்தி ஆசிரியராக பணியிலிருந்த டேவிட் ராஜு எனக்கு 16 – 03 - 1973 ஆம் திகதி அனுப்பிய
தட்டச்சு செய்யப்பட்ட கடிதம் அது. அது கடிதமாக
அல்ல, அனைத்து பிரதேச நிருபர்களுக்கும் அனுப்பப்பட்ட சுற்றுநிருபமாகவே தென்பட்டது.
அதன் தலைப்பு: பத்திரிகை பேரவைச்சட்டமும்
நீங்களும்
அதனை இங்கே முழுமையாகத்
தருகின்றேன்.
இலங்கை பத்திரிகைப் பேரவைச்சட்டம் அமுலாக்கப்பட்டிருப்பதன் மூலம் உங்கள் நிருபர் கடமையும் பன்மடங்கு பொறுப்பு வாய்ந்ததாக ஆக்கப்பட்டிருக்கிறது.
இப்புதிய சட்டப்படி, செய்திகளைப் பிரசுரிக்கும் நாங்கள்
மட்டுமல்ல, செய்திகளை எழுதும் நீங்களும் ஏற்படும்
தவறுகளுக்கு பொறுப்பாளிகளாக்கப்பட்டிருக்கிறீர்கள். எனவே, உங்களின் செய்திச்சேவையில்
வழமையிலும் பார்க்க நீங்கள் இனி பன்மடங்கு கவனம் செலுத்தி கருமமாற்றவேண்டும்.
செய்திகளைத் திரட்டி,
எழுதும்பொழுது பின்கண்ட விதிமுறைகளை கண்டிப்பாக கடைப்பிடித்து வாருங்கள்.
01. உங்களால்
நேரடியாக ஊர்ஜிதம் செய்யப்படாத எந்தச்செய்திகளையும் எழுதி அனுப்பாதீர்கள்.
02. பொதுச்சம்பவங்களையோ,
பொதுக்கூட்டச் சொற்பொழிவுகளையோ நீங்களே நேரில் சென்று அவதானித்து எழுதி அனுப்புங்கள்.
03. மதப்பூசலையும்
இனவாதத்தையும் தூண்டக்கூடிய செய்திகளை தவிருங்கள்.
04. மதங்களைப்
புண்படுத்தாத முறையில் செய்திகள் அமையவேண்டுமென்பதை உறுதிப்படுத்திக்கொள்ளுங்கள்.
05. நீதிமன்ற வழக்கு விசாரணை விபரங்களை, நேரில் பிரசன்னமாயிருந்தே
எழுதியனுப்புங்கள். ஏதாவது சந்தேகம் ஏற்படுமிடத்து, உரிய உத்தியோகஸ்தர்களுடன் பேசி,
சந்தேகத்தை தீர்த்த பின்னரே எழுதுங்கள்.
06. அரசியல் செய்திகளை எழுதும்பொழுது நடுநாயகமாக நின்று, பக்கம் சாராமல் எழுதியனுப்புங்கள்.
07. செய்திகளை எழுதும்போது – கட்சி சார்பு காட்டாதீர்கள்.
அதேபோல வேற்றுமை, வெறுப்புகளையும் வெளிப்படுத்தாமல் எழுதுங்கள்.
08. உங்கள்
பகுதியிலுள்ள அரசாங்க காரியாலயங்களிலும் மற்றும் பொது ஸ்தாபனங்களிலும் பொது மக்களைப்
பாதிக்கக்கூடிய ஏதாவது குறைபாடுகள் தென்பட்டால் அவற்றை நன்கு ஊர்ஜிதம் செய்தும், போதிய
ஆதாரங்களைத் திரட்டியுமே செய்திகளை எழுதியனுப்புங்கள். இதே போல உள்ளுராட்சி மன்றச்செய்திகளை
எழுதும்போதும் அதிக கவனம் செலுத்துங்கள்.
09. செய்திகளை உடனுக்குடனும் நல்ல இரசனையாகவும்
முழுவிபரங்களடங்கியதாகவும் எழுதியனுப்பத்தவறாதீர்கள்.
10. உங்கள்
செய்திகள் எதுவித சந்தேகத்தையும் எமது ஆசிரியபீடத்துக்கு ஏற்படுத்துவதாக அமையக்கூடாது.
எதுவித சந்தேகங்களுக்கும் இடம்வைக்காத முறையில் செய்திகள் எழுதப்பட்டிருக்கவேண்டும்.
குறிப்பு: செய்திகளை தபாலில் சேர்க்கும்பொழுது போதியளவு தபால்
முத்திரைகள் ஒட்டப்பட்டிருக்கின்றனவா என்பதை ஊர்ஜிதப்படுத்த மறவாதீர்கள்.
ஒப்பம்: ஈ. வி. டேவிட்ராஜு
செய்தி
ஆசிரியர்.
அன்று
வீடு திரும்பி மாலைத்தேநீர் அருந்தியவாறு இந்த சுற்றுநிருபத்தை படித்துவிட்டு, மறுநாள்
வீரகேசரிக்கு பணிக்குச்செல்லும் போது மறக்காமல் எடுத்துச்செல்வதற்காக எனது பேக்கில்
வைத்துக்கொண்டேன்.
1973 ஆம் எழுதப்பட்ட சுற்று நிருபம் அது. நாற்பத்தி எட்டு வருடங்களாகிவிட்டன.
தற்போது
இலங்கையில் பாடசாலைகளிலும் பல்கலைக்கழகங்களிலும் ஊடகக்கல்வி நெறி வந்துவிட்டது. பல
ஊடக கற்கை நெறிப்பயிற்சி நிலையங்கள் தோன்றியிருக்கின்றன. அத்துடன் இலத்திரணியல் ஊடகங்களும் பல்கிப்பெருகிவிட்டன.
உடனுக்குடன்
செய்திகளை பகிர்ந்துகொள்ளத்தக்க சாதனங்களும் உருவாகிவிட்டன. அதனால், பல செய்தியாளர்கள்
Cut and paste - Down load Journalism பாணியில்
தங்களை தகவமைத்துக்கொண்டிருக்கிறார்கள்.
அண்மையில்கூட
நான் வதியும் நாட்டிலிருந்து நீண்டகாலமாக படைப்பிலக்கியத்துறையில்
ஈடுபடும் ஒரு எழுத்தாளர், தமது கட்டுரைகள்
Cut and paste
முறையில் வேறு ஒருவரால்
எழுதப்படுவதாக வருத்தம் தெரிவித்தார்.
பத்திரிகை
பேரவைச்சட்டம் தற்போதும்
இலங்கையில் நடைமுறையிலிருக்கும் என நம்புகின்றேன்.
என்னிடமிருந்த குறிப்பிட்ட சுற்று நிருபத்தை மறுநாள் எமது செய்தி
ஆசிரியர் நடராஜா அவர்களிடம் காண்பித்தேன்.
அவர் வாயில் சுருட்டைப்புகைத்தவாறு புன்னகை சிந்தினார்.
“ என்ன நடா சிரிக்கிறீர்கள்..? “ என்றேன்.
“ நீர்.. இதனை பத்திரமாக வைத்துக்கொண்டு எமது ஆசிரிய
பீடத்திற்கு வந்திருப்பதை நினைத்து சிரிப்பதா….? அல்லது இதனை எழுதி அனுப்பியவர், இங்கிருந்து வெளியேறி தற்போது மத்திய கிழக்கில் என்ன
செய்துகொண்டிருப்பார்…? என்று நினைத்து சிரிப்பதா என்பது தெரியவில்லை
“ என்றார்.
ஆம், அவர் சொன்னது சரி.
அதனை எழுதிய டேவிட்ராஜு மத்தியகிழக்கில் தனது நீண்ட கால அனுபவம் வாய்ந்த பத்திரிகை
– ஊடகத்துறைக்கே எள்ளளவும் சம்பந்தமில்லாத ஒரு தொழிலில் தனது ஆத்மாவை தொலைத்துக்கொண்டிருந்தார்.
அந்த சுற்றுநிருபத்தை
வீரகேசரியின் அனைத்துபிரதேச நிருபர்களும் நிச்சயம் படித்திருப்பார்கள். அவை எமக்கு
பத்துக்கட்டளைகள்.
அதன்பிரகாரம் நாம் நடக்கவேண்டும்
என்ற பால பாடத்தை ஏற்றுக்கொண்டே, என்னிடம்
தரப்பட்ட செய்திகளை செம்மைப்படுத்திக்கொண்டிருந்தேன்.
அந்த பத்துக்கட்டளைகளில்
ஒன்பதாவது என்னை மிகவும் கவர்ந்தது. அதில் வரும்
“ நல்ல இரசனையாகவும் “ என்ற சொற்கள்
எனக்கு முக்கியமானதாகப்பட்டது.
ஏற்கனவே வீரகேசரி வாரவெளியீட்டில்
கலை, இலக்கிய செய்திகளை இரசனையுணர்வுடன் நான் எழுதத் தொடங்கியதனால், அதன் பொறுப்பாசிரியர்
பொன். இராஜகோபால் எனக்கு ரஸஞானி என்ற பெயரை சூட்டியிருந்தார்.
கலை, மற்றும் நாடகம்
– சினிமா சார்ந்த விடயங்களை எழுதுவதற்காக வீரகேசரி பிரதம ஆசிரியர் எனக்கு ரிஷ்ய
சிருங்கர் என்ற புனைபெயரை சூட்டியிருந்தார்.
பிரதேச செய்தியாளர்கள்
எழுதி அனுப்பிய செய்திகளை வாசகர்களுக்கு இரசனையாக மாற்றும் இரசவாத வித்தைகளையும் அங்கு
கற்றுத்தேர்ந்தேன்.
செய்தி ஆசிரியர் நடராஜா
இதுவிடயத்தில் கைதேர்ந்தவர்.
அலுவலக நிருபர்
வீ. ஆர். வரதராஜா ஒருநாள் யாழ்ப்பாணம் சென்று திரும்பிய
வேளையில் சில செய்திகளுடனும் வந்தார்.
வடபகுதி பயணிகள்
எதிர்கொண்ட அவதிபற்றிய அச்செய்தி என்னிடம் வந்தது. நானும் வழக்கம்போன்று எடிட்செய்துவிட்டு,
“ வடபகுதி பயணிகள் அவதி,
கிளிநொச்சியில் நிற்காமல் சென்று திரும்பிய யாழ்தேவி “
என்று தலைப்பிட்டு கொடுத்துவிட்டேன்.
மறுநாள் வீரகேசரியில்
குறிப்பிட்ட செய்தி முதல் பக்கத்தில் இவ்வாறு
வருகிறது.
யாழ்தேவி….
நீ யார் தேவி…..?
நிற்பதும் ஓடுவதும் யாருக்காக…?
இவ்வாறு அர்த்தம்பொதிந்த
தலைப்புகள் இட்டு அசத்தியவர்தான் நாமெல்லோரும் “ நடா
“ என்று அன்பொழுக அழைத்த
மூத்த பத்திரிகையாளர் நடராஜா.
எனது இந்தப்பதிவுகளை அமரர்களாகிவிட்ட
டேவீட்ராஜு, நடராஜா, வீ. ஆர். வரதராஜா ஆகியோரின் ஆன்மா எங்கிருந்தாவது பார்த்துக்கொண்டிருக்கும்
என்ற குருட்டு நம்பிக்கையுடன் எனது பயணத்தை தொடருகின்றேன்.
படைப்பிலக்கியமும்
செய்தியும்
படைப்பிலக்கிவாதியாகவும்
செய்தியாளனாகவும் ஓரே காலப்பகுதியில் எழுத்துலகில் பிரவேசித்தமையால் ஒன்றை இழந்து ஒன்றை
பெறவேண்டிய துர்ப்பாக்கியமும் நேர்ந்தது.
மல்லிகை,
பூரணி, புதுயுகம், கதம்பம், மாணிக்கம் முதலான இதழ்களில் எனது சிறுகதைகள் வெளியான காலப்பகுதியில்
வீரகேசரி நீர்கொழும்பு நிருபராக முதலிலும் அதனையடுத்து வீரகேசரியில் ஒப்புநோக்காளராகவும்,
அதன் பின்னர் ஆசிரிய பீடத்திலும் பணியை தொடர்ந்தபோது எனது எந்தவொரு சிறுகதையும் வீரகேசரி
வாரவெளியீடு, தினகரன் வார மஞ்சரி , சிந்தாமணி
, யாழ். ஈழநாடு ஆகியனவற்றில் வெளிவரவில்லை.
எனது
முதல் தொகுதி சுமையின் பங்காளிகள் நூலில் இடம்பெற்றுள்ள
பத்துச்சிறுகதைகளும் இரண்டாவது தொகுதி சமாந்தரங்கள்
நூலில்
இடம்பெற்றுள்ள சில சிறுகதைகளும் சிற்றிதழ்களில்தான் வெளிவந்தன.
வீரகேசரி
ஆசிரிய பீடத்திற்குள் வந்தபின்னரும் 1985 நடுப்பகுதிவரையில் எனது கதைகளுக்கு இங்கு களம் கிட்டவில்லை.
செய்தி
எழுதுவதும் கதை எழுதுவதும் ஒரே மொழியில்தான். ஆனால், செய்திக்கு ஒரு மொழி இருப்பதுபோன்று கதைக்கு படைப்புமொழி அவசியம்.
தொடர்ந்தும்
செய்தி எழுதி, செம்மைப்படுத்திவந்த எனக்கு கதை எழுதும்போது சிரமங்கள் நேர்ந்தது. அதனால்,
சிறிதுகாலம் நான் சிறுகதைகளே எழுதவில்லை.
அதனையிட்டு
மல்லிகை ஜீவா நேரில்கண்டபோது வருத்தம் தெரிவித்தார்.
செய்தி
ஏட்டில் சீவியத்திற்கு வருமானம் வரும். ஆனால், இலக்கிய சிற்றேட்டில் அதனை எதிர்பார்க்கமுடியாது.
ஒருநாள்
எழுத்தாளர் எஸ்.பொ.வை கொழும்பில் சந்தித்தபோது எனக்கிருந்த சங்கடங்களைச் சொன்னேன்.
அவர்
சில நுட்பங்களை சொல்லித்தந்தார்.
“ ஒரு சிறுகதையை எழுதிவிட்டால், அது எழுதப்பட்டுவிட்டது என கருதிக்கொண்டு இதழ்களுக்கோ
பத்திரிகைகளுக்கோ கொடுக்கவேண்டாம். சில நாட்களுக்கு அதனை ஊறுகாய்மாதிரி ஊறப்போட்டு
வைத்திரும். மீண்டும் சில நாட்களுக்குப்பின்னர் படித்துப்பாரும். மாற்றங்கள் செய்யவேண்டும்
என்பது தெரியவரும். மீண்டும் மீண்டும் படித்து
செம்மைப்படுத்திய பின்னர் வெளியிடுவதற்கு அனுப்பவேண்டும் . “ என்றார்.
அதனால்,
தேர்முட்டி என்ற சிறுகதையை எழுதி, எதற்கும் அனுப்பாமல் ஊறப்போட்டு வைத்தேன்.
1983 கலவரத்தையடுத்து நான் குடும்பத்துடன்
சிறிது காலம் யாழ்ப்பாணம் அரியாலையில் வாடகைவீடு எடுத்து தங்கியிருந்தேன்.
நிலைமை
சீரடைந்தபின்னர் நான் மாத்திரம் திரும்பி வீரகேசரியில் பணிதொடர்ந்தேன். வார விடுமுறையின்போது யாழ்ப்பாணம் சென்றால், எமது வாடகை வீட்டுக்கு எதிர்ப்புறம் கண்டி வீதியைக்கடந்தால்
வரும் நீர்நொச்சித்தாழ்வு ஶ்ரீ சித்திவிநாயகர் ஆலயத்தின் தேர்முட்டியில் சில இளைஞர்களை
சந்திப்பேன்.
அவர்கள்
அங்கிருந்து கார்ட்ஸ் விளையாடுவார்கள். பெரும்பாலான இளைஞர்கள் உயர்தர வகுப்பினை முடித்து
பல்கலைக்கழக அனுமதி பெறாதவர்கள். தரப்படுத்தல் முறை அவர்களது வாழ்வையும் பாதித்திருந்தது.
அவர்களில்
சிலருக்கு ஆயுத இயக்கங்களில் நம்பிக்கை வந்திருந்தது.
என்னிடத்தில்
கொழும்பு அரசியல் செய்திகளை கேட்டறிவார்கள்.
சில நாட்களில் அவர்களில் சிலர் வீடுகளிலிருந்து காணாமல்போனார்கள். சிலர் வீட்டு
கலண்டர் மட்டையில் தாங்கள் தாயகத்தின் மீட்புக்காக சென்றிருப்பதாக எழுதியிருந்தனர்.
நான்
ஆசிரிய பீடத்தில் யாழ். மாவட்ட நிருபர்கள் அனுப்பும் செய்திகளை செம்மைப்படுத்திக்கொண்டிருந்தபோது,
அந்த இளைஞர்களின் முகங்கள்தான் மனக்கண்ணில் தோன்றும்.
யாழ்.
மாவட்டத்தில் இனத்தின்பெயரால் சில இயக்கங்கள் கொள்ளை – கொலைகளில் ஈடுபட்டன. மின்கம்ப மரண தண்டனைகள் அதிகரித்தன.
யார்
இவற்றை செய்கிறார்கள் என்பதை ஊர்ஜிதப்படுத்திக்கொள்ள இயலாமல், இனந்தெரியாதவர்கள் என்ற
அடைமொழியுடன் செய்திகளை எழுதினோம்.
ஆட்டைக்கடித்து,
மாட்டைக்கடித்து, கடைசியில் மனிதனை கடிக்கும் செயலுக்கு வடபகுதி இளைஞர்கள் தள்ளப்பட்டுக்கொண்டிருந்தபோது, எமது ஆசிரிய பீடம் செய்திவேட்டையில் சுறுசுறுப்பாக இயங்கியது.
யாழ்ப்பாணத்திலிருந்து
காசி. நவரட்ணமும், அரசரட்ணமும் வவுனியாவிலிருந்து
மாணிக்கவாசகரும் மட்டக்களப்பிலிருந்து நித்தியானந்தனும், திருகோணமலையிலிருந்து இரத்தினலிங்கமும்
தினமும் தொலைபேசியில் திடுக்கிடும் செய்திகளை தந்துகொண்டிருந்தார்கள்.
முதலில்
மித்திரனுக்கும் அதன் பிறகு வீரகேசரிக்கும்
எழுதிக்கொடுத்துக்கொண்டிருந்தோம்.
மதியவேளையில்
சென்னையிலிருந்து தமிழ் தகவல் நிலையத்திலிருந்து ரேவதி என்ற பெயரில் ஒரு பெண்மணி தொலைபேசியில்
தொடர்புகொண்டு இலங்கை நிலைமைகளை கேட்டறிவார்.
அங்கு
எம். எல். ஏ. விடுதியில் தங்கியிருந்த அமிர்தலிங்கமும்
அவ்வப்போது தொடர்புகொண்டு புதினம் கேட்பார்.
சிறுகதை
எழுதிக்கொண்டிருந்த எனது கரங்கள் செய்திகளை எழுதுவதிலேயே தீவிரமாகின.
அரியாலை
ஆலயத்தின் தேர்முட்டியில் சந்தித்த இளைஞர்கள் எனது சிறுகதையில் தொடர்ந்தும் ஊறிக்கொண்டிருந்தனர்.
( தொடரும் )
letchumananm@gmail.com
No comments:
Post a Comment