உலகச் செய்திகள்

இடா புயல்: நியூயோர்க் நகரத்தில் அவசர நிலை

இடா புயலினால் அமெரிக்காவில் திடீர் வெள்ளம்: 44 பேர் உயிரிழப்பு

ஆப்கானிஸ்தானில் மீண்டும் ஒடுக்கப்படும் பெண்கள்

புதிய அரசை அறிவிக்கத் தயாராகும் தலிபான்கள்: பெண்கள் ஆர்ப்பாட்டம்

நாட்டை விட்டு வெளியேற ஆப்கான் எல்லைகளில் பெரும் மக்கள் கூட்டம்

காசாவில் இஸ்ரேல் துப்பாக்கி சூட்டில் பலஸ்தீனர் உயிரிழப்பு

‘மூ’ கொரோனா திரிபு பற்றி கண்காணிப்புஇடா புயல்: நியூயோர்க் நகரத்தில் அவசர நிலை

இடா வெப்பமண்டல புயல் காரணமாக கடும் மழை மற்றும் திடீர் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட நியூயோர்க் நகரில் அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

நகரில் வரலாறு காணாத மழை காரணமாக கொடிய வெள்ளம் ஏற்பட்டுள்ளதோடு வீதிகள் மோசமான நிலையில் இருப்பதாக மேயர் பில் டி பிளசியோ தெரிவித்துள்ளார். சுரங்க ரயில் நிலையங்கள், வீடுகள் மற்றும் வீதிகளில் நீர் நிரம்பி இருக்கும் புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் வெளியாகியுள்ளன.

நியூயோர்க் சென்டர் பார்க் பகுதியில் ஒரு மணி நேரத்தில் 3.15 அங்குலம் அளவு மழைவீழ்ச்சி பதிவாகி இருப்பதாக தேசிய காலநிலை சேவை தெரிவித்துள்ளது.

நியு ஜேர்சியிலும் அவசர நிலை பிறப்பிக்கட்டிருப்பதோடு அங்கு ஒருவர் உயிரிழந்துள்ளார். பிசைக்கில் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்திருப்பதாக உள்ளூர் மேயர் தெரிவித்துள்ளார். அதே மாநிலத்தின் மில்லிகா ஹில்லில் புயல் காரணமாக குறைந்தது ஒன்பது வீடுகள் சேதமடைந்துள்ளன.   நன்றி தினகரன் 
இடா புயலினால் அமெரிக்காவில் திடீர் வெள்ளம்: 44 பேர் உயிரிழப்பு

அமெரிக்காவின் வடகிழக்கு மாநிலங்களில் இடா புயலால் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் குறைந்தது 44 பேர் உயிரிழந்துள்ளனர். இதில் புயல் ஆபத்துக் காரணமான வீட்டின் அடித்தளத்தில் பாதுகாப்பாக இருந்தவர்களும் வெள்ளநீரில் மூழ்கியுள்ளனர்.

நியூயோர்க் நகரில் அவசர நிலை அறிவிக்கப்பட்டிருந்த சூழலில் வரலாறு காணாத மழை வீழ்ச்சியால் திடீர் வெள்ளம் ஏற்பட்டு சுரங்கப்பாதைகளுக்குள்ளும் ஆற்று நீர் புகுந்துள்ளது.

விமானநிலைய ஓடுபதைகளில் வெள்ளநீர் நிரம்பிய சூழலில் பல விமானநிலையங்களில் நூற்றுக்கணக்கான விமானப்பயணங்கள் ரத்துச் செய்யப்பட்டுள்ளன.

நியூயோர்க் மற்றும் நியூஜேர்சி மாநிலங்களில் அவசர நிலையை அறிவித்த ஜனாதிபதி ஜோ பைடன், மீட்பு நடவடிக்கைகள் மற்றும் அவசர உதவிகள் வழங்குவதில் ஒருங்கிணைந்து செயற்படும்படி மத்திய அனர்த்த முகாமைத்துவ நிறுவனங்களுக்கு உத்தரவிட்டுள்ளார்.

இடா புயல் ஆரம்பத்தில் தாக்கி சேதங்களை ஏற்படுத்திய தெற்கு மாநிலமான லூசியானாவுக்கு பயணம் மேற்கொண்ட பைடன் அங்கு நிலைமைகளை பார்வையிட்டார்.

நியூஜெர்சி மாநிலத்தில் குறைந்தது 23 பேர் கொல்லப்பட்டுள்ளனர். இவர்களில் பெரும்பாலானவர்கள் அவர்களின் வாகனத்திற்குள் சிக்கியே உயிரிழந்திருப்பதாக ஆளுநர் பிலிப் மர்பி தெரிவித்துள்ளார்.

நியூயோர்க் நகரில் பதின்மூன்று பேர் உயிரிழந்திருப்பதோடு இவர்களில் 11 பேர் தமது வீட்டின் அடித்தளத்தில் வெள்ள நீரில் சிக்கி உயிரிழந்துள்ளனர்.

கடந்த வார இறுதியில் லூசியானாவில் பெரும் சேதத்தை ஏற்படுத்திய இடா புயல் தொடர்ந்து நாட்டின் வடக்கு பகுதியை சூறையாடியுள்ளது. இந்த புயலால் பல இடங்களில் வெள்ளம் ஏற்பட்டுள்ளது.   நன்றி தினகரன் ஆப்கானிஸ்தானில் மீண்டும் ஒடுக்கப்படும் பெண்கள்

ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சிபீடமேறியுள்ளதால் 2001 முதல் பெண்கள் அனுபவித்து வந்த மனித உரிமைகள் பறிபோய்விடும் என்றும் மீண்டும் கடுமையான அடக்குமுறைக்கு அவர்கள் ஆளாக நேரிடும் என்றும் வெளிநாடுகளில் உள்ள ஆப்கானிய பெண்கள் அமைப்புகள் அச்சம் தெரிவித்துள்ளன.

இவ்வளவு காலமாக நடைமுறையில் இருந்த ஆண் - பெண் கலப்பு பாடசாலை முறை தடைசெய்யப்பட்டு பெண்களுக்கு தனியாக வகுப்பு நடத்தப்பட வேண்டுமென்றும் ஆசிரியை மற்றும் பெண் விரிவுரையாளர் மட்டுமே போதனை நடத்த அனுமதிக்கப்படுவர் என்றும் தலிபான் அமைப்பு தெரிவித்துள்ளது. காஸ்னி மாகாணத்தில் இசைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதோடு அங்கு இயங்கிவந்த வானொலி நிலையங்களில் பணியாற்றிய பெண்கள் வீட்டுக்கு அனுப்பப்பட்டுள்ளனர். பொருத்தமற்ற ஆடைகளை அணிந்தமைக்காக பேஸாபாத் நகரில் நான்கு பெண்கள் மீது தலிபான்கள் தாக்குதல் நடத்தினர். தமது படையில் பெண்களை சேர்க்க வேண்டும் என்பதற்காக தலிபான்கள் வீடு வீடாக இளம் பெண்களைத் தேடி வேட்டையாடுகின்றனர்.

இவ்வாறு இந்த அமைப்புகள் தகவல் வெ ளியிட்டுள்ளன.

1996 முதல் 2001 வரை ஆப்கானிஸ்தானை அரசாண்ட தலிபான்களைப் போன்றவர்கள் அல்ல என தற்போது ஆட்சிக்கு வந்திருப்போர் காட்டிக்கொள்ள முனைகின்ற போதிலும் உண்மையில் தலிபான்கள் பெண்கள் தொடர்பான தமது கொள்கையில் மாற்றம் செய்துகொண்டதாகத் தெரியவில்லை என லண்டனைச் சேர்ந்த பெண் அமைப்பாளர் கூறியுள்ளார்.

முன்னைய ஆட்சியில் பெண் நோயாளருக்கும் கர்ப்பிணிகளுக்கும் பெண் மருத்துவர்களே மருத்துவம் பார்க்க வேண்டுமெனவும் பெண் செவிலியரே வேலைக்கு அமர்த்தப்பட வேண்டும் என்ற சட்டம் இருந்தது. மாணவியருக்கு பெண்களே படிப்பிக்க வேண்டும் என்று வந்துவிட்டதால் மருத்துவம் மற்றும் ஏனைய துறைகளிலும் அது வந்துவிடும் என்றும் இந்த அமைப்புகள் சுட்டிக்காட்டுகின்றன.   நன்றி தினகரன் 
புதிய அரசை அறிவிக்கத் தயாராகும் தலிபான்கள்: பெண்கள் ஆர்ப்பாட்டம்

ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் புதிய அரசொன்றை அமைக்க தயாராகி இருக்கும் நிலையில் தாம் வேலைக்குச் செல்லும் உரிமைக்காக பெண்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

1996 தொடக்கம் 2001 ஆம் ஆண்டு வரை ஆப்கானில் கடுமையாக ஆட்சி ஒன்றை நடத்திய தலிபான்கள் மென்மைப் போக்குடைய ஆட்சி நிர்வாகம் பற்றி உறுதி அளித்துள்ளனர். இதனால் ஒரு கிளர்ச்சிக் குழுவில் இருந்து அரச அதிகாரம் கொண்ட அமைப்பாக மாற வேண்டிய நிர்ப்பந்தத்திற்கு தலிபான்கள் முகம்கொடுத்துள்ளனர்.

இந்நிலையில் இன்று வெள்ளிக்கிழமை ஜும்மா தொழுகைக்கு பின்னர் அமைச்சரவை பற்றிய அறிவிப்பு வெளியிடப்படும் என்று தலிபான்களின் இரு தரப்புகளை மேற்கோள்காட்டி ஏ.எப்.பி செய்தி வெளியிட்டுள்ளது.

ஆப்கானில் இருந்து அமெரிக்கப் படைகள் வெளியேறி சில நாட்களிலேயே தலிபான்கள் புதிய அரசு ஒன்று பற்றிய அறிவிப்பை வெளியிடவுள்ளனர். அமெரிக்காவின் வெளியேற்றத்தை அடுத்து அந்தக் குழு வெற்றிக் கொண்டாட்டத்தில் ஈடுபட்டமை குறிப்பிடத்தக்கது.

கடந்த ஓகஸ்ட் 15 ஆம் திகதி காபுலை கைப்பற்றிய பின் மிக முக்கிய நிகழ்வாக தலிபான்கள் கடந்த புதன்கிழமை இராணுவ ஊர்வலம் ஒன்றை நடத்தியது. இதில் மோதலின்போது கைப்பற்றப்பட்ட ஆயுதங்கள் எடுத்தச் செல்லப்பட்டதோடு தலிபான்களின் கோட்டையாக கருதப்படும் கந்தஹார் வானுக்கு மேலால் பிளக் ஹவுக்கு ஹெலிகொப்டர் ஒன்றும் பறக்கச்செய்யப்பட்டது.

இந்நிலையில் போரினால் மோசமடைந்திருக்கும் பொருளாதாரத்தை கையாள்வது மற்றும் உறுதி அளிக்கப்பட்டவாறு அனைத்துத் தரப்பையும் உள்ளடக்கிய அரசு ஒன்றை தலிபான்கள் உருவாக்குவார்களா என்பது தொடர்பிலேயே தற்போது அவதானம் சென்றுள்ளது.

புதிய அரசு பற்றி ஊகங்கள் பரவலாக உள்ளன. எனினும் இதில் பெண்கள் உட்படுத்தப்படுவது சாத்தியமில்லை என்று தலிபான் மூத்த அதிகாரி ஒருவர் கடந்த புதன்கிழமை கூறி இருந்தார்.

‘பெண்கள் தொடர்ந்து வேலைக்குச் செல்லலாம் என்றபோதும் எதிர்கால அமைச்சரவையில் அல்லது வேறு எந்த ஒரு பதவியிலும் அவர்களுக்கு இடமில்லை’ என்று கடும்போக்காளரான தலிபான் மூத்த தலைவர் செர் முஹமது அப்பாஸ் ஸ்டனிக்சாய் குறிப்பிட்டார்.

இந்நிலையில் மேற்கு நகரான ஹெராட்ஸில் சுமார் 50 பெண்கள் வீதிக்கு இறங்கி தமக்கான வேலைக்குச் செல்லும் உரிமை மற்றும் புதிய அரசில் பெண்களுக்கு இடமில்லாததை எதிர்த்து கடந்த புதன்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

‘கல்வி, வேலை மற்றும் பாதுகாப்பு எமது உரிமையாகும்’ என்று அந்தப் பெண்கள் கோசம் எழுப்பியதாக அந்த ஆர்ப்பாட்டத்தை பார்த்த ஏ.எப்.பி செய்தியாளர் குறிப்பிட்டுள்ளார்.

‘நாம் ஒற்றுமைப்பட்டுள்ளோம். பயப்படமாட்டோம்’ என்றும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

ஈரான் நாட்டு எல்லைக்கு அருகில் இருக்கும் பண்டைய பட்டுப்பாதை வீதியில் அமைந்துள்ள ஹெராட்ஸ் ஒப்பீட்டளவில் தனிச்சார்பற்ற நகராகும். ஆப்கானிஸ்தானின் வளம்மிக்க பகுதியாக இருக்கும் இங்கு பெண்கள் ஏற்கனவே பாடசாலைக்குச் சென்று கல்வி கற்க ஆரம்பித்துள்ளனர்.

புதிய அமைச்சரவையில் பெண்கள் உள்ளடக்கப்பட வேண்டும் என்று தாம் எதிர்பார்ப்பதாக இந்த ஆர்ப்பாட்டத்தை ஏற்பாடு செய்தவர்களில் ஒருவரான பசிரா தஹரி ஏ.எப்.பி செய்தி நிறுவனத்திற்கு தெரிவித்தார்.

‘தலிபான்கள் எம்மிடம் ஆலோசனை பெற வேண்டும் என்று நாம் விரும்புகிறோம். அவர்களின் ஒன்றுகூடல்கள் மற்றும் சந்திப்புகளில் எந்த பெண்களையும் எம்மால் பார்க்க முடியவில்லை’ என்றும் அவர் தெரிவித்தார்.

அமெரிக்கா தலைமையில் மேற்கொண்ட வெளியேற்ற நடவடிக்கை மூலம் 122,000 பேர் வரை ஆப்கானில் இருந்து வெளியேற்றப்பட்டனர். இவர்களில் ஒருவராக தலிபான்களை நேர்காணல் செய்த பெண் ஊடகவியலாளர் ஒருவரும் ஆப்கானில் இருந்து வெளியேறியுள்ளார்.

டோலோ செய்தி ஊடக குழுமத்தின் முன்னாள் தொகுப்பாளரான அந்தப் பெண் கட்டாரில் இருந்து ஏ.எப்.பிக்கு அளித்த பேட்டியில், ஆப்கானில் பெண்கள் மிக மோசமான நிலையை சந்தித்திருப்பதாக குறிப்பிட்டார்.

‘ஆப்கான் பெண்களுக்கான (உங்களால் முடிந்த) எதையேனும் செய்யுங்கள் என்று சர்வதேச சமூகத்தை நான் கேட்டுக்கொள்கிறேன்’ என்று பெஹஷ்டா ஆர்கன்ட் என்ற அந்தப் பெண் கேட்டுக்கொண்டார்.

பெண் உரிமை மாத்திரம் அன்றி ஆப்கானிஸ்தானில் நீண்ட காலமாக நீடிக்கும் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியிலேயே தலிபான்கள் புதிய அரசை அமைக்கவுள்ளனர்.

‘தலிபான்களின் வருகையை அடுத்து இங்கு பாதுகாப்பு ஏற்பட்டபோதும் வர்த்தகங்கள் பூஜ்யத்திற்கு இறங்கிவிட்டன’ என்று இலத்திரனியல் பொருட்களை விற்கும் கடை உரிமையாளர் ஒருவரான கரீம் ஜான் ஏ.எப்.பிக்கு தெரிவித்தார்.

ஆப்கானிஸ்தானில் ‘மனிதாபிமான நெருக்கடி’ ஒன்று பற்றி ஐக்கிய நாடுகள் சபை இந்த வார ஆரம்பத்தில் எச்சரிக்கை விடுத்திருந்தது. புதிய அரசில் இருந்து தப்பிச் செல்ல விரும்புபவர்கள் இன்னும் வெளியேறிவிடவில்லை என்று அது குறிப்பிட்டது.

மனிதாபிமான கண்ணோட்டத்தில் ஆப்கானிஸ்தான் சூழ்நிலை மிகவும் பரிதாபமாக உள்ளது என ஆப்கானிஸ்தானின் ஐ.நா.வுக்கான மனிதாபிமான ஒருங்கிணைப்பாளர் ரமீஸ் அலாக்பரோவ் கவலை தெரிவித்துள்ளார். 

ஆப்கானிஸ்தானில் கடந்த சில நாட்களாக உணவு விலை 50தவீதம் அளவிற்கும், பெட்ரோல் விலை 75 வீதம் அளவிற்கும் அதிகரித்துள்ளது. 

பெரும்பாலான சர்வதேச உதவிகள் நிறுத்தப்பட்ட நிலையில், அரசு சேவைகள் செயல்பட முடியாதுள்ளது. அரசு ஊழியர்கள் சம்பளம் பெற முடியாது. இப்படியே சென்றால் இன்னும் ஒரு மாதத்திற்குள் உணவு பற்றாக்குறை ஏற்படும். மூன்றில் ஒருவர் பசியால் வாடும் நிலை ஏற்படும் என ரமீஸ் அலாக்பரோவ் தெரிவித்துள்ளார்.

இதேவேளை ஆயிரக்கணக்கான மக்கள் கால்நடைகள் போல ஆப்கானிஸ்தானில் இருந்து பாகிஸ்தானுக்கு குடும்பம், குடும்பமாக நடந்து சென்று கொண்டிருப்பதாக அங்கிருந்து வரும் தகவல்கள் கூறுகின்றன. ஆப்கானிஸ்தானிய அகதிகளை ஏற்க மாட்டோம் என்று பாகிஸ்தான் கூறினாலும் ஸ்பின் போல்டாக் சாமன் எல்லை மூடப்படவில்லை. ஒரு நாளைக்கு 20 ஆயிரம் பேர் அந்த எல்லை வழியாக பாகிஸ்தானில் தஞ்சம் புகுகிறார்கள் என்று கூறப்படுகிறது. இதற்கு செயற்கைகோள் படங்களை ஆதாரமாக காட்டப்படுகின்றன.

மறுபுறம் ஈரானும் ஆப்கானிஸ்தான் அகதிகளுக்கு புகலிடம் அளித்து வருகிறது. தனது 3 மாகாணங்களில் அது அகதிகளுக்காக அவசர கால கூடாரங்களையும் அமைத்துக் கொடுத்துள்ளது. ஆப்கானிஸ்தானில் நிலைமையில் மாற்றம் ஏற்பட்டால், அகதிகள் திரும்பித்தாயகம் போய்விட வேண்டும் என்று கூறி அனுமதிக்கிறார்கள்.

தஜிகிஸ்தானிலும் பல்லாயிரக்கணக்கான அகதிகள் ஏற்கனவே அடைக்கலம் அடைந்துவிட்டனர். உஸ்பெகிஸ்தானிலும் சில ஆயிரம் அகதிகள் மறுவாழ்வு தேடிச்சென்றுள்ளனர்.   நன்றி தினகரன் 
நாட்டை விட்டு வெளியேற ஆப்கான் எல்லைகளில் பெரும் மக்கள் கூட்டம்

ஆப்கானில் இருந்து வெளிநாட்டு படைகள் வெளியேறி தலிபான்கள் அங்கு அதிகாரத்தை பெற்றிருக்கும் நிலையில் நாட்டில் இருந்து வெளியேற எல்லை பகுதிகளில் மக்கள் கூடி இருப்பதோடு வங்கிகளில் நீண்ட வரிசைகள் காணப்படுகின்றன.

வங்கிகள், மருத்துவமனைகள் மற்றும் அரச இயந்திரத்தை தொடர்ந்து இயக்குவதில் தலிபான்கள் அவதானம் செலுத்தியுள்ளனர்.

இந்நிலையில் கைபர் கணவாய்க்கு கிழக்காக பாகிஸ்தானுடனான தொர்காம் எல்லைக்கடவையில் பெரும் எண்ணிக்கையான ஆப்கானியர்கள் கூடியிருப்பதாக பாகிஸ்தான் அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.

ஆப்கான் மற்றும் ஈரானுக்கு இடையிலான எல்லை பகுதியான இஸ்லாம் காவாவிலும் பெரும் எண்ணிக்கையானவர்கள் கூடியிருப்பதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.

நிலத்தால் சூழப்பட்ட நாடான ஆப்கானில் அமெரிக்கா தலைமையில் முன்னெடுக்கப்பட்ட வெளியேற்ற நடவடிக்கைகள் முடிவுற்ற நிலையிலேயே பெரும் எண்ணிக்கையானவர்கள் எல்லை பகுதிகளை நோக்கி விரைந்துள்ளனர். தலிபான்கள் தமது புதிய அரசு பற்றி அறிவிப்பை இன்னும் வெளியிடாத நிலையில் அந்தக் குழுவுடன் நெருக்கம் கொண்டுள்ள அண்டை நாடான பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சு, ஒரு சில நாட்களில் ஒருமித்த புதிய அரசு ஒன்று பற்றிய அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்ப்பதாக குறிப்பிட்டுள்ளது.   நன்றி தினகரன் 
காசாவில் இஸ்ரேல் துப்பாக்கி சூட்டில் பலஸ்தீனர் உயிரிழப்பு

காசா பகுதிக்கான எல்லைக்கு அருகில் இஸ்ரேல் படையினருடன் கடந்த வியாழக்கிழமை இரவு இடம்பெற்ற மோதலில் ஒரு பலஸ்தீனர் கொல்லப்பட்டு குறைந்தது 15 பேர் காயமடைந்திருப்பதாக காசா சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

வடக்கு ஜபலியா பகுதியில் வயிற்றில் துப்பாக்கி குண்டு பாய்ந்த 26 வயது இளைஞர் கொல்லப்பட்டிருப்பதோடு மேலும் ஒருவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருவதாக அது குறிப்பிட்டுள்ளது.

காசாவின் பல பகுதிகளிலும் இவ்வாறான ஆர்ப்பாட்டங்கள் இடம்பெறுவதாகவும் இஸ்ரேலிய துருப்புகளுக்கு எதிராக எரி குண்டுகள் பயன்படுத்தப்படுவதாகவும் ஏ.எப்.பி செய்தி நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

காசா மீது 15 ஆண்டுகளுக்கு மேல் நீடிக்கும் கட்டுப்பாட்டுக்கு எதிராக காசாவின் பல தரப்புகளும் ஆர்ப்பாட்டங்களுக்கு அழைப்பு விடுத்துள்ளன.

முன்னதாக கடந்த ஓகஸ்ட் 21 ஆம் திகதி இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின்போது இஸ்ரேலின் ஸ்னைப்பர் தாக்குதலில் பலஸ்தீனர் ஒருவர் கொல்லப்பட்டதோடு 40க்கும் அதிகமானவர்கள் காயமடைந்தனர்.

காசாவில் இஸ்ரேலின் முடக்கத்தை முடிவுக்குக் கொண்டுவருவது மற்றும் யூத தேசம் உருவாக்கப்படும்போது அங்கிருந்து தப்பியோடியவர்கள் அல்லது வெளியேற்றப்பட்டவர்களை மீண்டும் தமது சொந்த நிலத்திற்கு திரும்புவதற்கான உரிமையைக் கோரும் இந்த பேரணி 2018 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட நிலையில், அது தற்போது மீண்டும் தீவிரம் அடைந்துள்ளது.   நன்றி தினகரன் 
‘மூ’ கொரோனா திரிபு பற்றி கண்காணிப்பு

உலக சுகாதார அமைப்பு ‘மூ’ எனப்படும் புதிய வகை கொரோனா வைரஸ் திரிபை கண்காணித்து வருவதாகத் தெரிவித்துள்ளது.

B.1.621 ரக தொற்று வகை முதலில் கொலம்பியாவில் ஜனவரியில் கண்டறியப்பட்டது. மூ கொரோனா திரிபு, பல முறை உருமாறக்கூடும் என்றும்,

அதை எதிர்த்து தடுப்பூசிகளின் செயல்திறன் குன்றியிருக்கக்கூடும் என்றும் அந்த அமைப்பு சுட்டிக்காட்டியது.

இருப்பினும் புதிய வகை வைரஸ் பற்றி மேலும் அறிந்துகொள்ள இன்னும் கூடுதலான ஆய்வுகள் நடத்தப்பட வேண்டும் என்று அது குறிப்பிட்டது.

உலக சுகாதார அமைப்பு தற்போது 4 அவதானத்திற்குரிய கொரோனா திரிபு வகைகளை அடையாளம் கண்டுள்ளது.

அதில் ஒன்றான ஆல்பா 193 நாடுகளில் கண்டறியப்பட்டுள்ளது.

மற்றொன்று டெல்டா வகை திரிபு. அது 170 நாடுகளில் பரவியுள்ளது.

மூ உள்ளிட்ட இதர 5 வகைக் கொரோனா திரிபுகள் கண்காணிக்கப்படுகின்றன.

எனினும் உலக அளவில் பதிவான வைரஸ் தொற்றுச் சம்பவங்களில் அது 0.1 வீதத்திற்கும் குறைவே என்று குறிப்பிடப்பட்டுள்ளது.   நன்றி தினகரன் 

No comments: