எழுத்தும் வாழ்க்கையும் - அங்கம் – 44 திருச்சியிலிருந்து சென்னைப் பயணத்தில் ஒரு அன்பர் ! வேகமாக இயங்கி, காணாமலே போய்விட்ட காவலூர் ஜெகநாதன் !! முருகபூபதி



திருச்சியில் எமது  இலக்கிய நண்பரும் முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் செயலாளருமான பிரேம்ஜி ஞானசுந்தரனின் குடும்பத்தினரும் வந்து தங்கியிருப்பதை அறிந்து, அவர்களையும் சென்று பார்த்தேன்.

திருமதி கமலி ஞானா, கொழும்பில் கணவருடன் சோவியத் தூதுவராலயத்தின் தகவல் பிரிவில் தட்டச்சாளராக பணியாற்றியவர்.

இருவரும் எமது குடும்ப நண்பர்கள்.  கமலி, 1983 கலவர காலத்து கசப்பான அனுபவங்களைச் சொன்னார்.

 “  என்ன பூபதி…..  நீங்களும் அவரும் மற்றும் நண்பர்களும் தேசிய ஒருமைப்பாடு  மாநாடு எல்லாம் நடத்தினீர்களே…  சிங்கள கிராமங்களுக்கெல்லாம் சென்று இன ஐக்கியம் பற்றியெல்லாம் கருத்தரங்குகள் நடத்தினீர்களே…  இப்போது எங்களையெல்லாம் ஓட ஓட கலைத்துவிட்டாங்கள்… பார்த்தீங்களா…?   “ என்று வேதனையான புன்னகையுடன் சொன்னார்.

அன்று ஒருநாள்,  கிழக்கிலங்கை காகித ஆலைக்கூட்டுத்தாபனத் தலைவர் கே. சி. தங்கராசா என்னிடம் சொன்னதையே அவரிடமும் சொன்னேன்.

 “ கலவரங்கள் கலையும் மேகங்கள்தானே கமலி  அக்கா…? “ 

 “ கண்டறியாத கலையும் மேகங்கள்தான் .  எல்லாம்


ஏட்டுச்சுரக்காய். அதுதான் கலைச்சுவிட்டான்களே… “ அவர் குமுறினார்.

அக்காலம் பாதிக்கப்பட்டவர்களை அவ்வாறுதான் பேசவைத்தது. 

இரண்டு நாட்கள், திருச்சியில் சித்தாப்பாவின் உறவினர்களுடன் நின்றுவிட்டு,  ஒருநாள் அதிகாலை திருச்சி பஸ்நிலையத்திலிருந்து திருவள்ளுவர் பஸ்ஸில் சென்னைக்குப்புறப்பட்டேன்.

சித்தப்பாவே வந்து வழியனுப்பினார்.

நான் அமர்ந்த ஆசனத்துக்கு அருகில் ஆஜானுபாகுவான தோற்றத்துடன் ஒருவர் வந்து அமர்ந்தார். தோற்றத்தில் அவர் படித்த மனிதராக தென்பட்டார்.

அவர் தன்னை ஒரு வழக்கறிஞர் என்றும் தனது பெயர்


அனுமந்தராவ் என்றும் அறிமுகப்படுத்திக்கொண்டார். அவர் ஒரு பெரியார் பக்தன் என்பது அவருடனான தொடர் உரையாடலில் புரிந்தது.

இலங்கை நிலவரங்களை கேட்டறிந்தார்.    தமிழ் விடுதலை இயக்கங்கள் தமிழகத்தில் முகாமிடத் தொடங்கிய காலம். நானும் ஏதாவது ஒரு இயக்கத்தை சேர்ந்தவனோ…? என்பதை விடுப்புப்பார்க்கும்   தோரணையில் அவர் பேசிக்கொண்டு வந்தார்.

வீரகேசரியில் பணி எனச்சொன்னதும்,   ஆசனத்தில் நிமிர்ந்து அமர்ந்தார்.   அடுத்து செய்தி வேட்டைக்கு தயாரானார்.  விழுப்புரம் தரிப்பிடத்தில் அவரே என்னை அழைத்துச்சென்று சிற்றுண்டி, காப்பி வாங்கித்தந்தார்.   அவருடன் பலதும் பத்தும்பேசிக்கொண்டே வந்தமையால் நேரம் கடந்ததே தெரியவில்லை.

அப்போது தமிழ்நாட்டில்  ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாகவும்


, 1983 கலவரத்தை கண்டித்தும் வீதியோரங்களில் சுவரொட்டிகள் காணப்பட்டன.

அதிபர் ஜே.ஆரை கேலிச்சித்திரமாகவும் அவற்றில் வரைந்திருந்தார்கள்.   தமிழக மக்களின் அன்றைய அனுதாப அலை எவ்வாறு படிப்படியாக மாறியது என்பதை இங்கு எழுதி வயிற்றெரிச்சலைக்கொட்டிக்கொள்ள விரும்பவில்லை.

தமிழகத்தில் அனைத்துக்கட்சிகளும் இணைந்து  கரிநாள் அனுஷ்டித்த செய்திகளை அக்காலப்பகுதியில் படித்திருப்பீர்கள்.  அந்த அனுதாப அலையை,  ஆதரவை தமிழ் விடுதலை இயக்கங்கள் நன்றாக பயன்படுத்திக்கொண்டன.

எந்த இயக்கத்துடன் பேசுவது என்று தெரியாமல்


பாரதப்பிரதமர் இந்திரா காந்தி திணறிய காலத்தையும் அப்போது கடந்துவிட்டிருந்தோம்.

அவர் அந்த சீக்கியனின் துப்பாக்கி வேட்டுக்களுக்கு இரையாகாமலிருந்திருந்தால், அவரே பங்களாதேஷை பிரித்துக்கொடுத்தது போன்று தமிழ் ஈழத்தையும் பெற்றுத்தந்திருப்பார் என்று தமிழ் ஈழ ஆர்வலர்கள் மனப்பால் குடித்துக்கொண்டிருந்த காலமும் அதுதான்.

 உமா மகேஸ்வரனின் இயக்கம் வங்கம் தந்த பாடம் என்ற நூலையும் வெளியிட்டிருந்தது.

அந்த வழக்கறிஞர் இலங்கைப்பிரச்சினைகளில் அக்கறைகொண்டிருந்தது, உண்மையை அறிவதற்கா…? அல்லது அந்த பஸ் பயணத்தில் நேரத்தை செலவிடுவதற்கா..? என்பதை என்னால் அனுமானிக்க இயலவில்லை.

எமது குடும்பத்தினரின் எதிர்காலம் எவ்வாறு அமையப்போகிறது என்ற கேள்வியுடனேயே அந்தப்பயணத்தையும் நான் மேற்கொண்டிருந்தேன்.

அந்த வழக்கறிஞர் தீர்க்கதரிசனமாக ஒரு விடயத்தை சொன்னார்.   “  எங்களை நம்பி இங்கே வந்துவிடாதீர்கள்.  இங்குள்ள பிரச்சினைகள் ஏராளம்.  தற்போது அனுதாப அலை வீசலாம்.  உள்நாடுகளிலும், உலக நாடுகளிலும் காட்சிகள் மாறும்.   இந்திரா காந்திக்கு இப்படி ஒரு கதி வரும் என்று யார்தான் எதிர்பார்த்தார்கள்.  அவரால் இங்கே தீர்க்கப்படமுடியாத பல பிரச்சினைகள் இருந்தன. 


அவரது மறைவுடன், மிஸ்டர் கிளீன் என்று வர்ணிக்கப்படும் ராஜீவ் காந்தி காங்கிரஸ் கட்சியால் வளர்க்கப்படுகிறார்.  இது எங்கு சென்று முடியும் என்பதையும் சொல்வதற்கில்லை.

 எதற்கும் இங்கே வசிக்கும் உங்கள் தந்தைவழி உறவினர்களுடன் பேசிப்பாரும்.  அவர்களுக்கு வரும் அனுதாபமும் தற்காலிகமானதுதான்.

உங்களை நீங்களே நம்புங்கள். அவ்வளவுதான் சொல்ல முடியும்.  “ என்றார்.

 


தமிழ்நாட்டில் பெரும்பாலான சைவ உணவகங்களில் கடலை எண்ணெய்தான் பயன்படுத்துவார்கள்.  இலங்கையர்களுக்கு அந்த எண்ணெய்  ஒவ்வாமையானது.  முடிந்த வரையில் நல்லெண்ணையில் சமைத்த உணவுகளையே கேட்டு வாங்கிச்சாப்பிடுங்க சார்…. “ என்று ஒரு தந்தையின் பரிவோடு சொன்னார்.

எனது பாட்டனார்கள், தொ.மு. சி. பாஸ்கரத்தொண்டமான் பாளையங்கோட்டையில் கலக்டராக முன்பிருந்தவர். அவரது தம்பி சிதம்பர ரகுநாதன் எழுத்தாளர். இடது சாரி.  அண்ணன் காங்கிரஸ் – தம்பி கம்யூனிஸ்ட்  முதலான செய்திகளையும் தெரிந்தவர் அந்த வழக்கறிஞர்.

சென்னையில் இறங்கியதும், அவரே என்னை மேற்கு அண்ணா 


நகர் செல்லும் பஸ்ஸிலும் ஏற்றிவிட்டார்.  நான் இறங்கவேண்டிய சந்தியைப்பற்றியும் அந்த  பல்லவன் பஸ் நடத்துனரிடம் சொன்னார். அத்துடன் தனது விசிட்டிக் கார்டையும் தந்தார்.

ஏதும் உதவி தேவைப்பட்டால் அதில் இருக்கும் இலக்கத்தில் தொடர்புகொள்ளுமாறும் சொன்னார்.

ஆனால், எனக்கு அதற்கான தேவைகள் அங்கே உருவாகவில்லை.

முன்பின் தெரியாத இடங்களில் இப்படியும் மின்னலென வந்து மறையும்  சொந்தங்கள் எனக்கு உதவியிருக்கின்றன.  அவர்களை மீண்டும் சந்திக்கக்  கிடைத்தால் அத்தருணங்களும் அற்புதமானவைதான்.

அன்று மிகவும் சிநேகபூர்வமாக பேசிக்கொண்டுவந்த அந்த வழக்கறிஞரை அதன் பிறகு நான் சந்திக்கவேயில்லை.

விமான -  ரயில் -     பஸ் சிநேகிதங்கள்  சில


மறக்கமுடியாதவைதானே..?!

இந்திராகாந்தி கொல்லப்பட்ட அன்று நான் எனது குடும்பத்தினருடன்  யாழ்ப்பாணம் அரியாலையில் இருந்தேன். அந்த நாளையும் மறக்கமுடியாது.

அன்று 1984 ஒக்டோபர் 31 ஆம் திகதி.

அன்று மதியத்திற்கு மேல்  ஊர் திரும்புவதற்கு தயாராகி, யாழ்ப்பாணத்தில் மல்லிகை ஜீவாவுக்கு பயணம் சொல்வதற்கு அவரது அலுவலகம் வந்தேன் அப்போது நண்பர் ஏ. ஜே. கனகரட்னா பதட்டத்துடன் ஓடிவந்தார். அவர் வானொலிச்செய்தியை கேட்டுவிட்டுவந்து என்னிடமும் ஜீவாவிடமும் சொன்னபோது,   “ இன்று காலை வெளியான யாழ்.  ஈழநாடுவில்  செய்தி வரவில்லையே   “  என்றேன். 

அவரிடமிருந்து அப்போது கெட்ட வார்த்தை ஒன்று வந்தது.  அவர் கீறியிருந்த நேரம். இந்தக்கீறல் பற்றி


தெரிந்தவர்களுக்குத் தெரியும்.

அவர் வானொலிச்செய்திகேட்டுவிட்டு ஓடிவந்திருந்தார்.  ஈழநாடுவில் ரொய்டர் – பி. ரி. ஐ. செய்திச்சேவை வசதிகள் இல்லையா..? எனக்கேட்டேன்.

 “ இங்கே…. ஒரு…… இல்லை ஐஸே… “ 

மல்லிகை ஜீவா திக்பிரமையுடன் நின்றார்.

தந்தை செல்வநாயகம்  இறந்தபோதும், அந்தச்செய்தி உடனடியாக கொழும்பு  தினகரன் நகரப்பதிப்பில்  வரவில்லை.


ஆம், அந்தச்செய்தியை தவறவிட்டவரும் எனது பத்திரிகை உலக நண்பர்தான். தற்போது லண்டனிலிருக்கிறார்.

அந்த நண்பர் பின்னர் மேலிடத்தில் விசாரிக்கப்பட்டார். 

ஏ.ஜே. கனகரட்னாவும் ஒரு பத்திரிகையாளர்தான்.  அவர் முன்னர்  ஏரிக்கரை பத்திரிகை சாம்ராஜ்யத்தில் டெயிலி நியூஸ் பத்திரிகையில் பணியாற்றியவர். 

ஒரு சமயம்  கல்வி அமைச்சர் பதியூதீன் முகம்மது,   ஏழை  மாணவர்களை புகழ்பெற்ற கல்லூரிகளில் அனுமதிக்கும் திட்டத்தை வரைந்தபோது, அதற்கு எதிராக ஒரு செய்திக்கட்டுரையை எழுதுமாறு ஆங்கில ஊடகங்களின் பிரதம ஆசிரியர் எஸ்மண்ட் விக்கிரமசிங்கா ( ரணில் விக்கிரமசிங்காவின் தந்தையார் )  ஏ.ஜே. கனகரட்னாவிடம் சொன்னபோது, அவரிடமே ஒரு வெள்ளைக்காகிதத்தை வாங்கி,  “  தான், தனது பதவியிலிருந்து விலகுகின்றேன்  “ என்று



எழுதிக்கொடுத்துவிட்டு யாழ்ப்பாணம் புறப்பட்டவர்தான்,

  எம்மால் இன்றும் மதித்து கொண்டாடப்படும் நண்பர் ஏ.ஜே. கனகரட்னா.

நானும் ஒரு ஊடகவியலாளனாக பயணிப்பதால், இந்த எழுத்தும் வாழ்க்கையும் தொடரில் பல சம்பவங்களும் அச்சம்பவங்களுடன் இணைந்த  அன்பர்களும் தொடர்ந்து வருகிறார்கள்.

அன்று என்னால் ஊர் திரும்பமுடியாது போய்விட்டது.   இந்திராகாந்தி கொல்லப்பட்ட செய்தி காட்டுத் தீ போன்று பரவியது.  இயக்கங்கள் போட்டிபோட்டுக்கொண்டு கடைகளை இழுத்து மூடுமாறு பணித்தன.

யாழ். பஸ் நிலையத்திலிருந்து புறப்படவிருந்த வெளியூர் சேவை பஸ்கள் நின்றுவிட்டன.  நகருக்கு வந்த மக்கள் கிடைத்த பஸ்ஸில் ஏறிப்பறந்தனர்.

திருச்சியிலிருந்து சென்னை வந்த அந்தத்  திருவள்ளுவர் பஸ் பயணத்தில் இந்திராகாந்தி கொல்லப்பட்டபோது இலங்கையிலிருந்த காட்சியையும் அந்த வழக்கறிஞரிடம் சொன்னேன்.

ஆனால்,  ராஜீவ் காந்தி 1991 மே மாதம் 21 ஆம் திகதி சென்னை பெரும்புதூரில் கொல்லப்பட்டபோது, இலங்கையில்  குறிப்பாக யாழ்ப்பாணத்தில் எத்தகைய காட்சிகள் சஞ்சரித்தன என்பது எனக்குத் தெரியாது. அப்போது நான் அவுஸ்திரேலியா புகலிட வாசி. 

அன்று 1984 இல் மல்லிகைஜீவாவும் நானும்  திக்பிரமை பிடித்து நின்றதுபோல் இங்கே  1991 ஆம் ஆண்டு மேமாதம் 21 ஆம் திகதி அவ்வாறு தனித்து நின்றேன்.

எனக்கு நேரு குடும்பம் குறித்து அனுதாபம்.  அவரும் சுதந்திரத்திற்காக  சிறையில் வாடினார்.

இந்திரா,   பஞ்சாப் காலிஸ்தான்   இயக்கம் -  மற்றும் பொற்கோயில்   விவகாரத்தால் சீக்கியரின் வெறுப்பை சம்பாதித்தவர்.

அவரது இளைய மகன் சஞ்சய் காந்தி  விமான விபத்தில் கொல்லப்பட்டார்.

மூத்த மகன் ராஜீவ் காந்தி, இலங்கை விவகாரத்தில்  நுழைந்து,  முதலில் ஒரு கடற்படை சிப்பாயின் துவக்கினால்  கொழும்பில் தாக்கப்பட்டு,  பின்னர்,  ஶ்ரீபெரும்புதூரில் தற்கொலைக்குண்டுதாரியினால் உடல் சிதறினார்.

சென்னையில் இறங்கி, மேற்கு அண்ணா நகரில் தமது குடும்பத்துடன் வசித்த நண்பர் காவலூர் ஜெகநாதன் வீட்டுக்குச்சென்றபோது மதியம் கடந்துவிட்டிருந்தது.

அவர், மறுநாள்தான் வந்துசேர்ந்தார்.  அப்போது ஜெகநாதனின் ஏக புதல்வனுக்கு மூன்று வயதுதான் இருக்கும். தகப்பனைப்போன்று  துரு துருவென்று இருப்பான்.

அப்போது ஏப்ரில் மாதம். கடுங்கோடை காலம்.  நானும் ஜெகநாதனும், அங்கிருந்த மேலும் இரண்டு இலங்கை தமிழ் இளைஞர்களும் அவ்வீட்டின் மொட்டை மாடியில்தான் உறங்குவோம்.

ஜெகநாதனின் மகன் அவரது நெஞ்சில் வந்து விழுந்து படுத்துறங்குவான்.  அருகில் நான் படுத்திருந்து,  எமது எதிர்காலம் பற்றியும் இலங்கை – தமிழக இலக்கிய புதினங்களும் பேசுவோம்.

வீரகேசரி அலுவலகத்திற்கு  என்னைத்தேடி அவர் வந்த சமயம்தான் முதல் முதலில் சந்தித்தேன்.

சுறுசுறுப்பானவர்.  அவரது நடையிலும் வேகம் இருக்கும்.  தினமும் ஏதாவது எழுதுவார்.  அவரது கதைகள், கட்டுரைகள் அப்போது இலங்கை பத்திரிகைகளிலும் பெரும்பாலான  சிற்றிதழ்களிலும் வந்துகொண்டிருந்தன.

1983 கலவரத்திற்குப்பின்னர், அவர் மேற்கு அண்ணாநகர் வாசியாக மாறியிருந்த அதே சமயம்,  இலங்கைக்கும் – தமிழகத்திற்கும் இலக்கியப்பாலமாகவும் விளங்கினார்.

அமுதசுரபி ஆசிரியர் விக்கிரமன் , கவிஞர் மேத்தா தாசன் முதலானோரையும் இலங்கைக்கு அழைத்துவந்து சந்திப்புகளை நடத்தினார்.

தெல்லிப்பழை மகாஜனாக்கல்லூரியில் நடந்த கோகிலா மகேந்திரனின் முரண்பாடுகளின் அறுவடை நூல் வெளியீட்டு அரங்கிற்கும் மேத்தாதாசனை அழைத்துவந்தார்.

பின்னர் கொழும்பில் தினகரன் ஆசிரியர் சிவகுருநாதன் தலைமையில் மேத்தாதாசனுக்கு வரவேற்புக்கூட்டமும் ஒழுங்கு செய்தார்.

எழுத்தாளர் விக்கிரமனை பல இடங்களுக்கும் அழைத்துச்சென்றார்.

வீரகேசரி சிரேஷ்ட ஊடகவியலாளர் திருமதி அன்னலட்சுமி இராஜதுரையின்  நெருப்பு வெளிச்சம்  கதைத் தொகுதியை தமிழகத்தில் வெளியிட்டுக்கொடுத்ததுடன், அவரையும் தமிழகம் அழைத்து சந்திப்புகளை ஏற்பாடு செய்தார்.

இந்நூலின் வெளியீட்டு நிகழ்வில் பேசிய இலக்கிய விமர்சகர் சிட்டி சுந்தரராஜன்,   “ தனக்கு படலை என்ற சொல்லின் அர்த்தம் புரியவில்லை ! “  என்றார்.

இவ்வாறு தமிழகத்தவருக்குப்புரியாத பல ஈழத்தமிழ்ச்சொற்கள் ஏராளமாக  உள்ளன.

இந்த விவகாரம் இன்றுவரையில் பேசுபொருள்தான்.  இந்தப்பின்னணியில்தான் நாம்  தாய் நாடு – சேய் நாடு - தொப்புள்கொடி உறவு பற்றியெல்லாம்  பேசிக்கொண்டிருக்கின்றோம்.

காவலூர் ஜெகநாதன், மல்லிகை ஜீவாவையும் ஒரு தடவை  தமிழகம் அழைத்துச்சென்றார்.

இவ்வாறு பல ஆக்கபூர்வமான இலக்கியப்பணிகளை அக்காலப்பகுதியில் மேற்கொண்ட காவலூர் ஜெகநாதன், இலங்கையில் யாழ். திருநெல்வேலி விவசாய ஆராய்ச்சி நிலையத்தில்  பணியாற்றியபோது , மாருதம் என்ற மாத இதழையும் சில மாதங்கள் நடத்தியிருக்கிறார்.

சென்னையில் அவர் வாழ்ந்த காலப்பகுதியில் ஏறி இறங்காத பத்திரிகை – இதழ்களின் அலுவலகங்கள் எவையும் இல்லை.

நானறிந்தவரையில் அவரது படைப்புகள் தினமணிக்கதிர், கல்கி, அமுதசுரபி, குங்குமம், சாவி, கணையாழி,  இதயம்பேசுகிறது  முதலான இதழ்களிலும் அப்போது வெளியாகின.

ஒருநாள் என்னை அவர் தீபம்  இதழ் அலுவலகத்திற்கும் அழைத்துச்சென்று, அங்கிருந்த தீபம் ஆசிரியர்  நா. பார்த்தசாரதியின் உறவினர் திருமலையை அறிமுகப்படுத்தியதுடன்,  எனக்காக  அங்கே ஒரு இலக்கிய சந்திப்பு நடத்துவதற்கும்  அனுமதி பெற்றார்.

குறித்த நாளில்  இலக்கிய விமர்சகர் தி . க. சிவசங்கரன் தலைமையில் அச்சந்திப்பு நிகழ்வு நடந்தது.

அதில் எழுத்தாளர்கள் அசோகமித்திரன், சா. கந்தசாமி, ஜெயந்தன், தொ.மு. சி. ரகுநாதன், சிட்டி சுந்தரராஜன், சோ.  சிவபாதசுந்தரம்,  ராஜம் கிருஷ்ணன், முதலான இலக்கிய ஆளுமைகளும், இலங்கையிலிருந்து வந்து தமிழகத்தில் தங்கியிருந்த  எழுத்தாளர்கள் மு. கனகராசன்,  கணபதி கணேசன்,  தெணியானின் தம்பி க. நவம் ஆகியோரும் கலந்துகொண்டனர்.

இவர்களில் நான் அவுஸ்திரேலியாவிலும், நவம் கனடாவிலும் எஞ்சியிருக்கின்றோம்.

ஏனையோர் மறைந்துவிட்டனர்.  கவிஞர் மேத்தா தாசன்  வாகனவிபத்தில் கொல்லப்பட்டார்.

காவலூர் ஜெகநாதன் யாராலோ கடத்தப்பட்டு காணாமல்போனார்.

அவர்கள் அனைவர் பற்றிய நினைவுகள்தான் எஞ்சியிருக்கின்றன.

எனக்கு தமிழகத்தை காண்பித்த நண்பர் காவலூர் ஜெகநாதன் பற்றி, பாரிஸ் ஈழநாடு வார இதழில்  “  நெஞ்சில் நிலைத்த நெஞ்சங்கள்  “ தொடரில் விரிவாக எழுதியிருக்கின்றேன்

பாரிஸ் ஈழநாடுவை நடத்திய பத்திரிகையாளர் எஸ். எஸ். குகநாதனின் அண்ணன்தான் ஜெகநாதன்.

குகநாதனும்  யாழ். ஈழநாடு பாசறையில் வளர்ந்தவர்.  தற்போது மீண்டும் அவரது மேற்பார்வையில் யாழ். ஈழநாடு வெளிவருகிறது. அத்துடன் அங்கிருந்து இயங்கும் டான் தெலைக்காட்சி குழுமத்தின் தலைவராகவும் விளங்கும் குகநாதன், முன்னர் றஜனி  என்ற பதிப்பகம் நடத்தி பல ஈழத்து நாவல்களையும் வெளியிட்டவர்.

காவலூர் ஜெகநாதன் மறைந்தாலும், எனக்காக  அவரது குடும்பத்தில் இலக்கிய – ஊடக உறவுகளை விட்டுத்தான் சென்றுள்ளார்.

சொந்தம் எப்போதும் தொடர்கதைதானே….!

( தொடரும் )

letchumananm@gmail.com

No comments: