உலகச் செய்திகள்

 மனிதனுக்கு முதல்முறையாக ‘எச்10என்3’ வைரஸ் தொற்று

பிரிட்டனில் அதிக வீரியமிக்க கொரோனா வேகமாக பரவல்

உலக நாடுகளுக்கு 80 மில். தடுப்பூசிகள் வழங்கும் USA

மெக்சிகோ விளைநிலத்தில் திடீரென்று உருவான பள்ளம்

கொரோனா ஆய்வுகூட கசிவு: பிரிட்டன் பேராசிரியர் கூற்று


மனிதனுக்கு முதல்முறையாக ‘எச்10என்3’ வைரஸ் தொற்று

‘எச்10என்3’ எனப்படும் பறவைக் காய்ச்சல் நோய்த்தொற்று சீனாவில் ஒருவரிடம் கண்டறியப்பட்டுள்ளது. இந்த வகை வைரஸ் தொற்றுனால் மனிதர் ஒருவர் பாதிக்கப்பட்டிருப்பது இதுவே முதல்முறையாகும்.

எனினும், இதனால் கொரோனா போன்ற பெருந்தொற்று பரவுவதற்கான அபாயம் மிகவும் குறைவு என்று சீன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சீனாவின் ஜியாங்சு மாகாணம், ஜென்ஜியாங் நகரில் உள்ள 41 வயதாகும் ஒருவருக்கே இந்த வைரஸ் தொற்றியுள்ளது அந்த நபரின் உடல்நிலை தற்போது ஸ்திரமாக உள்ளதாகவும், விரைவில் அவர் மருத்துவமனையிலிருந்து விடுவிக்கப்படலாம் எனவும் அரசுக்குச் சொந்தமான சி.ஜி.டி.என் தொலைக்காட்சி தெரிவித்துள்ளது.

அந்த நபருக்கு ‘எச்10என்3’ தொற்று ஏற்பட்டிருந்தது கடந்த மாதம் 28ஆம் திகதி கண்டறியப்பட்டதாக தேசிய சுகாதார ஆணைக்குழு தெரிவித்திருந்தது. எனினும், அந்த நோய்த்தொற்று அவருக்கு எவ்வாறு ஏற்பட்டது என்பது குறித்து அந்த ஆணைக்குழு விளக்கமாகத் தெரிவிக்கவில்லை.

எனினும், இந்த விவகாரம் குறித்து அச்சமடையத் தேவையில்லை என்று சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பண்ணைகளில் பறவைகளிலிருந்து மனிதர்களுக்கு வைரஸ் பரவும் மிகவும் அபூர்வமான சம்பவங்களில் ஒன்று இது என்று அவர்கள் கூறியுள்ளனர்.   நன்றி தினகரன் பிரிட்டனில் அதிக வீரியமிக்க கொரோனா வேகமாக பரவல்

முதல் முறையாக இந்தியாவில் கண்டறியப்பட்டு, டெல்டா என்று பெயரிடப்பட்ட அதிக வீரியமிக்க கொரோனா தொற்று பிரிட்டனில் அதிகம் பரவி வருவதாக பிரிட்டனின் சுகாதாரத் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

டெல்டா என்று பெயரிடப்பட்ட அதிக வீரியமிக்க கொரோனா தொற்று வேகமாகப் பரவி வருவதால், கொரோனா நோயாளிகள் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படும் எண்ணிக்கை அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது.

கடந்த வியாழக்கிழமையுடன் முடிந்த ஒரு வார காலத்தில் ஒட்டுமொத்தமாக 12,431 பேருக்கு கொரோனா பாதித்த நிலையில், அவர்களில் 5,472 பேருக்கு டெல்டா வகை கொரோனா பரவியிருப்பது ஆய்வில் தெரிய வந்திருப்பதாக அந்நாட்டு பொது சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

பிரிட்டனின் கென்ட் மாகாணத்தில் முதல் முறையாகக் கண்டறியப்பட்ட ஆல்பா வகை கொரோனாவை விடவும் தற்போது டெல்டா வகை கொரோனா அதிகம் பரவி வருவது கண்டறியப்பட்டதால், அதன் தாக்கத்தை எதிர்கொள்ள அனைத்து வகையான நடவடிக்கைகளும் துரிதப்படுத்தப்பட்டு வருகிறது.   நன்றி தினகரன் 

உலக நாடுகளுக்கு 80 மில். தடுப்பூசிகள் வழங்கும் USA

அமெரிக்கா உலக நாடுகளுக்கு 80 மில்லியன் கொவிட்–19 தடுப்பூசிகளை விநியோகம் செய்யவுள்ளதாக அந்நாட்டு ஜனாதிபதி ஜோ பைடன் அறிவித்துள்ளார்.

அவற்றுள் 75 வீதம், ஐக்கிய நாட்டு நிறுவனத்தின் கொவக்ஸ் திட்டத்தின் மூலம் வழங்கப்படும் என்று அவர் கூறினார்.

லத்தின் அமெரிக்க நாடுகள், கரீபிய நாடுகள், தெற்காசியா, தென்கிழக்காசியா, ஆபிரிக்கா ஆகிய பகுதிகளில் உள்ள நாடுகளுக்கு முன்னுரிமை வழங்கப்படும் என்று வெள்ளை மாளிகை தெரிவித்தது.

அங்குள்ள நாடுகள் புதிய வைரஸ் தொற்றுச் சம்பவங்களைக் கட்டுப்படுத்த முயன்றுவரும் நிலையில் அவற்றுக்கு உதவ விரும்புவதாக அமெரிக்கா குறிப்பிட்டது.

முதல் 25 மில்லியன் தடுப்புமருந்தை ஏற்றுமதி செய்யும் நடவடிக்கைகள் தற்போது நடைபெறுவதாக வெள்ளை மாளிகைப் பேச்சாளர் செய்தியாளர்களிடம் கூறினார். இம்மாத இறுதிக்குள் 80 மில்லியன் தடுப்பூசிகள் விநியோகிக்கப்படும் என்று அவர் குறிப்பிட்டார்.

அமெரிக்காவில் வயதானவர்களில் 62.9 வீதமானவர்களுக்கு குறைந்தது ஒரு முறையேனும் கொரோனா தடுப்பு மருந்து வழங்கப்பட்டிருப்பதோடு அந்நாட்டில் 133.6 மில்லியன் பேர் முழுமையான தடுப்பு மருந்தை பெற்றிருப்பதாக அந்நாட்டின் நோய் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு பிரிவு குறிப்பிட்டுள்ளது.

இந்நிலையில் இந்த தடுப்பூசிகளை வழங்குவதன் மூலம் பிற நாடுகளில் இருந்து ஆதாயங்களை பெறுவதற்கு அமெரிக்கா இதனை பயன்படுத்தாது என அந்நாட்டின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜக் சல்லிவன் தெரிவித்துள்ளார். இது குறித்து வெள்ளை மாளிகையில் நடந்த செய்தியாளர் சந்திப்பின்போது அவர் கூறியதாவது:-

“உலகம் தற்போது சந்தித்து வரும் கொரோனா பேரிடரை விரைவில் முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என்பதே நமது நோக்கமாகும். தடுப்பூசிகளை செலுத்துவதன் மூலம் பல உயிர்களை காப்பாற்ற முடியும். உலக நாடுகளுடன் தடுப்பூசிகளை பகிர்ந்து அளிக்கும் நிலையில் தற்போது அமெரிக்கா உள்ளது.

அதேநேரம் ஜனாதிபதி ஜோ பைடன் கூறியது போல், அமெரிக்க அரசு தடுப்பூசிகளை பகிர்ந்து அளிக்கும் நாடுகளிடம் எந்த ஆதாயத்தையும் பயன்படுத்திக் கொள்ளப்போவது இல்லை. பல்வேறு நாடுகளில் இருந்து தடுப்பூசிக்கான கோரிக்கை வந்துள்ளது. அமெரிக்காவின் அண்டை நாடுகளான பெரு, ஈக்வடோர், கொலம்பியா உள்ளிட்ட நாடுகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்” என்றார்.   நன்றி தினகரன் 

மெக்சிகோ விளைநிலத்தில் திடீரென்று உருவான பள்ளம்

மெக்ஸிகோவில் விளைநிலத்தில் ஏற்பட்ட பெரும் பள்ளத்தைக் கண்டு மக்கள் அச்சமடைந்துள்ளனர். பியூப்லா மாகாணத்தில் உள்ள சாண்டா மரியா என்ற இடத்தில் உள்ள வயலில் திடீரென பூமி உள்வாங்கியதில் அங்கு பெரும் பள்ளம் உருவானது.

சுமார் 300 அடி அகலமும் 60 அடி ஆழமும் கொண்ட இந்தப் பள்ளத்தைக் கண்டு அங்குள்ள மக்கள் அப்பகுதியை விட்டு ஓட்டம் பிடித்தனர். பள்ளம் ஏற்படுவதற்கு முன் அப்பகுதியில் பெரும் இடி இடித்தது போன்ற சப்தம் கேட்டதாக விளைநிலத்தின் உரிமையாளர் தெரிவித்துள்ளார்.

பின்னர் பயம் தெளிந்த மக்கள் தூரமாக நின்றவாறே பெரும் பள்ளத்தைப் பார்த்தனர்.

குறிப்பிட்ட இடத்திற்கு கீழே பாறைகள் குறைவாக இருப்பதாலும், திடீரென ஏற்பட்ட நீரோட்டம் காரணமாகவும் இந்தப் பள்ளம் ஏற்பட்டிருக்கலாம் என புவியியல் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

கடந்த சனிக்கிழமை தோன்றிய இந்தப் பள்ளம் தொடர்ந்து விரிவடைந்து 80 மீற்றர் அகலம் வரை பெரிதாகியுள்ளது. இந்த பள்ளம் தொடர்ந்து விரிவடைந்து வருவதால் அருகில் இருக்கும் விடுகளை விழுங்கிவிடும் அச்சம் அதிகரித்துள்ளது.   நன்றி தினகரன் 
கொரோனா ஆய்வுகூட கசிவு: பிரிட்டன் பேராசிரியர் கூற்று

சீன விஞ்ஞானிகளால் வூஹான் ஆய்வுகூடத்தில் கொவிட்-19 தொற்று உருவாக்கப்பட்டிருப்பதாக பிரிட்டிஷ் பேராசிரியர் அன்குஸ் டெல்கெயிஷ் மற்றும் நோர்வே விஞ்ஞானி டொக்டர் பிர்கர் சொரென்சஸ் குறிப்பிட்டுள்ளனர்.

‘சீன ஆய்வுகூடங்களில் இது தொடர்பிலான தரவுகளை வேண்டுமென்றே அழித்தல், மறைத்தல் மற்றும் மாசுபடுத்தல்’ இடம்பெற்றிருப்பதாக இந்த ஆய்வில் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

ஆய்வுகூடத்தில் இருந்து இந்த வைரஸ் தவறுதலாக கசிந்தது உட்பட வைரஸின் மூலத்தை கண்டறிவதற்கு அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் உளவுப் பிரிவினருக்கு அண்மையில் உத்தரவிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. எனினும் இந்த வைரஸ் ஆய்வுகூடத்தில் இருந்து பரவியது என்ற கூற்றை உலக சுகாதார அமைப்பு நிராகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.    நன்றி தினகரன் 


No comments: