ஒவ்வொருவருக்குள்ளும் ‘சொல்ல மறந்த கதைகள்’ பல இருக்கும். ‘சொல்லவேண்டிய கதைகள்’ பலவும் இருக்கும். ‘சொல்லத்தவறிய கதைகள்’ கூட பல இருக்கும். இந்த மூன்று வகை கதைகளையும் ஒருவர் சொல்ல முனைந்துள்ளார்.
அவற்றைச் சொன்னது மட்டுமல்லாது , எழுத்தினாலான அந்தக் கதைகளைத் தொகுத்து நூல்களாக்கியுமுள்ளார். அதில் ஒரு நூல்தான் ‘சொல்லத்தவறிய கதைகள்’.
சொல்லத்தவறிய கதைகளின் சொந்தக்காரர் லெ.முருகபூபதி. தமிழ் இலக்கியபரப்பில் நன்கறிந்த பெயர். அவரது எழுத்தும் வாழ்வும் இலங்கையைக் கடந்து புலம் பெயர்ந்தும் செல்வது. நீர்கொழும்பை பிறப்பிடமாகக் கொண்ட இந்திய வம்சாவளி
தமிழரான லெ.முருகபூபதி அடிப்படையில் ஒரு பத்திரிகையாளர்.
ஆனால், அதனைத் தனியே ஒரு தொழிலாக மாத்திரம் கொள்ளாது அதனையே வாழ்வாக்கிக் கொண்டவர். அந்த வாழ்வில் ஒர் அரசியல் அணிசார்ந்தும், ஓர் இலக்கிய முகாம் சார்ந்தும் தன்னை அடையாளப்படுத்தி அமைப்பாக்கச் செயற்பாடுகளிலும் தன்னை ஈடுபடுத்திக் கொண்டவாறே பத்திரிகை துறையில் பணியாற்றியவர்.
பத்திரிகையாளரான தான் நடுநிலைமையில் செயற்படுபவன் என போலியாக பக்கம் சாயாது, இலங்கை இடது சாரி அரசியல் இயக்கச் செயற்பாடுகளிலும் இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் செயற்பாடுகளிலும் தன்னைப் பக்கம் சாய்த்து பத்திரிகைப் பணி செய்தவர்.
வீரகேசரி பத்திரிகையில் நீண்டகாலமாக பணியாற்றியவர். முப்பது வருடங்களுக்கு மேலாக அவுஸ்திரேலியாவில் வசிக்கிறார். ஆனால், இப்போதும் இலங்கைக் கள நிலவரங்களை மிகுந்த அவதானத்துடன் கவனித்து வருபவர். எழுதியும் வருபவர்.
இவரது எழுத்தில் எப்போதுமே மாறாத ஒன்று அதன் சுவாரஷ்யமும் பலபரிமாணமும். சொல்லத்தவறிய கதைகள் நூலிலும் அந்த இரண்டுக்கும் குறைவில்லை.
2019 ஆம் ஆண்டு மகிழ்(கிளிநொச்சி) பதிப்பக வெளியீடாக வந்த ‘சொல்லத்தவறிய கதைகள்’ நூல்அவரது கைகளினாலேயே அந்த ஆண்டின் இறுதியில் கிடைக்கப் பெற்றது. அப்போது முதல் இப்போது வரை ‘சொல்லவேண்டிய கதைகள்’ பல என்னிடம் இருந்ததால், முருகபூபதியின் ‘சொல்லத்தவறிய கதைகள்’ பற்றி இங்கே இப்போது சொல்லலாம் என எழுதுகிறேன்.
இந்த நூலில் இருப்பது இருபது கட்டுரைகள். அந்த இருபதும் கதைகள். இவை கதைகளா? கட்டுரைகளா? எனக்கேட்டால், கட்டுரைகளாக எழுதப்பட்டுள்ள கதைகள் எனலாம். தன் வாழ்வில் தான் சந்திக்க நேர்ந்த மனிதர்கள் பற்றி, சம்பவங்கள் பற்றி கதைகதையாக எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு இந்த நூல். இந்த நூலை வாசிக்கும் ஒருவருக்கு முருகபூபதியின் ‘சொல்லமறந்த கதைகள்’ நூலையும் ‘சொல்லவேண்டிய கதைகள்’ நூலையும் வாசிக்கத் தூண்டுதல் ஏற்படுவது நிச்சயம்.
‘அடிக்கிற கைதான் அணைக்கும்’ – பிள்ளைகளை அடித்து வளர்ப்பது முதல் கணவன் மனைவியை அடிப்பது மனைவி கணவனை அடிப்பது என அடி உதை கதைகள் என்றாலும் அதனை இலங்கையில் எவ்வாறு பார்க்கிறார்கள், புலம் பெயர்ந்த நாடுகளில் எவ்வாறு பார்க்கிறார்கள் என விபரிக்கும் கதை.
‘மறைந்தவர்களின் தொலைபேசி எண்கள்’ தனது டயறியில் குறித்து வைத்துள்ள தொலைபேசிய எண்கள் ஊடாக தான் ஊடாடிய உறவுகளை நட்புகளை மீட்டுப்பார்க்கும் கதைகள். கைத்தொலைபேசி பாவனைகள் வந்தபிறகு, இந்தக் கட்டுரைக் கதை பல நினைவுகளை எம்முன் நிறுத்துகிறது.
‘பத்துவயதில் ஆடிய கரகாட்டம்’ பால்ய கால அவரது கரகாட்டத்தையும் அதுபோல ஆடி இருக்கக் கூடிய பலரதும் நினைவுகளை மீட்பது. ‘கலவரங்களும் கண்துடைப்புகளும்’ அரசியல் பேசுவது. ‘சிங்கள இலக்கியங்களை தமிழுக்குத்தந்த முஸ்லிம் சகோதரர்கள்’ இலக்கியம் பேசுவது. ‘ புத்தகங்கள் என்ன குற்றம் செய்தன’ யாழ்.நூலக எரிப்புடன் கூடியதாக புத்தகம் பற்றி பேசுவது.
‘சொடக்கு மேல சொடக்குப்போடும் தாத்தாமார்’ உறவுகள் பற்றி பேசுவது. ‘அஸ்ஸலாமு அலைக்கும்’ யார் யாருக்கு சொல்லலாம் என சொல்லும் கதை.
‘எழுத்துலகில் சனிபகவான்’ பத்திரிகையில் பணியாற்றும் ஒப்புநோக்குனர்கள் பற்றிய கதை. சிரிக்கச் சிரிக்க வாசிக்க பல குறுங்கதைகள் இங்கே உண்டு. ‘சனிக்கிழமையன்று ஜனாதிபதி வெளிநாடு பயணம்’ எனும் தலைப்பை எழுத்துக்கள் குறைவால் ( Letter press அச்சுக்கோர்ப்பு காலத்தில் ) ‘சனியன்று ஜனாதிபதி வெளிநாடு பயணம்’ என கோர்ப்பதற்கு தீர்மானித்து இறுதியில் ‘று ‘ எழுத்தை தவறவிட்டு பத்திரிகையில் அச்சிட்ட கதை.
இப்படி புகையிலை, புகையிலைச் சுருட்டு, சுருட்டு கடைகள் பற்றிய கதைகள், தேங்காய் கதை, திரையரங்குகளின் கதை, பாதணிகள் கதை என பல கதைகள். இவை எல்லாவற்றிலும் தனது வாழ்வனுபவங்களையும் அந்த காலத்து அரசியல் பின்புலங்களையும், அரசியல் பிரபலங்களையும் இணைத்துச் சொல்வதில்தான் கதைகளின் சுவாரஷ்யம் கூடுகிறது.
ஜி.ஜி.பொன்னம்பலம் எனும் அரசியல்வாதியின் கழுத்தில் விழுந்த பலநூறு பெறுமதியான் பூமாலைகளுக்கு என்ன ஆனது என எழுதிய அதேநேரம், பல ஆயிரம் பெறுமதியான தங்கமாலைக்கு என்ன ஆனது என எழுதாமலே விடுவது சுவாரஷ்யத்துக்கு இன்னுமோர் உதாரணம்.
‘கங்கை மகள்’ எனும் தனது சிறுகதை பற்றிய கதை, சிங்கள இராணுவத்தால் சின்னாபின்னமாக்கப்பட்ட ஜேவிபி இயக்கப் பெண்மணியான பிரேமாவதி மனம்பேரியின் கதை. அவளை கதிர்காமத்தில் நிர்வாணமாக வீதி வழியே இராணுவம் இழுத்து வந்த போது கத்தரகம முருகா என்ன செய்து கொண்டிருந்தார் எனும் கேள்வி எள்ளல்.
எழுத்தாளர் பிரமிள் பற்றிய தகவல்களும் எண்கணித சாத்திரக் கதையும் எனக்குப் புதிது. பிரமிள் படைப்புகளை அறிந்திருந்தும், பிரமிளை இன்னும் அறிய வைத்த கதை இது. ‘திசை மாறிய ஒரு பறவையின் வாக்குமூலம்’ எனது வாக்குமூலத்தை ஒத்ததாகவே இருந்தது.
“நீங்கள் எப்படி இப்படி சரளமாக சிங்களம் பேசுகிறீர்கள்” எனும் கேள்வியை எதிர்கொண்ட, “ ஏன் என்று தெரியாது விசாரணை செய்கிறோம் ” என்ற பதிலையும் பெற்ற நானறிந்த இன்னொருவராக முருகபூபதியும் இருந்துள்ளார் என்பதை உறுதி செய்த கதை.
“இந்தச் ‘சொல்லத்தவறிய கதைகள்’ ஒரு வகையில் வரலாற்றின் சாயல் கொண்டவை. இன்னொரு வகையில் சமூகவியலின் பாற்பட்டவை. இன்னொரு கோணத்தில் எம்மைச் சுற்றியும் நிகழ்ந்தவற்றின் கதைகள் எல்லாவற்றுக்கும் மேலாக நாம் கவனித்தேயாக வேண்டிய கதைகள்” எனும் கவிஞர் கருணாகரனின் பதிப்புரையின் வரிகள் நிதர்சனமிக்கவை.
கொரொனா முடக்க காலத்தைக் கடத்த சுவாரஷ்யம் குன்றாத ‘சொல்லத்தவறிய கதைகள்’ வாசிக்கலாம்.
( நன்றி: இலங்கை தமிழன் வார இதழ் –
No comments:
Post a Comment