இலங்கைச் செய்திகள்

 பலாலி சர்வதேச விமான நிலையம் விரைவில் அபிவிருத்தி

உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல்; குற்றவாளிகளுக்கு எதிராக விரைவில் வழக்குத் தாக்கல்

புதிய சட்டமா அதிபரின் அதிரடி நடவடிக்கை

சீரற்ற வானிலை; இதுவரை 14 பேர் மரணம்; 2 பேரை காணவில்லை

சஜித் தம்பதியினர் அடுத்த வாரம் வீடு திரும்புவர்


 பலாலி சர்வதேச விமான நிலையம் விரைவில் அபிவிருத்தி

இந்தியாவிடமிருந்து 300 மில். ரூபா பெற தீர்மானம்

யாழ். பலாலி சர்வதே விமான நிலையத்தை அபிவிருத்தி செய்வதற்காக இந்தியாவிடமிருந்து 300 மில்லியன் ரூபா நிவாரணத்தைப் பெற்றுக்கொள்ள அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

இது தொடர்பாக நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற அமைச்சரவையின் முடிவுகளை அறிவிக்கும் ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிட்டபோதே அமைச்சரவை இணை பேச்சாளரான அமைச்சர் உதய கம்மன்பில இதனை தெரிவித்தார். பலாலி விமான நிலையத்தை அபிவிருத்தி செய்வதற்காக சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க, இது தொடர்பான அமைச்சரவை பத்திரத்தை சமர்ப்பித்துள்ளதாகவும் அதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதென்றும் கூறினார்.  நன்றி தினகரன் 




உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல்; குற்றவாளிகளுக்கு எதிராக விரைவில் வழக்குத் தாக்கல்

- புதிய சட்ட மாஅதிபர், பிரதமருடனான சந்திப்பில் தெரிவிப்பு  

நாட்டின் 48 ஆவது சட்ட மாஅதிபராக கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்ட ஜனாதிபதி சட்டத்தரணி சஞ்ஜய் ராஜரட்ணம் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை நேற்று (31) அலரி மாளிகையில் சந்தித்தார். 

சட்ட மாஅதிபர் பதவிக்கான கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்ட ஜனாதிபதி சட்டத்தரணி சஞ்ஜய் ராஜரட்ணத்துக்கு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ வாழ்த்துக்களை தெரிவித்தார். 

கொழும்பு துறைமுக கடற்பரப்பில் தீ விபத்துக்குள்ளான எம். வி எக்பிரஸ் பேர்ள் கப்பல் தொடர்பிலும், தீ பரவலினால் சமுத்திர வள சுற்று சூழல் பாதிப்பு தொடர்பிலும் முன்னெடுக்க வேண்டிய சட்ட நடவடிக்கைகள் குறித்து பிரதமர் இதன்போது கவனம் செலுத்தினார். 

அதற்கான சட்ட நடவடிக்கைகள் துரிதமாக முன்னெடுக்கப்படுமென தெரிவித்த சட்ட மாஅதிபர், ஏப்ரல் 21 குண்டுத்தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் தொடர்பிலான விசாரணை குறித்து அதிக கவனம் செலுத்தப்பட்டுள்ளதாகவும், குற்றவாளிகளுக்கு எதிராக விரைவில் வழக்கு தாக்கல் செய்ய நடவடிக்கை எடுக்கப்படுமெனவும் குறிப்பிட்டார். 

இதன்போது சட்ட மாஅதிபர் திணைக்களத்திற்கு புதிய கட்டிடத் தொகுதியை வழங்கியமை தொடர்பில் பிரதமருக்கு நன்றி தெரிவித்த சட்ட மாஅதிபர், பழைய சட்ட மாஅதிபர் திணைக்கள கட்டிடத் தொகுதி தொல்பொருள் பழமையை கொண்டுள்ளது. ஆகையால் அக்கட்டிடத் தொகுதியை  புனரமைக்க அரசாங்கம் ஆதரவு வழங்க வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.

கொலை வழக்கு தொடர்பில் நீதவான் நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் விசாரணைகளின் போது ஆரம்பத்தில் சட்ட மாஅதிபர் திணைக்களத்தினால் ஆலோசனை வழங்கப்பட்டது. ஆனால் தற்போது அவ்வாறான தன்மை காணப்படாத காரணத்தினால் ஏற்பட்டுள்ள நெருக்கடிகள் குறித்து சுட்டிக்காட்டிய பிரதமர், இது குறித்து நீதி அமைச்சுடன் கலந்துரையாடி உரிய தீர்வை எடுக்குமாறு ஆலோசனை வழங்கினார்.

இச்சந்திப்பில் பிரதமரின் செயலாளர் காமினி செனரத், பிரதமர் அலுவலக ஊழியர்களின் பிரதானி யோஷித ராஜபக்ஷ, சட்ட மாஅதிபர் திணைக்களத்தின் சிரேஷ்ட பிரதி சொலிஸிட்டர் ஜெனரல் சேத்திய குணசேகர, மற்றும் பிரதமரின் மேலதிக செயலாளர் சமிந்த குலரத்ன, கனேஷ் தர்மவர்தன ஆகியோர் கலந்துக் கொண்டனர்.   நன்றி தினகரன் 
 





புதிய சட்டமா அதிபரின் அதிரடி நடவடிக்கை

ஒருங்கிணைப்பு அதிகாரி பதவி இரத்து

புதிதாக நியமிக்கப்பட்ட சட்டமாஅதிபர் சஞ்சய் ராஜரட்ணம், உடனடியாக அமுலாகும் வகையில் சட்ட மாஅதிபருக்கான ஒருங்கிணைப்பு அதிகாரி பதவியை இரத்துச் செய்துள்ளார்.

சிரேஷ்ட பிரதி சொலிசிட்டர் ஜெனரல் செத்திய குணசேகர வெளியிட்டுள்ள சுற்றிக்கையில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் இந்தப் பதவி நிலை இரத்துசெய்யப்படுதல் உடனடியாக நடைமுறைக்கு வருகிறது.

இதன்படி சட்ட மாஅதிபருக்கான ஒருங்கிணைப்பு அதிகாரி என்று எவரும் இனி செயற்பட மாட்டார்கள். முன்னைய சட்ட மாஅதிபர் தப்புல டி லிவேராவின் ஒருங்கிணைப்பு அதிகாரியாக நிஷாரா ஜயரத்ன செயற்பட்டார்.

தப்புல டி லிவேரா ஓய்வு பெற்றவுடன், நிஷாரா ஜயரத்ன, 2021 மே 24 ஆம் திகதியன்று தனது கடமைகளிலிருந்து விலகிக்கொண்டார்.    நன்றி தினகரன் 

 





சீரற்ற வானிலை; இதுவரை 14 பேர் மரணம்; 2 பேரை காணவில்லை

சீரற்ற வானிலை; இதுவரை 14 பேர் மரணம்; 2 பேரை காணவில்லை-Inclement Weather-14 Dead-2 Missing-DMC

- 10 மாவட்டங்களில் 245,212 பேர் பாதிப்பு
- 15,658 பேர் பாதுகாப்பான இடங்களில்

நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக, இதுவரை 14 பேர் மரணமாகியுள்ளதாக, அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவித்துள்ளது.

அத்துடன் இரத்தினபுரி, கம்பஹாவில் 2 பேரை காணவில்லை என நிலையம் மேலும் அறிவித்துள்ளது.

கம்பஹா, இரத்தினபுரி, கொழும்பு, புத்தளம், களுத்துறை, நுவரெலியா, கேகாலை, கண்டி, குருணாகல், காலி ஆகிய 10 மாவட்டங்களில் 60,674 குடும்பங்களைச் சேர்ந்த 245,212 பேர் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர்.

இதேவேளை, 3,520 குடும்பங்களைச் சேர்ந்த 15,658 பேர் பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

மேலும் 794 குடும்பங்களைச் சேர்ந்த 3,397 பேர் உறவினர்களின் வீடுகளில் தங்கியுள்ளதாக, நிலையம் சுட்டிக்காட்டியுள்ளது.

14 வீடுகள் முற்றாகவும், 817 வீடுகள் பகுதியளவிலும் பாதிப்புக்குள்ளாகியுள்ளதாக, கணக்கிடப்பட்டுள்ளது.

நாட்டில் மேல், சப்ரகமுவ, வடமேல் மற்றும் மத்திய மாகாணங்களிலும் காலி, மாத்தறை, நுவரெலியா மற்றும் கண்டி மாவட்டங்களிலும் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.    நன்றி தினகரன் 

 





சஜித் தம்பதியினர் அடுத்த வாரம் வீடு திரும்புவர்

கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்ட எதிர்கட்சித்தலைவர் சஜித் பிரேமதாஸ மற்றும் அவரது மனைவி ஜலனி பிரேமதாஸ ஆகியோர் விரைவில் வீடு திரும்பவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்சமயம் சஜித் பிரேமதாஸ மற்றும் ஜலனி பிரேமதாஸ கொழும்பிலுள்ள தனியார் வைத்திசாலையொன்றில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

அவர்கள் உடல் நிலையில் எவ்வித பிரச்சினையும் இல்லையென மருத்துவமனை தகவல்கள் தெரிவிக்கின்றன.

அந்த வகையில் அடுத்தவாரமளவில் அவர்கள் இருவரும் வீடு திரும்புவார்களென அந்த தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன.   நன்றி தினகரன் 






No comments: