மவுண்ட்றூயிட் தமிழ்ப் பாடசாலை - பேச்சுப்போட்டி 2021 - பரமபுத்திரன்

 .


மவுண்ட்றூயிட் தமிழ்ப் பாடசாலையின் 2021ம் ஆண்டுக்கான பேச்சுப்போட்டி கடந்த 29/05/2021 அன்று கொலிற்றன் பொதுப் பள்ளி (Colyton Public School) அரங்கில் பகல் ஒருமணிக்கு ஆரம்பித்து மாலை ஐந்து முப்பது மணிவரை  நடைபெற்றது. இந்நிகழ்விற்குப் பாடசாலை நிர்வாகத் தலைவர், உறுப்பினர்கள்,  அதிபர், ஆசிரியர்கள், உட்பட பெற்றோர்களும் பெருமளவில் வருகை தந்து சிறப்பித்தனர். பேச்சுப்போட்டிக்கான நடுவர்களாக அவுத்திரேலிய தமிழ்முரசு இலத்திரனியல் பத்திரிகை ஆசிரியர் செல்லையா பாஸ்கரன்,  முனைவர் வெங்கடேஷ் மகாதேவன், ஆசிரியர் கவிஜா விக்னேஸ்வரன்   ஆகியோர் செயற்பட்டனர்.



மவுண்ட்றூயிட் தமிழ்ப்பள்ளி மாணவர்களால் தமிழ்மொழி வாழ்த்து, பாடசாலைக்கீதம், அவுத்திரேலிய தேசியகீதம் என்பன இசைக்கப்பெற்று, அகவணக்கத்துடன் நிகழ்வு ஆரம்பமானது. முதலில் தலைவர் உரை இடம்பெற்றது. மவுண்ட்றூயிட் தமிழ்ப்பாடசாலை நிர்வாகத் தலைவர் கில்பேட் தேவதாசன் அவர்கள் தலைமை உரையினை ஆற்றினார். பேச்சுப்போட்டிக்குப்  பெற்றோர்களும் மாணவர்களும் எழுச்சியுடன் வந்திருப்பதனைக் கண்டு மகிழ்வதாகவும், இந்த நிகழ்வு சிறப்புற அமைய உதவிய நிர்வாக உறுப்பினர்கள், பேச்சுப்போட்டிக்காக மாணவர்களை தயார் செய்த ஆசிரியர்கள் பெற்றோர்கள் அனைவரையும் பாராட்டிய அதேவேளை, பேச்சுப் போட்டியில் பங்குபற்ற உற்சாகத்துடன் வந்திருக்கும் மாணவர்கள் சிறப்பான வெற்றி பெறவும்  தனது வாழ்த்துகளைத் தெரிவித்து, எல்லோரையும் வரவேற்று தனது உரையினை நிறைவுசெய்தார். அடுத்து பாடசாலை அதிபர் பாலசுப்பிரமணியம் முரளீதரன் அவர்கள் நடுவர்களை வரவேற்று, அவர்களை அறிமுகம் செய்து பேச்சுப்போட்டி நிகழ்வினைத் தொடக்கி வைத்தார்.  



மாணவர்களின் உரைகள் யாவும் ஆசிரியர்களால் ஆக்கப்பெற்று மவுண்ட்றூயிட் பாடசாலைக் கல்விக்குழுவினாரால் சரிபார்க்கப்பட்டு ஏற்கனவே மாணவர்களுக்கு வழங்கப்பட்டிருந்தது. அத்துடன் வகுப்பு ஆசிரியர்கள் பெற்றோர்களின் பங்களிப்புடன் மாணவர்களுக்கான பேச்சுகளை மேடையில் பேசுவதற்காகவும் பயிற்றுவித்திருந்தனர். முன்பள்ளி முதல் உயர்வகுப்பு மாணவர் வரை பங்குபற்றிய இப்போட்டியில் ஐம்புலன்கள், பட்டம், அன்பு, பெற்றோர்கள், நல்ல நண்பர்கள், ஊக்கமது கைவிடேல், என்னைக் கவர்ந்த நூல், பெற்றோரைக் கனம் பண்ணுதல், விஞ்ஞானமும் மருத்துவமும், உடற்பயிற்சியும் நலமான வாழ்வும், பொழுதுபோக்குச் சாதனங்கள் ஆகிய தலைப்புகளில்  உரைகள் அமைந்திருந்தன.



பேச்சுபோட்டி தொடர்பான தமது கருத்துகளையும் நடுவர்கள் பகிர்ந்து கொண்டனர். நடுவராக வருகை தந்திருந்த திரு.செல்லையா பாஸ்கரன் அவர்கள் தமிழ்முரசு இலத்திரனியல் பத்திரிகையின் ஆசிரியர், அவுத்திரேலியா தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் அறிவிப்பாளர், நிகழ்ச்சித் தொகுப்பாளர். கவிஞர், சிறுகதை எழுத்தாளர். இவ்வாறு பல்வேறு திறமைகளை தன்னுள் வைத்திருப்பவர். தமிழ்மீது மிகவும் பற்றுக்கொண்டவர். இவரது கருத்துரையும் மாணவர்களையும், ஆசிரியர்களையும் வழிப்படுத்தி பேச்சாற்றலுக்கு முதன்மை நல்கும் வகையில் அமைந்திருந்தது. அதாவது  பிள்ளைகளின் மழலைப் பேச்சுகளையும், மற்றும் பேச்சுகளையும்  நாம் எல்லோரும் கேட்டு மகிழ்வோம், இருப்பினும் பேசும்போது அவர்களின் தமிழ்மொழி  ஆளுமை, லகர, ழகர, ளகர வேறுபாடுகள், பேசும் ஆற்றல், சபையினைக் கவர்தல் என்பனவும் அவதானித்து வழிகாட்டப்படவேண்டும் என்று கூறியது மட்டுமன்றி,  பிள்ளைகள் இதனை  மனதிற்கொண்டு பேசவேண்டும் எனவும் குறிப்பிட்டார். அத்துடன்,   இந்நிகழ்வானது பேச்சுப்போட்டி என்று அழைத்திருந்தார்கள், ஆனால் நிகழ்வின் ஏற்பாட்டினையும், அதில் கலந்து கொண்டிருக்கும் மாணவர்களையும், அவர்கள் அணிந்திருக்கும் ஆடைகளையும், மற்றும் எல்லாவற்றையும் பார்க்கும்போது  இது ஒரு கலாசார நிகழ்வாகவே  அமைந்துள்ளது என்று கூறி தனது பாராட்டினையும் தெரிவித்தார். 



நடுவர் செல்வி. கவிஜா விக்னேஸ்வரன் அவர்கள் ‘கோம்புசு’ (Homebush) தமிழ்  பாடசாலையில் உதவி ஆசிரியராக பணியாற்றுபவர். இளைய தலைமுறையில் இந்நாட்டில் கற்றுத்தேறிய மாணவி. இன்று நடுவராக நடுவுநிலைமை வகிக்க வந்திருந்தாலும் பிள்ளைகளின் பேச்சுகள்  மகிழ்வினைத் தந்ததாகவும், இன்று எங்கள் தமிழ்ப்பிள்ளைகள் பேசும் ஆற்றல் வளரவும், அவர்களுக்குத் தமிழ்மொழி அறிவினைப்  பெற்றுக்கொடுக்கவும் இப்பள்ளி  வழங்கும் சந்தர்ப்பத்துக்கும் நன்றியைத்  தெரிவித்தார். அத்துடன் மாணவர்கள் நன்றாகப் பேசியமையையும் பாராட்டியிருந்தார். 



நடுவர் முனைவர் வெங்கடேஷ் மகாதேவன் அவர்கள் தமிழ் ஆர்வலர், சிறந்த பேச்சாளர்.  வானொலி அறிவிப்பாளராக, தொலைக்காட்சி  செய்தி வாசிப்பாளராக செயற்பட்டவர். இன்றும் இலக்கியக் கூட்டங்கள், பட்டிமன்றம் போன்றவற்றில்  ஆன்மீகம், சமூகம், வாழ்வியல், பண்பாடு , தத்துவம், தன்னம்பிக்கை, போன்ற கருத்துக்களை நகைச்சுவை கலந்து உணர்ச்சி பூர்வமாக பேசுவதுடன் மேடை  நிகழ்ச்சிகளைத்  தொகுத்தும்   வழங்குபவர்.  . இவர் தனது தனது உரையில்  எல்லா மாணவர்களும் நன்றாகவே பேசினார்கள். இருப்பினும் மழலைத்தமிழ்  பேசும் பிள்ளைகளை இரசிக்கவே விருப்பமாக உள்ளது. புள்ளியிட்டு தர அளவீடு செய்ய மனம் ஒப்பவில்லை எனவும் கூறினார். 



அனைத்து  மாணவர்களும் சிறப்பாகப் பேசியிருந்தாலும் குறிப்பாகப்  பாலர் வகுப்பு மாணவர்களையும் அவர்களைப் பயிற்றுவித்த ஆசிரியர்களையும்  மிகவும் மகிழ்வுடன் பாராட்டுவதாகக் கூறினார். காரணம் மிகவும் சிறிய பிள்ளைகளுக்காக தங்களை அர்ப்பணித்து, அவர்களைப் பயிற்றுவித்து  மேடையேற்றிப்  பேசவைத்தமை என்பது  கடினமான பணி.  அதனைச்  சிறப்பாகச்  செய்தமை பாராட்டப்பட வேண்டியது  எனக்கூறினார். மூன்று நடுவர்களும் நடுவுநிலைமை வகித்தமை மட்டுமன்றி, இறுதிவரை அமர்ந்திருந்து மாணவர்களின் முடிவுகள் அறிவிக்கப்பட்டு, நிகழ்வு முடிவடைந்தபின், ஆசிரியர்கள், நிர்வாகத்தினருடன் தமது தனிப்பட்ட கருத்துகளையும் கலந்துரையாடி, பாடசாலை  மாணவர்களுக்குத் தேவைப்படும் வழிகாட்டல் செய்வதற்கு எப்போது அழைத்தாலும் வந்து உதவுவோம் என நடுவர்கள் கூறியமை அவர்களின் தமிழ் மீதான பற்றுக்கும், மவுண்ட்றூயிட் தமிழ்ப்பள்ளி மாணவர்களின் பேச்சுகள் அவர்களைக் கவர்ந்தமைக்கும் சான்று எனலாம்.   



பாடசாலையின் உப அதிபர் கொலின்தேவராசா சதீஸ்கரன், உதவியாசிரியர் முரளீதரன் விதுசன் ஆகியோர் மாணவர்களின் புள்ளிகளைப் பதிவுசெய்தனர். நிகழ்விற்கான ஒலி அமைப்பு ஒழுங்கினை நிர்வாக உறுப்பினர் திரு. குலசேகரம் முரளிதரன் அவர்கள் செய்திருந்தார். செயலாளர் ராஜாராம் சரவணன் அவர்களின் நன்றியுரையினைத் தொடர்ந்து அதிபர் அவர்களால் மாணவர்களின் போட்டி முடிவுகள் அறிவிக்கப்பட்டு நிகழ்வு நிறைவு செய்யப்பட்டது.  போட்டிக்கான மண்டப ஒழுங்கு, மற்றும் அனைத்து வசதிகளும் நிர்வாகக் குழுவினரால் மேற்கொள்ளப்பட்டிருந்தது.

 


No comments: