பேக் கிறவுண்ட் மியூசிக் ( சிறுகதை ) கிறிஸ்டி நல்லரெத்தினம் – மெல்பன்


" எடம் வந்திரிச்சி சார், பெல்லை அடிங்க.... யோவ், பஸ்ஸ நிறுத்தய்யா..... கவனம் சார் ... மெதுவா... மெதுவா.


அம்பிட்டு தூரம் இல்லீங்க.... நேரா போய் அங்க தெரியிற ஆலமரத்தடிக்கிட்ட  சோத்துக் கை பக்கம் திரும்பினா நம்ம வீடு சார் ..... பக்கத்தில் நான் சொன்ன விஜயா தியேட்டர்.

எங்க மாமாவுக்கு தியேட்டரில பெரிய வேல - அவருதான் படம் காட்டற புரஜெக்டர் மெசின ஓட்டறவர். அம்மாவோட தம்பி.... நல்ல மனுஷன்.. கழுத்தில தங்கமால போட்டு வெள்ள வேஷ்டி  வெள்ள சட்டை போட்டு சும்மா ராஜா மாதிரி தியேட்டர் முன்னால் நிக்கிறத பாக்கணுமே. பேரு தாஸ்..... சனங்க 'தாஸ் சார்' ன்னுதான் கூப்பிடுவாங்க. என்னா கூப்பிடறது?... அவர பேர் சொல்லி கூப்புட ஆருக்கு துணிவு வருமாம்?

அவரு கண்ணாலமே பண்ணிக்கல. எங்க ஊட்ல கடைசி

அறையிலதான்  அவருக்கு வாழ்க்கை. பகல் பன்னிரண்டுக்கு சாப்பிட்டுட்டு போனார்னா செக்கண்ட் ஷோ முடிஞ்சு நடுச்சாமம்தான் வீடு.

எங்க வீட்ட பாத்தீங்களா சார்? மூணு அறையும் மண்டபமும். பெரிசும் இல்ல சிறிசும் இல்லமுன் அறையில அம்மா - அப்பா, நடு அறை சாமி அறை. நமக்கு ஹால்லதான் படுக்கை படிப்பு எல்லாம். ஹால் மூலையில சன்னலுக்கு பக்கத்தில இருக்கிற லொடலொட மேசையில் குந்திக்கிட்டு படிக்கிறதா பாசாங்கு பண்ணுவேன்

"டேய் சின்னி, நீ ஒரே புள்ள. படிச்சி பெரிய ஆளா வரணும். மாமா பின்னால தியேட்டர், படம்ன்னு சுத்தாத தெரியிதா?. பள்ளி முடிஞ்சி தியேட்டர் பக்கம் போனா தோல உரிச்சிடுவேன்அப்படின்னு அப்பா ரொம்ப பக்குவமா சொல்லி வைப்பாரு.

நான் கேட்பேனா? போவேன், மாட்டிக்குவேன்..... சும்மா மொங்கி எடுத்துடுவாரு.

அம்மா ரொம்ப அன்பு. "சும்மா சும்மா அவன் தோள்ள குந்திகிட்டு.... அவன் படிப்பான்.... என்ன, மாமாவோடதானே இருக்கான். மத்த பசங்கள போல ஊர்சுத்தி, பீடி சிகரெட் புடிச்சிகிட்டா இருக்கான்?"

அப்பாவுக்கு அலுத்துவிடும் "எக்கேடும் கெட்டுப்..போங்க... நீயாச்சு உம் புள்ளையாச்சு".

நா அப்பிடி ஒண்ணும் வெங்காயம் இல்ல சார். ஸ்கூலுக்கு 'கட்' பண்ணுற பழக்கம்  இல்லீங்க. போனனா, படிச்சனா, வந்தனா என இருக்கும் ஐயாவோட வாழ்க்க. ஆனா இந்த தியேட்டர் சனியன்தான்..... ஐய... சனியன் இன்னா சொன்னேன். தப்பு சார்...... தப்பு .... தப்பு. என்னைய அடிச்சா  மாமா தியேட்டருக்கு இழுத்துகிட்டு போனாரு? நானில்ல வலிய, காந்தமும் ஊசியும் போலசும்மா போய் ஒட்டிகிட்டு  இருக்கேன்.

தியேட்டரில் எல்லாருக்கும் எம்மேல ரொம்ப மதிப்பு . தாஸ் சாரோட மருமகன்னா சும்மாவா?

தியேட்டர் பால்கனி படிக்கட்டில ஏறி பீச்சாங்கைப் பக்கம் திரும்பினா மாமாவோட 'புரொஜக்சன் ரூம்கதவு. "உத்தரவின்றி உள்ளேநுழைய தடை " ன்னு கொட்டை எழுத்தில போர்ட் . நா சும்மா கதவுல ரெண்டு தட்டு தட்டினா மாமா வந்து "சின்னவா, வா, வா...... இந்த ரீல...." ன்னு ஏதாவது வேல சொல்லுவார்.

மாமா வெளியில வெள்ள வேஷ்டி, சர்ட் போட்டுகிட்டு இருப்பார்ன்னு சொன்னனா? ஆனா புறெஜெக்டர் ரூமுக்குள்ள ஆளே மாறி ,எல்லாத்தையும் கழற்றி வீசிட்டு பனியனும் கால் டவுசரும் போட்டுகிட்டு சும்மா பயில்வான் மாதிரி நிப்பாரு. 'ஏன் மாமா... ஒரு பேன் மட்டும்தான் சுத்துதுமணியம் சார் கிட்ட சொல்லி ஒரு ஏசி  வச்சிக்கிறதுதானே?' ன்னு ஒரு முற கேட்டேன். மணியம் சார்தான் எங்க முதலாளிங்க.

அவரு சொன்னாரு: "சின்னவா....ஏசி காத்துல தூவானத்த துப்புமில்ல.... அந்த ஈரம் பிலிமில பட்டு அப்புறம் புரஜக்டருக்குள்ள பூந்திரிச்சினு வச்சிக்க, அப்புறம் அத நெல்லு குத்தத்தான் பாவிக்கணும்."  சொல்லி சிரிச்சார் மாமா.

மாமாக்கு இந்த வேல எல்லாம் அத்துப்படி. அவருதான் கட் அவுட் வரையிற தர்மா அண்ணனுக்கு படம் ஓட்டறதில இருக்கிற எல்லா டெக்கினிக்கையும் படிப்பிச்சாருன்னா பாத்துக்குங்களேன். மாமாக்கு ஏதும் வருத்தம் வாதைன்னா தர்மா அண்ணன் கையில்தான் மிசின்.

நா ரூமுக்குள்ள புகுந்தன்னா எங்கிட்ட என்ன வேல சொன்னாலும் 'டக்' னு ஒரு பேச்சு பேசாம செஞ்சிருவேன். ஆனா புறஜெக்டர்ல கார்பன் கம்பு மாத்திற மாதிரி டேஞ்சர் வேல தாஸ் மாமாவே செஞ்சிகிடுவார். "சின்னவா, கம்பு கொதிக்குமில? கை பட்டா பொரியல்தான் " ... சொல்லி சிரிப்பார்.

ஊரே என்னை 'சின்னி' ன்னு சொன்னாலும் மாமாவுக்கு நானு 'சின்னவாதான்!

புரொஜக்சன்  ரூம்ல ரெண்டு பெரிய புரொஜெக்டர் மெசினில ரீல் லோட் பண்ணி தயாராக இருக்கும். ஒண்ணு ஓடி முடிய மத்தது ஆரம்பம். மாமா ரெண்டு மெசின் சுவிச்சையும் கேபிள் கட்டி இணைச்சி வைச்சிருப்பார். கேபிளை இழுத்தா ஒண்ணு 'ஆப்' ஆகி மற்றது 'ஆன்' ஆகும்.

படம் பாக்கிறவனுக்கு இந்த சனியன் ஒன்றும் புரியாது. இந்த 'சேஞ் ஓவரமாமா மட்டும் தானுங்க செய்வாரு. ஏன்னா டைம் மிஸ் ஆச்சுனா திரைல வெள்ள லைட்  அடிச்சி பசங்க விசில் அடிச்சி ஒரே ரகளையாயிடும்.

என்னா....கிழமை முழக்க எனக்கு மாமா வோடதான் வேலைன்ணு சார் நினைச்சீங்களாக்கும்எனக்கும் ஆசைதான்; ஆனா அப்பா கும்மி எடுத்துடுவாரில்ல. சனி ஞாயிறுதான் ஐயா தியேட்டர் வாசி. பகல் பத்தரை  ஷோவுக்கு  புரொஜெக்சன் ரூமுக்கு போனா சாயங்காலம் ஐஞ்சு மணிக்குத்தான்  ஐயா ஊட்டுக்கு வருவனாக்கும் .

மாமா சும்மா ரீல  லோட் பண்ணி அப்புறம் நாற்காலியில சாஞ்சி கால ஆட்டிக்கிட்டு தம் அடிக்கிற ஆள் இல்ல. புரொஜெக்சன் ரூமிற்கும் தியேட்டருக்கும் நடுவில இருக்கிற சதுர ஓட்டை வழியா திரையில காட்டும் படத்த பார்த்துகிட்டே  இருப்பார். ஒரு கை சவுண்ட் டயலில இருக்கும். படத்தில் திடீர்னு ஒரு பயங்கர காட்சி வருதுனு வச்சுகங்க..... சவுண்ட் டயல ஒரு சுத்து சுத்தி உச்சத்திற்கு திருகி விடுவார். பாக் கிறவுண்ட் மியூசிக்....

அதான் சார், பின்னணி இசை காத பொளக்கும்தியேட்டரில பல பசங்க துள்ளி குதிச்சி பின்னால் திரும்பி மாமாவோட தலய சதுர ஓட்டைக்குள்ளால பாத்து தூஷணத்தில ஏதோ சொல்லி திட்டிட்டு படத்த தொடந்து பாப்பானுக. மாமாவுக்கு இதுல ஒரு குஷி.  "சின்னவா, பசங்க சும்மா துள்ளுனாங்கல்ல " ன்னு பெருமையா சொல்லுவாரு.

ஒரு இங்கிலீஷ் பயங்கரப் படம். பேரு ஞாபகமில்லீங்க. வெள்ளக்கார பொண்ணு குளிக்க போறா. வில்லன் கத்தியோட வந்து அவள குத்து குத்துனு குத்துறான். ரத்தம் சும்மா பீறிட்டு அடிக்குது. அப்ப பேக் கிரவுண்ட் மியூசிக்க கேக்கணுமே.....

"வீல், வீல் . வீல் " ன்னு சும்மா பிச்சி வாங்குது. மாமா சவுண்ட் டயல உச்சத்தில் வச்சி புடிச்சாரு ;தியேட்டர் சும்மா அதிருது. அரைவாசி பசங்க கால தூக்கி பெஞ்சு மேல  வைச்சி....... அத கேக்காதீங்க சார். பெஞ்சையே நனைக்சிட்டானுக ன்னா நம்புவீங்களா சார்?

மாமா சில நேரத்தில பெரிய மனுஷங்க போல  தத்துவமா பேசுவாரு. எனக்கு அப்படித்தான் தோணும்.

"மருமகனே, வாழ்க்கையில பேக் கிரவுண்ட் மியூசிக் இல்லேனா என்ன ருசி இருக்கு. காலைல முழிக்கிறப்ப  அந்த குருவி காக்கா சத்தம், நம்ம பூசாரி மாரியம்மன் கோவில்ல இருந்து ஓதற மந்திரம், உங்க அம்மா காபி கலக்கறப்ப கரண்டி டம்லர்ல மோதி வர்ர டிங்கு, டிங்கு சத்தம். அடுத்த வீட்டு மங்களம் மாமி பாடற காயத்திரி மந்திரம்...ம்ம்ம்..... இது எல்லாம் இல்லாம விடிஞ்சா சப்புன்னு இருக்குமில்ல?" 

அவரு சொல்லறதும் வாஸ்த்தவம்தான் என எனக்கும் படுது.

மாமாகிட்ட எந்த கெட்ட பழக்கமுமில்லீங்க. தம் அடிப்பார் ; அம்புட்டுத்தான்.

ஆனா போன ரெண்டு வருஷமா "சின்னவாதொடர்ந்தாப் போல வேல செஞ்சேன்னா, நெஞ்சு வலிக்குதுடா. ரீல தூக்கி மெசினில மாட்ட மூச்ச இறைக்குதுடாஇந்த நாசமாப் போற இருமல் வேற.... ".

ராஜா மாதிரி இருந்த மனுஷன் இப்ப கொஞ்சம் கூனல் போடத் தொடங்கினார். ஆனா அவருக்கு படம் காட்டுறதில் இருந்த அந்த விசுவாசம் ஒண்ணும் கொறஞ்சதா தெரியல்ல. இப்பவும் ஒரு கையில் சவுண்ட் டயல்..... திரையில ஒரு கண்.

"பேக் கிரவுண்ட் மியூசிக் இல்லாத வாழ்க்கை ஒரு வாழ்க்கையா?"

பட இன்டர்வெல்ல ரூமுக்கு வெளியில்  பல்கனியில நின்னுகிட்டு தம் அடிச்சிகிட்டு,

கீழ மரத்தடியில் பேசிக்கிட்டு நிக்கிற ஜோடிகள பாத்து மாமா சொன்னாரு, "சின்னவா, பாரு.... புது ஜோடி.....அவ வெக்கத்தில கால மடிச்சி நெலத்தல வரையிறா. பையன் அவ கண்ணுக்குள்ள எதையே தேடறான்.... இந்த இடத்துலதான் டைட்டானிக்கில வாற பேக் கிறவுண்ட்  மியூசிக்க போடணும்.,,, ம்.. ம். ம். ம் .. ம்ம்ம்ம்."

மாமா மெல்ல வாய்க்குள்ள மியூசிக் போடரார்.... அதில  மாமாவுக்கு ஒரு சுகம்.

என்னா சார்? நடந்தது மூச்சு இறைக்குதில்ல , வாங்க சார் , நயினா கடையில ஒரு கோலா குடிச்சிட்டு  மிச்சத சொல்றேன்.

நபினா, சாருக்ரு கூலா ஒரு பார்லி ஒடையுங்க. குடிங்க சார்.

எங்க சாரு உட்டேன்?

., ., ஆமா மாமாவுக்கு நாசமாப்போற நெஞ்சு வலி வந்ததா.,,,,,

அண்ணைக்கி வெள்ளி கிழம. நா ஸ்கூலு முடிஞ்சி வீட்டுக்கு  வந்தேனா..... வாசலுல கூட்டம். எல்லாரும் என் மூஞ்சிய பாக்கிறாங்க. தோள்ல திடந்த ஸ்கூல் பைய கழட்டி தரையில போட்டுட்டு, செருப்ப களட்டி உதறிதள்ளிட்டு படியில ஏறி மண்டபத்த பார்க்கிறேன். மண்டப நடுவுல மரக்கட்டில்... பாய் மட்டும் போட்டு தலயில தலகாணி வச்சு மாமா தூங்கிறார். மூக்கில பஞ்சடைச்சி கால் பெருவிரல் ரெண்டையும் வெள்ள துணியால் கட்டி......

ஓடிப்போய் முட்டுக்கால் போட்டு மாமாவோட கைய புடிச்சி  நான் குலுங்கி குலுங்கி அழறேன். மாமாவோட கை ஐஸ் கட்டி மாதிரி குளிருது. "மாமா, என்ன உட்டுட்டு எங்க போனீங்க...... மாமா.... மாமோவ்"

அப்போ வேற  ஒரு சத்தமும் இல்ல. என்னோட குரல் மட்டும் தான் கேக்குது.

அம்மா வந்து தோளுல தொட்டு "எழும்புடா செல்லம்..... மாமா போயிட்டார்டா..... " அம்மாவால இதுக்கு மேல ஒண்ணும் சொல்ல முடியல. ஆனா அவ கைப்பிடி என் தொளில் இறுகுது. அவ சோகம் எனக்கும் புரியுது.

அப்போ ஒப்பாரி வைக்கிற கிழவிமார் யாரும்  இன்னும் வரல. அதனால நிசப்தம்.

'பேக்கிரவுண் மியுசிக் இல்லாம என்னடா சின்னவா வாழ்க்கை. அதான்டா எல்லாம்'  ...... மாமா சொல்லறது மனசுல கேக்குது!

ஊருக்கு சவுண்டு கொடுத்த மாமா  இப்ப சத்தமில்லாம அமைதியா தூங்கறார்.

எங்கும் அமைதி!

 

 

 

கிறிஸ்டி நல்லரெத்தினம்

Christy Nallaratnam

02/06/2021

No comments: