அஞ்சலிக்குறிப்பு எங்கள் குடும்ப உறுப்பினர் “ பிறாண்டி “ விடைபெற்றார் ! முருகபூபதி



கடந்த 2020 ஆம் ஆண்டுமுதல் தொடர்ந்து அஞ்சலிக்குறிப்புகள் எழுதிவிட்டேன். தொடர்ந்தும் எழுத நேர்ந்துள்ளது. அதனால்,                  “ கல்வெட்டு எழுத்தாளன்  “ என்ற பெயரையும் சிலர் எனக்குச் சூட்டியிருக்கிறார்கள்.

இந்தியா - இலங்கை சுதந்திரம்பெறுவதற்கு முற்பட்ட காலத்தைச்சேர்ந்தவர்கள்,  சுதந்திரத்திற்குப்பிற்பட்ட காலத்தைச்சேர்ந்தவர்கள், ஈழப்போருக்கு முற்பட்ட – பிற்பட்ட காலத்தைச்சேர்ந்தவர்கள் – இடம்பெயர்ந்த -  புலம்பெயர்ந்த காலத்தைச்சேர்ந்தவர்கள்பற்றியெல்லாம்  எழுதிவிட்டு, இந்த கொரோனோ காலத்தில் விடைபெற்றவர்கள் பற்றியும் அஞ்சலிக்குறிப்பு பதிவுகள் எழுதிவிட்டேன்.

இத்தகைய பதிவுகள்  இக்காலத்திலும் ஓயாது போலிருக்கிறது.

எப்படியோ மேலே குறிப்பிட்ட காலங்களும், அக்காலங்களில்   விடைபெறுவதற்கு முன்னர் அவர்களுடன் உறவாடிய கணங்களும்  நினைவில் தங்கியிருப்பதனால், அவர்கள் குறித்த இழப்பின் துயரத்தை கடந்து செல்வதற்கும் இந்த அஞ்சலிக்குறிப்பு எழுத்து வகை எனக்கு பெரிதும் உதவியிருக்கிறது.

இந்த அஞ்சலிக்குறிப்பு சற்று வித்தியாசமானது.

இதற்கும் ஒரு அஞ்சலிக்குறிப்பு தேவைதானா..? என்று எவரும் கேட்கலாம்.  ஆனால், இதுவும் தேவைதான் என்று உணரவைத்தது,  எங்கள் குடும்பத்தின் அந்த உறவு.

உலகிலேயே நன்றியுள்ள பிராணி எனவும், மோப்ப சக்தியில்


இதனை விஞ்சுவதற்கு எதுவும் இல்லை எனவும் சொல்லப்படும், சைவ சமயத்தவர்களால் காவல் தெய்வம் என அழைக்கப்பட்டு வழிபடப்படும் வைரவரின் வாகனம் என்ற பெருமையும் பெற்ற ஒருவர் பற்றிய அஞ்சலிக்குறிப்புத்தான் இது.

கோயில்களில் திருவிழா உற்சவ காலம் நிறைவுபெற்றதும், அதுவரையில் கோயிலைக்காத்த காவல் தெய்வம் வைரவருக்கு  நன்றி தெரிவிக்கும் முகமாக ஒரு வெள்ளிக்கிழமை நாளன்று வடைமாலை சாத்தி விசேட பூசைசெய்வார்கள்.

உயர்திணையினரை அவர் – இவர் என்றும் அஃறினை உயிரினங்களை அது – இது என்றும் விளித்தாலும்,  இந்த அஞ்சலிக்குறிப்பிற்குரியவரை , நான் அவ்வாறு அஃறினையில் அழைக்க விரும்பவில்லை.

இவர்போன்ற ஒரு பிராணியை  ஒரு காலத்தில் தாயகத்தில் பிரியத்துடன் வளர்த்திருந்தாலும்,  அவரின் எதிர்பாராத மரணத்தின் பின்னர், அத்தகையவர்களை நான் வளர்க்க விரும்பவில்லை.

எங்கள் குடும்பத்தில் அனைவராலும் நேசிக்கப்பட்ட அழகான நாய்க்குட்டி அந்த பியூட்டி.  வெண்ணிற சடையுடன் கீச்சிட்ட குரலில் குரைத்தவாறு  வாலை ஆட்டிக்கொண்டிருந்த அவரை, ஒரு நாள் காலையில் தெருவிலே வந்த முனிஸிபல் ஊழியனான  நாய் சுடும் வேட்டைக்காரன் வந்து, சுட்டுவிட்டுப்போனான்.

அதனைக்  கண்ணால் கண்டேன்.  பாட்டியை அழைத்து


கதறியபோது, அவர் அவனை மண் அள்ளித்தூற்றி சபித்தார்கள்.

பியுட்டியின்  வெண்ணிற சடை தெருவெங்கும் பறந்தது.   அவன் இழுத்துவந்த வண்டியிலேயே பியூட்டியையும் எடுத்துச்சென்றுவிட்டான்.  அதன் பின்னால் சிறிது தூரம் அழுதுகொண்டு ஓடினேன்.

அத்தோடு நாய் வளர்க்கும் ஆசையும் மனதில் கருகிவிட்டது.

அவுஸ்திரேலியாவுக்கு வந்தபின்னர், குடும்பமும் வந்து சேர்ந்ததையடுத்து எனது மகன் முகுந்தனுக்கு நாய் வளர்க்கும் ஆசை இருந்தது.  வெளியே நண்பர்கள் வீடுகளுக்குச்சென்றால், அங்கு வளர்க்கப்படும் நாய்களுடன் சிநேகம் கொண்டுவிடுவான்.  அவற்றைத் தூக்கி மடியில் வைத்து தடவுவான்.

வீடு திரும்பியதும் அவனது உடைகளில் படிந்திருக்கும் நாயின் முடிகளை அப்புறப்படுத்திவிட்டு,  மகனை தோயவார்ப்பேன்.

இந்தச்சடங்கு அவன் வளர்ந்து பெரியவனாகுமட்டும்தான் நீடித்திருந்தது.

தோளுக்கு மிஞ்சினால் தோழன் அல்லவா.

அவன் எனது மகள்மாரைப்போன்று பல்கலைக்கழகம் செல்லவிரும்பாமல், தனக்குப்பிடித்த தொழிலை தானே தேடிக்கொண்டவன்.

எங்கள் குடும்பத்தில் எமது அம்மாவின் தந்தையார் பொலிஸ் தாத்தாவுக்குப் பின்னர்,  அரச காவல் துறையில் இணைந்த ஒருவனாக பெயர் எடுத்தான் எமது மகன் முகுந்தன்.

பண்ணிரண்டாம் தரம் நிறைவுசெய்தவுடன், அவுஸ்திரேலியா பாதுகாப்பு படையில் ( இராணுவம் ) இணைந்து பயிற்சிக்கு சென்றுவிட்டான்.

மிகுந்த கவலையுடனும் கனத்த மனதுடனும் அவனை வழியனுப்பியபோது கண்ணீர் வந்தது.

“  அப்பா… நீங்கள் பேனையை ஏந்தினீர்கள்… நான் துப்பாக்கி


ஏந்தப்போகிறேன்… இரண்டும் ஆயுதங்கள்தானே….  கவலைப்படவேண்டாம்  “ என்று வேடிக்கையாகச்சொல்லிவிட்டு புறப்பட்டான்.

அவன் அந்தத்துறையில் பயிற்சிபெற்று அணிவகுப்பு மரியாதையுடன் கடமையை பொறுப்பெற்ற  நிகழ்வுக்குச்சென்று வந்தோம்.

அதன்பின்னர் அவுஸ்திரேலியாவில் சில மாநிலங்களில் இராணுவ முகாம்களிலும் பணியாற்றினான். அயல் நாடொன்றிற்குச்  சென்ற  அமைதிப்படையிலும் இணைந்து இரண்டு தடவை சென்று திரும்பினான்.

விடுமுறை காலங்களில் வந்தால், தனது தொழில் பற்றியோ, பாதுகாப்பு சேவையில் பெற்ற அனுபவங்கள் பற்றியோ ஒரு வார்த்தையும் பேசமாட்டான். கேட்டால் அது தொழில் இரகசியம் என்பான்.

எப்போது  வருவான், எப்போது திரும்புவான் என்பதும் தெரியாது. நாமும் கேட்டறிய முடியாது.

அவ்வாறு அவன் வரும் சமயங்களில் அவனுடன் வந்தவர்தான் இந்த பிறாண்டி.  எமது வீட்டின் பின்புற காணியில் உல்லாசமாக ஓடி விளையாடுவார்.

காரில் மகனும்  அவரும் உரையாடும் காட்சி எனக்கு விநோதமாக இருக்கும்.  குழந்தைக்கு உணவூட்டுவது போன்று அவருக்கும் தேவைப்பட்டதைக்  கொடுத்து பசியாற்றுவான்.

 அவரது பிறப்புச்சான்றிதழில்  எனது பெயரையே வைத்திருப்பதாகவும் சொல்லி என்னை சீண்டிப்பார்ப்பான்.

வீட்டுக்கு வந்து விடைபெறும்போது, என்னிடம் அழைத்துவந்து,  “ தாத்தாவுக்கு குட்பை சொல்லுங்க செல்லம்  “ என்பான்.

அவரும் தனது முன்னங்காலைத்தூக்கி எனது கரம் தொட்டு வாலை ஆட்டிக்கொண்டு புறப்படுவார்.

இவ்வாறு கடந்த 12 ஆண்டு காலம் எனது மகனின் வீட்டில் குடும்பத்தில் ஒருவராக வாழ்ந்த அவர் கடந்த வாரம் மரணமானார்.

மெல்பனில் சமூக இடைவெளிபேணும் வகையில் Lock Down வந்தமையால்  சுமார் நூறு கிலோ மீற்றர் தூரத்தில் வசிக்கும் மகன் வீட்டுக்குச்சென்று மகனுக்கும் அவனது மனைவி மற்றும்  எமது செல்லப்பேத்திக்கும் ஆறுதல் கூறமுடியாது போய்விட்டது.

தொலைபேசியில்தான் அவர்களைத்  தேற்றமுடிந்தது.  மகன் வாட்ஸ்அப்பில் செல்ல நாயின் படத்தை அனுப்பியிருந்தான்.

உயர்திணையினர் மறையும்போது உறவுகளுக்கு ஆறுதல் செல்லும் இரண்டு வரி அனுதாபச்செய்தியே அனுப்பமுடிந்தது.

பிராண்டி என்ற அவர் பற்றி எழுதுவதற்கு அந்த இரண்டு வரிகள் மாத்திரம்  போதுமானதல்ல.

எமது இலக்கிய நண்பர் நடேசன் தமது மிருக மருத்துவ தொழில் சார்ந்த  அனுபவங்களை  வாழும் சுவடுகள் என்ற தலைப்பில்  ஒரு புத்தகமாக எழுதியிருக்கிறார்.

இந்தப்புத்தகத்தில் 56 தலைப்புகளில் அவர் எழுதியிருக்கும் கட்டுரைகளில் கூடுதலானவை நாய்கள் பற்றியதாகவே அமைந்துள்ளன.

அவரிடமும் பிராண்டியை சில சந்தர்ப்பங்களில் மகன்   சிகிச்சைக்காக அழைத்துச்சென்றிருக்கிறான்.

எனது இந்தப்பதிவின் தொடக்கத்தில் நான் குறிப்பிட்டிருக்கும்  ஊரில் எங்கள் வீட்டில் வாழ்ந்த பியூட்டி,  மலையகத்தில் எமது அக்கா வீட்டில் வளர்ந்தபோது, ஒரு சமயம் எனது மூத்த மருமகன் குழந்தையாக இருந்த வேளையில் காப்பாற்றியுமிருக்கிறது.

அன்று அக்கா, குழந்தைக்கு பாலூட்டி உறங்கவைத்து கட்டிலில் கிடத்திவிட்டு,  சமையலறையில் வேலையாக இருந்துள்ளார்.

அப்போது பியூட்டி குழந்தை உறங்கும் கட்டிலுக்கு கீழே தரையில் உறங்கியிருக்கிறது. அதற்கிருந்த மோப்ப சக்தியால்,  எதனையே முகர்ந்தவிட்டு, வீட்டின் கூரையை பார்த்திருக்கிறது.

அங்கே ஒரு புடையன் பாம்பு ஊர்ந்துகொண்டிருந்திருக்கிறது. உடனே, பியூட்டி குரைத்துக்கொண்டு சென்று தேங்காய் துருவிக்கொண்டிருந்த அக்காவின் உடையைப் பற்றி எழுந்திருக்கச்செய்து,  குழந்தை உறங்கும் அறைக்கு  இழுத்து வந்து, குழந்தையையும் தனது குரைப்புச்சத்தத்தால் துயில் எழவைத்து,  வீட்டின் கூரையை காலை உயர்த்திக் காண்பித்திருக்கிறது.

பின்னர், அக்கா அயலவர்களின் துணையுடன் அந்தப்பாம்பைப்பிடித்து அதற்குரிய இறுதிக்கிரியைகளை செய்துள்ளார்.

இவ்வாறு உயிர் காத்த தோழனான அந்த பியூட்டியை அன்று அந்த நாய் சுட வந்தவனிடமிருந்து எம்மால் காப்பாற்றமுடியாமல் போய்விட்டதே என்ற குற்றவுணர்வு இன்றும் என்னிடமுள்ளது.

என்மகன் வீட்டில் நீண்ட காலம் வாழ்ந்த பிராண்டியின் மறைவு தந்திருக்கும் துயரத்தை கடந்து செல்ல நீண்ட நாட்கள் எடுக்கும்.

எனது கைபற்றி மென்மையான குரைப்பின் மூலமும் வாலாட்டியும்  விடைகொடுத்து சென்ற  பிராண்டிக்கு,  அதன் இறுதிநேரத்தில் என்னால் விடைகொடுக்க இயலாமல்போனதே என்ற  ஆழ்ந்த துயரத்துடன் ,  பாவேந்தர் பாரதிதாசனின் கவிதையை அதற்கு அஞ்சலியாக இங்கு சமர்ப்பிக்கின்றேன்.

பாரதிதாசன் கவி  கவிதை

என்றன் நாயின் பேர் அப்பாய்! அது

முன்றில் காக்கும் சிப்பாய்!

ஒன்றும் செய்யாது விளையாடும்; பெருச்சாளியைக்

கொன்று போடும்; குலைக்கும் எதிராளியை;

என்றன் நாயின் பேர் அப்பாய்...

அதன் இனத்தை அதுவே பகைக்கும்! -- எனில்

அதுதான் மிகவும் கெட்ட வழக்கம்! -- அது

முதல் வளர்த்தவன் போ என்றாலும் போகாது;

மூன்றாண்டாயினும் செய்தநன்றி மறவாது!

என்றன் நாயின் பேர் அப்பாய்...

நாய் எனக்கு நல்லதோர் நண்பன் -- அது

நான் அளித்ததை அன்புடன் உண்ணும் -- என்

வாய் அசைந்திடில் முன்னின்றே தன் வாலாட்டும்

வருத்தினாலும் முன்செய்த நன்றி பாராட்டும்

என்றன் நாயின் பேர் அப்பாய்...!

----0---

letchumananm@gmail.com

No comments: