பொன் விழா ஆண்டில் இந்தப் படங்கள் - நூற்றுக்கு நூறு - ச. சுந்தரதாஸ் - பகுதி 1

.

கதாசிரியராகவும் வசனகர்த்தாவாகவும் திரையுலகில் அறிமுகமாகி பின்னர் இயக்குனர் ஆகி அத்துறையில் நூற்றுக்கு நூறு மார்க் வாங்கியவர் கே பாலச்சந்தர். அவர் 1971ம் ஆண்டு இயக்கிய படம்தான் நூற்றுக்கு நூறு. வித்தியாசமான கதைக்களத்தை கொண்ட இந்த படத்தில் முற்றிலும் மாறுபட்ட வேடத்தில் கதாநாயகனாக நடித்திருந்தார் ஜெய்சங்கர். வழக்கமான தனது ஆக்ஷன் படங்களில் இருந்து விலகி மாறுபட்ட பாத்திரத்தில் கல்லூரி பேராசிரியராக ஜெய்சங்கர் நடித்தார்.தன் படங்களில் வழமையாக கதாநாயகனாக நடிக்கும் ஜெமினி, முத்துராமன் இருவரையும் தவிர்த்து ஜெய்சங்கருக்கு இந்த வேடத்தை வழங்கியிருந்தார் பாலசந்தர். ஜெய்சங்கர் குறை வைக்காமல் தன் பாத்திரத்தை திறமையாக செய்திருந்தார்.

அண்மைகாலமாக கல்லூரி ஆசிரியர்கள், பிரபலமானவர்களுக்கு எதிராக பாலியல் புகார்கள் வந்து கொண்டிருக்கின்றன. இந்த படத்திலும் கல்லூரிப் பேராசிரியரான பிரகாசுக்கு எதிராக இரண்டு மாணவிகளும் மற்றும் ஒரு பெண்ணும் பாலியல் ரீதியான புகார்களை சுமத்துகிறார்கள். கல்லூரி நிர்வாகம் அதிர்ச்சி அடைகிறது. மாணவ மாணவிகள் பேராசிரியருக்கு ஆதரவாக அணிதிரள்கிறார்கள். இப்படி அமைந்த கதையில் புகார் சுமத்தும் பெண்களாக ஸ்ரீவித்தியா , ஜெயக்குமாரி, விஜயலலிதா ஆகியோர் நடித்தார்கள். ஸ்ரீவித்தியாவின் ஆரம்பகால படமான இதில் அவர் அழகாகவும் இளமையாகவும் காட்சி அளித்தார். கவர்ச்சி நடிகைகளான ஜெயக்குமாரி, விஜயலலிதா இருவருக்கும் மாறுபட்ட வேடம் . எப்போதாவது இப்படி கிடைக்கும் வாய்ப்பை விஜயலலிதா தவற விடவில்லை. தன் நடிப்புத் திறனை வெளிப்படுத்தி இருந்தார். அத்துடன் புத்தாண்டு பாடலாக இன்றும் ஒலிக்கும் நான் உன்னை வாழ்த்தி பாடுகிறேன் பாடலிலும் ஆடியிருந்தார். உங்களில் ஒருவன் நான் பாடல் மாணவர்களுக்கு உரம் ஊட்டும் பாடலாக அமைந்தது. வாலியின் பாடல்களுக்கு பாலச்சந்தரின் ஆஸ்தான இசையமைப்பாளர் டி குமார் இசையமைத்தார்.



படத்தின் கதாநாயகி லட்சுமி. படத்தில் துடிப்பான பாத்திரம் நாகேஷ். இவர்களுடன் வை ஜி மகேந்திரன் ஜெமினி சுகுமாரி மனோகர் ஜெயந்தி ஆகியோரும் நடித்திருந்தனர். ஆங்கிலோ இந்தியர் ஆக வரும் வி எஸ் ராகவனின் நடிப்பு நன்றாக இருந்தது.

கே பாலச்சந்தரின் பட வரிசையில் வெற்றிப்படமான நூற்றுக்கு நூறு பின்னர் இந்தியிலும் வெளிவந்தது.




No comments: