மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா மெல்பேண் .... அவுஸ்திரேலியா
காட்டுத்தீ வந்தது கடுமழையும் வந்தது
விவசாய நிலம்நோக்கி விரைந்ததே பேரழிவு
எலியென்னும் பெயராலே எமனெனவே ஆகியது
கங்காரு நாடு கதிகலங்கி நின்றது
கற்றவர்கள் வல்லுனர்கள் கைகாட்டி நின்றனர்
அரசாங்கம் பலவழியில் அலைந்துலைந்து போனது
ஆளரவ மில்லாமல் அனைத்தும் அரங்கேறியது
முடக்கநிலைக் கெதிராக முழக்கமிட்டார் பலபேர்கள்
அடக்குதற்குக் காவல்துறை ஆங்காங்கே குவிந்தது
எதிர்க்கட்சி எதிர்ப்பதையே இயல்பாக எடுத்தது
எல்லோரும் வீட்டுக்குள் இருக்கும் நிலையாகியது
பொதுவிடங்கள் யாவுமே பொலிவிழந்து போனது
களியாட்டக் கூடமெல்லாம் கைகட்டி நின்றது
கங்காரு நாடு கடுந்துயரைக் கண்டது
அரசியலார் விமர்சனங்கள் ஆரவாரம் செய்தது
அரசாங்கம் அசராது ஆகும்வழி தேடியது
மாநிலத்து அரசாங்கம் மனவுறுதி கொண்டது
மாய்க்கவரும் அத்தனையும் மழுங்கடிக்க முயன்றது
தாக்கம் தணிந்தது தளர்வுமே வந்தது
பூட்டிய வர்த்தகம் புதுத்தெம்பு பெற்றது
கட்டிவைத்த விழாவனைத்தும் களைகட்டி நின்றது
கங்காரு நாடதுவும் கண்சிமிட்டிச் சிரித்தது
மயக்கநிலை தொடருவது மருளவே வைக்கிறது
எப்படியும் முடக்கிடுவோம் எனவெண்ணி பயணிக்கும்
முகமறியா எதிரியிப்போ சவால்கொடுத்து நிற்கின்றான்
No comments:
Post a Comment