தென்னாசியாவின் மிகப்பெரும் நூலகம் யாழ் நூலகம் எரிந்து 40 ஆண்டுகள்


கானா பிரபா 


 

அந்த விசாலமான மண்டபத்தின் தரை முழுவதுமே சாந்தும் சாம்பலுமின்றி, வேறெதுவும்


காணப்படவில்லை. ஓர் இடுகாட்டின் மத்தியில் நிற்பது போன்ற உணர்ச்சி பரவியது.


"எமக்கு ஏன் இந்தக் கொடுமையைச் செய்தார்கள்?"

கலங்கிய கண்களோடு யாழ் பொது நூலகர் திருமதி நடராஜா அப்போது கேட்கின்றார்.

முதல் நாள் இரவு யூன் 1, 1981 

"பொலிஸ்மா அதிபரும், பிரிகேடியர் வீரதுங்காவும் யாழ்ப்பாணத்தில் இருக்கத்தக்கதாக, யூன் 1 ஆம் திகதி 1981 இரவு யாழ்ப்பாணத்தில் நிகழ்ந்த சம்பவங்கள் வியப்பானவையாகும். அதே பொலிசார் அன்று இரவு யாழ்ப்பாணம் பொதுசன நூலகத்திற்குத் தீயிட்டனர்.

ஏறத்தாழ 97000 பெறுமதி மிக்க நூல்கள் எரிந்து கருகிப் போயின. உலகில் எங்கிருந்தும் இனிமேல் பெறுவதற்ககரிய நூல்கள் பல எரிந்து போயின.

உசாத்துணைப் பிரிவின் சிறப்பு நூற் தொகுதிகளில் அழிந்தவைகளில் கீழ்க்கண்டவையும் அடங்கும்:

1) கலாநிதி ஆனந்த குமாரசுவாமி நூற்தொகுதி
2) திரு.சி.வன்னியசிங்கம் நூற்தொகுதி (சுமார் 100 நூல்கள்)
3) திரு ஐசாக் தம்பையா நூற்தொகுதி (சமயம், தத்துவம் பற்றிய நூல்கள் சுமார் 850)
4) திரு.கதிரவேற்பிள்ளை நூற்தொகுதி (சுமார் 600 நூல்கள்)
5) ஏட்டுச் சுவடித் தொகுதி
6) அமெரிக்க நூலகத்திலிருந்து அன்பளிப்பு செய்யப்பட்ட உசாத்துணை நூற் தொகுதி

யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்திற்கு எதிரே 700 யார் தூரத்தில் யாழ் பொதுசன நூலகம் அமைந்துள்ளது. யாழ்ப்பாண மாவட்ட அபிவிருத்திச் சபைத் தேர்தல் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காகத் தென்னிலங்கையிலிருந்து யாழ்ப்பாணம் வந்திருந்த விஷேஷ பொலிசார் தங்கியிருந்த துரையப்பா விளையாட்டு அரங்கும் யாழ் நூலகத்திற்கு எதிரே தான் இருந்தது. இவ்வளவு "பாதுகாப்பு" இருந்தும் திங்கள் இரவு பொது சன நூலகம் தீப்பிடித்து எரிந்தது.

அன்று இரவு 10 மணி போல, நூலகத்துக்குள் நுழைந்த கொடியவர்கள், காவலாளியைத்

துரத்திவிட்டு நூலகக் கதவைக் கொத்தித் திறந்து, உள்ளே நுழைந்து 97 ஆயிரம் கிடைத்தற்கரிய மருத்துவம், இலக்கியம், ஜோதிடம் உள்ளிட்ட ஓலைச் சுவடிகளில் எழுதப்பட்ட ஆவணங்கள் உட்பட எல்லாமே பெற்றோல் ஊற்றித் தீக்கிரையாக்கப்பட்டன. சுவர்கள் வெப்பத்தினால் வெடித்து உதிர்ந்தன. யன்னல்கள் சிதறிப்போயின. நூலகத்துக்குள்ளே சாம்பல் குவியல்களே எஞ்சிக்கிடந்தன.

சுவாமி ஞானப்பிரகாச சுவாமிகளின் மாணவர், பன்மொழிப் புலவர் சங்.பிதா கலாநிதி டேவிட் அவர்கள் (தாவீது அடிகளார்) அந்தச் செய்தியைத் தாங்கிக் கொள்ள முடியாதவராய் மனவதிர்ச்சியினால் தம்முயிரை நீத்தார்.
யாழ்ப்பாண நூலகத்தில் ஊழியராக வேலை செய்துவரும் திரு பற்குணம் என்பவர் நூல் நிலையம் எரிந்த நிலையைக் கண்டு பிரமை பிடித்தவரானார். அவர் ஒரு நாடகக் கலைஞர் ஆவார். மூன்று நான்கு நாட்கள் சித்தம் குழம்பிய நிலையில் காணப்பட்டார்.


நூல் நிலையம் தீப்பற்றி எரிவதாக அன்றிரவு 10.15 மணியளவில் மாநகரசபை ஆணையாளர் சி.வி.கே.சிவஞானத்திற்கு செய்தி கிடைக்க, உடனேயே மாநகரசபை தீயணைப்பு பவுசர்களையும், மாநகரசபை ஊழியர்களையும் அனுப்பி தீயை பரவாது தடுக்க முனைகின்றார். அவர்களை நூலகத்திற்கு அருகிருந்த துரையப்பா விளையாட்டரங்கில் இருந்த பொலிசார் தடுக்கின்றார்கள். விசேஷ பொலிஸ் விசாரணைக் குழுவிற்கு சாட்சியமளித்த சி.வி.கே.சிவஞானம் இவ்வாறு சாட்சியமளிக்கின்றார்.

யாழ் பொது நூலகம் சில வரலாற்றுத் துளிகள்

1934 ஆம் ஆண்டு யூன் மாதம் 9 ஆம் திகதி ஐசாக் தம்பையா அவர்களின் தலைமையில் நடைபெற்ற கூட்டமே ஆரம்ப கால நூலகத்தை உருவாக்க வழிகோலியது. இக்கூட்டக் காரியதரிசி க.மு.செல்லப்பா அவர்கள் சிரமப்பட்டுத் திரட்டிய 1184 ரூபா 22 சதம் மூலதனமாகக் கொண்டு ஆஸ்பத்திரி வீதியில் வாடகை அறை ஒன்றில் 844 நூல்களுடனும் 36பருவ வெளியீடுகளுடனும் 1934 ஆவணி 1 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டது.

1935 ஆம் ஆண்டு ஜனவரி 1 ஆம் திகதி யாழ் பட்டின சபையால் பொறுப்பேற்கப்பட்டு வாடி வீட்டுக்குத் தெற்கே உள்ள மேல் மாடிக்கு இடமாற்றம் செய்யப்பட்டது.

1952 ஆம் ஆண்டு நவீன பொது நூலகம் அமைப்பதற்கான முயற்சிகளள சாம் ஏ.சபாபதி தலைமையில் நடைபெற்ற ஒரு மாநாட்டில் தீர்மானிக்கப்பட்டது. புதிய நூலகத்தை அமைப்பதில் அதி.வண பிதா லோங் அவர்கள் மிகுந்த அக்கறை காட்டி வந்தார்.சென்னை கட்டிடக்கலை நிபுணர் கே.எஸ்.நரசிம்மன் வரைபடங்களைத் தயாரித்தார். நூலகத்துறையில் நிபுணத்துவம் வாய்ந்த கலாநிதி எஸ்.ஆர்.ரங்கநாதனின் ஆதரவும் கிடைத்தது.

1953 ஆம் ஆண்டு மார்ச் 29 ஆம் நாள் அடிக்கல் நாட்டப்பட்டது.

1959 ஆம் ஆண்டு ஒக்டோபர் 11 ஆம் நாள் நூலகம் திறக்கப்பட்டது.

1981 ஆம் ஆண்டு யூன் 1 ஆம் நாள் இன வெறிக் காடையர்களால் நூலகம் அழித்தொழிப்பு.

2001 ஆம் ஆண்டு மீள எழுந்தது யாழ் பொது நூலகம்.

📖📖📖📖📖📖📖📖📖📖📖📖📖📖📖📖📖

‪சோமிதரன் படைத்த “எரியும் நினைவுகள்” ஆவணப்படம்‬


‪“எரியும் நினைவுகள்” சோமிதரன் படைத்த ஆவணப்படம் சார்ந்த பேட்டி அவரோடு ‬


‪ஈழத்தின் பிரபல கட்டிடக்கலை நிபுணர் திரு. வி.எஸ்.துரைராஜாவினால் "The Jaffna Public Library Rises From Its Ashes" என்ற நூல் வெளியிடப்பட்ட போது அது குறித்த என் பகிர்வு‬


கானா பிரபா

📖📖📖📖📖📖📖📖📖📖📖📖📖

தகவல் மூலம்:

1. "யாழ்ப்பாண நூல் நிலையம் - ஓர் ஆவணம்", மூதறிஞர் க.சி.குலரத்தினம்,
மித்ர வெளியீடு, 1997

2. "மீண்டும் யாழ்ப்பாணம் எரிகிறது", நீலவண்ணன், முதற்பதிப்பு ஜீலை 1981,
மூன்றாம் பதிப்பு கமலம் பதிப்பகம் மார்ச் 2003.

1 comment:

Unknown said...

Gana Praba,
Thanks for crafting a touching article, with some historical events, on the 40th anniversary of the burning of the Jaffna library. FYI, one retired police officer, an eye witness to this disaster (Mr Krishnadasan, HQI, Jaffna now lives in Sydney), published an article (in 2015) by chalellging assertions made by the ex DIG Edward Gunawardena that LTTE was resonsible for the burning down the library- see the link here- http://dbsjeyaraj.com/dbsj/archives/38849

The article gives a detail accounts of the events and how the police party who rushed to the library building was chased away by the army personnel and the rest is history.

Thanks

Ravi Canberra