48ஆவது சட்ட மாஅதிபராக சஞ்சய ராஜரத்தினம் பதவிப்பிரமாணம்
கங்காராம விஹாரையில் மத வழிபாட்டில் ஈடுபட்ட புதிய சட்ட மாஅதிபர்
400 நாட்களின் பின் தனது உறவுகளுடன் உரையாடிய சட்டத்தரணி ஹிஜாஸ்
நெதர்லாந்து குழு இலங்கை வருகிறது
யாழ்ப்பாணம் பல்கலைக்கழக விரிவுரையாளர் கொரோனா தொற்றால் உயிரிழப்பு!
பேரறிவாளன் நேற்று பிணையில் விடுதலை
48ஆவது சட்ட மாஅதிபராக சஞ்சய ராஜரத்தினம் பதவிப்பிரமாணம்
- ஜனாதிபதி முன்னியில் இன்று சத்தியப்பிரமாணம்
பிரதி சொலிசிட்டர் ஜெனரல், ஜனாதிபதி சட்டத்தரணி சஞ்சய ராஜரத்தினம் இலங்கையின் 48ஆவது சட்ட மாஅதிபராக இன்று (26) பிற்பகல் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்து கொண்டார்.
சஞ்சய ராஜரத்தினத்தை சட்டமாஅதிபராக நியமிக்க பாராளுமன்றப் பேரவை கடந்த மே 21ஆம் திகதியன்று அனுமதியளித்ததைத் தொடர்ந்து, இந்நியமனம் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
சட்ட மா அதிபர் திணைக்களத்தில் 34 வருட சேவைக்காலத்தை பூர்த்தி செய்துள்ள சஞ்சய ராஜரத்னம், அரசாங்கத்தின் சிரேஷ்ட சட்டத்தரணியாகவும் பிரதி சொலிஸிட்டர் ஜெனரல், மேலதிக சொலிஸிட்டர் ஜெனரல், சிரேஷ்ட மேலதிக சொலிஸிட்டர் ஜெனரல் மற்றும் பதில் சொலிஸிட்டர் ஜெனரலாக பதவி வகித்துள்ளார்.
இவர் சிரேஷ்ட சட்டத்தரணி சிவா இராஜரட்னத்தின் மகனாவார். அத்துடன் திருகோணமலையை பூர்வீகமாகக் கொண்ட இவரது பாட்டனார் டீ. ராஜரத்தினம் முடிக்குரிய வழக்கறிஞராக கடமையாற்றியவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
சஞ்சய ராஜரத்தினம் கொழும்பு சென் பீற்றர்ஸ் கல்லூரி மற்றும் கொழும்பு றோயல் கல்லூரி ஆகியவற்றில் கல்வி பயின்றவர். அவர், லண்டனில் உள்ள குயின்மேரி பல்கலைக்கழகத்தில் சட்ட முதுமானிப் பட்டத்தைப் பெற்றுள்ளார். இவர் இங்கிலாந்து மற்றும் வேல்சின் சொலிஸிட்டராவார்.
இவர் தனது சட்டக் கல்வியை இலங்கை சட்டக் கல்லூரியில் கற்று சிறப்புத் தேர்ச்சி பெற்று, 1987ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 6ஆம் திகதியன்று உயர் நீதிமன்றத்தில் சட்டத்தரணியாக சத்தியப் பிரமாணம் செய்து கொண்டார்.
அவர் 2014ஆம் ஆண்டு நவம்பர் மாதம் ஜனாதிபதி சட்டத்தரணியாக பதவிப்பிரமாணம் செய்தார். சிவில் மற்றும் குற்றவியல் சட்டத்துறை குறித்து விரிவான அனுபவத்தை பெற்றுள்ள அவர், நீண்டகாலமாக உயர் நீதிமன்றங்களில் ஆஜராகியுள்ளார்.
1988ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் அரச சட்டவாதியாக சட்டமாஅதிபர் திணைக்களத்தில் இணைந்து, 1998ஆம் ஆண்டு சிரேஷ்ட அரச சட்டவாதியாகப் பதவி உயர்வு பெற்றார். பின்னர் 2005ஆம் ஆண்டு பிரதி சொலிசிட்டர் ஜெனரலாகவும், 2014 ஆம் ஆண்டு மேலதிக சொலிசிட்டர் ஜெனரலாகவும், 2018ஆம் ஆண்டு சிரேஷ்ட மேலதிக சொலிசிட்டர் ஜெனரலாகவும் பதவி உயர்வுகளைப் பெற்றதுடன், 2019ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் சட்டமாஅதிபர் திணைக்களத்தின் பதில் சொலிசிட்டர் ஜெனரலாக நியமிக்கப்பட்டார்.
சட்டமாஅதிபர் திணைக்களத்தில் பணிபுரிகின்ற காலப் பகுதியில் மத்திய வங்கி, மொறட்டுவை பல்கலைக்கழகம், தேர்ச்சி அபிவிருத்தி மற்றும் வாழ்க்கைத் தொழில்சார் கல்வி அமைச்சு மற்றும் பகிரங்க தொழில் முயற்சிகள் சீர்திருத்த ஆணைக்குழு உட்பட பல்வேறு அரச நிறுவனங்களின் சட்ட ஆலோசகராகவும் திகழ்ந்துள்ளார்.
2015 ஆம் ஆண்டு சட்ட ஆணைக்குழுவின் உறுப்பினராகவும், 2019ஆம் ஆண்டு கூட்டிணைக்கப்பட்ட சட்டக் கல்வி பேரவையின் உறுப்பினராகவும் கடமையாற்றியுள்ளார்.
பல்வேறு சட்டங்கள் உருவாக்கப்படுகின்ற போது சட்டவரைஞர் குழுவின் உறுப்பினராகவும் விளங்கியுள்ளார். சில விசேட ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுக்களின் சட்ட விடயங்களை இவர் கையாண்டுள்ளார்.
2004ஆம் ஆண்டிலிருந்து இற்றை வரை சட்டமாஅதிபர் திணைக்களத்தின் பெருநிறுவன பிரிவை மேற்பார்வை புரியும் பணிகளையும் மேற்கொண்டு வருகின்றார். 2005ஆம் ஆண்டிலிருந்து பொதுமக்கள் பிராதுப்பிரிவின் தலைமை உத்தியோகத்தராகவும் இவர் கடமையாற்றியுள்ளார். 2019 ஒக்டோபர் மாதம் முதல் சிறுவர் துஷ்பிரயோகம் தொடர்பிலான கோப்புகளை கண்காணிக்கும் பிரிவுக்கு பொறுப்பானவராக கடமையாற்றிய அதேவேளை, துரித கதியில் வழக்குகளை தாக்கல் செய்வதில் இவரது பங்களிப்பு அளப்பரியது. சட்டமாஅதிபர் திணைக்களத்தின் சிவில் பிரிவுக்கு பொறுப்பானவராகவும் இவர் பல ஆண்டுகளாக கடமையாற்றி வருகின்றார்.
இவர் 1997ஆம் ஆண்டிலிருந்து உயர்நீதிமன்றத்தில் பல்வேறு முக்கியமான மனித உரிமை மீறல் வழக்குகளில் அரசை பிரதிநிதித்துவம் செய்து தோன்றியிருக்கின்றார். மேன்முறையீட்டு நீதிமன்றத்திலும் எழுத்தாணை வழக்குகள் உட்பட பல வழக்குகளிலும் தோன்றியிருக்கின்றார். பாராளுமன்ற சட்டமூலங்கள் தொடர்பிலான விசேட தீர்மானத்தை மேற்கொள்ளும் வழக்குகளிலும் உயர் நீதிமன்றத்தில் தோன்றியுள்ளார்.
மும்மொழி ஆற்றலும் சட்ட வல்லமையும் மிக்க இவர் ஐக்கிய அமெரிக்கா, ஜேர்மனி, சுவீடன், சுவிட்சர்லாந்து, ஒஸ்ரியா, அவுஸ்திரேலியா, சீனா, சிங்கப்பூர், மலேசியா மற்றும் தெற்காசிய நாடுகள் உட்பட பல்வேறு சர்வதேச நாடுகளில் இடம்பெற்ற சட்ட மாநாடுகள் மற்றும் சர்வதேச கருத்தரங்குகளில் பங்கேற்று சட்டமா அதிபர் திணைக்களத்தையும் நாட்டையும் சஞ்சய ராஜரத்தினம் பிரதிநிதித்துவம் செய்துள்ளமை விசேட அம்சமாகும்.
சஞ்சய ராஜரத்தினத்தின் பாரியார் தர்மினி இராஜரட்னம் லங்கா (தனியார்) மருத்துவமனையில் மருத்துவ அதிகாரியாக பணியாற்றி வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும். நன்றி தினகரன்
கங்காராம விஹாரையில் மத வழிபாட்டில் ஈடுபட்ட புதிய சட்ட மாஅதிபர்
இலங்கையின் 48 ஆவது சட்ட மாஅதிபராக நியமிக்கப்பட்டுள்ள ஜனாதிபதி சட்டத்தரணி சஞ்சய ராஜரத்தினம், நேற்று கொழும்பு கொம்பனித்தெருவில் அமைந்துள்ள கங்காராம விஹாரைக்குச் சென்று மத வழிபாடுகளில் ஈடுபட்டார்.
(படம்: துஷர பெர்ணாண்டோ, சுதத் மலவீர) நன்றி தினகரன்
400 நாட்களின் பின் தனது உறவுகளுடன் உரையாடிய சட்டத்தரணி ஹிஜாஸ்
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் கைது செய்யப்பட்டு, 400 நாட்களுக்கும் மேலாக தடுத்து வைக்கப்பட்டுள்ள சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ் இன்று தனது உறவினர்களுடன் உரையாடியுள்ளார்.
வெலிக்கடை சிறையில் வைக்கப்பட்டுள்ள அவர், வீடியோ தொழில்நுட்பம் ஊடாக தனது உறவினர்களுடன் இவ்வாறு உரையாடியுள்ளார்.
சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லாங் கடந்த வருடம் ஏப்ரல் மாதம் கைது செய்யப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதற்கான ஏற்பாடுகளை வெலிக்கடை சிறைச்சலை நிர்வாகம் மேற்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
நன்றி தினகரன்
நெதர்லாந்து குழு இலங்கை வருகிறது
அமைச்சர் ரோஹித அபேகுணவர்தன
கொழும்பு துறைமுகத்திற்கருகில் தீ விபத்துக்குள்ளான எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பலை ஆய்வு செய்வதற்காக நெதர்லாந்திலிருந்து குழுவொன்று இலங்கைக்கு வருகை தரவுள்ளதாக அமைச்சர் ரோஹித அபேகுணவர்தன தெரிவித்துள்ளார்.
06 பேர் கொண்ட குழுவொன்றே இவ்வாறு வருகை தரவுள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார். கொழும்பு துறைமுகத்திற்கருகில் நங்கூரமிடப்பட்டிருந்த எக்ஸ்பிரஸ் பேர்ள்
கப்பலில் நைட்ரையிட் அமிலக் கசிவு காரணமாக கடந்த 19 ஆம் திகதி தீப்பரவல் ஏற்பட்டது. இதனையடுத்து, தீயை அணைக்கும் நடவடிக்கைகள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டாலும் நேற்று முன்தினம் கப்பல் முழுவதும் தீப்பரவல் ஏற்பட்டது.
இதனையடுத்து இக்கப்பல் தொடர்பில் ஆய்வு செய்வதற்காகவே நெதர்லாந்து குழு இலங்கை வருகிறது. நன்றி தினகரன்
யாழ்ப்பாணம் பல்கலைக்கழக விரிவுரையாளர் கொரோனா தொற்றால் உயிரிழப்பு!
யாழ்.பல்கலைக்கழக பெண் விரிவுரையாளர் ஒருவர் கொரோனா தொற்றுக்குள்ளான நிலையில் உயிரிழந்துள்ளார்.
யாழ்ப்பாணம், அரியாலை பகுதியைச் சேர்ந்த , யாழ். பல்கலைக்கழக ஆங்கில விரிவுரையாளரான திருமதி ஸ்ரீரஞ்சினி ஆனந்தகுமாரசாமி என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
தனியார் நிறுவனத்தில் பணிபுரியும் விரிவுரையாளரின் குடும்ப உறுப்பினர் ஒருவருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்ட நிலையில் , விரிவுரையாளருக்கு மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர். பரிசோதனையின் போது அவருக்கு தொற்று உறுதியானது.
அதனை அடுத்து யாழ். போதனா வைத்தியசாலை தனிமைப்படுத்தல் விடுதியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று (28) வெள்ளிக்கிழமை இரவு சிகிச்சை பயனின்றி உயிரிழந்துள்ளார்.
விரிவுரையாளரின் சடலம் கொரோனா சுகாதார விதிமுறைகளின் படி கோம்பயன் மணல் மயானத்தில் மின் தகனம் செய்யவதற்குரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சுகாதார பிரிவினர் தெரிவித்தனர்.
(யாழ். விசேட நிருபர் - மயூரப்பிரியன்) - நன்றி தினகரன்
பேரறிவாளன் நேற்று பிணையில் விடுதலை
இந்திய முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை அனுபவித்து வரும் பேரறிவாளன் நேற்று வெள்ளிக்கிழமை (28) பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
மருத்துவ சிகிச்சைகளுக்காக பிணைகோரி அவரது தாயார் அற்புதம்மாள் கோரிக்கை விடுத்திருந்த நிலையில், அக்கோரிக்கைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஒப்புதல் வழங்கியிருந்தார். இதற்கமைய நேற்று அவர் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
இதன்படி புழல் சிறையில் இருந்து வேலூர் மத்தியச் சிறைக்கு பேரறிவாளன் அழைத்து செல்லப்பட்டு அங்கிருந்து ஜோலார்போட்டையில் உள்ள அவரது இல்லத்திற்கு பொலிஸ் பாதுகாப்புடன் அழைத்து செல்லப்படவுள்ளதாக நேற்று அறிவிக்கப்பட்டது. நன்றி தினகரன்
- இன்று காலை ஆரம்பமானது தடுப்பூசி வழங்கும் செயற்பாடு
யாழ். மாவட்டத்தில் பொதுமக்களை கொரோனா தொற்றிலிருந்து பாதுகாப்பதற்கு அரசினால் தடுப்பூசி வழங்கும் செயற்திட்டம் நேற்று ஆரம்பமானது.
யாழ் மாவட்டத்திற்குரிய கொரோனா தடுப்பூசி மருந்துகள், வடக்கு மாகாண ஆளுநரால் வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை பதில் பணிப்பாளரிடம் வைபவ ரீதியாக கையளிக்கும் நிகழ்வு யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் இடம்பெற்றது.
யாழ். மாவட்டத்திற்கு வழங்கப்பட்டுள்ள தடுப்பூசிகளை உத்தியோகபூர்வமாக கையளிக்கும் நிகழ்வில் வடக்கு மாகாண ஆளுநர், பிரதமரின் வடக்கிற்கான இணைப்பாளர், யாழ் மாவட்ட அரச அதிபர், கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, குழுக்களின் பிரதித் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான அங்கஜன் இராமநாதன், வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் பதில் பணிப்பாளர், யாழ் போதனா வைத்திய சாலை வைத்தியர்கள், மற்றும் சுகாதாரப் பிரிவினர் கலந்து கொண்டனர்.
இன்று (30) காலை 8.00 மணி முதல் யாழ்ப்பாண மாவட்டத்தின் சகல பிரதேச செயலாளர் பிரிவிலும் பொதுமக்களுக்கு கொரோனா தடுப்பூசி வழங்கும் செயற்பாடு முன்னெடுக்கப்படுகிறது.
இதைவேளை இதே தொடர்பாக யாழ். மாவட்டத்திற்கான விஜயத்தினை மேற்கொண்டுள்ள விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ, பொதுமக்களுக்கான COVID -19 தடுப்பூசி வழங்கப்படும் நிலையங்களுக்கு சென்று நிலைமைகளை ஆராய்ந்தார்.
யாழ் மாநகர சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில் கொவிட்-19 தடுப்பூசி செலுத்தும் நிலையமான அரியாலை பிரப்பன்குளம் மகாமாரியம்மன் திருமண மண்டபத்திற்கும், கைதடி ஆரம்ப சுகாதார பராமரிப்பு நிலையத்தில் தடுப்பூசி வழங்கும் நிலையத்திற்கும், கோப்பாய் ஆதார வைத்தியசாலை தடுப்பூசி வழங்கும் நிலையம், பருத்தித்துறை கரவெட்டி பகுதிகளில் தடுப்பூசி நிலையங்களுக்கும் விஜயத்தினை மேற்கொண்டு தடுப்பூசி வழங்கல் தொடர்பில் சுகாதார பிரிவினருடன் கலந்துரையாடினார்
தடுப்பூசி நிலையங்களை பார்வையிட்ட பின் கருத்து தெரிவிக்கையில்,
யாழ்ப்பாணம் மட்டுமல்ல கிளிநொச்சி, வவுனியா, முல்லைத்தீவு ஆகிய இடங்களிலும் தடுப்பூசி அடுத்த கட்டம் வழங்கப்படவுள்ளன.
முதல் கட்டமாக யாழ்ப்பாண மாவட்டத்தில் அரசினால் வழங்கப்பட்ட இந்தத் தடுப்பூசிகளைப் விரைவாக மக்களுக்கு விநியோகிக்கும் செயற்பாட்டினை முன்னெடுக்க கோரிக்கை விடுத்தேன்.
இந்த முதல்கட்ட தடுப்பூசியினை விரைவாக வழங்காத விடத்து அடுத்த இரண்டாம் கட்ட தடுப்பூசியினை பெற்றுக் கொள்வதில் சிரமம் ஏற்படும். எனவே உடனடியாக தடுப்பூசி வழங்கும் நிலையங்களினை அதிகரித்து மிகக் குறைந்த நாட்களில் இந்த 50,000 தடுப்பூசியினை வழங்குவதற்கு உரிய நடவடிக்கை மேற்கொள்ளுமாறும் சுகாதார அதிகாரிகளை கோரியுள்ளார்.
அத்துடன், பொலிஸார், இராணுவத்தினரின் உதவியுடன் மேலும் பல தடுப்பூசி வழங்கும் நிலையங்களை விஸ்தரித்து விரைவில் அரசினால் வழங்கப்பட்டுள்ள முதல்கட்ட 50,000 தடுப்பூசிகளை மக்களுக்கு விநியோகிக்க மாறு சுகாதார பிரிவினருக்கு அறிவுறுத்தினார்.
அமைச்சரின் விஜயத்தின் போது வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், வடக்கு ஆளுநர் யாழ் மாவட்ட அரச அதிபர், யாழ் மாவட்ட பாதுகாப்பு கட்டளைத்தளபதி ஆகியோர் பங்கேற்றிருந்தனர்
(பருத்தித்துறை விசேட நிருபர் - நிதர்சன் வினோத், ஐங்கரன் சிவசாந்தன், யாழ். விசேட நிருபர் - மயூரப்பிரியன், யாழ்ப்பாணம் குறூப் நிருபர் - சுமித்தி தங்கராசா)
No comments:
Post a Comment