மெல்பன் 3 C R தமிழ்க்குரல் வானொலி ஊடகவியலாளர் சண்முகம் சபேசன் ( 1954 – 2020 ) மே 29 நினைவு தினம் சபேசனின் மறைவுக்குப்பின்னர் வெளியாகும் காற்றில் தவழ்ந்த சிந்தனைகள் நூல் ! முருகபூபதி


லங்கை வடபுலத்தில்  யாழ்ப்பாணம்,  நீராவியடியில் 1954 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 06 ஆம் திகதி சண்முகம் – பர்வதலக்‌ஷ்மி தம்பதியரின்  மூத்த புதல்வனாகப்பிறந்த சபேசன், கடந்த 2020 ஆம் ஆண்டு மே மாதம் 29 ஆம் திகதி அவுஸ்திரேலியா மெல்பனில்  மறைந்தார்.

யாழ். இந்துக்கல்லூரியின் முன்னாள் மாணவரான அவர்,  1989 ஆம் ஆண்டு நடுப்பகுதியில்  மெல்பனுக்கு புலம்பெயர்ந்து வந்த காலத்தில்  எனக்கு ஒரு இலக்கிய வாசகராகவே அறிமுகமானவர்.

அவரது  இரத்த உறவினர்தான்   எழுத்தாளர் வண்ணை சிவராஜா  என்பதையும்  அக்காலப்பகுதியிலேயே அறிந்துகொண்டேன்.  அவ்வாறு அறிமுகமான காலத்திலிருந்து கடந்த ஆண்டு  அவர் மறையும் வரையில், அவரது அரசியல் கருத்துக்களுடன் மாறுபட்டிருந்தாலும், எந்தவொரு விக்கினமும் இல்லாமல், என்னுடன் உறவாடிய இலக்கிய நேசர்.

எப்பொழுதும் எதனையும்  வாசிக்கமறவாத சபேசன்,  கடந்த ஆண்டு இதே திகதியில் சுவாசிக்க மறந்துபோனது எனக்கு நெடுந்துயரே !

அவர் உளமாற நேசித்த தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனும்,


இலக்கிய ரீதியாக அவர் பெரிதும் நேசித்த கரிசல் இலக்கிய வேந்தர் கி. ரா. வும் மறைந்தது இதே மே மாதம்தான் !

 நண்பர் சபேசன் மறைந்து ஓராண்டாகியிருக்கும் இத்தருணத்திலும் ,  அவர் பற்றிய நினைவுகள் மனதில் அலைமோதிக்கொண்டிருக்கின்றன.

நான் அவுஸ்திரேலியாவுக்கு 1987 ஆம் ஆண்டு தொடக்கத்தில் வந்த பின்னர், 1989 ஆம் ஆண்டு  நடுப்பகுதியில்  மெல்பனுக்கு வந்து குடியேறியிருந்த சண்முகம் சபேசன்,  விக்ரோரியா இலங்கைத்  தமிழ்ச்சங்கத்திலும் இணைந்து  ( இந்த அமைப்பின் பெயர் அவ்வப்போது மாறியிருக்கிறது ) அதன்சார்பில்  வாராந்தம் ஒலிபரப்பான சமூகவானொலி  3 C R  தமிழ்க்குரலில் செய்தி வாசிப்பவராக இணைந்து பல நிகழ்ச்சிகளையும் அதில் ஒருங்கிணைத்தார்.

எனது எழுத்துக்களைப்பற்றியும் கேள்விப்பட்டிருந்த சபேசன்,


எனது சமாந்தரங்கள் கதைத் தொகுதியை யாரிடமிருந்தோ பெற்று படித்துவிட்டு,  என்னை தொடர்புகொண்டார்.

அந்தத் தொகுப்பில்  வடபகுதி   தமிழ் இளைஞர்களிடத்தில்   1980 இற்குப்பின்னர்  தோன்றிய சிந்தனைகள், தொடர்ந்து வந்த  போர்க்காலங்கள்,  இந்தியாவிலிருந்து  அமைதிகாக்க வந்த படையினர்  ( ?)  பற்றிய கதைகளும் இடம்பெற்றிருந்தமையால்,  சபேசனை அக்கதைகள் கவர்ந்திருக்கவேண்டும்.

1997 ஆண்டு,  எனது இலக்கியப்பிரவேச வெள்ளிவிழாவை முன்னிட்டு மெல்பனில்  அதே வை. டபிள்யூ. சி. மண்டபத்தில் மூத்த கலை, இலக்கிய ஆளுமைகளான ஓவியர் கே.ரி. செல்வத்துரை, கவிஞர் அம்பி, அண்ணாவியார் இளைய பத்மநாதன், எழுத்தாளர் எஸ். பொன்னுத்துரை ஆகியோரை பாராட்டி விருதுவழங்கி கௌரவிக்கும் நிகழ்வை எமது முகுந்தன் பதிப்பகத்தினால் நடத்தியபோது நண்பர் சபேசனும் கலந்துகொண்டு உரையாற்றினார்.

இந்நிகழ்வு சிட்னியிலிருந்து வருகை தந்த பேராசிரியர் ஆசி. கந்தராஜாவின் தலைமையில் நடைபெற்றது.

அந்த நிகழ்வில் மெல்பன் சமூக வானொலிகளைச் சேர்ந்தவர்களை அழைத்து, அவர்களின் கரத்தினால்


குறிப்பிட்ட ஆளுமைகளுக்கு விருதுகளையும் வழங்கச்செய்திருந்தேன்.

 “ ஆளுமைகள்  வாழும்போதே பாராட்டி கௌரவிக்கப்படல்  வேண்டும், அவர்கள்   மறைந்த பின்னர் தரப்படும் மரியாதைகள் அனைத்தும் அவற்றைத் தருபவர்களுக்கு மாத்திரமே  பெருமை சேர்ப்பிக்கும் “   என்ற எனது சிந்தனை நண்பர் சபேசனையும் கவர்ந்திருக்கவேண்டும்.  அடுத்த சில வருடங்களில் விக்ரோரியா இலங்கைத் தமிழ்ச்சங்கத்தின் 20 ஆவது ஆண்டு நிறைவு விழாவும் முத்தமிழ் விழாவும் வந்தது. அவ்விழாவுக்காக தமிழகத்திலிருந்து கவிஞர் அப்துல்ரகுமானும் அழைக்கப்பட்டார்.

அவரை அழைப்பதற்கான ஒழுங்குகளை எமது மற்றும் ஒரு


நண்பர்,  மருத்துவரும் சமூகப்பணியாளருமான ரகுமான் அவர்கள் மேற்கொண்டிருந்ததுடன்,  தமது இல்லத்திலேயே கவிஞரையும் தங்கவைத்திருந்தார்.

அவ்வேளையில் நண்பர்கள்  சபேசனும்  நந்தகுமாரும் கவிஞரை, மருத்துவர் ரகுமான் அவர்களின் இல்லத்தில் சந்தித்து இலக்கிய கலந்துரையாடலிலும் ஈடுபட்டனர்.

மெல்பனில் Hungarian Community Centre மண்டபத்தில் நடைபெற்ற சங்கத்தின் 20 ஆண்டு நிறைவுவிழா அச்சமயம் தலைவராக இருந்த திரு. பூபாலசிங்கம் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.

அவ்விழாவில் இடம்பெற்ற இலக்கிய கருத்தரங்கினை


ஒருங்கிணைத்தவர் சபேசன்.  புலம்பெயர்ந்தோர் இலக்கியம் – போர்க்கால இலக்கியம் முதலான தலைப்புகளில் எழுத்தாளர் பாடும்மீன் சு. ஶ்ரீகந்தராசா தலைமையில் நடந்த இக்கருத்தரங்கில் நானும் கவிஞர் அப்துல் ரகுமானும், கலைஞர் மாவை நித்தியானந்தனும் உரையாற்றினோம்.

அன்றைய இரவும் தொடர்ந்த அவ்விழாவில்  வாழும்போதே கௌரவிப்போம் என்ற நிகழ்ச்சியில் மாவை நித்தியானந்தன், நடன நர்த்தகி சாந்தி இராஜேந்திரா ,  நாட்டியக்கலைஞர் சந்திரபானு உட்பட  மற்றும்  சிலரும் நானும்  பாராட்டி விருது வழங்கி கௌரவிக்கப்பட்டோம்.

இவ்வாறு கலை, இலக்கிய செல்நெறியை வடிவமைக்கும்  ஆற்றலும் சபேசனிடத்தில் குடியிருந்தது.

மறுநாள் அதே மண்டபத்தில் முத்தமிழ் விழாவும்  நடைபெற்றது.  சபேசன் 3 C R  தமிழ்க்குரல் வானொலியில் கலை, இலக்கியம் சார்ந்த நிகழ்ச்சிகளுக்கும் முன்னுரிமை தந்தவர். 


இலக்கிய நூல்களை அறிமுகப்படுத்தி, வாசிப்பு அனுபவங்களை நேயர்களுடன் பகிர்ந்துகொண்டவர்.

என்னையும் எழுத்தாளர் நித்தியகீர்த்தியையும் வானொலி கலையகத்திற்கு அழைத்து இலக்கிய சந்திப்பு உரையாடல்களையும் ஒலிபரப்பினார்.

மெல்பனில் Thornbury என்ற இடத்தில் அமைந்த ஒரு தேவாலய மண்டபத்தில் நடைபெற்ற எனது வெளிச்சம் ( சிறுகதைத் தொகுதி ) சந்திப்பு  (நேர்காணல் தொகுதி ) வெளியீட்டு அரங்கு யாழ். பல்கலைக்கழக கல்விப்பீடத்தின் விரிவுரையாளர் கலாநிதி  த. கலாமணியின் தலைமையில் நடந்தபோது, சபேசன் சந்திப்பு நூல் பற்றிய தனது நயப்புரையை சமர்ப்பித்து உரையாற்றினார்.

அவரது சேகரிப்பில் ஏராளமான இலக்கியம், அறிவியல், சினிமா, விஞ்ஞானம் தொடர்பான நூல்கள் இருந்தன.  தான்


படித்த நூல்கள் பற்றி என்னுடன் சிலாகித்துப்பேசுவதும் அவரது வழக்கம்.

தமிழகப்பேராசிரியரும் சபேசனின் நல்ல நண்பருமான சுப.  வீரபாண்டியன்  பொடா சட்டத்தின் கீழ் கைதாகி சிறையிலிருந்தபோது எழுதிய நூல் அது ஒரு பொடா காலம். அதில் ஒரு பிரதியையும் எனக்கு வாசிக்கக்கொடுத்திருக்கும் சபேசன்,  வருடந்தோறும் சென்னையில் நடைபெறும் புத்தகத் திருவிழாவுக்கும் சென்று வரும் பழக்கத்தையும் கொண்டிருந்தவர்.

சபேசன்,  தமிழ்நாட்டின் தமிழ் உணர்வாளர்கள்  தொல் . திருமாவளவன்,  வை. கோபாலசாமி,  பேராசிரியர் சுப வீரபாண்டியன், பழ. நெடுமாறன், ஓவியர் புகழேந்தி, கவிஞரும் திரைப்பட வசன கர்த்தாவுமான அறிவுமதி, இயக்குநர் தங்கர்பச்சான், கவிஞர்கள்   வைரமுத்து,  காசி. ஆனந்தன்   ஆகியோருடனும் நட்புறவு கொண்டிருந்தவர்.


இலங்கையில் மல்லிகை ஆசிரியர் டொமினிக்ஜீவா, கவிஞர் புதுவை ரத்தினதுரை ஆகியோருடனும் நட்புறவு பாராட்டியவர்.

மெல்பனுக்கு சுப. வீரபாண்டியன், ஈழவேந்தன்,  உலகத் தமிழர் பேரவையைச் சேர்ந்த வண. பிதா இமானுவேல் அடிகளார்  உட்பட பல தமிழ் உணர்வாளர்கள் வருகை தந்த  சந்தர்ப்பங்களில் சபேசனின் இல்லத்தில் அன்பான உபசரிப்பில் திழைத்திருக்கிறார்கள்.

அரசியலில் கலை, இலக்கியத்தில்  மாற்றுக்கருத்துக்கொண்டவர்களுடனும் சிநேகபூர்வமாக பழகும் மென்மையான இயல்புகளையும் தன்னகத்தே கொண்டிருந்தவர் சபேசன்.

அவரது வாசிப்பு அனுபவத்தின் தீவிரம், அவரை புதுச்சேரியில் வசித்த  கரிசல் இலக்கிய வேந்தர் என வர்ணிக்கப்படும்  மூத்த படைப்பாளி கி. ராஜநாரயணன் அவர்களையும் தேடிச்சென்று உறவாட வைத்தது.

ஈழத்து இலக்கியத்தின் மீதும் புகலிட இலக்கிய முயற்சிகள் குறித்தும் ஆர்வம்  காண்பித்த  கி. ரா. அவர்கள்,  சபேசனு டனான அந்த சந்திப்பிற்குப்பின்னர், தீராநதி இதழில் ஒரு கட்டுரையும் எழுதினார். அதற்கு Cover Story முக்கியத்துவமும் வழங்கப்பட்டிருந்தது.

புதுவை ரத்தினதுரையின் பூவரசம் வேலியும் புலுனிக்குஞ்சுகளும் நூலை மெல்பனில் அறிமுகப்படுத்திய நிகழ்வும் சபேசனின் தலைமையில்தான் நடைபெற்றது. அவ்வேளையில் வன்னியிலிருந்த புதுவை ரத்தினதுரையுடன்


நான் தொலைபேசியில் உரையாடுவதற்கும்  ஒழுங்கு செய்து கொடுத்திருந்தார்.

கடந்த 2019 ஆம் ஆண்டு நண்பர் நடேசனின் நூல்களின் விமர்சன அரங்கு  மெல்பனில் நடந்தபோது, நடேசனின் நைல்நதிக்கரையில் பயண இலக்கிய நூல் குறித்து தனது வாசிப்பு அனுபவங்களை பகிர்ந்துகொண்டார்.

இதுவே சபேசன் இறுதியாக கலந்துகொண்டு உரையாற்றிய இலக்கிய நிகழ்வு.

சபேசனின் துணைவியார் சிவமலர், சபேசன் முன்னர் வானொலிகளில் நிகழ்த்திய உரைகளிலிருந்து சிலவற்றை தேர்வுசெய்து  காற்றில் தவழ்ந்த சிந்தனைகள் என்ற நூலை வெளியிடவுள்ளார்.

இந்நூல் தமிழ்நாட்டில் அச்சாகியுள்ளது.

எதிர்வரும் ஜூன் மாதம்  நடைபெறவிருக்கும் சபேசனின் நினைவேந்தல் நிகழ்வில் இந்த நூலும் வெளியிடப்படவுள்ளது.

No comments: