பதினைந்து ஆண்டுகளை நிறைவு செய்யும் ” வானமுதம் “ தமிழ் ஒலிபரப்புச் சேவை. என் பார்வையில் வானமுதம் தமிழ் ஒலிபரப்புச் சேவை - நவரத்தினம் அல்லமதேவன், மெல்பேண்.




அவுஸ்திரேலியா மெல்பேணில் விற்றில்சீ தமிழ்ச் சங்கத்தினால் (Whittlesea Tamil Association) ஆரம்பிக்கப்பட்ட சமூக வானொலியான வானமுதம் தமிழ் ஒலிபரப்புச் சேவை தனது தினைந்து ஆண்டு கால சேவையைப் பூர்த்தி செய்து பதினாறாவது ஆண்டில் காலடி பதிக்கின்றது.  சமூக வானொலி வானமுதம் தமிழ் ஒலிபரப்புச் சேவையின் பதினைந்து ஆண்டுகள் நிறைவினைக் கொண்டாடும் இந்த வேளையில் வானமுதம் தமிழ் வானொலியின் கடந்த காலத்தை நிணைத்துப் பார்க்கின்றேன். மெல்பேண் வடபகுதியில் விற்றில்சீ தமிழ்ச் சங்கம் தனது முதல் செய்ற்பாடாக வானமுதம் தமிழ் ஒலிபரப்பினை ஆரம்பித்தது. . 2006ம் ஆண்டு மே மாதம் 29ம் திகதி பண்பலை வரிசை PVFM 88.6 ஊடாகத் தனது ஒலிபரப்பினை ஆரம்பித்திருந்தது அன்று முதல் இன்று வரை தரம்மிக்க, பல தரமான சுவை மிக்க, தமிழ் மணம் வீசும் வண்ணம், காற்றில் அலை அலையாக வான் அலையில் தெவிட்டாத தித்திக்கும், தேன் தமிழை, எத்திக்கும் பரப்பி வருகின்றது.

காலங்கள் கடந்தாலும் நடந்து வந்த பாதையை மீட்டுப் பார்த்தேன். சுவை மிக்க கருத்துக்கள் பலவற்றை உங்களுடன் பகிர்ந்து கொள்ள ஆசைப்பட்டேன். இதோ ஆமாம் நேயர்களே வானமுதம் தமிழ் ஒலிபரப்புச் சேவை ஆரம்பித்த காலம் 29.05.2006 ம் ஆண்டு. ஆரம்பத்தில் திங்கட்கிழமைகளில் பிற்பகல் நான்கு மணியில் இருந்து ஐந்து மணிவரை தனது ஒலிபரப்பினை அதாவது ஒரு மணித்தியாலம் வான் அலையில் தவழவிட்டது. காலம் செல்லச் செல்ல பிலென்ரி வலி நிலையத்தாரின் வேண்டு கோட்படி 2006ம் ஆண்டு ஒக்டோபர் 03 ம் திகதியில் இருந்து பிரதி செவ்வாய் தோறும் இரவு எட்டு மணியிலிருந்து ஒன்பது மணிவரை வானமுதம் தனது ஒலிபரப்பினை மாற்றி அமைக்கப்பட்டது.

வளர்ச்சியின் ஒரு வடிவமாக ஒரு மணித்தியாலம் ஒலிபரப்பான வான்முதம் சேவை நீடிக்கப்பட்டு மாலை ஆறு மணியில் இருந்து இரவு எட்டு மணிவரை அதாவது இரண்டு மணித்தியாலங்கள் ஒலிபரப்பு சேவை வளர்ந்தது என்றே கூற வேண்டும்.

காலச்சக்கரம் எமது வளர்ச்சியில் பலதரப்பட்ட மாற்றங்களை ஏற்படுத்தினாலும் எமது வளர்ச்சி வேகமாகவும், படைப்புக்களின் தரம் குறைவின்றியும் இருந்தது. இத்தோடு நிற்கவில்லை. தற்பொழுது மாலை ஆறு மணியில் இருந்து இரவு பத்து மணிவரை நான்கு மணித்தியாலங்கள் ஒலிபரப்பினை செய்து வருகின்றது. நேரங்கள் கூடக்கூட நிகழ்ச்சிகள் பலவற்றைப் படைக்கக்கூடிய வாய்ப்புக்கள் அதிகரித்தது.

எனவே அறிவிப்பாளர்களின் எண்ணிக்கையும் அதிகரிக்க வேண்டிய ஒரு நிர்ப்பந்தம் என்று தான் சொல்ல வேண்டும். அறிவிப்பாளர்கள், தயாரிப்பாளர்கள் என பலதரப்பட்டவர்கள் முயற்சினால் தான் இவ்வளவு தூரம் செயற்படகூடியதாக இருக்கின்றது.

 கடந்த தினைந்து ஆண்டுகளாகச் சிறுவர் முதல் பெரியவர்கள் அனைவரும் விரும்பிக் கேட்கும் வண்ணம் சகல நிகழ்ச்சிகளும் பிரதி செவ்வாய் தோறும் மாலை ஆறு மணிமுதல் இரவு பத்து மணிவரை ஒலிபரப்பாகி வருகின்றது. பல நிகழ்ச்சிகள் தயாரிப்பாளர்கள், அறிவிப்பாளர்களால் நிகழ்ச்சிகளை ஒலிபரப்பி வருவதைக் காணலாம்.  இன்றைய தரமான நிகழ்ச்சிகளில் அறிவிப்பாளர்களது பங்களிப்பு தான் முக்கிய காரணமாக இருக்கின்றது. இவர்களது அயராத உழைப்பு, தன்னலமற்ற சேவை, விடா முயற்சி, வானொலியை இன்றும் இக்கட்டான நேரத்திலும் இயங்க வைத்துக் கொண்டிருக்கின்றது என்பதை பதிவு செய்ய விரும்புகின்றேன்.  இந்த தருணத்தில் அவர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றிகளைத் தெரிவிக்க விரும்புகின்றேன்.

உலக நாடுகள் அனைத்தையும் பாதித்திருக்கும் ஆட்கொல்லி நோயான கொரோனா வைரஸ் தொற்றுக் காலத்திலும் தனது சேவையை திறம்பட செவ்வனே தொழில் நுட்பத்தின் வாயிலாக ஒலிபரப்பி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

வானமுதம் தமிழ் ஒலிபரப்புச் சேவை 24 மணி நேரம் ஒலிபரப்புச் சேவை உலகத் தமிழரின் உரிமைத் தோழன் இன்பத்தமிழ் வானொலி ஊடாக அவுஸ்திரேலிய மற்றும் உலகத்தில் இருக்கும் சகலரும் கேட்கும் வகையில் இணையத்தளத்தின் ஊடாகவும் ஒலிபரப்பாகி வருகின்றது. மெல்பேண் மண்ணில் வானலையில் ஒலிபரப்புச் சேவையினைச் செய்து வரும் மற்றய சமூக வானொலிகளுடன் கை கோர்த்து தமிழ்ச் சமூகத்தின் முன்னேற்றத்திற்கான பாதையை வழி அமைப்பதில் தவறாமல் செயற்படுவதினையும் காணலாம். தாய உறவுகளுக்கு குரல் கொடுப்பதில் தவறவில்லை. காலத்தின் தேவைக்கு ஏற்ப அனைத்தையும் வானலையின் ஊடாக மக்களுக்கு அறிவிப்பதில் முன்னிற்கின்றதைப் பார்க்கின்றேன். கேட்கின்றேன்.

வானமுதம் தமிழ் ஒலிபரப்புச் சேவை தனது பதினைந்து ஆண்டுகளைக் கடந்து பதினாறாவது ஆண்டில் காலடி எடுத்து வைப்பதோடு மட்டுமல்லாமல் தமிழ் மொழி வளர்ச்சிக்கு தன்னாலான பணிகளைச் செய்து வருவதையிட்டு மனம் மிக மகிழ்கின்றது.  சகல அறிவிப்பாளர்கள், தயாரிப்பாளர்கள் தங்களது ஒற்றுமையின் பலத்தினால் தான் 15 ஆண்டுகளைக் கடக்கக் கூடியதாக இருந்தது எனலாம். ஒற்றுமையே பலம். அடம்பன் கொடியும் திரண்டால் மிடுக்கு அல்லவா? அதே போல் விற்றில்சீ தமிச் சங்கத்தின் பங்களிப்பு நிறையவே இருக்கின்றது. என்றுமே வானமுதம் நேயர்களை மறக்கவே முடியாது. நேயர்களின் பங்களிப்பு இல்லையென்றால் வானொலியை இன்றும் வானலையில் நிகழ்ச்சிகளை ஒலிபரப்பு முடியாது. அன்பார்ந்த நேயர்களே இந்த தருணத்தில் எங்களின் நெஞ்சார்ந்த நன்றிகளைத் தெரிவிப்பத்தில் மட்டற்ற மகிழ்ச்சி அடைகின்றேன். சமூக வானொலியாகப் பயணிக்கும் வானமுதம் தமிழ் ஒலிபரப்புச் சேவை மென்மேலும் வளர்ந்து பார் போற்றும் வண்ணம் வளரவேண்டும் என வாழ்த்துகின்றேன். விற்றில்சீ தமிழ்ச் சங்கத்தின் அனைத்து நிருவாக உறுப்பினர்களுக்கும் மனமார்ந்த நன்றிகள்.

வானமுதம் ஒலிபரப்புச் சேவையினை  

1. FM 88.6

2. www.pvfm.org.au / live streaming

3. இன்பத்தமிழ் வானொலி ஊடாகவும் கேட்டு மகிழலாம்.

அதுமட்டுமல்லாமல் அன்பார்ந்த நேயர்களே வானமுதம் முகநூலிலும் உங்களை இணைத்துக் கொள்ளுங்கள்.

வாழ்க தமிழ் வளர்க நம் தாய் மொழி


No comments: