திருவருள் மிக்க செந்தமிழ்ச் செல்வர் திருஞானசம்பந்தப் பெருமான்


 மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா    மேனாள் தமிழ்மொழிக் கல்வி இயக்குநர்  மெல்பேண் ..... அவுஸ்திரேலியா 

  

தமிழை வளர்ப்பதற்கு வாழையடி வாழையாகப் பலர் தோன்றி தொண் டாற்றி


இருக்கிறார்கள். தொல்காப்பியர் , வள்ளுவர் திருமூலர்இளங்கோவடிகள் நக்கீரர் என்று சொல்லிக் கொண்டே போகலாம். ஆனால் ஞானசம்பந்தப் பெருமான் இவர்கள் யாவரையும்விட தலை சிறந்த ஒரு வராகவே திகழ்கிறார் எனலாம். சம்பந்தப் பெருமானுக்கு முன்பு வந்த வர்கள் - மக்கட் சமுதாயத்திலிருந்து - சற்று ஒதுங்கி நின்று சிந்தனை என்னும் வானில் பறந்தவர்களாய்இருந்தே தமது ஆக்கங்களை ஆக் கினா ர்கள் என்பதை மறந்துவிடக் கூடாது. ஆனால் ஞானசம்பந்தப் பெருமானோ மக்களுடன் தாமும் கலந்து ஊர் ஊராகச் சென்று அதுவும் நடந்தே சென்று மக்கள் பலர் சூழ தமிழ் பரப்பி நிற்கின்றார்.அதுவும் இன்னி சையால் எந்தமிழினைப் பரப்பி நிற்கின்ரார். சம்பந்தப் பெருமானுக்கு முன்னர் இப்படித் தமிழைப் பரப்பியவர்கள் இருந்தார்களா என்றால் இல்லை என்றுதான் எண்ணிட முடிகிறது.சம்பந்தப் பெருமானின் இந்த முயற்சி தமிழ் பரப்பும் முயற்சியில் ஒரு திருப்பம் என்றும் , பெரு இயக்கம் என்றும் பெரும் புரட்சி என்றும் எடுத்துக் கொள்ளலாம் அல்லவா !

  பல்வேறு கொள்கைகள் சூழ்நிலைகளால் சிதறுண்டு கிடக்கும் மக்களை அவர்கள் பேசும் தாய் மொழியின் வழியிலேதான்  ஒற்றுமைப் படுத்தி உணர்வினை ஊட்டி கிளர்ந்தெழச் செய்து முன்னே ற்றத்தை ஏற்படுத்தலாம் என்னும் சிந்தனை சம்பந்தப் பெருமானின் உள்ளத்தில் உதித்தமையால்  - அதற்காக அக்காலச் சூழலில் அவர் இன்னிசையால் தமிழ் பரப்பிய பாங்கினை மெச்சாமல் இருக்கவே முடியாது. "தமிழ் ஞான சம்பந்தன் " என்று அந்தணராய் பிறந்த ஒருவர் துணிந்து கூறினார் என்றால் அதுதான் சிறந்த " சிந்தனைப் புரட்சி "  என்று சொல்லலாம். அல்லவா       

            

   வேதநெறியினைக் காத்திட முனைந்தாராசைவநெறியினைக் காத்திட


முனைந்தாரா? அல்லது தமிழ் மொழியினைக் காத்திட முனைந்தாராசீர்காழிதந்த திருவருட் செந்தமிழ்ச் செல்வர் திருஞானசம்பந்த பெருமான் ! இது ஆராயப்பட வேண்டிய பெரியதோர் விடயம் ஆகும்.  சம்பந்தப்பெருமான் புனிதவாய் மலர்ந்து அழுத காரணத்தால் வேதநெறி தளைத்தோங்கியது. மிகுசைவத்துறை விளக்கமுற்று நின்றது என்று சேக்கிழார் செப்பி நிற்பது நோக்கத்தக்கதாகும். அதே வேளை - நற்றமிழுக்கு இன்துணை ஞானசம்பந்தன்தலைமகனாகி நின்ற தமிழ் ஞானசம்பந்தன்தன்னொளி மிக்குயர்ந்த தமிழ் ஞான சம்பந்தன்,காழி நற்றமிழ் ஞானசம்பந்தன்என்றெல்லாம் சம்பந்தப் பெருமானே தன்னை தமிழுடன் இணைத்து நிற்பதும் நோக்கத்தக்கதே.

   குழந்தைப் பருவத்திலேயே இறைஞானம் சம்பந்தருக்கு கிடைத்து விட்டது. இறைவனே காட்சி கொடுத்து அருள்கொடுக்கும் வகையில் சம்பந்தர் திருவருட் செல்வராகி விடுகிறார். இதனால் குழந்தை ஞானி யாயும் ஆகிவிடுகிறார்.பக்தி இயக்கத்திலும் . தமிபழ்பரப்பும் இயக்கத்திலும் ;  சீர்காழிதந்த திருவருட் செந்தமிழ்ச் செல்வரின் வகிபாகம் மிகவும் முக்கியத்துவம் மிக்கதெனலாம். வேறு எந்தவோர் மொழியிலும் பக்திப் பாடல்கள் என்று சொல்லும் வகையில் எதுவுமே இல்லை எனலாம். தமிழ் மொழிக்கே மட்டும் உரித்தான ஒன்றாகவே பக்திப் பாடல்கள் விளங்குகின்றன. பக்திப் பாடல்களில் ஞானசம்பந்தப் பெருமானின் பாடல்களும் அவைதரும் பொருள்களும் சமூகத்துக்கு நம்பிக்கையையும்உற்சாகத்தையும்உத்வேகத்தையும்ஊட்டுவதோடு தமிழில் பல்வேறுவகையான உத்திகளையும் கவிதையில் தருவதோடு -நல்லதோர் தெளிவையும் நல்குவதாக இருக்கிறது என்பது மனமிருத்த வேண்டிய விடயமாகும்.

   இயற்கையின் அழகினை தமிழில் காட்டியது சங்கப் பாடல்களாகும். அதற்கு அடுத்தபடி



இயற்கையின் அழகினைக் காட்டும் பாடல்களை சம்பந்தம் பெருமானின் தேவாரப் பாடல்களில் காணமுடிகிறது என் பதும் குறிப்பிடப் படவேண்டியதே. இயற்கையைக் காட்ட முயன்றாலும் அதனூடாக இறைவன் உறையும் தலத்தையும் , இறைவனின் அருள் திறத்தையும் காட்டிடுவதிலும் பெரும் கவனமாகவும் இருக்கிறார் என் பதும் மனங்கொள்ளத் தக்கதாகும். ஞானசம்பந்தப் பெருமான் 16000 பதிகங்கள் பாடியிருக்கிறார் என்று நம்பியாண்டார் நம்பி குறிப் பிட்டாலும் தற்போது கிடைக்கும் மொத்தப் பாடல்கள் 4181 மட்டுமே யாகும். 23 பண்களில் ஏறத்தாள 110 சந்தங்களில் பாடல்களைத் தந்து ள்ளார். சம்பந்தப் பெருமானை  "சந்தத்தின் தந்தை " என்றே அழைக் கலாம்.யமகம்மடக்கினைக் கையாண்டதோடு சித்திரக்கவி என் பதனையும் முதலில் தொடக்கிய பெருமைக்கும் சம்பந்தப் பெருமான் உரித்துடையவராகிறார்.சம்பந்தப் பெருமானின் சந்தம் விளையாடும் தமிழ்ப் பாடலகள் பின்னர்வந்த அருணிகிரியாரின் சிந்தனைக்கும் உரமாய் அமைந்திருக்கலாம் என்றும் எண்ணத் தோன்றுகிறது அல் லவா !

   சம்பந்தம் பெருமான் வாழ்ந்த சூழல் சைவத்தை - சமணமும் பெளத் தமும் நசுக்கி இல்லாமலே செய்யும் நெருக்கடி நிலை நிலவிய கால மெனலாம். சமணமும் பெளத்தமும் துறவையும் அறத்தையுமே வலியு றுத்தி இல்லறத்தை ஒதுக்கி பெண்மையை புறந்தள்ளி யாவுமே மாயை என்று காட்டி நின்றன. கலைகளை இகழ்ந்தன. இசையை வெறுத்தன. ஆடல் பாடல்கள் ஒதுக்கப்பட்டன. இந்த நிலையில் குழந்தையிலே அம் மையின் ஞானப்பாலினை அருந்தி ஞானம் கைவரப் பெற்றவரான திரு ஞானசம்பந்தர் வருகை பெருந்திருப்புமுனையாக அமைகிறது எனலாம்.

                  மண்ணில் நல்லவண்ணம் வாழலாம் வைகலும்

                  எண்ணில் நல்லகதிக்கு யாதுமோர் குறையிலை 

                  கண்ணில் நல்லஃதொறும் கழுமல வளநகர்

                  பெண்ணில் நல்லாளொடும் பெருந்தகை இருந்ததே 

 

 எந்தப்பெண்ணை சமணமும் பெளத்தமும் ஒதுக்கியதோ மண்ணிலே நல்ல வாழ்வைப்பற்றியே காட்ட முயலா சமணமும் பெளத்தமும் இருந்ததோ அந்த நிலையைத் தகர்த்தெறிந்து மண்ணிலே நல்ல வண் ணம் வாழலாம். பெண்மையால் உயர்வு பெறலாம் என்று இறை வனுடன் இறைவியை இணைத்துக்காட்டி விடிவெள்ளியாய் நம்பிக்கை யை ஊட்டியவர்தான் சீர்காழிதந்த திருவருட் செல்வர் திருஞான சம் பந்தர். தாய்மையின் தெய்வீகத் தன்மையினை சம்பந்தப்பெருமான் தனது பாடல்களில் காட்டுவதை தலையாய நோக்கமாகக் கொண்டி ருந்தார் என்று தமிழறிஞர் தெ.பொ. மீ அவர்கள் சுட்டிக் காட்டுவதும் மனமிருத்த வேண்டிய கருத்தெனலாம். இந்த உலகத்தில் நல்லபடி வாழமுடியும் என்னும் நம்பிக்கையை ஊட்டி நல்லகதி அடைவதற்கு எவ்வகையான குறையும் இல்லை என்னும் துணிவை ஊட்டுகிறார் சம்பந்தப் பெருமான். அவரின் பாடல்கள் சோர்வையோ கலக்கத்தை யோதுன்பத்தையோ தரும்வகையில் அமைந்திருக்க வில்லை என்பது ம் குறிப்பிடத் தக்கதே எனலாம். 

    பெரியபுராணமே திருவருட் செல்வர்களின் பெருமைகளை எடுத்துச் சொல்லி நிற்கிறது எனலாம். திருவருள் பெற்றவர்களைக் கண்டறிந்து தெய்வப் புலவர் சேக்கிழார் பெரியபுராணம் வாயிலாக பலவற்றை எடுத்துக் காட்டியிருக்கிறார் என்பதை மறந்துவிட முடியாது.ஆனாலும் திருவருட் செல்வர்களின் வரலாறு கூறவந்த சேக்கிழார் அவர்கள் பெரியபுராணத்தில் பெரும்பகுதியை சீர்காழிதந்த திருவருட் செல்வரு க்கே கொடுத்து விடுவதைக் காண்கிறோம். இதனாலன்றோ "பிள்ளைபாதி புராணம்பாதி " என்று புகலும் நிலையே உருவானது எனலாம். சம்பந்தப் பெருமானை ஏன் இப்படி காட்டவேண்டிய தேவை சேக்கிழாருக்கு ஏற்பட்டது என்பது மிகவும் முக்கியமான விடயமாகும். 

      சம்பந்தப் பெருமானைக் காட்டும் பொழுதே சேக்கிழார் " வேதநெறி தளைத்தோங்க மிகுசைவத்துறைவிளங்க பூதபரம்பரை பொலிய புனித வாய் மலர்ந்தழுத " என்றுதான் காட்டுகிறார். இங்கு சொல்லப்பட்ட சொற்கள் மிகவும் முக்கியமானவை. வேதநெறி தளைத்தோங்க என் றால் இதற்கு முன் வேதங்கள் இருக்கவில்லையாசம்பந்தர் வந்து தான் வேதநெறியினை தளைத்தோங்கச் செய்யப் போகிறாரா என்னும் ஐயம் எழுகிறதல்லவாசம்பந்தப் பெருமானே வேதநெறியில் வந்து தித்த பிராமணப் பிள்ளை. ஏற்கனவே வேதங்களும் அவற்றின் வழிவந் தவர்களும் அந்த நெறியும் இருக்க சம்பந்தர் எவ்வாறு " வேதநெறி தளைத்தோங்க " வந்தவராக முடியும் 

   வேதநெறி இருந்ததுதான். ஆனால் சம்பந்தர் காட்டும் வேதநெறிசம்பந்தர் தளைத்தோங்க வைக்கும் வேதநெறி வேறுபட்டதாகும். அது சிவம் சம்பந்தப்பட்டது. சைவம் சம்பந்தப்பட்டது. இதனால் இந்தப் புது நெறியினை தளைக்கச் செய்யவும் அதன்வழி சிவம்சம்பந்தமான சைவம் என்னும் நெறியினை தளைக்கச் செய்யவுமான பெரும்பணி யினை ஆற்றுவதற்கே சம்பந்தக் குழந்தை அழுதது.அம்மை அப்பனை க்கண்டது. அமுதமாம் ஞானப் பாலினை அருந்தியது. சிவஞானக் கொழுந்தாகி ஒளிவிட்டு பிரகாசித்தது என்பதையெல்லாம் சேக்கிழார் காட்டும் இப்பாங்குதான் திருவருளின் சிறப்பும் திருவருட் செல்வரின் சிறப்பும் எனலாம்.

 

          சிவனடியே சிந்திக்கும் திருப்பெருகு சிவஞானம் 

          பவமதனை அறமாற்றும் பாங்கினில் ஓங்கியஞானம் 

          தவமுதல்வர் சம்பந்தர் தாமுணர்ந்தார் அந்நிலையில் 

 

 என்று - ஞானப்பால் உண்ட நிலையினை காட்டுகிறார் சேக்கிழார் பெருமான். ஞானப்பால் உண்டதனால் " சிவனடியே சிந்திக்கும் திருப்பெருகு சிவஞானம் " வந்துவிட்டது என்கிறார். வேதநெறியிலே வந்த சம்பந்தப் பெருமான் - சிவநெறியான வேதநெறியினை தளைத்தோங்க வந்தார் என்று சொல்லுவதும் சைவநெறி தளைத் தோங்க வைக்க வந்தார் என்பதும் வேதநெறிக்கும் சைவநெறிக்கும் பாலமாகவும் அதேவேளை - நான்கு வேதங்கள் காட்டிநிற்கும் வேத நெறியை விட்டு சிவனை முழுமுதலாகக் கொண்ட  வேத நெறியினை சைவ நெறியுடன் இணைத்து ஓங்கச்செய்யவே திருவருட் செல்வராக திருஞானசம்பந்தப் பெருமான் அவதரித்தார் என்பதுதான் சேக்கிழாரின் நோக்காகும். 

   வைதிக மரபில் தோன்றிய சீர்காழி திருவருட் செல்வர் அந்த வைதிக மரபை மாற்றி சிவனுக்கு வேள்வியையும் சிவ வணக்கத்தையும் ஏற் படுத்தி வடமொழியை விட்டு தமிழ் மொழியில் வழிபாடு ஆற்றும் புதுவழியை புரட்சியை உருவாக்கி ஞானக்கொழுந்தாய் நிமிர்ந்து நிற்கிறார். செந்தமிழை வழிபாட்டு மொழியாக்கிய வேதியரின் பிள்ளை யான ஞானசம்பந்தப் பெருமான் செயலை எண்ணி எண்ணி வியக்கவேண்டி இருக்கிறதல்லவாஇன்று தமிழில் வழிபாடா வட மொழியில் வழிபாடா என்றெல்லாம் வாதப்பிரதி வாதங்கள் எழும் நிலையில் இவையாவற்றுக்கும் பிராமணப் பிள்ளையும்கோவில் குருக்களின் தவப்புதல்வனும் ஞானவானுமாகிய சீர்காழிதந்த திருவருட் செந்தமிழ்ச் செல்வரே பல நூற்றாண்டுகளுக்கு முன்னர் தக்க பதிலை பொருத்தமான முறையில் தந்திருக்கிறார் என்பதை யாவரும் மனமிருத் துவதும் சிந்திப்பதும் மிக மிக முக்கியமாகும். 

 

  ஞானப்பால் உண்டதும் அவரின் நாவினால் வெளிப்பட்டதே

 

   " தோடுடைய செவியன் விடையேறியோர் தூவெண்மதி சூடி "  என்னும் 

 

 செந்தமிழ் வார்த்தைகளே என்பது மனங் கொள்ளத் தக்கதாகும். நற்றமிழ் வல்ல ஞானசம்பந்தனாக இருப்பதையே அவர் விரும்பினார். வேதமரபில் வந்தவரே 

 

                   " காத லாகிக் கசிந்துகண் ணீர்மல்கி 

                      ஓது வார்தமை நன்னெறிக் குய்ப்பது

                      வேதம் நான்கினும் மெய்ப்பொரு ளாவது

                      நாதன் நாமம் நமச்சி வாயவே "  

 

   வேதத்திலும் உயர்ந்தது சிவனைக்குறிக்கும் " நமச்சிவாயவே " என்றும் அந்த நாமத்தை உச்சரித்தால் " நன்னெறிக்கே " இட்டுச் செல்லும் என்று  துணிந்து கூறி தமிழின் ஆற்றலை வெளிப்படுத்தி அதனை சிவவழிபாட்டுடன் இணைத்து நிற்பதும் யாவரும் மனமிருத்த வேண்டியதேயாகும். 

       வைதிக மரபில் வந்தவர்  வேதங்களை அறிந்தவர்கோவில் பூசகரின் மகனாக இருந்தவர் - ஆனாலும் செந்தமிழையே நேசித்தார். செந்தமிழினால் எல்லாம் சிறப்புறும் என்றும் நம்பினார்.செந்தமிழினால் பல அற்புதங்களையும் நிகழ்த்திக் காட்டினார். இது சைவ நெறிக்கும் சைவ பக்தி இயக்கத்துக்கும் பெரும் வலிமையையும் உத்வேகத்தையும் கொடுத்தது என்றே சொல்லலாம். 

     பாம்பு தீண்டி இறந்த வணிகனை " சடையாய் யெனுமால் சரண் நீ யெனுமால் " என்று பாடியெழுப்பியதும் திருமறைக்காட்டில் கதவை மூடிட பாடியதும்,  பாண்டியன் வெப்புநோய் தீர்ந்திட " மந்திரமாவது நீறு வானவர் மேலது நீறு " என்று பாடியதும்,  ஆண் பனைகளைப் பெண் பனையாக்கிட " பூந்தேர்ந் தாயன கொண்டுநின்  பொன்னடிக்கே " என்று பாடியதும்மயிலாப்பூரில் இறந்து சாம்பலாக இருந்த பூம்பாவை என்னு ம் பெண்ணை " மட்டிட்ட புன்னையங் கானன் மடமயிலை " என்று பாடி உயிர்பெறச் செய்ததும் செந்தமிழ் பாட்டுக்களே என்பது மிகவும் முக் கியமான விடயமாகும். தமிழுக்கு எந்தளவு ஆற்றல் இருந்தது என்பதை சீர்காழிதந்த திருவருட் செந்தமிழ்ச் செல்வர் நிரூபித்துக் காட்டியிருக் கிறார் என்பது சைவத்தின் பெருமையும் தமிழின் பெருமையும் தமிழு க்கு இறைவனே வசமாகி அருள் கொடுத்தான் என்பதும் நினைத்துப் பார்க்கவே மிகவும் பெருமையாக இருக்கிறது அல்லவா ! 

   தமிழை வழிபாட்டுக்கு உரியதாக்கியதோடு மூடநம்பிக்கைகளையும் களைந்திடவும் முனைந்தார். சாதிவேறுபாட்டை அவர் விரும்பினார் இல்லை. " வேயுறு தோளி பங்கன் விடமுண்ட கண்டன் " பதிகத்தில் கோள்களினால் இடையூறு வருமென்று நம்ப வேண்டாம். விஷத்தையே உண்ட சிவபெருமானே உள்ளத்தில் இருக்கையில் கோள்களால் எது வுமே ஆகிவிடாது. " ஆசறு நல்ல நல்ல அவைநல்ல நல்ல - அடியார் அவர்க்கு மிகவே " என்று நம்பிக்கை நவில்வது சம்பந்தப் பெருமானின் இறைபக்தியையும் , இறை பக்திக்கு முன்னால் நாளென்ன செய்யும் ? கோளென்ன செய்யும் ? என்னும் பக்தியின் வைராக்கியத்தையும், மூடத் தனமாக எண்ண வேண்டாம் என்னும் சிந்தனையையும் வெளிப்படுத்தி நிற்கிறது அல்லவா ?

  தீண்டத்தகாத குலத்தவராக இருந்த திருநீலகண்டர் என்னும் யாழ் வாசிப்பவரை தான் செல்லும் எல்லா இடங்களுக்கும் கூட்டியே சென் றார். அதுமட்டுமன்றி பிராமணர்கள்  வாழும் தெருக்களுக்கும் வீடுகளு க்குமே அழைத்தும் சென்றார். திருநீலகண்டர் உள்ளே நுழைந்தால் - பிராமணர்கள் வளர்க்கும் வேள்வித்தீ அவிந்து குற்றம் ஏற்பட்டுவிடும் என்னும் எண்ணத்தை உடைத்தெறிந்து - அவரை வேள்வித்தீ இடம் பெறும் இடத்துக்கே அழைத்துச் சென்று முன்னரிலும் வேள்வித்தீ சுடர்விட்டு பிரகாசிக்கும் நிலையினைக் காட்டி , தீண்டாமை என்னும் வழக்கினை சிதறடிக்கச் செய்துநின்றார்.

  சீர்காழிதந்த திருவருட் செந்தமிழ்ச்செல்வர் திருஞானசம்பந்தப் பெருமானின் பெருமையால் அவரை முருகனின் அவதாரம் என்றும் அழைத்தனர் என்பதும் நோக்கத் தக்கதாகும். முத்தமிழ்க் கடவுளாய் முருகப்பெருமனைத் தமிழர்கள் கொண்டாடிப் பெருமைப் படுவதையும் மனமிருத்தல் வேண்டும். ஆதிசங்கரரே " திராவிடச் சிசு " என்று விதந்தார் என்றும் அறிய முடிகிறது. இறைவனின் அருள் பெற்ற திருவருட் செல்வர்கள் என்னும் வகையில் பலர் சைவத்தில் இருந் தாலும் சீர்காழிதந்த திருவருட் செந்தமிழ்ச் செல்வரான திருஞான சம்பந்தப் பெருமான் மிகவும் சிறப்பும் பெருமையும் உடையவராக விளங்குகிறார் என்பதை மனமிருத்தல் வேண்டும்.

   சைவச் சான்றோர்கள் பலர் இருந்தாலும் சம்பந்தப் பெருமான் அவர்களுக்குள் தலையானவராகவே விளங்குகிறார் என்பதை மறுத் துரைத்துவிட முடியாது. சம்பந்தப் பெருமானின் பின்னே வந்தவர்கள் எல்லோருமே அவரைப் போற்றிப் புகழ்ந்திருப்பதைக் காணமுடி கிறது.சம்பந்தப் பெருமானின் உள்ளத்தில் இருந்து வெளிவந்த  பாடல்கள் அனைத்துமே தெய்வத் தீந்தமிழ் பொக்கிஷங்களே ஆகும். வேத நெறி தளைத்தோங்க - மிகு சைவத்துறை விளங்க மட்டும் சம்பந்தப் பெருமான் இம்மண்ணுக்கு வரவில்லை - செந்தமிழினை இன்னிசையால் பரப்பிடவும் வந்தார் என்பதை மனமிருத்துதல் அவசி யமேயாகும்.எனவே அவரை  திருவருள் மிக்க செந்தமிழ்ச் செல்வர்  திருஞான சம்பந்தர் என்று ஏற்றிப் போற்றுவதுதான் சாலச் சிறந்ததாகும் !

No comments: