அரைநூற்றாண்டுக்கு முன்பிருந்தே நீளும் கரங்கள் அவதானி


லங்கையில் உருவாக்கப்பட்டிருக்கும் போர்ட் சிட்டி என்ற துறைமுக நகரம்,  சமகால கொரோனோவுக்கு மத்தியில் பரவலாக பேசுபொருளாகியிருக்கிறது.

மக்களும் அரசும் அக்கறையோடு சிந்தித்து செயலாற்றினால், கொரோனோ கட்டுப்பாட்டுக்குள் வந்துவிடும். அல்லது காலப்போக்கில் மறைந்துவிடும்.

ஆனால், போர்ட்சிட்டியை கட்டுப்படுத்தவும் முடியாது. காலப்போக்கில் அது எத்தகைய விளைவுகளை உருவாக்கும் என்பதையும் சொல்லமுடியாது.

நாடாளுமன்றத்திலும்  விவாதப்பொருளாகி வாக்கெடுப்பில்


அரசு வெற்றிபெற்றுள்ளது.

குறிப்பிட்ட   துறைமுக நகர  ஆணைக்குழு சட்டமூலத்திற்கு அரசின் அமைச்சரவையும் அங்கீகாரம் வழங்கியிருந்தாலும், உச்சநீதிமன்றம் விதந்துரைத்துள்ள திருத்தங்களை ஏற்றுக்கொள்வதற்கும் அமைச்சரவை இணங்கியிருக்கிறது.

இடையில் பிரதமர் மகிந்த ராஜபக்‌ஷ ஒரு செய்தியை சொன்னார்.  போர்ட் சிட்டியில் இலங்கையர்களுக்கு 75 சதவீதம் வேலை வாய்ப்பு வழங்குவதற்கு சீனாவுடன் பேச்சு வார்த்தை நடத்தப்படும் என்பதுதான் அச்செய்தி.

ஏற்கனவே அம்பாந்தோட்டை துறைமுகம் சீனாவுக்கு தாரை வார்க்கப்பட்டிருக்கும் பின்னணியிலிருந்து மட்டுமல்ல,  சுமார் அரைநூற்றாண்டு காலத்திற்கு முன்பிருந்தே, சீனாவின் கரங்கள் இலங்கையில் நீண்டு வந்திருக்கும் வரலாற்றிலிருந்தும்  புதிய துறை முகநகரத்தை நாம் அவதானிக்க முடியும்.

  1970 ஆம் ஆண்டு பதவிக்கு வந்த ஶ்ரீமாவோ


பண்டாரநாயக்காவின் தலைமையிலான கூட்டராசாங்கத்தின்  காலத்தில்தான்  கொழும்பு – 07 இல்  கறுவாக்காடு என்ற செல்வந்தர்கள் வாழும் பிரபலமான பகுதியில்  பண்டாரநாயக்கா ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்திற்கான அடிக்கல் நாட்டப்பட்டது.

இது முழுக்கமுழுக்க சீன அரசின் உதவியுடன் நிர்மாணிக்கப்பட்ட பிரம்மாண்டமான மண்டபம்.  அதே மண்டபத்தில்தான் ஶ்ரீமா, அணிசேரா நாடுகளின் உச்சி மாநாட்டையும் நடத்தி, சில வருடங்கள் அதன் தலைவியாகவும் விளங்கினார்.

அணிசேரா  நாடுகளில் பிரிட்டன்,  சீனா, அமெரிக்கா, ஜெர்மன்,


கனடா, பிரான்ஸ் முதலான வல்லரசுகள் அங்கம் வகிப்பதில்லை.

குறிப்பிட்ட  சர்வதேச மாநாட்டு மண்டபத்திற்கான அடிக்கல் நாட்டும் வைபவத்தில் சீனப்பிரதமர் சூஎன்லாயும் கலந்துகொண்டார்.  இரண்டு நாட்டுப் பிரதமர்களும் மண்வெட்டியால் நிலத்தைக்கொத்திய காட்சிகளும் அக்காலப்பகுதியில் ஊடகங்களில் வெளியானது.

சீனாவுக்கும் ரஷ்யாவுக்கும் ஏழாம் பொருத்தம் இருந்த அக்காலத்தில்,  ரஷ்யாவும் அன்றைய ஶ்ரீமா அரசையும் அவரது ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சி ஆதரவாளர்களையும் திருப்திப்படுத்துவதற்காக காலிமுகத்திடலில் அமைந்திருந்த நாடாளுமன்ற வளாகத்தில் ஏற்கனவே ஒரு பண்டாரநாயக்கா சிலை இருக்கத்தக்கதாக மற்றும் ஒரு புதிய வெண்கலச்சிலையை நிர்மாணித்து அனுப்பியது.  அதனை வடிவமைத்தவர் சோவியத் நாட்டைச்சேர்ந்த சிற்பி லெவ் கேர்பிள்.

அக்காலப்பகுதியில் கொழும்பில் இயங்கிய சோவியத் தகவல் பிரிவிலிருந்து ( நவஸ்தி ) வெளியான சோவியத் நாடு என்ற இரு மொழி ( தமிழ் – சிங்களம் )  மாத இதழில் அந்தச் சிலையை வடிவமைத்தவர் பற்றிய செய்திகள் படங்களுடன் வெளிவந்தன.


1965 ஆம் ஆண்டு காலத்தில்  கட்டுநாயக்கா விமான நிலையம் புனரமைக்கப்பட்டபோது,  அவ்வேளையில் பிரதமராக பதவியிலிருந்த  ஐக்கிய தேசியக்கட்சியின் டட்லி சேனா நாயக்கா அதனை திறந்துவைத்தார்.

கொழும்பு வீதியிலிருந்து கட்டுநாயக்காவில் வலதுபக்கமாக திரும்பும் விமான நிலையத்திற்கான  பாதைக்கு கனடா – இலங்கை நட்புறவுப்பாதை என்றும் பெயர் சூட்டப்பட்டது.  காரணம் அந்த விமானநிலையம் புனரமைக்கப்படுவதற்கு கனடா அரசு இலங்கைக்கு உதவியது.

பின்னாளில் 1970 இல் ஶ்ரீமாவோ பண்டாரநாயக்கா பிரதமரானதும் அந்த விமானநிலையம்    பண்டார நாயக்கா சர்வதேச விமான நிலையம் என்ற பெயருக்கு மாற்றப்பட்டது.

முன்னர் கட்டுநாயக்கே என்று அந்த விமான நிலையத்தில் ஒலிபெருக்கிகளில் ஒலித்த சொல், பிறகு பண்டாரநாயக்கே என்று மாறியது.

எப்படியோ இரண்டிலும் நாயக்கே வந்துவிட்மையால் அறிவிப்பாளர்களுக்கும் சிரமம் இருக்கவில்லை.

சீனர்கள் கடும் உழைப்பாளிகள்.  துரிதமாக வேலை செய்யக்கூடியவர்கள்.  பண்டாரநாயக்கா ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபம் அமைக்கப்பட்டபோது, அங்கு பணியாற்றிய ஒரு சீன கட்டிடத்தொழிலாளி நாளொன்றுக்கு  எட்டு மணி நேரத்திற்குள் இரண்டாயிரம் செங்கற்களை வைத்து சீமெந்து பூசி நிர்மாணவேலைகளை மேற்கொண்ட செய்திகள் அவ்வேளையில் ஊடகங்களில் வெளிவந்தன.

இவ்வாறு அரைநூற்றாண்டுக்கு முன்பிருந்தே,  அன்றைய சீனப்பிரதமர்  சூஎன்லாய் காலத்திலிருந்து இன்றைய சீன அதிபர் ஷி ஜின்பிங்கின் காலம் வரையில் படிப்படியாக சீனாவின் கரங்கள் இலங்கையை நீட்டியவாறே இருக்கின்றன.

இதுஇவ்விதமிருக்க, இலங்கையில் வீதி நிர்மாணம், மற்றும் கரும்பு பயிர்ச்செய்கை முதலானவற்றிலும் சீனா முதலீடு செய்துள்ளது.

கரும்பு உற்பத்திக்கு வழங்கப்படும் நிலங்களின் நிலத்தடி நீரை கரும்பு வேகமாக உறிஞ்சுவதனால்,  மக்களின் குடிநீருக்கு தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் குறித்தும் சில வருடங்களுக்கு முன்னர் பேசப்பட்டது.

இவ்வாறு நிலத்தை, வீதியை, இந்து சமுத்திரத்தை , கட்டிட நிர்மாணங்களை படிப்படியாக ஆக்கிரமித்து வரும் சீனா,  இலங்கை பொலிஸ் நிலையங்களில் நவீன தொடர்பாடல் வசதிகளை மேம்படுத்துவதற்கும் சாதனங்களை அன்பளிப்புச் செய்துள்ளது.

சட்டமா அதிபர் திணைக்களத்தில் இலத்திரனியல் நூலகமும் சீன அரசின் உதவியுடன் அமைக்கப்பட்டுள்ளது.  அதனால், அங்கு காணப்பட்ட  காட்சிப்பலகையில் சீன மொழியும் இடம்பெற்றது.

படிப்படியாக வீதிகளுக்கும் நகரங்களுக்கும் சீனமொழி பிரவேசித்துவருவதிலிருந்து  இலங்கை எங்கிருந்து எங்கே செல்கிறது என்பதை அவதானிக்கலாம்.

வடக்கு – கிழக்கில் இராணுவத்தின் பிரசன்னத்தை, யுத்தம் முடிந்த பின்னரும் அதிகரித்த அரசுகள் அதில் பணியிலிருக்கும் சிங்கள பெளத்த இராணுவத்தினரின் வழிபாட்டுத்தேவைக்காக புத்த விகாரைகளை கட்டத் தொடங்கியதை கவனித்திருப்போம்.

யாழ்.ரயில் நிலையத்தில் சிற்றுண்டிச்சாலை நடத்துபவர்கள் பெரும்பான்மை இனத்தைச்சேர்ந்த சகோதரர்கள்தான்.

இது போன்ற தேவைகள் போர்ட் சிட்டியின் ஊடாக வரவிருக்கும் சீனர்களுக்கும் உருவாகும்.  ஊருக்கு ஊர் சீன சிற்றுண்டிச்சாலைகள் ( Chinese Restaurant ) முளைக்கும் சாத்தியங்கள் உண்டு.

சைனா டவுன், சைனா பஸார் பார்த்தவர்கள் அல்லவா நாங்கள்.

விரைவில் விமான நிலையங்கள், ரயில் நிலையங்களிலும் சீன மொழியில் ஒலிபரப்புச்சேவைகள் நிகழும் எனவும்  எதிர்பார்க்கலாம்.

சீன அதிபரின் பதவிக்காலத்தை எதிர்வரும்  2023 ஆம் ஆண்டிற்குப்பின்னரும் நீடித்துக்கொள்வதற்கு ஏற்றவாறு அந்நாட்டின் ஆளும் கம்யூனிஸ்ட் கட்சி பரிந்துரை செய்திருக்கும் செய்தி, இலங்கையில் ராஜபக்‌ஷ சகோதரர்களின் அரசுக்கு பால்வார்க்கும்.

பிரதமர் மகிந்த ராஜபக்‌ஷ கடந்த ஆண்டு பதவியேற்றசமயத்தில்,  அந்த நிகழ்வு களனி ரஜமகா விகாரையில் நடந்தபோது, சீன அதிபரின் வாழ்த்துச்செய்தியை இலங்கை சீனத்தூதரகம் கையளித்ததையும் நாம் மறந்துவிடலாகாது.

---0---

( நன்றி:  யாழ். தீம்புனல் )

 

No comments: