மணி விழாக்காணும் செந்தண்மை அந்தணர் சிவத்திரு ஆறு திருமுருகன் அவர்களை வாழ்த்துவோம்!

   

                                                   

                    சிவமயம்

மணிவிழாக் காணும்திரு முருகா சிவனாம்

மன்றுளாடி அருளருள மாண்புடன் வாழி!

       


………. பல்வைத்திய கலாநிதி பாரதி இளமுருகனார்தணியாத சிவப்பணியும் தமிழின் பற்றும்

     சலிவடையாப் பொதுப்பணியும் சகத்திலுன் வாழ்வாய்த்

துணிவாக ஏற்றுநீயும் சோர்விலா உளத்தொடு

     சுந்தரனே இயற்றிவரும் பாங்கினைக்; கண்டோம்

பணிவோடு உன்னடிகள் வணங்கு கின்றோம்!

     பகலிரவாயச்; சேவைசெய்து பத்தா றாண்டு

மணிவிழாவைக் காணுந்திரு முருகா சிவனாம்

     மன்றுளாடி அருளருள மாண்புடன் வாழி!

 

 

செந்தண்மை அந்தணனே முற்பி றப்பில்

     சிறியேம்நாம் செய்திட்ட நல்வி னையால்

அந்திவண்ணன் புவிக்களித்த அருட்கு மாரா!

     ஆதரிப்போர் இன்றிவாடும் அவலமுற் றேர்க்குச்

சொந்தவுன்றன் வாழ்வதனைத் தியாகஞ் செய்து

     தூயவழி காட்டிவந்த பெற்றி என்னே!

விந்தையெனத் தூயபணி விரும்பிய்ச் செய்து 

      வெற்றிகண்டாய்! வித்தகனே வாழி வாழி!

 

 

 

பொங்கிவரும் சிவப்பொலிவுன் முகமே சொல்லும்!

     பூசும்வெண்  நீறிதயத் தூய்மை காட்டும்!

தங்குதடை யின்றியுன்வாய் என்றும் பொழியும்

     தமிழதனின் இனிமைதனைச் செப்பா நிற்கும்!

பங்கம்வர வொருவரையும் பகையா வுள்ளம்

     பரம்பொருளை விட்டகலா நெறியைப் பேசும்!!

சங்கரனின் அருள்பெற்றுப் பொதுப்பணி இயற்றிச்

     சரித்திரம்ப டைத்ததிரு முருகா வாழி!

 

 

திருநெறிய செந்தமிழாம் தேன்பில்கும் சுவையூறும்

    தெய்வமணம் கமழ்ந்திடுமோர் சிவம்வளர்க்கும் பெற்றியதாய்

மருள்நீக்கி மன்பதையை வழிநடத்தும் திறங்கொண்ட

    மணிவாசகர் அருட்பாடல் அத்தனையும் ஒளிகால

வருஞ்சைவச் சந்ததிக்கோர் வரப்பிரசாத மாயமையும்

    வளஞ்சுமந்த திருவாசக அரண்மனையை  வடிவமைத்தாய்!

பெருமைமிகு உலகம்வதி பேரன்புச் சைவரெலாம்

     பிறங்கிவாழ்த்த  ஆறுதிரு முருகாநீ வாழியவே! 

No comments: