எழுத்தும் வாழ்க்கையும் - அங்கம் - 37 நாடக மேடை அனுபவங்கள்: கற்றதும் பெற்றதும் ! தெரிந்த தொழிலை விட்டவனும் கெட்டான், தெரியாத தொழிலை தொட்டவனும் கெட்டான் ! முருகபூபதி

 


எனது  எழுத்தும் வாழ்க்கையும் தொடரில் , இந்த அங்கத்தை எழுதாமல் கடந்து  செல்லமுடியாது.  இயல், இசை, நாடகம் என்ற முத்தமிழில் பங்களிப்பினை வழங்காத படைப்பாளிகளோ கலைஞர்களோ இருக்கமாட்டார்கள். 

அதனால் நானும் விதிவிலக்கல்ல.

மனனம் செய்வது வேறு,  கிரகிப்பது வேறு.  என்னால்


எதனையும் மனனம் செய்யமுடியாது.  ஆனால், மற்றவர்கள் பேசும்போது   அந்தப் பேச்சின் சாராம்சத்தை உள்வாங்கி, கிரகித்து மனதில் தேக்கிக்கொள்வேன்.

ஆரம்ப பாடசாலையில் படிக்கும்போது, எமது ஆசிரியர் நிக்கலஸ் அல்பிரட், ஒரு சமயம் மதுவிலக்கு வாரத்தை முன்னிட்டு, குடி கெடுக்கும் குடி என்ற நாடகத்தை எழுதி இயக்கும்போது, அதில் வரும் தாய் பாத்திரத்திற்கு  மாணவிகளை தெரிவுசெய்ய முயன்றபோது, எவரும் முன்வரவில்லை.

அவர்களை பெற்றவர்களும்  அதற்குச் சம்மதிக்கவில்லை. இறுதியில் அந்த அம்மா வேடத்திற்கு நான்தான் கிடைத்தேன்.

வெட்கத்துடன் நடித்தேன். எனது அம்மாவின் சேலையும் ரவிக்கையும், செயற்கையான கூந்தலும் கிடைத்தது.  எனது அக்கா எனக்கு ஒப்பனை செய்தார்.

குடிகார மகன் தொல்லை தாங்க முடியாமல், அந்தத்தாய் ஒரு வீட்டில் வேலைக்காரியாக தஞ்சமடைகிறாள். குடிப்பதற்கு பணம் தேடி அலையும் மகன், அந்த வீட்டில் திருடச்சென்றபோது,  இருட்டிலே தனது தாய் என்று தெரியாமல், அவளை கத்தியால் குத்திவிட்டு திருடுவதற்கு முயற்சிப்பான்.

இருட்டிலே அவனது ஸ்பரிசத்தால், வந்திருப்பது மகன் என்று


தெரிந்த தாய்,  “  குடி உனது கண்ணை மறைத்துவிட்டதா..? “   என்று கேட்பாள்.  அவனுக்கு ஞானம் பிறக்கிறது. அவனது மடியில் தாயின் உயிர்பிரிகிறது.

இதுதான் கதை.  பாடசாலை ரக நாடகம்.

இறக்கும் காட்சி வருவதனால் எனது அம்மாவுக்கு நான் அதில் நடிப்பது விருப்பம் இல்லை.  தலைமை ஆசிரியர் பண்டிதர் மயில்வாகனம் எமது குடும்ப நண்பர். அவர் ஒருவாறு சம்மதம் வாங்கிவிட்டார்.

மாணவர் இலக்கிய மன்றத்தில் மேடையேறிய அந்த நாடகத்தில் எனது உணர்ச்சிகரமான நடிப்பை  பார்த்துவிட்டு ஆசிரியர்களும் மாணவர்களும் பாராட்டினார்கள். அப்பொழுது எனக்கு பன்னிரண்டு வயது.

வீரபாண்டிய கட்டபொம்மனுக்கும் ஜாக்ஸனுக்கும் இடையே நடக்கும் விவாதக்காட்சியை  நாடகமாக்கியபோது,  நான் கட்டபொம்மனாகவும், தற்போது லண்டனில் வதியும் சண்முகநாதன் சபேசன் ஜாக்ஸனாகவும் நடித்தோம்.

ஆறாம் தரம் புலமைப்பரிசில் பெற்று யாழ். ஸ்ரான்லிகல்லூரிக்கு சென்றபின்னர்,  குடி கெடுக்கும் குடி நாடகத்தை நினைவில் வைத்திருந்து,  வசனம் எழுதி அங்கும் அதனை மேடையேற்றினேன்.

அதற்கு பெற்றமனம் என்று பெயர் வைத்து, மனதிலிலிருந்த


வசனங்களை நினைவுபடுத்தி எழுதினேன். அதில் அந்த அம்மா வேடம் தரிப்பதற்கு அங்கும் மாணவிகள் முன்வரவில்லை. பின்னர் வகுப்பாசிரியை என்னையே நடிக்கச்சொன்னார்.

1970 ஆம் ஆண்டிற்குப்பின்னர் நான் இளைஞனாக நீர்கொழும்பு இந்து இளைஞர் மன்றத்தின் பௌர்ணமி விழாவிற்காக எனது தம்பி ஶ்ரீதரன், மாமா மகன் குகானந்தன், வேறும் சில சிறுவர், சிறுமியரை வைத்து  திருநாவுக்கரசரும் ஞானசம்பந்தரும் என்ற நாடகத்தை மேடையேற்றுவதற்கு  தயாரானபோது எனது மாமா மகள் தேவசேனா அதற்கு வசனம் எழுதித்தந்தார்.

அதனை இயக்கினேன்.  பிறிதொரு பௌர்ணமி விழாவில்  அரிச்சந்திரன் மயான காண்டம் நாடகத்தை மேடையேற்றவிரும்பினோம்.

அதில்  சந்திரமதி வேடத்திற்கு நடிப்பதற்கு  எவரும் கிடைக்கவில்லை. பெண்கள் முன்வரத்தயங்கினார்கள்.  இறுதியில் அந்த பெண்வேடத்தையும் நான்  ஏற்கநேர்ந்தது.

அரிச்சந்திரனாக எனது நண்பர் இளமுருகதாஸ் நடித்தார்.


லோகிதாஸனாக எனது குடும்ப நண்பர்  இராசரத்தினத்தின் மகன் மோகன் நடித்தார்.

அதில் லோகிதாஸன் அரவம் தீண்டி இறக்கும் காட்சி வருவதனால், மோகனின் பெற்றோர் முதலில் தமது பிள்ளையை  நடிப்பதற்கு அனுப்பத்தயங்கினர்.

அவர்களை கெஞ்சி மன்றாடி அனுமதிபெற்றேன்.

மச்சாள் தேவசேனாவும், எனது தங்கையும் எனக்கு ஒப்பனை செய்தனர். இறுதிவரையில் நான்தான் சந்திரமதி என்பது வெளியே தெரியக்கூடாது என்று அந்த நாடகத்துடன் சம்பந்தப்பட்டவர்களிடம் வாக்குறுதி பெற்றிருந்தேன்.

மேடையில் அசல்  சந்திரமதியாகத்தோன்றி, இறுதிக்காட்சியில்  பெண்குரலில்  கதறிக்கதறி அழுது ஒப்பாரி வைத்ததைபார்த்த சபையோரால் அந்த சந்திரமதி நான்தான் என்பதை கண்டுபிடிக்கமுடியாது போய்விட்டது.

நாடகம் முடிந்ததும், அவசர அவசரமாக ஒப்பனை அறைக்குள்சென்று ஒப்பனையை கலைத்து, முகம் கழுவி உடை மாற்றிக்கொண்டு அமைதியாக சபைக்குள் வந்துவிட்டேன்.

சில  ஆண் இளவட்டங்கள், வாலிபத்துடிப்பில் ஒப்பனை அறைக்குள் நுழைந்து அங்கே உடைகளை மடித்துக்கொண்டிருந்த எனது மச்சாளிடமும் தங்கையிடமும், சந்திரமதியை விசாரித்திருக்கிறார்கள். 

 “ அந்தப்பிள்ளை நாடகம் முடிந்ததும் போய்விட்டது  “ என்று பொய் சொல்லியிருக்கிறார்கள்.  வந்தவர்கள் ஏமாற்றத்துடன் சிறிது காலம் அந்தப்பெண்ணைத்  தேடினார்கள்.

இனிமேல் நாடகத்தில் பெண்வேடம் தரிப்பதில்லை என்று அன்றே திடசங்கற்பம் பூண்டேன். அத்துடன் எனக்கும் நடிப்பிற்கும் வெகுதூரம் என்றும் ஒதுங்கியிருந்தவாறு நாடகங்கள் எழுதிக்கொடுப்பதோடு என்னை நானே கட்டுப்படுத்தினேன்.

பின்னாளில் எங்கள் ஊர் கலைஞரும் பாடகருமான பீட்டர் என்பவருக்காக சில  நாடகங்கள் எழுதிக்கொடுத்தேன். ஆனால்,  நடிக்க முன்வரவில்லை.

காரணம் என்னால் மனனம் செய்யமுடியாது.  நான் எழுதிய வசனங்களையே மனனம் செய்யமுடியாமல் திணறியிருக்கின்றேன்.  எழுதுவது வேறு மனனம் செய்வது வேறு.  பக்கம் பக்கமாக அயர்ச்சியின்றி எழுத முடியும், ஆனால், ஒரு சிறிய பந்தியைக்கூட என்னால் முழுமையாக மனனம் செய்யமுடியாது.

நடிகர் திலகம் சிவாஜிகணேசன் எப்படித்தான்  பல பக்கங்களை மனனம் செய்து ஏற்ற இறக்கத்துடன்  நாடகங்களிலும் திரைப்படங்களிலும் பேசினாரோ…?  என்ற திகைப்பு எனக்கு மட்டுமல்ல, மற்றவர்களுக்கும் இருக்கிறது !

நடிப்புக்கும் எனக்கும் வெகுதூரம் என்று தெரிந்தும், கொழும்பில் வேறும் சில நாடகங்களில் நடிக்கநேர்ந்தது.

கொழும்பில் வீ. ஆ. புரட்சி மணி என்பவர் எழுதிய உன் தந்தை யார்.?  என்ற நாடகத்தில் நடிக்கநேர்ந்தது. எனது பாத்திரம் ஏற்று நடித்துக்கொண்டிருந்த மலையகத்தைச்சேர்ந்த ஒரு இளைஞருக்கும் இயக்குநர் புரட்சிமணிக்கும் இடையே வந்த சச்சரவினால்  வந்த வினை.

அந்த இளைஞர் பல குரல் மன்னன்.  நடிகவேள் எம். ஆர். ராதாவின் இரத்தக்கண்ணீர் வசனத்தை அப்படியே அதே உச்சரிப்புடன் பேசுவார். ஒரு சமயம்  கல்கண்டு ஆசிரியர் தமிழ்வாணன் முன்னிலையில் அவ்வாறு பேசிக்காண்பித்து, ஈழத்து எம். ஆர். ராதா என்ற பட்டமும் பெற்றார்.

உன் தந்தையார் நாடகத்தின் ஒத்திகைகள் இலங்கை வானொலி கலையகத்திற்கு சமீபத்தில் அமைந்திருந்த தரங்கணி வளாகத்தில் நடந்தது.

எனினும் புரட்சி மணியின் நீண்ட வசனங்களை என்னால் மனனம் செய்து பேசமுடியவில்லை. அவரோ பத்திரிகையாளர்களிடம் நாடகம் மேடையேறும் திகதியை சொல்லி செய்தியும் வெளியிட்டுவிட்டார்.

அந்த இயக்குநரிடம்,  “ அந்தப்பாத்திரத்திற்கு வேறு ஆளைப்பாருங்கள்  “ என்று சொல்லி ,  நழுவி வந்துவிட்டேன்.  அந்த நாடகம் பின்னர் மேடையேறவில்லை.

1970 இற்குப்பின்னர், பல சிங்கள நாடகங்களை பார்த்தேன்.  குறிப்பாக சுப சக யச, கௌனி பாலம, மூது புத்து என்பவற்றை பார்த்து வியந்தேன்.  சிங்கள நாடகங்களில் சமூகப்பிரக்ஞை இருந்தது. சமகால அரசியல் பேசப்பட்டது.  ஆனால், தமிழ் நாடகங்கள் தமிழகப்பாணியில் நீண்ட வசனங்களுடன் யதார்த்தத்திற்கு புறம்பான நடிப்புடன் மேடையேறியதை அவதானித்தேன்.

வேலணை வீரசிங்கத்தின் தயாரிப்பில் புளுகர் பொன்னையா, வரணியூரானின் வசனத்தில் நகைச்சுவை நாடகமாக  கொழும்பிலும் எங்கள் ஊரிலும் யாழ்ப்பாணத்திலும் பல மேடையேற்றங்களை கண்டது. வரணியூரானின் பித்தலாட்டம் என்ற நாடகத்தையும் பம்பலப்பிட்டி சரஸ்வதி மண்பத்தில் பார்த்தேன்.

வரணியூரான் யாழ்ப்பாண பேச்சுவழக்கில் பெரும்பாலும் நகைச்சுவை நாடகங்களையே தயாரித்து இயக்கி மேடையேற்றினார்.

இலங்கை வானொலி நாடகங்களிலும்  பெரும்பாலும் இந்த யாழ்ப்பாண உச்சரிப்பை அவதானிக்கமுடிந்தது.

அதற்கு மாற்றாக மலையக மொழிவழக்கில், என். எஸ். எம். இராமையா,  கு. இராமச்சந்திரன் ஆகியோரின் நாடகங்


களுக்கு முன்னுரிமை வழங்கப்பட்டது.

எங்கள் நீர்கொழும்பூர் மீனவ மக்களின் பேச்சுத்தமிழில் நான் எழுதிய நம்பிக்கைகள் நம்பிக்கையற்றன  சிறுகதையை  வானொலி நாடக வடிவமாக்கிபோது,  நண்பர் வி. என். மதியழகன் தனது சங்கநாதம் நிகழ்ச்சியில் ஒலிபரப்புவதற்கு ஆவனசெய்தார்.

அத்துடன், சுமையின் பங்காளிகள் கதையை கே. எம். வாசகர் வானொலி நாடகமாக்கி ஒலிபரப்பினார்.

கொழும்பு கலைஞர்கள் சிலர் ஜெயகாந்தனின் உன்னைப்போல் ஒருவன், யாருக்காக அழுதான், கோமல் சாமிநாதனின் தண்ணீர் தண்ணீர் முதலான நாடகங்களை மேடையேற்றினர்.  அந்தனிஜீவா, இ. சிவானந்தன்,  நா. சுந்தரலிங்கம், மாவை நித்தியானந்தன்,  கலைச்செல்வன்,  சுகேஹர்  ஹமீட் ,  தாஸீஸியஸ், பாலேந்திரா முதலானோர் தரமான   நாடகங்களையும்  மேலைத்தேய,  இந்திய நாடகங்களையும்  மேடையேற்றினர்.

மழை, ஒரு பாலை வீடு,  ஏணிப்படிகள், பிச்சை வேண்டாம், ஐயா லெச்சன் கேட்கிறார், கண்ணாடி வார்ப்புகள், சக்காரம் பைண்டர் முதலான நாடகங்களை கொழும்பில் பார்த்தேன்.

அண்ணாவியார் இளைய பத்மநாதனின் ஏகலைவன் நாடகத்தை கதிரேசன் மண்டபத்தில் பார்க்கும்போது தோழர் சண்முகதாசனும் வந்திருந்தார்.

அதன் இறுதிக்காட்சி நிறைவுறும் தருணத்தில்  மண்டபத்தில் திரண்டிருந்த மக்கள் அனைவரும் எழுந்து நின்று கரகோசம் எழுப்பிய காட்சியை மறக்கமுடியாது !

கவிஞரும் கலைஞருமான இ. சிவானந்தன்  மாதம் ஒரு நாடகத்தை மேடையேற்றும் வகையில் ஒரு அமைப்பினையே சந்தா சேகரித்து உருவாக்கினார்.

ஆனால், 1983 கலவரம் அதற்கும் முற்றுப்புள்ளிவைத்தது.

இந்தப்பின்னணிகளுக்கு மத்தியில் மீண்டும் எனக்கு நடிப்புத்துறையில் மற்றும் ஒரு விபத்து நேர்ந்தது.

அந்த ஆண்டு 1979. 

மக்கள் விடுதலை முன்னணியில் நான் இணைந்திருந்த காலம்.  பாலசுப்பிரமணியம் என்ற இளைஞர் இயக்கத்திற்குள் வந்து சேர்ந்தார். அவர் சமநீதி இயக்கம் என்ற ஒரு அமைப்பினை உருவாக்கி, அதனை மக்கள் விடுதலை முன்னணியுடன் இணைக்க விரும்பினார்.

கேரளாவில்  ஒரு பல்கலைக்கழகத்தில் படித்து, நிறைவுசெய்யாமல் வந்தவர்.  அவரிடத்தில் கேரள கம்யூனிஸ்ட் கட்சியின் தாக்கம் இருந்தது. மக்கள் விடுதலை முன்னணியின் செயலாளர் தோழர் லயனல் போப்பகே இயக்கத்தின் தமிழ் தரப்பு விவகாரங்களை கவனித்துக்கொண்டிருந்தமையால்,  பாலசுப்பிரமணியத்தை எனக்கும் அறிமுகப்படுத்தினார்.

வடக்கு – கிழக்கு உட்பட தமிழ்ப்பிரதேசங்களில் நடந்த இயக்கத்தின் கூட்டங்களில் பாலசுப்பிரமணியமும் பேசினார்.  இயக்கத்தின் விடுதலைக்கீதம் இசை நிகழ்ச்சி நாடெங்கும் நடைபெற்றது. மக்கள் ஆயிரக்கணக்கில் திரண்டு வந்தனர்.

வேலுப்பிள்ளை அய்யா என்னை மன்னிப்பாய், மனம்பேரி தோழியே முதலான லயனல் போப்பகே இயற்றிய பாடல்களை நான் தமிழில் மொழிபெயர்த்துக்கொடுத்தேன்.

லயனலும் அவரது மனைவி சித்ராவும் பாடினார்கள். சித்ரா, இலங்கையில் மார்க்ஸின் பிதா என்று ஒரு காலத்தில் அழைக்கப்பட்ட பிலிப் குணவர்தனாவின் உறவினர். பிலிப்பின் மகன்மார்தான் இந்திகா குணவர்தனாவும், தற்போதைய வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தனாவும்.

வேலுப்பிள்ளை அய்யா பாடல்,  வேலுப்பிள்ளை பிரபாகரன் பிரபலமாவதற்கு  முன்னர் 1978  காலப்பகுதியில்   எழுதப்பட்டது.  இன நல்லிணக்கத்தை வலியுறுத்திய பாடல். பிரபாகரனின் தந்தையின் பெயர் என்னவென்று தெரியாத காலத்தில் இலங்கை எங்கும் மேடையேற்றப்பட்டதுடன், இறுவட்டுக்களிலும் பதிவேற்றப்பட்டது.

ஆனால், பின்னாளில் பேரினவாதிகள் அந்தப்பாடலை திரித்து துவேசம் கக்கினர்.

இது இவ்விதமிருக்க, பாலசுப்பிரமணியம் காவியமா கற்பனையா என்ற நாடகத்தை எழுதி, கலாசார அமைச்சின் தணிக்கை பிரிவுக்கு காண்பித்தார்.

பல்கலைக்கழக மாணவர்கள் இனப்பாகுபாடின்றி,  ஏற்றதாழ்வுக்கு எதிராக சமத்துவ சமுதாயம் அமைக்க  ஒன்றிணைந்து போராடும் கதை. அதில் காதலும் வருகிறது. ஒரு  சிங்கள மாணவி  தமிழ் இளைஞனை   ஒரு தலைப்பட்சமாக காதலிக்கிறாள். ஆனால், அவனோ,  தனக்கு தற்போது காதலும்  திருமணமும் முக்கியமில்லை, சமூக மாற்றம்தான் முக்கியம் என்று  எழுச்சிப்போராட்டங்களில் கலந்துகொள்கின்றான்.

அவனுக்கு மற்றும் ஒரு மாணவி பக்கத்துணையாக இணைகிறாள்.  காதலா ?  சமூகமா ?  அவன் வழிதெரியாது தவித்து, இறுதியில் போராட்டத்தில் குதிக்கின்றான்.

இந்த நாடகத்தின் வசனங்கள் பலவற்றை தணிக்கை செய்த புண்ணியவான் யார் என்று எனக்குத் தெரியாது.

பாலசுப்பிரமணியம்  என்னை அணுகி, அந்த இளைஞன் பாத்திரமேற்று நடிக்கச்சொன்னார்.

 “ தோழர் எனக்கு முதல் குழந்தை பிறக்கப்போகிறது.  நான் எப்படி இளைஞனாக நடிக்கமுடியும்.. ?  “ என்று மறுத்தேன்.

அந்தப்பாத்திரத்தில் நடிப்பதற்கு அவர் பலரைத்தேடியும் கிடைக்கவில்லை.  தோழர் லயனல் போப்பகேயும் நடிக்குமாறு சொன்னார்.

அந்த நாடகத்தின் மேடையேற்றத்திற்கு நாள் குறிக்கப்பட்டு, ஒத்திகைகள் நடந்தன. முதல் ஒத்திகை நாளன்று எனக்கு மற்றும் ஒரு திகைப்பு காத்திருந்தது.

என்னுடைய காதலியாக நடிக்க வந்தவர் சிங்கள திரைப்பட நடிகை டில்ருக்‌ஷி.  எனது தோழியாக நடிக்கவந்தவர் பிரபல சிங்கள சினிமா நட்சத்திரம் மாலினி பொன்சேக்காவின் தங்கை தமயந்தி பொன்சேக்கா.

மற்றும் ஒரு துணைப்பாத்திரத்தில் நடிக்க வந்த பெண், வி. எஸ். துரைராஜாவின் குத்துவிளக்கு திரைப்படத்தின் இறுதிக்காட்சியில் தோன்றும்  மணமகளாக நடித்தவர்.

அவர்களை பார்த்ததும் எனக்கு பெரிய தர்மசங்கடமாகிவிட்டது.

 “ என்ன தோழர், இப்படி தேர்ச்சி பெற்ற நடிகைகளுடன் என்னையும் சேர்த்துவிட்டீர்களே.. தயவு செய்து என்னை விட்டுவிடுங்கள். வேறு ஆளைப்பாருங்கள்  “ என்றேன்.

அவர் மறுத்தார்.

முன்பு பெண்வேடம் தரித்து நடித்த எனக்கு அந்தப்பெண்களுடன் நடிப்பதற்கு வெட்கமாக இருந்தது.  நாடக மேடையேற்றம் வெள்ளவத்தை இராமகிருஷ்ண மண்டபத்தில் நடந்தது.

பிரதம விருந்தினர்கள்  தோழர் லயனல் – சித்ரா தம்பதியர்.

நாடகத்தை பார்ப்பதற்கு நிறைமாத கர்ப்பிணியான மனைவியையும் அழைத்துச்சென்றேன்.  அந்த நடிகைகளுக்கு அறிமுகப்படுத்தினேன்.

 “  இவர் நடிப்பதற்கு வெட்கப்படுகிறார்.  தைரியம் கொடுக்கிறோம்.  “ என்றனர்.

மண்டபத்தில் ரசிகர்கள் நிறைந்திருந்தனர். எனக்குத் தெரிந்த எவரும் வந்திருக்கக்கூடாது என்று மனதுக்குள் பிரார்த்தித்தேன்.  அந்த நாடகம் பற்றி எவரும் பத்திரிகையில் விமர்சனம் எழுதிவிடக்கூடாது என்றும் வேண்டிக்கொண்டேன்.

நாடகம் மேடையேறியது.

ஒரு காட்சியில் நடிகை டில்ருக்‌ஷி, எனது சேர்ட் பொத்தானை திருகியவாறு உரையாடும் காட்சி. சபையிலிருந்து ஒரு குரல் உரத்து எழுந்தது.

   “ கமோன் பூபதி…. “

எங்கேயோ கேட்ட குரல் !  நான் இனித் தொலைந்தேன். ஒருவாறு நடித்தேன். 

அந்தக்குரலுக்குரியவன் எனது நண்பன் வர்ணகுலசிங்கம். என்னுடன் வீரகேசரியில் பணியாற்றிக்கொண்டிருந்தவர்.

தற்போது கனடாவில் வசிக்கிறார்.

அந்த நாடகத்துடன், இனிமேல் நடிப்பதே இல்லை என்ற உறுதியான தீர்மானத்திற்கு வந்தேன்.

நடிகை டில்ருக்‌ஷி பல சிங்களப்படங்களில் பிரபலமானார்.  தமயந்தி பொன்சேக்காவும் அவ்வாறே பிரபல்யம் பெற்றார்.  இவர் பின்னாளில்  சிங்கள திரைப்பட உலகில் முக்கிய கவனத்தைப்பெற்ற  இயக்குநர் பிரஸன்ன விதானகேயை மணம் முடித்தார்.

அந்தத்  தமிழ் துணை நடிகையும்  அந்த நாடகத்தை இயக்கிய பாலசுப்பிரமணியமும்  எங்கே இருக்கிறார்களோ  தெரியாது.

தமிழ்நாடு கம்யூனிஸ்ட் கட்சி தோழர்களினால் தயாரித்து வெளியிடப்பட்ட பாதை தெரியுது பார் திரைப்படத்தில் வேண்டா வெறுப்பாக ஜெயகாந்தன் நடிக்கநேர்ந்தது.

படத்தின் நீளம் கருதி, அதனை சுருக்கியபோது, தான் வரும் காட்சிகளை கத்தரிக்கோலுக்கு இரையாக்குமாறு அவர் கேட்டார். பின்னர்  அவ்வாறே நடந்தது.

அந்தத்  திரைப்படம் வசூலில் தோற்றது. ஆனால், ஜெயகாந்தன் அந்தப்படத்திற்காக இயற்றிய தென்னங்கீற்று ஊஞ்சலிலே.. பாடல் இன்றும் சாகா வரம் பெற்று ஒலித்துக்கொண்டிருக்கிறது.

எனது அப்பா, அடிக்கடி சொல்வார்:  “ தெரிந்த தொழிலை விட்டவனும் கெட்டான், தெரியாத தொழிலை தொட்டவனும் கெட்டான்.  “

எனக்குத் தெரிந்த தொழில் எழுத்து மாத்திரமே. அத்தோடு நின்றுவிட்டேன் !

( தொடரும் )

 

 

 

 

No comments: