பத்துச் சமகால ஈழத்துச் சிறுகதைகள் அடங்கிய தொகுப்பாக துயிலாத ஊழ் வெளிவந்திருக்கிறது. இக்கதைகளை அகரமுதல்வன் தேர்ந்து தொகுத்திருக்கிறார்.
தொகுப்பாசிரியர் மற்றும் படைப்பாளியின் நிலைப்பாடு/களுக்கு அப்பால், படைப்பு என்ன சொல்ல வருகிறது எதை, எப்படிப் பேசுகிறது என்று வாசிப்பதற்கும், உரையாடுவதற்குமான பன்மைத்துவமிக்க ஒரு பண்பாட்டு வெளியை துயிலாத ஊழ் ஏற்படுத்தித் தருகிறது.
மனிதர்களுக்கு ஏற்படும் இக்கட்டான நிலமைகளும், தெரிவுகளற்ற சூழ்நிலைகளும், பேரிடர்களும் வாழ்வதற்கான வேட்கையை அறுத்து விடுவதில்லை. இக் கதைகளில், சமூகத்தில் வரையறுக்கப்பட்ட துருவ நிலைப்பாடுகளுக்கு உள்ளேயும் வெளியேயும் எத்தனையோ வாழ்க்கைகள் சுழல்கின்றன. யதார்த்தனின் குசலாம்பாள் என்னும் செயின் புளொக், சயந்தனின் பூரணம், அனோஜன் பாலகிருஷ்ணனின் பேரீச்சை, தமிழ்நதியின் அப்பாவின் புகைப்படம் ஆகிய கதைகளைக் குறிப்பிட்டுச் சொல்லலாம். வெற்றிச்செல்வி, சாதனா, தீபச்செல்வன், உமையாழ், சந்திரா இரவீந்திரன், சர்மிளா வினோதினி ஆகிய படைப்பாளிகளது கதைகளும் இருக்கின்றன.
தொகுப்பில் உள்ள சிறுகதைகளோடு இன்னும் இரு விடயங்களைப் பற்றிச் சொல்லவேண்டும்.
ஒன்று - அகரமுதல்வன் சமகாலத்தில் ஒரு குறிப்பிடத் தகுந்த படைப்பாளி. சிறுகதை, குறுநாவல், கவிதைகள் என்று வெவ்வேறான தளங்களில் இயங்குபவர். தனது சிறுகதைகளில் ஒன்றைத்தன்னும் அவர் இத் தொகுப்பில் சேர்க்கவில்லை. இந்த இடத்தில் அவர் தன்னை முன்னிலைப்படுத்திக் கொள்ளவில்லை என்பது பாராட்டப்படவேண்டிய விடயம்.
இரண்டு –
‘ஓ என் தேசமே………வாழ்வுகளின் வாழ்வாய் நீ என்னை அணைத்துள்ளாய்’
என்றெழுதிய கவிஞர் சிவரமணிக்கு இத் தொகுப்பு சமர்ப்பணம் செய்யப்பட்டிருப்பது வெறும் தற்செயல் அல்ல. இத் தொகுப்பில் காட்டப்பட்டிருக்கும் வாழ்வுகள் ஊழின் பாற்பட்டவையா? இவ் வாழ்க்கைகள் மாற்றப்பட முடியாதவையா? தலைப்பின் பிரகாரம் எப்போதுமே விழித்திருக்கிற ஒன்றாக ஊழ் ஏன் சொல்லப்படுகிறது என்றெல்லாம் யோசிக்க வைக்கும் தொகுப்பு.
துயிலாத ஊழ்: சமகால ஈழச் சிறுகதைகள், தொகுப்பாசிரியர்: அகரமுதல்வன், வெளியீடு: நூல்வனம், 2020.
No comments:
Post a Comment