ஜனாதிபதியினால் 11 இஸ்லாமிய அமைப்புகளுக்கு தடை விதிக்கும் வர்த்தமானி
இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா யாழ்ப்பாணத்திற்கான திடீர் விஜயமொன்றை மேற்கொண்டுள்ளார்.
மாநகரை தூய்மையாக்கும் எனது பயணம் தொடரும்
அமெரிக்கத் தலையீட்டை கேட்கிறோம்
துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு அரசியலமைப்புக்கு முரணானது
ஜனாதிபதியினால் 11 இஸ்லாமிய அமைப்புகளுக்கு தடை விதிக்கும் வர்த்தமானி
பயங்கரவாத தடுப்பு சட்டத்தின் கீழ், அடிப்படைவாதத்துடன் தொடர்புடைய 11 அமைப்புகளை தடை செய்யும் அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
நேற்றைய திகதியிடப்பட்ட (13) குறித்த வர்த்தமானி அறிவித்தல் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் கையொப்பத்துடன் வௌியடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
அடிப்படைவாத செயற்பாடுகளுடன் தொடர்புடைய 11 அமைப்புகளைத் தடை செய்ய சட்ட மாஅதிபர் கடந்த வாரம் அனுமதி வழங்கியிருந்தார். அவை அனைத்து அமைப்புகளும் இஸ்லாமிய அமைப்புகள் என்பதோடு, ஏனைய மதத்தைச் சேர்ந்த எந்தவொரு அமைப்புகளும் அதில் உள்ளடக்கப்பட்டிருக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
ஜம்மியதுல் அன்ஸாரி சுன்னதுல் மொஹமதியா (JASM) எனும் பெயரில் வரும் அனைத்து உப அமைப்புகளின் பெயர்களும் அதில் பெயரிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
அந்த வகையில தற்போது வெளியிடப்பட்டுள்ள வர்த்தமானி அறிவித்தலில்,
தடை விதிக்கப்பட்டுள்ள அமைப்புகள்
- ஐக்கிய தௌஹீத் (தௌஹீத்) ஜமாஅத் (UTJ)
- சிலோன் தௌஹீத் (தௌஹீத்) ஜமாஅத் (CTJ)
- சிறீலங்கா தௌஹீத் (தௌஹீத்) ஜமாஅத் (SLTJ)
- அகில இலங்கை தௌஹீத் (தௌஹீத்) ஜமாஅத் (ACTJ)
- ஜம்மியதுல் அன்ஸாரி சுன்னதுல் மொஹமதியா (JASM) மறுபெயர் ஜம்மாஅத் அன்ஸாரிஸ் சுன்னதில் மொஹமதியா ஒழுங்கமைப்பு மறுபெயர் அகில இலங்கை ஜம்-ஈ-அது அன்ஸாரிஸ் சுன்னதில் மொஹம்மதியா மறுபெயர் அன்ஸாரிஸ் சுன்னதில் மொஹம்மதியா கழகம் மறுபெயர் ஜமாஅத் அன்ஸாரிஸ் சுன்னதில் மொஹம்மதியா
- தாறுல் அதர் மறுபெயர் ஜாமிஉல் அதர் பள்ளிவாசல் மறுபெயர் தாறுல் அதர் குரான் மத்ரச மறுபெயர் தாறுல் அதர் அத்தபாவிய்யா
- சிறீலங்கா இஸ்லாமிய மாணவர் இயக்கம் (SLISM) மறுபெயர் ஜம்இய்யா
- ஈராக் மற்றும் சிரியா இஸ்லாமிய அரசு (ISIS) மறுபெயர் அல் - தௌலா அல் - இஸ்லாமியா தௌலா இஸ்லாமியா
- அல்கய்தா அமைப்பு
- சேவ் த பேர்ள்ஸ் அமைப்பு மறுபெயர் சேவ் த பேர்ள் சங்கம்
- சுப்பர் முஸ்லிம் அமைப்பு
1979ஆம் ஆண்டின் 48ஆம் இலக்க பயங்கரவாதத் தடுப்பு (தற்காலிக ஏற்பாடுகள்) சட்டத்தின் கீழ், 27ஆம் பிரிவின் கீழ், 2021 ஆம் ஆண்டின் 1ஆம் இலக்க ஒழுங்குவிதிகளுக்கமை குறித்த 11 அமைப்புகளும் தடைசெய்யப்படுவதாக, குறிப்பிடப்பட்டுள்ளது.
நாட்டின் சமாதானத்தைத் தொடர்வதை உறுதிப்படுத்தும் பொருட்டு நன்நோக்குடனும் தேசிய பாதுகாப்பு, பொதுமக்கள் ஒழுங்கு மற்றும் சட்டவாட்சி என்பவற்றின் நலனிலும் மேற்கொள்ளப்பட்ட இலங்கை அரசாங்கத்தின் முயற்சிகளை முன்னெடுப்பதில், மேற்படி அமைப்புகள் தடைசெய்யப்படுவதாக குறித்த வர்த்தமானி அறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அத்துடன், இலங்கையில் அல்லது இலங்கைக்கு வெளியில் குறித்த அமைப்புகள் தொடர்பில் பின்வரும் செயற்பாடுகளுன் தொடர்புபடுதல், அவற்றில் சம்பந்தப்படுதல், அவ்வாறான சந்தேகத்துக்கு உட்படலாகாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தடைவிதிக்கப்பட்டுள்ள அமைப்புகளின் அல்லது அமைப்புகளைப் பிரதிநிதிப்படுத்துகின்ற அல்லது அதன் சார்பில் செயலாற்றுகின்ற வேறேதேனும் அமைப்பின்,
(அ) உறுப்பினரொருவராக அல்லது அங்கத்தவரொருவராக இருத்தலாகாது.
(ஆ) அதற்குத் தலைமைத்துவம் அளித்தலாகாது.
(இ) சீருடையை, உடையை, சின்னத்தை, தனிக்குறியை அல்லது கொடியை அணிதலோ, வெளிக்காட்டுதலோ, ஏந்துதலோஅல்லது உடைமையில் வைத்திருத்தலோ ஆகாது,
(ஈ) கூட்டமொன்றை அழைத்தலோ, கூட்டுதலோ, நடாத்துதலோ அல்லது அதில் பங்குபற்றுதலோ ஆகாது.
(உ) உறுப்பாண்மையைப் பெறுதலோ அல்லது அதைச் சேருதலோ ஆகாது.
(ஊ) ஓர் உறுப்பினருக்கு, அங்கத்தவருக்கு அல்லது வேறெவரேனும் இணையாளருக்குப் புகலிடமளித்தலோ, அவரை மறைத்துவைத்தலோ அல்லது அவருக்கு உதவுதலோ ஆகாது.
(எ) மேம்பாட்டுக்கு உதவுதலோ, அதனை ஊக்குவித்தலோ, அதற்கு ஆதரவளித்தலோ, மதியுரையளித்தலோ, உதவுதலோ அல்லது அதன் சார்பில் செயலாற்றுதலோ ஆகாது.
(ஏ) ஏதேனும் செயற்பாட்டை அல்லது நிகழ்வை ஒழுங்குபடுத்தலோ அல்லது அதில் பங்குபற்றுதலோ ஆகாது.
(ஐ) பணத்தை அல்லது பொருட்களை நன்கொடையளித்தலோ அல்லது உதவுதொகையளித்தலோ ஆகாது.
(ஒ) அதற்காக அல்லது அதன் பொருட்களைப் பெறுதலோ, களஞ்சியப்படுத்தலோ, இடம்பெயர்த்தலோ, உடைமையில்வைத்திருத்தலோ அல்லது விநியோகித்தலோ ஆகாது,
(ஓ) நோக்கத்தை ஊக்குவித்தலோ அல்லது பிரதிநிதித்துவப்படுத்தலோ ஆகாது.
(ஒள) அதனோடு ஏதேனும் கொடுக்கல் வாங்கலில் ஈடுபடுதலாகாது, அல்லது
(ஃ) அதன் சார்பில் தகவலைப் பரப்புவித்தலாகாது.
இதேவேளை, தடைசெய்யப்பட்டுள்ள அமைப்புகளான சிலோன் தௌஹீத் ஜமாஅத் (CTJ), சிறீலங்கா இஸ்லாமிய மாணவர் இயக்கம் (SLISM) ஆகியன, தமது அமைப்புகள் தடைசெய்யப்படுமானால் அதற்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப் போவதாக அறிவித்திருந்தன.
தம்மீதான தடையை, இலங்கை முஸ்லிம் சிவில் சமூகத்துக்கு எதிரான நடவடிக்கையாகவே தாம் கருதுவதாகவும், தமது இயக்கம் தடைசெய்யப்பட்டால், நீதிமன்றம் தீர்மானிக்கும் வரை தமது சகல செயற்பாடுகளையும் நிறுத்துவதற்குத் தீர்மானித்துள்ளதாகவும், சிறீலங்கா இஸ்லாமிய மாணவர் இயக்கம் (SLISM) கடந்த வாரம் வெளியிட்டிருந்த ஊடக அறிக்கையில் தெரிவித்திருந்தது.
மேலும் ஈஸ்டர் தினத் தாக்குதலை விசாரித்த ஜனாதிபதி ஆணைக்குழு, எவ்வித நியாயமான ஆதாரங்களுமின்றி தமது இயக்கத்தை ஒரு தீவிரவாத இயக்கமென அடையாளப்படுத்தி இருப்பதையிட்டு தாம் விசனமடைவதாகவும், தம்மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளுக்கு பதிலளிக்க தமக்கு ஒரு முறையேனும் வாய்ப்பளிக்கப்படவில்லையெனவும், இது உலகெங்கும் ஏற்றுக்கொள்ளப்பட்ட இயற்கை நீதியின் நியமங்களுக்கு முரணானதாகுமெனவும் சிறீலங்கா இஸ்லாமிய மாணவர் இயக்கம் குறித்த ஊடக அறிக்கையில் தெரிவித்திருந்தமை குறிப்பிட்டிருந்தது. நன்றி தினகரன்
இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா யாழ்ப்பாணத்திற்கான திடீர் விஜயமொன்றை மேற்கொண்டுள்ளார்.
இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா யாழ்ப்பாணத்திற்கான திடீர் விஜயமொன்றை மேற்கொண்டுள்ளார். யாழின் பாதுகாப்பு மற்றும் கொவிட் நிலவரம் குறித்து ஆராய அவர் இந்த விஜயத்தை மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. நன்றி தினகரன்
மாநகரை தூய்மையாக்கும் எனது பயணம் தொடரும்
விடுவிப்புக்கு குரல் கொடுத்தோருக்கு நன்றி
யாழ். மாநகரை துாய்மையாக பேணும் ஒரு நன்நோக்கில் எம்மால் முன்னெடுக்கப்பட்ட முன்மாதிரியான நடவடிக்கை தொடர்பில் தவறான வியாக்கியானம் செய்து என்னை பொலிஸார் கைது செய்தபோது எனக்காக குரல் கொடுத்த அத்தனை உள்ளங்களுக்கும் நான் சிரம் தாழ்த்தி நன்றிகளை கூறிக்கொள்கிறேன்.
“துாய்மையான நகரம், துாய்மையான கரங்கள்” என்று நாங்கள் மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிக்கு அமைவாக நடந்து கொள்வதே யாழ்.மாநகர மக்களுக்கான எனது பணியாகும். அந்த பணியை செம்மையாகவும், முன்மாதிரியாகவும் செய்வதற்கு எடுத்த முயற்சியை மிக தவறாக வியாக்கியானம் செய்து என்னை கைது செய்தார்கள்.
மிக நெருடலான அந்த சூழலில் மக்கள், உள்நாட்டு வெளிநாட்டு அரசியல் தலைவர்கள், சட்டத்தரணிகள், துாதுவராலயங்கள், ஊடகங்கள், புலம்பெயர் உறவுகள், நண்பர்கள், ஆதரவாளர்கள் எனக்காக கொடுத்த குரல் எனக்கு ஆறுதலளித்தது மட்டுமல்லாமல் என்னை பிரமிப்பில் ஆழ்த்தியது.
என்னுடைய பயணம் மிக நோ்மையாது, வெளிப்படையானது, மக்களுக்கானது.
பாதை எப்படியானது என்பதை தெரிந்து கொண்டுதான் பயணத்தையே ஆரம்பித்திருக்கிறேன். ஆதலால் எந்தவொரு சூழ்நிலையிலும் என்னுடைய பணயம் நிற்க்கப்போவதில்லை. மக்களுக்கான எனது பயணம் தொடரும், எனக்காக குரல் கொடுத்த அத்தனை உள்ளங்களுக்கும், அமைப்புக்களுக்கும், மன நிறைவுடன் சிரம் தாழ்ந்து நன்றி கூறுகிறேன்.
(சுமித்தி தங்கராசா) - நன்றி தினகரன்
அமெரிக்கத் தலையீட்டை கேட்கிறோம்
- அரச தரப்பிடமிருந்து எதுவுமே கிடைக்காது
தமிழர்களின் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு அமெரிக்காவின் தலையீட்டை பகிரங்கமாக அழைப்பதாக, வவுனியாவில் 1,515ஆவது நாளாக தொடர் போராட்டம் மேற்கொள்ளும் காணாமல் போனவர்களின் உறவினர்கள் தெரிவித்தனர்.
வருடப்பிறப்பான நேற்று (14) அவர்களால் முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தின் போதே இவ்வாறு தெரிவித்தனர்.
தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்கள்,
2009 முதல் காணாமல் ஆக்கப்பட்ட ஒரு குழந்தையை கூட நாங்கள் கண்டுபிடிக்க முடியவில்லை.
ஆங்கிலேயரிடமிருந்து சுதந்திரம் பெற்றதிலிருந்து, இலங்கை அரசாங்கத்துடன் பேசுவதன் மூலம் எந்தவொரு தீர்வையும் காணமுடியாது என்பதை நாங்கள் நிச்சயமாக கண்டறிந்துள்ளோம்.
எந்தவொரு தீர்வையும் அடைய தமிழர்களுக்கு மூன்று தடுப்புக்கள் உள்ளன. முதலாவது புத்த மதகுருக்கள், இரண்டாவது சிங்கள அரசியல்வாதிகள், இறுதியாக சிங்களபொதுமக்கள் அவர்கள் எப்போதும் இனவெறி அரசியல்வாதிகளையே பதவிக்கு தேர்ந்தெடுக்கிறார்கள் .
பெப்ரவரி 2017 முதல், எங்கள் போராட்டத்தில் இலங்கையில் அமெரிக்காவின் ஈடுபாட்டைக் கேட்டு வருகிறோம். இலங்கைக்கான அமெரிக்க அழைப்பை பெரும்பாலான அரசியல்வாதிகள் மற்றும் தமிழ் சிந்தனையாளர்கள் அனைவரும் நிராகரித்தனர். இப்போது, அனைத்து தமிழ் அரசியல் வாதிகளும், சிந்தனையாளர்களும் ஐநாவில் அமெரிக்காவின் தலையீடு முக்கியமானது என்பதை ஏற்றுக்கொள்கிறார்கள்.
எனவே அனைத்து தமிழ் அரசியல்வாதிகளும் தமிழர்களுக்கு அரசியல் ரீதியாக உதவவும், காணாமல் ஆக்கப்பட்ட எங்கள் அன்புக்குரியவர்களை கண்டுபிடிப்பதற்கும் அமெரிக்க உதவியை பகிரங்கமாக கேட்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.
இந்த நாளில், சிங்கள இனப்படுகொலை மற்றும் ஒடுக்கு முறையிலிருந்து தமிழர்களை மீட்க அமெரிக்க உதவியை நாம் அனைவரும் கூட்டாக அழைக்கிறோம்.
இலங்கையில் அமெரிக்க தலையீட்டை கேட்டு, ஆயிரக்கணக்கான அமெரிக்க கொடிகளுடன் பொத்துவில் முதல் பொலிகண்டி வரை மற்றொரு பெரிய ஆர்ப்பாட்டம் தேவை என்பதை தமிழ் தலைவர்கள் உணரவேண்டும்.இல்லையெனில், இந்த தமிழ் அரசியல் தலைவர்கள் தமிழர்களுக்கு அல்ல, மாறாக அவர்களின் சுகபோக நல்வாழ்வுக்கும் அவர்களின் அதிகாரத்துக்கும் மட்டுமே. என்றனர்.
(ஓமந்தை விஷேட நிருபர் - பி. சதீஷ்) - நன்றி தினகரன்
துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு அரசியலமைப்புக்கு முரணானது
- சட்டத்தரணிகள் சங்கம், ஐ.தே.க. உள்ளிட்டோர் உச்சமன்றில் மனு
கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு சட்டமூலத்திற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் பல்வேறு தரப்பினரால் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
பாராளுமன்றத்தில் அரசாங்கம் சமர்ப்பித்துள்ள 'Colombo Port City Economic Commission' என அழைக்கப்படும் குறித்த ஆணைக்குழு சட்டமூலத்தில் காணப்படும் சில விடயங்கள் அரசியலமைப்பிற்கு முரணானவை என தீர்ப்பளிக்குமாறு கோரி மனுதாரர்கள் தங்கள் மனுக்களில் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தகவல் தொழில்நுட்ப தொழில்வல்லுநர்கள் சங்கத்தின் தலைவரான பொறியாளர் ஜி. கபில ரேணுக பெரேரா, ஐக்கிய தேசியக் கட்சி (கட்சியின் பொதுச செயலாளர், தவிசாளர் சார்பில் இரு வெவ்வேறு மனுக்கள்), இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் (BASL) ஆகியன இன்று (15) தங்களது மனுக்களை தாக்கல் செய்திருந்தன.
இம்மனுக்களின் பிரதிவாதியாக சட்ட மாஅதிபர் பெயரிடப்பட்டுள்ளார்.
கொழும்பு துறைமுக நகரானது தேசிய முக்கியத்துவம் வாய்ந்தது எனவும், அதனை உரிய முறையில் நிர்வகிப்பதன் மூலம் இலங்கையின் பொருளாதாரத்தில் குறிப்பிடும்படியான முன்னேற்றத்தை அடையலாம் எனவும், தற்போது முன்வைக்கப்பட்டுள்ள ஆணைக்குழுச் சட்டமூலத்தின் மூலம் கொண்டு வரப்பட்டுள்ள விடயங்கள் காரணமாக அது சட்ட வரம்புகளுக்கு அப்பாற்பட்ட வகையிலானதும், அரசியலமைப்புக்கு முரணானதுமான விடயங்களை கொண்டுள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாராளுமன்றத்திற்கு உரித்தான நாட்டின் நிதி நிர்வாகம் மற்றுமொரு தரப்பினருக்கு வழங்கப்பட்டுள்ளமை மற்றும் விசேட வரிச் சலுகைகள் போன்றவை காரணமாக, நாட்டின் பொருளாதாரத்திற்கும் தேசிய பாதுகாப்பிற்கும் இச்சட்டமூலம் கடுமையான அச்சுறுத்தலாக அமைந்துள்ளதாக குறித்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு துறைமுக நகரப் பொருளாதார ஆணைக்குழு சட்டமூலம்
கொழும்பு துறைமுக நகரப் பொருளாதார ஆணைக்குழுவை ஸ்தாபிப்பதற்கான சட்டமூலம் வெளிவிவகார அமைச்சரும் சபை முதல்வருமான தினேஷ் குணவர்தனவினால் கடந்த ஏப்ரல் 08ஆம் திகதி வியாழக்கிழமை பாராளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்டது.
இதன்போது சட்டமூலம் தொடர்பில் ஆழமான விவாதம் நடத்தப்பட வேண்டுமென பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி கோரிக்கை விடுத்திருந்தது.
இதனைத் தொடர்ந்து கடந்த வியாழக்கிழமை பாராளுமன்றில் முதலாம் வாசிப்புக்காக விடப்பட்டதுடன், வெள்ளிக்கிழமை இரண்டாம் வாசிப்புக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
கொழும்பு துறைமுக நகரப் பொருளாதார ஆணைக்குழு
கொழும்பு துறைமுக நகரப் பொருளாதார ஆணைக்குழு சட்டமூலத்தின் மூலம் உருவாக்கப்படும் ஆணைக்குழுவானது, சர்வதேச பிணக்குத் தீர்வு நிலையமொன்றை தாபிப்பதற்கும், விசேட பொருளாதார வலயமொன்றை தாபிப்பதற்கும், பதிவுசெய்தல், உரிமங்கள், அதிகாரவளிப்புக்கள், நகர வசதி தொழிற்பாடுகள் மற்றும் பொருளாதார வலயத்தினுல் வதிவிட சமூகமொன்றின் குடியேற்றங்களை மேம்படுத்துவதற்கும் ஏனைய கருமங்களை ஏற்பாடு செய்வதனை பணியாக கொண்டிருக்கும்.
கொழும்புத் துறைமுகத்திற்கு அருகில் காலி முகத்திடல் பகுதியின் 446.6 ஹெக்டயரிலுள்ள கொழும்பு துறைமுக நகர் விசேட பொருளாதார வலயமாகப் பெயரிடப்பட்டுள்ளது.
இது 269 ஹெக்டயர், கடல் நிரப்பப்பட்டு உருவாக்கப்பட்ட நிலப்பகுதியாகும்.
பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள சட்டமூலத்திற்கு அமைய, இந்த வலயத்தின் நிருவாகப் பொறுப்பு, கொழும்பு துறைமுக நகரின் பொருளாதார ஆணைக்குழுவிற்கு வழங்கப்பட வேண்டும்.
ஐவருக்கு மேற்பட்ட, ஏழு பேருக்குக் குறைந்த ஜனாதிபதியினால் நியமிக்கப்படும் இந்த ஆணைக்குழுவின் பதவிக்காலம் மூன்று வருடங்களாகும்.
கொழும்பு துறைமுக நகர விசேட பொருளாதார வலயத்திற்குள் கட்டணங்கள் உள்ளிட்ட அனைத்து வருமானங்களும் இந்த ஆணைக்குழுவின் கீழ் ஸ்தாபிக்கப்படும் நிதியத்திற்குச் செல்லும்.
நாட்டில் தற்போது நடைமுறையிலுள்ள ஏழு சட்டங்களான,
தேசிய துறைமுக சபையின் 1978, 41ஆம் இலக்க நகர அபிவிருத்தி அதிகார சபைச் சட்டம், மாநகர சபைக் கட்டளைச் சட்டம், இலங்கை வணிக மத்தியஸ்த சட்டம், நகர மற்றும் கிராமிய கட்டளைச் சட்டம், மூலோபாய அபிவிருத்தித் திட்டச் சட்டம், பொது ஒப்பந்த உடன்படிக்கைச் சட்டம் மற்றும் இலங்கை முதலீட்டு சபைச் சட்டம் ஆகியன, இவ்விசேட பொருளாதார வலயத்திற்குள் பொருந்தாது எனவும் சட்டமூலத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அத்துடன், உள்நாட்டு இறைவரிச் சட்டம், பெறுமதி சேர் வரிச் சட்டம், 2002 மற்றும் 2005இல் நிறைவேற்றப்பட்ட நிதிச் சட்டம், கலால் சிறப்பு ஏற்பாடுகள் சட்டம், சுங்க கட்டளைச் சட்டம், துறைமுக மற்றும் விமான நிலைய அபிவிருத்தி வரிச் சட்டம் ஆகியன மூலம், கொழும்பு துறைமுக நகரை விடுவிப்பதற்கு அல்லது ஊக்குவிப்பதற்கு யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.
மேலும், இலங்கை ஏற்றுமதி அபிவிருத்தி வரிச் சட்டம், பந்தயம் மற்றும் கலால் சட்டம், தொழிலாளர்களின் வேலையை நிறுத்துவது தொடர்பான விசேட ஏற்பாடுகள் சட்டம், களியாட்ட வரிச் சட்டம், அந்நியச் செலாவணி மற்றும் கெசினோ வர்த்தக ஒழுங்குபடுத்தல் சட்டம் ஆகியவற்றிலிருந்தும் இந்த வலயத்தை விடுவிப்பதற்கு அல்லது ஊக்குவிப்பதற்கு யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.
கொழும்பு துறைமுக நகர விசேட பொருளாதார வலயத்திற்குள் மூலோபாய முக்கியத்துமுள்ள வர்த்தக நடவடிக்கைளுக்கு, நாற்பது வருடங்களுக்கு வரியிலிருந்து விடுவித்தல், ஊக்குவித்தலுக்கும் பிரேரணையில் யோசனை முன்வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. நன்றி தினகரன்
No comments:
Post a Comment