உலகச் செய்திகள்

இளவரசர் பிலிப் மறைவுக்கு UK இல் 8 நாட்கள் துக்கதினம் 

மியன்மாரில் 80க்கும் மேற்பட்ட போராட்டக்காரர் சுட்டுக்கொலை

ஈரானின் அணு உலை வெடிப்பை பயங்கரவாத செயலாக அறிவிப்பு

இளவரசர் இறுதிச் சடங்கு: அரச குடும்பத்தில் சர்ச்சை


இளவரசர் பிலிப் மறைவுக்கு UK இல் 8 நாட்கள் துக்கதினம் 

- 17ஆம் திகதி வின்சர் கோட்டையில் நல்லடக்கம்

பிரித்தானிய இளவரசரும் இரண்டாம் எலிசபெத் மகாராணியின் கணவருமான பிலிப் மறைவையடுத்து எதிர்வரும் 17ஆம் திகதி வரை துக்கதினம் அறிவிக்கப்பட்டுள்ளது. 

அத்துடன், எதிர்வரும் 17ஆம் திகதி சனிக்கிழமை வின்சர் கோட்டையில் உள்ள ஃப்ரொக்மோர் (frogmore) தோட்டத்தில் அவரது உடல் அடக்கம் செய்யப்படவுள்ளது. அத்துடன் கொரோனா வைரஸ் நெருக்கடி நிலைமை காரணமாக இறுதி நிகழ்வு குறித்த முழு விபரம் பின்னர் அறிவிக்கப்படவுள்ளது. 

இதேவேளை, அத்துடன், இரண்டாம் உலகப் போரின்போது கடற்படை அதிகாரியாகப் பணியாற்றிய மற்றும் உயர் அட்மிரல் பிரபு பதவியில் இருந்த பிலிப்பின் நினைவாக கடலில் றோயல் கடற்படைக் கப்பல்களில் அவருக்கு துப்பாக்கி வேட்டுக்களால் வணக்கம் செலுத்தப்படவுள்ளது. 

மேலும், பிலிப்பின் மறைவுக்கு உலக நாடுகளின் தலைவர்கள் மற்றும் அரச குடும்பத்தினர்கள் தமது அனுதாபங்களைத் தெரிவித்து வருகின்றனர். 

இதனைவிட, அவுஸ்ரேலியாவில், கான்பெராவில் உள்ள பாராளுமன்ற வளாகத்திற்கு வெளியில், இளவரசர் பிலிப் இறந்ததைக் குறிக்கும் வகையில் 41 துப்பாக்கி வேட்டுக்கள் தீர்க்கப்பட்டு வணக்கம் செலுத்தப்பட்டுள்ளது.  நன்றி தினகரன் 





மியன்மாரில் 80க்கும் மேற்பட்ட போராட்டக்காரர் சுட்டுக்கொலை

மியன்மாரின் பாகோ நகரில் பாதுகாப்பு படையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 80க்கும் அதிகமான ஆர்ப்பாட்டக்காரர்கள் கொல்லப்பட்டதாக செயற்பாட்டாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

கொல்லப்பட்டவர்களின் சடலங்களை இராணுவம் எடுத்துச் சென்றதால் உண்மயான உயிரிழப்பு எண்ணிக்கையை சரியாக உறுதி செய்ய முடியாதிருப்பதாக அவர்கள் தெரிவித்தனர்.

ஆயுதங்களுடன் இருந்த படையினர் நகரும் அனைத்தையும் சுட்டுத் தள்ளியதாக பார்த்தவர்கள் உள்நாட்டு ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளனர்.

கடந்த மாதம் இடம்பெற்ற இராணுவ சதிப்புரட்சிக்குப் பின்னரான ஆர்ப்பாட்டங்களில் 600க்கும் அதிகமானவர்கள் கொல்லப்பட்டுள்ளனர். தனது அதிகாரத்தின் பிடியை தக்கவைத்துக் கொல்ல இராணுவம் ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது பலப்பிரயோகத்தை மேற்கொண்டு வருகிறது.

இந்நிலையில் அண்மைய துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள் பிரதான நகரான யங்கோனுக்கு அருகில் உள்ள பாகோ நகரில் கடந்த வெள்ளிக்கிழமை இடம்பெற்றபோதும், பல குடியிருப்பாளர்களும் அருகாமை கிராமங்களுக்கு தப்பிவந்த நிலையிலேயே வெளி உலகுக்கு இந்த சம்பவம் அம்பலமாகியுள்ளது.

இந்நிலையில் உண்மையான உயிரிழப்பு எண்ணிக்கை கூறப்படுவதை விடவும் அதிகமாக இருக்கும் என்று அரசியல் கைதிகளுக்கான உதவி அமைப்பு என்ற கண்காணிப்புக் குழு தெரிவித்துள்ளது.

“இது கூட்டுப் படுகொலை போன்றது. அவர்கள் எல்லாவற்றையும் சுட்டுத்தள்ளினார்கள்” என்று ஆர்ப்பாட்ட ஏற்பாட்டுக் குழுவான யே ஹ்டுட் அமைப்பை மேற்கோள்காட்டி ‘மியன்மார் நவ்’ என்ற செய்தி வெளியீடு குறிப்பிட்டுள்ளது. கடந்த பெப்ரவரி 1 ஆம் திகதி ஆட்சியை கைப்பற்றிய இராணுவம் நாட்டில் ஓர் ஆண்டு அவசர நிலையை பிரகடனம் செய்தது தொடக்கம் அங்கு நாடு முழுவதும் ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்று வருகின்றன.   நன்றி தினகரன் 




ஈரானின் அணு உலை வெடிப்பை பயங்கரவாத செயலாக அறிவிப்பு

ஈரான் அணு உலை ஒன்றில் புதிய யுரேனிய செறிவூட்டல் உபகரணங்கள் பொருத்தப்பட்ட ஒரு தினத்தின் பின் அந்த நிலையத்தின் மீது கடந்த ஞாயிற்றுக்கிழமை நாசகார தாக்குதல் நடத்தப்பட்டதாக அந்நாட்டு முன்னணி அணு அதிகாரி அலி அக்பர் சலாஹி தெரிவித்துள்ளார்.

தலைநகர் டெஹ்ரானுக்கு தெற்கே உள்ள நடான்ஸ் வளாகத்தில் மின்சாரம் செயலிழந்த இந்தச் சம்பவத்தை ‘பயங்கரவாதச் செயல்’ என குறிப்பிட்ட அவர் இதன் பின்னணியில் இருப்பவர்கள் பற்றி எதுவும் கூறவில்லை.

எனினும் இஸ்ரேலிய உளவு பிரிவின் தரப்புகளை மேற்கோள்காட்டி இஸ்ரேலிய அரச ஊடகம் வெளியிட்ட செய்தியில், இது ஒரு இஸ்ரேலிய சைபர் தாக்குதல் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த சம்பவம் குறித்து இஸ்ரேல் நேரடியாக எந்த பதிலும் அளிக்கவில்லை.

எனினும் ஈரானின் அணு செயற்பாடுகள் குறித்து இஸ்ரேல் அண்மைக் காலத்தில் கடும் எச்சரிக்கைகளை விடுத்து வந்தது.

2018 ஆம் ஆண்டு அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் நிர்வாகத்தில் வெளியேறிய ஈரானுடனான 2015 அணு உடன்படிக்கையை புதுப்பிக்கும் இராஜதந்திர முயற்சிகள் ஆரம்பிக்கப்பட்டிருக்கும் நிலையிலேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

நடான்ஸ் தளத்தில் புதிய மையநீக்கிகளை ஈரான் ஜனாதிபதி ஹசன் ரூஹானி கடந்த சனிக்கிழமை திறந்து வைத்தார். இந்த நிகழ்வு ஈரான் தொலைக்காட்சியில் நேரடியாக ஒளிபரப்புச் செய்யப்பட்டது. யுரேனிய செறிவூட்டலுக்கு இந்த மையநீக்கி கருவிகள் அவசிமாகும். இந்த செறிவூட்டல் எரிசக்தி உருவாக்க பயன்படுவதோடு, அணு ஆயுதங்கள் உருவாக்கவும் தேவையாகும்.

எனினும் இந்த அமைப்பு ஈரான் செய்து கொண்ட 2015 அணு உடன்படிக்கையை மீறும் மற்றொரு செயலாக உள்ளது. இந்த உடன்படிக்கையின்படி வணிக மின் உற்பத்தி ஆலைகளுக்கு எரிசக்தி உற்பத்தி செய்வதற்கு செறிவூட்டப்பட்ட யுரேனியத்தை குறிப்பிட்ட அளவு மாத்திரமே உற்பத்தி செய்யவும் களஞ்சியப்படுத்தவும் முடியும் என்று ஈரானுக்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் கடந்த ஞாயிறன்று நடந்த சம்பவத்தில் அணு நிலையத்தின் மின்சார வலையமைப்பு பாதிக்கப்பட்டதாக ஈரான் அணு சக்தி அமைப்பின் பேச்சாளர் பஹ்ரூஸ் கமல்வான்டி தெரிவித்திருந்தார்.

ஈரான் தலைநகர் டெஹ்ரானுக்குத் தெற்கே 200 கி.மீ. தொலைவில் பூமிக்கு அடியில் நடான்ஸ் அணு உலை மையம் அமைக்கப்பட்டுள்ளது. வானிலிருந்து ஏவுகணை தாக்குதல் நடத்தினாலும் பாதிப்பு ஏற்பட முடியாத வகையிலான பாதுகாப்பு வசதி கொண்டதாக இந்த மையம் உள்ளது. கடந்த ஆண்டு ஜூலை மாதம் இதே மையத்தில் மர்ம வெடிப்பு ஏற்பட்டு யுரேனியம் செறிவூட்டும் கருவிகள் பலத்த சேதமடைந்தன. அது தொடர்பான விசாரணை இன்னும் முடியாத நிலையில், தற்போது மர்மமான முறையில் மின்தடை ஏற்பட்டுள்ளது.   நன்றி தினகரன் 






இளவரசர் இறுதிச் சடங்கு: அரச குடும்பத்தில் சர்ச்சை

- இன்று இறுதிக் கிரியை

காலமான இளவரசர் பிலிப்பின் இறுதிச் சடங்கிற்கு இளவரசர் ஹரியும் இளவரசர் அண்ட்ரூவும் இராணுவச் சீருடை அணிய வேண்டுமா என்பது குறித்து இடம்பெற்ற விவாதத்தில் எலிசபத் அரசியார் தலையிட நேர்ந்துள்ளதாகத் தகவல்கள் கூறுகின்றன.

பொதுவாக, அரசக் குடும்பத்தின் அதிகாரத்துவ நிகழ்ச்சிகளில் அரசக் குடும்ப உறுப்பினர்கள் இராணுவச் சீருடை அணிவது வழக்கம்.

பிரிட்டிஷ் இளவரசர் ஹரி அவரது அரசக் கடமைகளிலிருந்து விலகியுள்ளதால், இராணுவத்துடனான அவரது தொடர்பு துண்டிக்கப்பட்டுள்ளது.

இருப்பினும், அவர் தம்முடைய இராணுவச் சீருடையில் இறுதிச் சடங்கில் பங்கேற்க விரும்பியதாகக் கூறப்பட்டது.

இது தொடர்பில் வெளிவந்த தகவல்களுக்கு பக்கிங்ஹம் அரண்மனை பதிலளிக்க மறுத்துவிட்டது.

இந்த விவகாரத்தில் 94 வயது எலிசபத் அரசியார் தலையிட்டு, அனைவரும் துக்கம் அனுசரிக்கும் உடைகளில் இருக்க வேண்டும் என்று முடிவுசெய்துள்ளதாக டெய்லி மெயில் செய்தி நிறுவனம் கூறியது. இங்கிலாந்து அரசி இரண்டாம் எலிசபெத்தின் கணவர் இளவரசர் பிலிப் கடந்த வாரம் வியாழக்கிழமை உயிரிழந்தார்.

99 வயதான அவரின் உடல் இன்று சனிக்கிழமை நல்லடக்கம் செய்யப்படுகிறது.  நன்றி தினகரன் 





No comments: