நிலம் உள்ளார் மனமெங்கும் நலவுணர்வு எழ வேண்டும் !


மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா  
மெல்பேண் ... அவுஸ்திரேலியாகொண்டாடும் விழாக்கள் எல்லாம்
நன்றாக நடக்க என்று
மன்றாடி நிற்கும் மக்கள்
மனம் மகிழ்ந்து வரவேண்டும் 

வண்டாகப் பறந்த மக்கள்
வதைப்பட்டு நோய் வலைக்குள்
திண்டாடி தவித்து நிற்கும் 
சிக்கலெலாம் சிதற வேண்டும் 

கைகோர்த்துப் போக வேண்டும்
களியாட்டம் அமைய வேண்டும்
மெய்தொட்டு பழக வேண்டும்
விதம்விதமாய் உண்ண வேண்டும்

ஊரெல்லாம் திரிய வேண்டும்
உறவுகளைப் பார்க்க வேண்டும்
பாரெங்கும் பல காட்சி
பார்த்துவிட வாய்க்க வேண்டும்

மருந்துகளை நாடி நிற்கும்
மாவலைகள் அடங்க வேண்டும்
விருந்து உண்ணும் வகையினிலே
மருத்துவந்து அமைய வேண்டும் 

பழையபடி மகிழ்சி எங்கும்
பரவியே பெருகியே வரவேண்டும்
பார்க்கின்ற இட மெங்கும்
பரவசமாய் ஆக வேண்டும் 

நிலம் உள்ளார் மனமெங்கும்
நலவுணர்வு எழ வேண்டும் 
வளமான வாழ் வெங்கும்
வாய்த்து நிற்கும் நிலைவேண்டும்  

No comments: