சிந்திக்க வைக்கும் சிறப்பான சித்திரை !


மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா 
மேனாள் தமிழ்மொழிக் கல்வி இயக்குநர் மெல்பேண் ...... அவுஸ்திரேலியா

 

           

  கொண்டாட்டங்கள்  - வாழ்விலே புத்துணர்வை ஏற்படுத்தி உற்சா கமாய் இருப்பதற்கு நல்லதொரு வழி காட்டிகளாய் விளங்குகின்றன எனலாம். ஒவ்வொரு கொண்டாட்டங்களும் வருகின்ற வேளை அதாவது வருவதற்கு முன்னும் வந்த நிலையிலும் வாழ்விலே ஒரு வசந்தம் வந்து அமைவதை காணமுடிகிறது எனலாம். ஆனந்தம் வருகிறது ! அகமகிழ்வு வருகிறது ! வீடும் நாடும் விடிவு பெற்றது போல ஒரு எண்ணங்கூட உதயமாகிறது  எனலாம். அதனால்த்தான் ஆண்டுதோறும் கொண்டாட்டங்கள் அமைந்திருக்கின்றன. மாதத்தில் கொண்டாட்டம். வருஷத்தில் கொண்டாட்டம் என்று கொண்டாட்ட ங்கள் என்பது வாழ்விலே நிறைந்தே இருக்கிறது.நிறைந்தே இருக் கும் வண்ணம் சமூகக் கட்டமைப்பு வளர்ந்து வந்துள்ளது என்பதை மனமிருத்தல் அவசிய மானதேயாகும். அந்தவகையில் வரப்போகி ன்ற சித்திரைத் திருநாளைப் பற்றி எண்ணிப் பார்ப்பது பொருத்தமாய் இதுக்கு மென்று எண்ணுகிறேன்.

  சித்திரைத் திருநாளை தமிழர் திருநாள் என்பதா தைத் திருநாளை தமிழர் திருநாள் என்பதா என்று ஒரு போராட்டமே நடந்து கொண் டிருக்கிறது. அந்தப் போராட்டம் அரசியல் மயப்படுத்தப்பட்டு அரசி யல் கட்சிகளின் கொள்கையாக்கப்பட்டு அக்கட்சிகள் சார்பாக அறிஞ ர்கள் தங்களின் கருத்துக்களை வெளிப்படுத்தி பெரும் சர்சையினை உருவாக்கி ஆட்சிகள் மாறும் வேளை காட்சிகள் மாறியதையும் காணக்கூடியதாக இருக்கிறது. ஆனாலும் பலரும் சித்திரைத் திருநாளையே தமிழர்தம் திருநாளாகக் கொண்டாடி வருகிறார்கள் என்பதும் நோக்கத்தக்கதே. திருநாளினைக் கொண்டாடுவதன் நோக்கமே மனமகிழ்வும் மனநிறைவுமேயாகும். அதனை விட்டு விட்டு அங்கும் - வீண் தர்க்கமும் குதர்க்கமும் பேசி அங்கும் ஒரு பஞ்சாயத்தை அரங்கேற்றுவதும் பொருத்தமுடையதா சிந்தித்தால் தெளிவு வரும் அல்லவா ?

  சித்திரை மாதத்தின் முதல் நாளையே புத்தாண்டாக கொண்டாடி வருகிறார்கள் தமிழர்கள் என்பதற்கு சான்றுகள் பல இருக்கின்றன என்று அறியக்கிடக்கிறது. வானியலையும் பருவங்களின் சுழற்சியையும் அடிப்படையாகக் கொண்டே சித்திரைத்திருநாள் புத்தாண்டாக மலர்ந்திருக்கிறது எனலாம். பூமியானது சூரியனை ஒருமுறை சுற்றிவருவதற்கு எடுக்கும் காலம் பனிரெண்டு  மாதங்களாகும்.சூரியன் பூமத்திய ரேகையில் பிரகாசிக்கும் மாதம் ஆண்டினது தொடக்கமாகக் கருதப்படுகிறது.சூரியன் முதல் ராசியான மேஷ ராசிக்குள் நுழைவதிலிருந்து அந்த ராசியைவிட்டு வெளி யேறும் வரையுள்ள காலமானது சித்திரை மாதமேயாகும்.

  அகத்தியரின் பன்னீராயிரத்தில் பங்குனி மாதத்தை கடை மாதம் என்று காட்டப்படுகிறது. சங்க இலக்கியம் தமிழர்தம் பொக்கிஷ மாகும். அந்த பொக்கிஷத்திலேயே சித்திரைத் திருநாள் - புத்தாண்டு என்பதற்கு சான்றுகள் இருக்கின்றன என்பதும் மனங்கொள்ளத் தக்கதாகும்.நெடுநெல் வாடையில் 160-161 வரிகளில் " திண்ணிலை மருப்பின் ஆடுதலையாக  " என்று நக்கீரர் பகுருகின்றார். இப்பாடலில் வரும் ஆடுதலைக்கு மேஷ ராசி என்று பத்துப்பாட்டு ஆராய்ச்சி நூலின் வாயிலாக முனைவர் மா.இராசமாணிக்கனார் தெளிவு படுத்துகிறார். " தலைநாள் பூத்த பொன் இணர் வேங்கை " என்று மலைபடுகடாம் என்னும் சங்கப்பாட்டு காட்டுகிறது. அதாவது - பங்குனி மாதத்தின் கடைசி சித்திரை மாதத்தின் முதல் நாளிலேதான் வேங்கை மரங்கள் வழக்கமாகப் பூக்கும் என்பது இதன் பொருளாகும். அதுமட்டுமல்ல கணிவேங்கை நன்னாளே நாடி மலர்தலால் " என பழமொழி நானூறு சுட்டிக் காட்டுவதால் - இளவேனில் காலத்தின் துவக்கமானாது சித்திரையே என்பதும் அதுவே தலைநாளாக மிளிர்ந்தது என்பது தெளிவாகத் தெரிகிறதல்லவா?.

சீவகசிந்தாமணியிலும் கோடை காலமே முதலாவது பருவம் என்று சுட்டுவதும் நோக்கத்தக்கதே. மேலும் புஷ்பவிதி என்னும் நூலிலே " சித்திரை முதல் மாதமே " என்று கமலை ஞானப் பிரகாசரும் விளக்கம் அளித்துள்ளமையும் கருத்திருத்த வேண்டியதே.

  சூரியனின் சுழற்சியை வைத்துத்தான் புத்தாண்டைக் கணக்கிடலாம். அப்படித்தான் கணக்கிடப்பட்டும் வருகிறது அதனால்தான் சித்திரைத் திருநாள் புத்தாண்டாய் மலர்கிறது. தைமாதம் என்பது மகர ராசியில் வருகிறது. மகர ராசி என்பது வானிலைப்படி பஞ்சாங்கப்படி பத்தாவது ராசியாகும். பத்தாவது ராசியில் வரும் தை எப்படி புத்தாண்டாய் அமைய முடியும் மேஷ ராசிதான் முதலாவது ராசி என்பதற்கே ஆதாரங்கள் இருப்பதாலும் அதனையே இலக்கியச் சான்றுகள் உறுதிப் படுத்துவதாலும்மேஷத்தில் சூரியன் நுழையும் காலமாக சித்திரையே பொருந்தி வருவதாலும்புத்தாண்டினைச் சித்திரையில் கொண்டாடி வருவதே வரன் முறையாக இருக்கிறது என்பது சித்திரைத் திருநாள் கொண்டாடி மகிழும் வேளை யாவரும் மனமிருத்தல் நல்லது என்று கருகிறேன்.

  இளவேனில் காலத்தில்த்தான் சித்திரையே ஆரம்பிக்கின்றது. இதனையே வசந்தகாலம் என்று அழைக்கின்றனர்.வசந்த காலத்தில்த் தான் மாமரங்களில்  மாந்தளிர்களும் மலர்களும் பூத்துக் குலுங்கு கின்றன. வேப்பமரங்களிலும் வேப்பம் பூக்களும் பூத்துக் குலுங்கு கின்றன.மாமரங்கள் பூத்துக் குலுங்கினால் நல்ல சுவையான மாங்கனிகள் கிடைக்கும். சுவைத்தால் இன்பமே பெருகும். வேம்பின் குணமோ கசப்பு. வேம்பம் பூவின் நிலையும் கசப்புத்தான். கசப்பான வேம்பும் இனிப்பான மாவும் ஜொலிக்கும் காலம்தான் சித்திரைத் திருநாள். அதாவது இனிப்பும் கசப்பும் நிறைந்ததுதான் மனித வாழ்க்கை என்பதை இயற்கையே உணர்த்தி பாடம் நடத்தும் காலம்தான் புத்தாண்டாய் வருவிருக்கும் சித்தைரைத் திருநாள் என்பதை மனமிருத்தல் அவசியமானது என்று கருதுகிறேன்.

  சித்திரை என்று நினைத்தாலே பெரும் எதிர்பார்ப்புகள் வந்தே நிற்கும்.பங்குனிபோய் சித்திரை வந்தால் பத்திரிகை வந்திடும் கல்யாணப் பத்திரிகை வந்திடும் " என்று ஒரு பாட்டும் பிரபல்யமாய் ஒலிப்பதைக் கேட்டிருக்கிறோம். அப்படி என்றால் - சித்திரை என்பது வாழ்வில் நல் முத்திரை பதிக்க வரப் போகிறது என்பதுதானே அர்த்தம் ! சித்திரைத் திருநாள் தமிழர்தம் உள்ளங்களில் உவகையினை ஏற்படுத்தும் நாளாகவே அமைகிறது எனலாம்.

  புத்தாடை வாங்குவது ! விதம்விதமாய் பலகாரங்கள் செய்வது ! பட்டாசு மத்தாப்பு என்று வாங்கிக் குவிப்பது ! வீட்டுக்கு வெள்ளை அடிப்பது ! வீட்டை அழகு படுத்துவது ! ஒரே கல கலப்புத்தான் !

  சித்திரைப் புதுவருடம் என்றவுடன் மருத்துநீர் முனவந்து நிற்கும் ! மருத்துநீர் என்பது மருத்துவத்தின் ஒரு பங்களிப்பே எனலாம். தமிழர்கள் எதைச் செய்தாலும் அதற்குள் மருத்துவத்தையும் இணைத்தே விடுவார்கள். இது தமிழர்களின் அத்தனை கொண்டாங்களிலும் ஒட்டிக் கொண்டே இருக்கும்.

  தாழம்பூ தாமரைப்பூமாதுளம்பூதுளசிவிஷ்ணுகிராந்திசீதேவியார் செங்கழுநீர்வில்வம்அறுகுபீர்க்குபால்கோசலம்,கோமயம்கோரோசனைமஞ்சள் திற்பலிசுக்குஇவற்றை நீரிலை கலந்து காய்ச்சி எடுப்பதுதான் மருத்து நீர் என்னும் சித்திரைத் திருநாள் விஷேட மருந்துவம் ஆகும். இந்த மருத்து நீரை அனைவரும் தலையில் வைத்து பின்னர் நீராடுதல் என்பது அவசியமானதாகச் சொல்லப்பட்டு பெரும்பாலும் அனைவருமே செய்து வருகின்றனர். கொண்டாட்டம் என்றாலும் அதிலும் ஆரோக்கியத்தை அடிப்படை யாக வைத்திருப்பது கவனதுக்குரியது அல்லவா ?

  மருத்துநீர் வைத்து நீராடிய பின்னர் வாங்கிய புத்தாடைகளை அணிவது மரபாக இருந்து வருகிறது. புத்தாடை அணிந்து கோவில் சென்று தரிசனம் செய்து பெரியவரிடம் ஆசி பெற்று பலவகையான பட்சணங்களை உண்டு மகிழ்வதும் வழமையாக இருக்கிறது.

  பெரியவர்களிடம் ஆசிபெறுவது கைவிசேசம் வாங்குவது சித்திரைப் புத்தாண்டில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும். பெரியவர்களின் வாழ்த்து என்றுமே துணைநிற்கும் என்பதும் அவர்களிடம் பெறும் கைவிசிசேசம் அந்த ஆண்டு முழுவதலும் இலட்சுமி கடாட்சமாய் ஜொலிக்கும் என்பதும் மனத்தில் பதியும் அசையாத நம்பிக்கை எனலாம்.

  கோவில்களில் திருவிழாக்கள் இக்காலத்தில் சிறப்பாக இடம் பெறும். பெரும்பாலும் அனைவருமே கோவில் வழிபாட்டை தவறாமல் பயபக்தியுடன் செய்திடத் தவறவே மாட்டார்கள்.

  கலைவிழாக்களுக்குக் குறைவிருக்காது. விளையாட்டு நிகழ்சிகளும் நடை பெறும். கிழகிலங்கைப் பகுதிகளில் ஊஞ்சல் கட்டி அதில் சிறியவர் முதல் பெரியவர்வரை அமர்ந்து ஆடிப்பாடி மகிழ்வது சித்திரைத் திருநாளில் பெரிய தொரு விசேசமாய் நடந்து கொண்டே இருக்கிறது. யாழ்ப்பாணத்தில் இந்த நிலை இல்லை என்றே சொல்லாலாம். கிழக்கிலங்கையில் சில பகுதிகளில்

புத்தாடை வாங்கினால் முதலில் அதனை வீட்டிலிருக்கும் தென்னைக்கு கட்டி அதன் பின்னே அவர்கள் தாங்கள் கட்டிக் கொள்ளும் வழமையும் இருந்து வருகிறது. ஆனால் இம்முறை யாழ்ப்பாணப்பாணப்பகுதில் இல்லை எனலாம்.

  அச்சு முறுக்குசீனிப்பணியாராம்பயத்தம் பணியாரம்கிழக்கிலங்கையில் சித்திரையில் அதிகமாக எல்லா வீடுகளிலுமே செய்வார்கள். யாழ்ப்பாணத்தில் இவை எல்லாம் செய்தாலும் அவர்கள் தங்களுக்கென்று சிறப்பான பலவற்றையும் செய்து பகிர்ந்துண்டு மகிழ்வார்கள்.

  உறவுகள் ஒன்று சேர்வது உணவுகளில் அறுசுவை சேர்ப்பதுபக்கத்து வீட்டாருக்குப் பகிர்ந்து மகிழ்வதுவறுமையில் இருப்பார்க்கு இயன்றவற்றைக் கொடுத்து அவர்களையும் மகிழ்விப்பதுஇயன்றவரை தான தர்மம் செய்வது சித்திரைப் புத்தாண்டில் இடம்பெறும் முக்கியமான பண்பாடு எனலாம்.

  இலங்கையில் சித்திரைப் புத்தாண்டினை சிங்கள பெளத்தர்களும் கொண்டாடி மகிழ்கிறார்கள் என்பதும் அரசாங்க பொதுவிடுமுறை தினமாக இருக்கிறது என்பதும் மனங்கொள்ளத் தக்கதாகும். தமிழர்கள் பலவித பலகாரங்கள் செய்வார்கள். ஆனால் சிங்கள பெளத்தர்கள் பாற்சோறு வைத்துப் பரிமாறி மகிழ்வார்கள். அவர்களும் பெரியவர்களிடம் வெற்றிலையில் கைவிசேசம் பெற்று ஆசியும் பெறுவார்கள். ஆளும் இனமும் ஆளப்படும் இனமும் கொண்டாடி மகிழும் கொண்டாட்டமாய் சித்திரைப் புத்தாண்டு இலங்கையில் விளங்குவதும் முக்கியத்துவம் மிக்கதாய் தென்படுகிறது அல்லாவா !

   இந்தியாவில் அடங்கியிருந்த கொரனா மீண்டும் தலைவிரித்து நிற்கிறது.அங்கும் சித்திரையைக் கொண்டாட விரும்பினாலும் நிலமை சீரடையுமா என்பது கேள்வியாய் எழுந்து நிற்கிறது ! சிங்கப்பூர் , மலேசியா தமிழர்களும் சித்திரைத் திருநாளைக் கொண்டாடக் காத்திருக்கிறார்கள்.ஆனால் அங்கும் இன்னும் சீனாவின் சீதனம் சிக்கலாய் நிற்கிறது !

  புலம் பெயர்ந்த நாடுகளில் வாழுகின்ற தமிழர்களும் சித்திரையில் என்ன செய்யலாம் என்று சிந்தித்த வண்ணமே இருக்கிறார்கள். ஆனால் சித்திரையோ பக்கத்தில் வந்து நிற்கிறது !

    கொரனா என்னும் அரக்கன் தனது கோரப்பிடியை விட்டபாடில்லை. கொண்டாட்டங்கள் அனைத்துமே பெருந் திண்டாட்டமாய் ஆகிவிட்டது.இதில் சித்திரை வந்தால் என்ன வராவிட்டால்த்தான் என்ன என்னும் அளவுக்கு மக்கள் மனமெல்லாம் பயமென்னும் இருளே செறிந்து காணப்படுகிறது. என்றாலும் சித்திரை என்றவுடன் நித்திரையே பறக்கிறது ! எப்படியும் கொண்டாடி மகிழ வேண்டும் என்னும் ஆவலை மட்டும் அடக்கிவிடவே முடியவில்லை. கொண்டாடுவோம் ! ஆனால் அடக்கமாய் ஆன்மீகமாய் கொண்டாடி அகநிறைவினை அடைவோம் !


 

No comments: