ஸ்வீட் சிக்ஸ்டி 6 - தேன் நிலவு - ச சுந்தரதாஸ்

.

தமிழ் திரை உலகில் சாதனை இயக்குனராக திகழ்ந்தவர் ஸ்ரீதர். கல்யாணப்பரிசு படத்தின் மூலம் இயக்குனரான இவர் தனது சொந்தப் பட நிறுவனமான சித்ராலயா நிறுவனத்தை 1961ஆம் ஆண்டு தொடங்கினார். அலைகடலில் தோனி திரையுலகில் புதிய பாணி என்ற வாசகத்துடன் உருவான சித்ராலயா தயாரித்த முதல் படம் தேன்நிலவு.

இந்த படம் பெரும்பாலும் காஷ்மீர் வளம் கொஞ்சும் பகுதிகளில் படமானது பிற்காலத்தில் கலவர பூமியாக மாறிய காஷ்மீருக்கு நடிகர், நடிகைகள் தொழில்நுட்பவியலாளர்கள் எல்லோரையும் அழைத்துச் சென்று ஒரு மாதத்திற்கு மேலாக தங்கி தேனிலவை உருவாக்கினார் ஸ்ரீதர். அன்றைய காலகட்டத்தில் இவரின் இந்த முயற்சி வியந்து பார்க்கப்பட்டது.

தேனிலவு என்றவுடன் இளம் தம்பதிகள் போவது என்று தான் கருதுவார்கள் ஆனால் இப்படத்தில் கதாநாயகியின் தந்தை மறுமணம் செய்து தன் புது மனைவியுடன் தேன் நிலவிற்கு காஷ்மீர் போகிறார். அவருடன் மகளும் பிடிவாதமாக இணைந்து கொள்கிறாள். காஷ்மீரில் அவளுக்கு ஒரு காதலனும் கிட்டுகிறான்.


இப்படி அமைந்த கதை ஒரு பொழுதுபோக்கு படமாக, சிரிக்க வைக்கும் நகைச்சுவை காட்சிகளுடன் படமாக்கப்பட்டது. காதல் மன்னன் ஜெமினி கணேசன் கதாநாயகனாக நடிக்க அவருக்கு இணையாக வைஜந்திமாலா நடித்தார். காஷ்மீரின் அழகுடன் வைஜந்திமாலாவின் அழகும் ரசிகர்களை சுண்டி இழுத்தது. இவர்களுடன் கே சரோஜா நம்பியார், வசந்தா ஆகியோரும் நடித்தனர்.

கண்ணதாசனின் அனைத்து பாடல்களுக்கும் பிரபல பாடகர் எ எம் ராஜா இசை அமைத்தார் இவரின் இசையில் பாட்டு பாடவா, காலையும் நீயே, சின்ன சின்ன கண்ணிலே, ஊரெங்கும் தேடினேன் உட்பட அனைத்து பாடல்களும் ரசிகர்களை கவர்ந்தது. ஏ வின்செண்ட் படத்தை ஒளிப்பதிவு செய்தார்.

தங்கவேலு , சரோஜா தோன்றும் காட்சிகள் ரசிகர்களை வயிறு குலுங்க சிரிக்க வைத்தன நகைச்சுவை வசனங்களை கோபு எழுதியிருந்தார். ஸ்ரீதர் கதை வசனத்தை எழுதியதுடன் டைரக்ட் செய்திருந்தார்.

1961 இல் தயாரிக்கப்பட்ட தேன்நிலவு கருப்பு வெள்ளை படமாக அமைந்தது ரசிகர்களுக்கு காஷ்மீர் அழகை முழுமையாக அனுபவிக்க தடையாக இருந்து விட்டது




No comments: