தமிழ்மொழியின் உரிமையை உறுதிப்படுத்தும் 13ஆவது அரசியலமைப்புத் திருத்தம்

 Wednesday, March 17, 2021 - 6:14pm

தற்போது நமது நாட்டில் நடைமுறையிலுள்ள அரசியலமைப்பில், 1987ஆம் ஆண்டு இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையில் ஏற்படுத்திக் கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தின்படி மேற்கொள்ளப்பட்ட பதின்மூன்றாவது திருத்தம் உள்ளடங்கியுள்ளது.  

 13ஆவது திருத்தத்தின்படியான விதிமுறைகளை உரியபடி நடைமுறைப்படுத்த வேண்டும் என்று ஒப்பந்தத்தை ஏற்படுத்திக் கொண்ட நாடுகளில் ஒரு தரப்பான இந்தியாவினால் தொடர்ச்சியாக வலியுறுத்தப்பட்டு வருகிறது. 

ஆனால் இலங்கையின் அதிகாரத் தரப்பில் உள்ளவர்களில் ஒரு சாரார் குறித்த பதின்மூன்றாவது திருத்தத்தால், அதன் விதிகளால் இலங்கைக்கு எதுவித நன்மையுமில்லையென்று கூறி வருகின்றனர். 

குறித்த பதின்மூன்றாவது திருத்தமானது இலங்கையின் இனப்பிரச்சினைக்கு ஒரு தீர்வு காண வேண்டும் என்ற நோக்கில் அண்டை நாடான இந்தியாவின் அழுத்தத்தின் பேரில் ஏற்படுத்தப்பட்ட இரு நாடுகளுக்கிடையேயான ஒப்பந்தத்தின் வெளிப்பாடாகும். இது இரு நாடுகளுக்குமிடையிலான வலுவானதொரு உடன்படிக்ைக என்றும் குறிப்பிடலாம்.  

இந்த உடன்பாட்டின்படியான அரசியலமைப்புத் திருத்தம் இனப்பிரச்சினை மற்றும் இனமுறுகலுக்கு அடிப்படையாக அமைந்த பல காரிணிகளுக்கு தீர்வாக அமைந்ததென்பதையும் புரிந்து கொள்ள வேண்டும்.  

குறித்த பதின்மூன்றாவது திருத்தத்தின் முக்கிய ஏற்பாடாக அமைவது மாகாண சபைகளின் உருவாக்கமென்றும், அது பிரிவினைவாதத்தை நோக்கியதென்றும் பொதுவாக அதை எதிர்க்கும் தரப்புகளால் கூறப்பட்டு வருகின்றது.  

மறுதரப்பு அதாவது தமிழர் தரப்பினால் 13ஆவது திருத்தத்தில் போதுமான தீர்வுகள் வழங்கப்படவில்லையென்று குறை கூறப்படுகின்றது. எவ்வாறாயினும் குறித்த அரசியலமைப்புத் திருத்தமானது இந்தியாவினால் அக்காலத்தில் இலங்கை மீது, அதன் விருப்பத்தையும் மீறி வலிந்து திணிக்கப்பட்டது என்று கூறுவதே பொருத்தமாகும். 

அவ்வாறு கூறப்பட்டாலும் சர்வதேச ரீதியில் 13ஆவது திருத்தத்தின் விதிகள் முறையாக நடைமுறைப்படுத்தப்பட்டால், இனப்பிரச்சினையை ஓரளவு தீர்த்து வைக்கலாம் என்ற நம்பிக்கை வலுப்பெற்றுள்ளமையை மறுப்பதற்கில்லை. 

இலங்கை பிரித்தானியரால் சுதந்திரம் என்ற பெயரிலும், ஜனநாயகம் என்ற போர்வையிலும் நாட்டின் சுதேசிய பெரும்பான்மையினரிடம் ஒப்படைக்கப்பட்டது. அன்று முதல் மேற்கொள்ளப்பட்ட பல்வேறு சுதேசிய பெரும்பான்மையினரின் இனரீதியான சிந்தனை மற்றும் செயற்பாடுகளே குறித்த இரு நாடுகளுக்கிடையேயான ஒப்பந்தத்திற்கும், அரசியலமைப்பின் திருத்தத்திற்கும் வழியமைத்தவை என்பது தெளிவானது. அண்டை நாட்டின் தலையீட்டுக்கும் அழைப்பு விடுத்தது.  

பிரித்தானியர் இலங்கைத் தீவை ஒரு நாடாக சுதந்திரம் வழங்கிய போது, அதில் வாழ்ந்த அனைத்து இன, மத மக்களும் சமத்துவமாக வாழவே சுதந்திரம் வழங்கினர். சுதந்திரம் என்பதை பெரும்பான்னையின அரசியல்வாதிகள் பலர் தவறாக அர்த்தப்படுத்திக் கொண்டனர்.  

ஜனநாயகமென்பது பெரும்பான்மை மக்களின் ஆட்சியென்ற நிலையில் நாட்டின் சிறுபான்மையினத்தவராயிருந்த இந்திய வம்சாவளித் தமிழ் மக்களின் குடியுரிமை, வாக்குரிமை என்பன பறிக்கப்பட்டு அம்மக்கள் நாடற்றவர்களாக்கப்பட்டனர். அடுத்து இலங்கையின் சிறுபான்மை மக்களின் தாய்மொழியான தமிழ்மொழியை முற்றாகப் புறக்கணிப்புக்கு உள்ளாக்கும் சட்டம் கொண்டு வரப்பட்டது.  

இலங்கைக்கு சுதந்திரம் வழங்கப்பட்ட போது உரித்தாக்கப்பட்ட அரசியலமைப்பான சோல்பரி அரசியலமைப்பின் 29ஆம் விதியின்படி எந்தவொரு மக்கள் பிரிவினருக்கும் எதிராக அல்லது பாதிப்பாகக் கொண்டு வரும் சட்டங்கள் எதுவும் பாதிப்புக்குள்ளாகும் நிலையிலுள்ள மக்களின் கருத்தையும், அங்கீகாரத்தையும் பெற்றே கொண்டு வரப்பட வேண்டுமென்று கூறப்பட்டிருந்தது.  

ஆனால், அரசியலமைப்பில் சிறுபான்மை இனத்தவர்களுக்குப் பாதுகாப்பாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த அந்த விதி முற்றாகப் புறக்கணிக்கப்பட்டு சிறுபான்மையினரின் குடியுரிமை, வாக்குரிமை, மொழியுரிமை என்பன பறிக்கப்பட்டன அதைத் தொடர்ந்து நாட்டில் விரும்பத்தகாத பல சம்பவங்கள் நாட்டில் இடம்பெற்று விட்டன. அது இனங்களுக்கிடையே முரண்பாடுகளையும், உள்நாட்டில் ஆயுதப்போரையும் உருவாக்கியது. இதுவே இலங்கை இன்று அனுபவிக்கும் பல்வேறு சிக்கல்களுக்கு வழியமைத்த கசப்பான வரலாற்று உண்மையும் ஆகும்.  

குறித்த 13ஆவது திருத்தத்தின்படியான விதிகளில் முக்கியத்துவம் பெறுவதில் ஒன்றாக இருப்பது மொழியுரிமை பற்றியது. ஒரு நாட்டின் குடிமக்களில் ஒரு சாராரது தாய்மொழியின் பயன்பாட்டுரிமை மறுக்கப்படுவதென்பது அம்மக்களை நாட்டின் உரிமையற்றவர்களாக, அந்நியர்களாக, வேண்டத்தகாதவர்களாக ஆக்குவதென்பதே யதார்த்தமாகும். அந்த நிலையே 1956ஆம் ஆண்டில் இலங்கைப் பாராளுமன்றத்தால் நிறைவேற்றப்பட்ட தனிச்சிங்கள அரச மொழிச் சட்டத்தின் பெறுபேறாக அமைந்தது.  

அந்த நிலை 1987ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட இலங்கை_ இந்திய ஒப்பந்தத்தின் மூலம் இல்லாமல் ஆக்கப்பட்டது. அந்த ஒப்பந்தத்தின்படியான 13ஆவது திருத்தமும், அதையொட்டி மேற்கொள்ளப்பட்ட 1988ஆம் ஆண்டின் 16ஆவது திருத்தமும் 1956ஆம் ஆண்டின் மொழிச் சட்டத்திற்கு முடிவு கட்டின. இலங்கையின் தேசிய மொழிகளாக தமிழும் சிங்களமும் என்றும், இலங்கை அடங்கலுக்குமான அரசகரும மொழிகள் தமிழும் சிங்களமும் என்றும் வடக்கு, கிழக்கு மாகாணங்களின் முதன்மை நிர்வாக மொழி அதாவது அரசகரும மொழி தமிழென்றும், ஏனைய மாகாணங்களின் முதன்மை மொழி சிங்களமென்றும் கூறப்பட்டது. 

இருப்பினும் நாட்டின் குடிமகனொருவர் நாட்டின் எப்பகுதியிலாவது தனது அரசுடனான தொடர்புகளையும் அன்றாடக் கடமைகளையும் தமிழிலோ, சிங்களத்திலோ ஆற்றிக் கொள்ளும் உரிமை உண்டென்றும் குறித்த அரசியலமைப்பினூடாக மொழியுரிமைச் சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டது.  

இதனடிப்படையில் இலங்கையில் வாழும், தமிழைத் தாய்மொழியாகக் கொண்ட அனைவரும் இலங்கையின் தேசிய இனத்தவரென்பதும், நாடு முழுவதும் தமிழ் மொழியைப் பயன்படுத்த முடியும் என்பதும் வடக்கு, கிழக்கு ஆகிய இரு மாகாணங்களும் தமிழைத் தாய்மொழியாகக் கொண்டவர்களது பாரம்பரிய உரிமையுள்ள பகுதிகளென்பதும் , இலங்கை_ இந்திய நாடுகளுக்கிடையேயான ஒப்பந்தத்தின் மூலம் ஏற்று அங்கீகரிக்கப்பட்டுள்ளது.  

இதை நாம் தெளிவாகப் புரிந்துகொள்ள வேண்டும். இலங்கை_ இந்திய ஒப்பந்தத்தின் மூலம் இந்நாட்டு தமிழ் மக்கள் பெற்றுக் கொண்ட முதன்மையான அடிப்படை உரிமையாக இது உள்ளமையைப் புரிந்து கொள்ள வேண்டும்.  

பெரும்பான்மை சிந்தனையுடன் தான்தோன்றித்தனமாகப் பறிக்கப்பட்ட மொழியுரிமை மீண்டும் சட்டப்படி கிடைத்தமை பெறுமதியானதாகவும், தமிழர்களது மொழியுரிமை மற்றும் தன்மானம் நிலைநாட்டப்பட்டதாகவும் அமைகின்றது. அதற்கு வழிவகுத்தது 13ஆவது திருத்தமாகும்.  

தமிழ் மொழியைப் புறக்கணிக்க வேண்டும், தமிழர்களை இரண்டாந்தரப் பிரஜைகளாக வைத்திருக்க வேண்டும். மொழியுரிமை மறுக்கப்படுவதன் மூலம் தமிழர்கள் இந்நாட்டின் அந்நியர்களாக, வேண்டத் தகாதவர்களாக இருக்கும் நிலையை உருவாக்க வேண்டுமென்ற வக்கிர எண்ணம் கொண்டவர்களுக்கு தமிழ்மொழி நாட்டின் தேசிய மொழியாகவும், அரசகரும மொழியாகவும் வடக்கு, கிழக்கு மாகாணங்களின் முதன்மை நிர்வாக மொழியாகவும் சட்டப்படி ஏற்கப்பட்டுள்ளதானது வெறுப்பைத் தருவதாகும். 

இனவாத சிந்தனையாளர்களிடமிருந்து இதை விட வேறெதையும் எதிர்பார்க்க முடியாது. மொழியுரிமைச் சமத்துவம் உரியபடி நிலைநிறுத்தப்பட்டால்தான் இனங்களுக்கிடையே சகோதரத்துவம், சமத்துவம் நிலவும். இன்றேல் பகைமை, நம்பிக்கையின்மை, விரோதம் ஆகியவையே தொடரும்.  

நிதானமாக, நியாயமாகச் சிந்திப்பவர்களுக்கு மட்டுமே இந்த உண்மை புரியும். அரசியல் இலாபத்திற்காக மக்களைத் தவறான வழியில் எழுச்சியூட்டி, அச்சமூட்டி அரசியல் செய்வோருக்கும் அவர்களது அடிவருடிகளுக்கும் இது புரியாது.  

குறித்த 13ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தை செயற்படாமல் செய்வது, இல்லாதொழிப்பது என்பது தமிழர்களின் மொழியுரிமையை மறுப்பதாகும்.  

மொழியுரிமை அதாவது இந்நாட்டில் தமிழர்களுக்கும் உரிய உரிமை வழங்கப்பட்டு தமிழும், சிங்களமும் சமவுரிமையுடன் இருந்தால் மட்டுமே இந்நாடு ஒன்றுபட்ட ஒரே நாடாக இருக்கும். தமிழ்மொழி உரிமை மறுக்கப்பட்டால் பிரிவினைவாதம் தலைதூக்குமென்று 1956ஆம் ஆண்டு குறித்த தனிச்சிங்களச் சட்டம் பாராளுமன்றத்தில் கொண்டு வரப்பட்ட போது அன்றைய பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி கொல்வின் ஆர்.டீ சில்வா தெளிவுபட எடுத்துக் கூறியிருந்தார்.  

அதாவது 'இரு மொழிகளென்றால் ஒரு நாடு, ஒரு மொழியென்றால் இரு நாடுகள்' என்றார் கொல்வின். அவர் தமிழரல்ல. சிங்கள கனவான் என்பது குறிப்பிடத்தக்கது. அவர் மட்டுமல்ல தமிழ்மொழிக்கு சமவுரிமை வழங்கப்பட வேண்டுமென்று அன்று கலாநிதி என்.எம்.பெரேரா, எட்மண்ட் சமரக்கொடி போன்ற அரசியல் தலைவர்களும் எடுத்துக் கூறினர்.  

ஓரளவாவது அதிகாரப்பரவலாக்களுடன் கூடிய மாகாண சபைகள் முறைமை அதன் கீழான நிர்வாகக் கட்டமைப்பு என்பனவும் பிரிவினைவாதச் சிந்தனைக்கு தடையானவையாகும். சிறுபான்மை இனத்தவரது மொழியுரிமையையும், நிர்வாக உரிமையையும் ஓரளவாவது உறுதிப்படுத்தும் 13ஆவது அரசியலமைப்புத் திருத்தம் இலங்கைக்குப் பொருத்தமில்லை என்பது இலங்கையில் இன நல்லிணக்கம், ஒற்றுமை, புரிந்துணர்வு, சமத்துவம், கௌரவம் என்பவை தேவையற்றவை என்ற சிந்தனையின் வெளிப்பாடே என்பதில் சந்தேகமில்லை.  

இந்நாட்டில் கட்டியெழுப்பப்பட்ட இனரீதியான சிந்தனைகள் மற்றும் செயற்பாடுகளைத் தகர்த்தெறிந்து ஒன்றுபட்ட, இறைமையுள்ள இலங்கையின் எதிர்காலத்திற்கு எத்தனை அரசியலமைப்புகள் புதிதாக உருவாக்கப்பட்டாலும் இலங்கை, இந்திய உடன்படிக்கையின்படி ஏற்றுக் கொள்ளப்பட்ட பதின்மூன்றாவது மற்றும் பதினாறாவது திருத்தங்கள் அதில் உள்ளடக்கப்பட வேண்டியது தவிர்க்க முடியாத தேவையாகும்.

இத்தீவு ஒரு இறைமையுள்ள நாடு என்ற எண்ணம் கொண்டவர்கள் இதைப் புரிந்து கொள்ள வேண்டும்.  

த. மனோகரன் - நன்றி தினகரன் 

No comments: