என்றுமே அவர்நினைப்பாய் இருந்திடுவோம் வாரீர் !

 

மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா
மேனாள் தமிழ் மொழிக்கல்வி இயக்குநர்
மெல்பேண் .... அவுஸ்திரேலியா     

 

           சித்தராய் வந்த சிறந்த குருநாதர் 

           சிவாய நமசெப்பும் சிறந்த குருநாதர் 
           பித்தரைப் போல் திரியும் பெருங்குரவரானார்
           நித்தமுமே அவரை  நினைந்தபடி இருப்போம்   

 

              நல்லூரான் அருளால் நம்குரவர் வந்தார்

              தொல்வினையைப்  போக்க நல்லுரைகள் தந்தார் 
              எல்லையிலா இறைவன் திருவடியைக் காட்டும்
              நல்வழியில் செல்ல நமக்குத் துணையானார்    !

 

                நோய்நொடியில் நிற்பார் ஓடியங்கு சென்றால்       

                வேதனையைத் தீர்க்கும் வெளிச்சமென நின்றார்   
                சாதனை நீசெய்வாய் என்றவரின் வாயால்
                ஓர்வார்த்தை உரைக்க காத்திருந்தார் பலரும் ! 

 

              அவர் தொண்டராக அன்னியரும் வந்தார்       

              அமெரிக்கர் அவரின் பெருமையினை அறிந்தார்          
              ஆன்மீகம் என்னும் பேரொளியைக் கண்டு          
              அவர்வழியை இப்போ அகம் இருத்துகின்றார்  !

 

              விசரென்று பழித்தவந்த செல்லப்பர் தன்னை       

              நல்லூரான் கருணையினால் தேரடியில் கண்டார       
              கண்டதுமே காந்தமென ஒட்டியவர் நின்றார்         
              செல்லப்பா அருள்கிடைக்க  தினமுமே அலைந்தார்  ! 

 

             பசித்திருந்த யோகரது பரிதாபம் கண்டார்

             பரிசோதனைக் காலம் முடிவதையும் பார்த்தார்       
            உள்ளிருந்த பேரொளியை உவப்புடனே காட்டி
            அள்ளவள்ள குறையா ஆனந்தங் கொடுத்தார்   !

 

             அன்றலர்ந்த தாமரையாய் ஆகினார் யோகர்       

             ஆன்மீகம் அவரிடத்து அமர்ந்து கொண்டதங்கே            
             எங்களுக்கு வாய்க்கும்படி நல்ல குருவானார்           
             என்றுமே அவர்நினைப்பாய் இருந்திடுவோம் வாரீர் ! 




No comments: