எழுத்தும் வாழ்க்கையும் - அங்கம் 33 தீர்க்கதரிசனமற்ற தலைவரின் ஆட்சியில் தொடர்ந்த அநர்த்தங்கள் ! எழுத்தையும் தலைமைகளையும் ஒப்புநோக்கிய காலம் !! முருகபூபதி


 


தெரிதலும், தேர்ந்து செயலும், ஒரு தலையாச்

சொல்லலும் வல்லது அமைச்சு

இது திருவள்ளுவர் வாக்கு.  இலங்கையில் திருக்குறள் சிங்கள மொழியிலும் பெயர்க்கப்பட்டிருக்கிறது.  ஆனால், எமது சிங்கள அரசியல் தலைவர்கள் அதனை பொருள் விளங்கிப்படித்தார்களா..? என்பது தெரியவில்லை !

1977 ஆம் ஆண்டு ஜே.ஆர். ஜெயவர்தனாவின் அரசு பதவியேற்ற காலப்பகுதியில்தான், அவர் 1906 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 17 ஆம் திகதி பிறந்த இல்லத்தில் பின்னாளில் அமைந்த வீரகேசரியில் நிரந்தர ஊழியனாகச்சேர்ந்தேன்.

1977 ஆம் ஆண்டு நடுப்பகுதியில்தான் அவரது பதவிக்காலத்தில்


முதலாவது கலவரம் வந்தது, அதற்குச்  சில மாதங்களுக்கு முன்னர்தான் எனக்கும் தனபாலசிங்கத்திற்கும் வேறு சிலருக்கும்  அங்கே நேர்முகத்தேர்வு நடந்தது.

கலவரம் வந்தமையால் அந்த நேர்முகத் தேர்வின் முடிவும் தாமதமாகியது.  அக்கலவர காலத்தில்தான் ஜே.ஆர்,  “ போர் என்றால் போர்- சமாதானம் என்றால்   சமாதானம்   “  என்று வானொலியில் திருவாய் மலர்ந்தருளி முரசறைந்தார். அதனை தமிழில் மொழிபெயர்த்தவர் காலப்போக்கில் அவுஸ்திரேலியா வந்து சிட்னியில்  மறைந்தார்.

ஜே.ஆரின்  பதவிக்காலத்தில் அடுத்தடுத்து மூன்று கலவரங்கள் நிகழ்ந்தன.  அந்த ஆண்டுகள் 1977 – 1981 – 1983. இரண்டாவது கலவரம் வந்தபோது வீரகேசரியில் அவர் திருவாய் மலர்ந்தருளும்  கருத்துக்களை செய்தியாக ஒப்புநோக்கநேர்ந்தது.

திருவள்ளுவர் என்ன சொல்கிறார்..?

ஒரு செயலைப்பற்றி பலவழிகளிலும் ஆராய்ந்து அறியவேண்டும். சந்தர்ப்பம் வரும்போது ஆராய்ந்தவாறு செய்யவேண்டும். அதிலும் நன்மை தருவனவற்றையே உறுதியாகச்  சொல்லவேண்டும். இதில் தனது ஆற்றலை வெளிப்படுத்துபவனே சிறந்த அமைச்சனாக இருப்பான்.


ஜே.ஆர். அரசியலில் பழுத்த அனுபவசாலி.  சட்டம் படித்த பரீஸ்டர்.  அமைச்சராக -  ராஜாங்க  அமைச்சராக  - பிரதமராகவிருந்து ஜனாதிபதியானவர்.  அரசியலில் இராஜதந்திரி.

அவர் எதிர்க்கட்சியிலிருந்த காலத்தில் யாழ்ப்பாணம் சென்று ஒரு கூட்டத்தில்பேசும்போது, அவமானப்படுத்தப்பட்டு தாமதிக்காமலேயே தனது காரில்  கொழும்பு திரும்பியவர். நான் நீர்கொழும்பு பிரதேச வீரகேசரி  நிருபராக பணியாற்றிய காலப்பகுதியில் யாழ்ப்பாணத்தில் நடந்த அச்சம்பவம் பற்றி, எங்கள் ஊர் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினரும் ஜே.ஆரின். கட்சியைச்சேர்ந்தவருமான டென்ஸில் பெர்னாண்டோவிடம் கேட்டுத் தெரிந்துகொண்டேன்.

யாழ்ப்பாணக்கலாசாரம் கந்தபுராணக்கலாசாரம் என்று பண்டிதமணி கணபதிப்பிள்ளை சொல்லியிருக்கிறார். அத்தகைய கலாசாரப்பிடிப்புள்ள வடபுலத்தில் ஒரு  தென்னிலங்கை அரசியல் தலைவரை அவ்வாறு அவமதித்தமை கண்டனத்துக்குரியதுதான்.

அதன் விலையை பின்னாளில் அறுவடை செய்யநேர்ந்தது. அந்த அறுவடைக்காலத்தில் எனது பத்திரிகை உலகப்பிரவேசம்  வீரகேசரிக்குள் நிகழ்ந்தது.

ஜே.ஆரின் மனதில் வஞ்சம் குடியிருந்திருக்கவேண்டும்.  வடபகுதி தமிழ் மக்களுக்கு  பாடம் கற்பிக்கவேண்டும் என்ற


எண்ணமும் இருந்திருக்கலாம்.

1977 இல் கலவரம் வந்தபோது இந்தியாவில் பிரதமராக இருந்தவர் மொரார்ஜி தேசாய். சிறுநீரில் சத்து இருப்பதாக கண்டுபிடித்து அருந்தியவர். அதனால் அவர் மூத்திரத்தேசாய் எனவும் அழைக்கப்பட்டவர்.

ஆனால், அவர் அவ்வாறு சொல்வதற்கு முன்பே, எனது சிறுவயதில் எனது லூட்டியை பொறுக்கமுடியாத  எனது அம்மா,  எப்பொழுதும் அமைதியாக இருக்கும் அயல்வீட்டுச்சிறுவனை காண்பித்து,  “ அவன்ட  மூத்திரத்தை குடித்தால்தான் உனக்கு நல்ல புத்திவரும்  “ என்று பலதடவை சொல்லியிருக்கிறார்கள்.

பின்னாளில், பாரதப்பிரதமரும் அதன் மகிமை பற்றிச்சொன்னதும், அவர் அதனை யாருக்கு புத்திமதி சொல்வதற்கு தெரிவிக்கிறார்… ? என்றும் நான் யோசித்ததுண்டு.

அவரிடம் சென்றால், அதன்மகிமையைத்தான் சொல்வார் என்று தெரிந்தோ, தெரியாமலோ எமது  இலங்கை தமிழ்த்தலைவர்கள்,  இலங்கையில் தமிழ் மக்கள்  1977 இல் அனுபவித்த இன்னல்களை சொல்வதற்கு  இந்தியாவில் எதிரணியிலிருந்த இந்திரகாந்தியிடம்  ஓடினர்.

அதற்கு அவர்,  “ இரண்டு கிழட்டு நரிகளும் என்ன


நினைக்கின்றன என்பது தெரியவில்லை.  நீங்கள் தேசாயிடம் முறையிடுங்கள்  “ என்று திருப்பியனுப்பினார்.

எமது தமிழ்த்தலைவர்கள் தேசாயிடம் முறையிட்டனர், அவரோ,  “ அது இலங்கையின் உள்நாட்டுப்பிரச்சினை. பேசி தீர்த்துக்கொள்ளுங்கள்  “ என்று கைவிரித்தார்.

போர் என்றால் போர் -  சமாதானம் என்றால் சமாதானம் என்றவரிடம் எதனைத்தான் பேசித்தீர்ப்பது..?

1978 இல் பாரதப்பிரதமர் தேசாய் இலங்கை வந்தார். எதிர்க்கட்சித்தலைவராக இருந்த அமிர்தலிங்கம் அவரை சந்தித்தார். மீண்டும் 1979 இல் தனது மனைவி மங்கையற்கரசியுடன்  அரச விருந்தினராக டில்லிக்குச்சென்றார்.

அங்கு அமிர் தெரிவித்த கருத்துக்கள் ஊடகங்களில் வெளிவந்தன.  இந்தச்செய்திகளையெல்லாம் வீரகேசரியில் ஒப்புநோக்கியிருக்கின்றேன்.

ஏற்கனவே இலங்கை – இந்திய ஒப்பந்தங்கள் பலவற்றை எனது பாடசாலைக்காலத்திலிருந்தே பார்த்து வளர்ந்தமையாலும், சரித்திர பாடம் எனக்கு மிகவும் பிடித்தமானதாலும்,  எமது தமிழ் ஆசிரியர் சுபியான், வீரகேசரி, தினகரன் வார இதழ்களை


படிக்கத்தூண்டியதனாலும்  அந்த ஒப்பந்தங்கள் பற்றி அறிந்திருந்தேன்.

மலையக இந்திய வம்சாவளி மக்கள் தொடர்பான ஶ்ரீமா – சாஸ்திரி ஒப்பந்தம்,  கச்சதீவை இலங்கைக்கு ஒப்படைக்க இந்திராகாந்தியுடன் ஶ்ரீமா  செய்துகொண்ட ஒப்பந்தம் என்பனவற்றையும்  அறிந்திருந்தமையால், பின்னாளில் வீரகேசரியில் செய்திகளை ஒப்புநோக்கும்போது,  எதிர்காலத்தில் எமது தாயகத்தினுள் இந்தியாவின் தலையீடு தவிர்க்கப்படமுடியாததே என்ற தீர்க்கதரிசனமும் வந்தது.

ஆங்கிலத்தில் ஒரு சொற்றொடர் இருக்கிறது.

"Experience without education is better than education without experience"  

அனுபவமற்ற கல்வியை விட, கல்வியற்ற அனுபவமே மேலானது.

கர்மவீரர் காமராஜர் அதற்குச்  சிறந்த உதாரணம்.   1975 ஆம் ஆண்டு அவர் மறைந்த செய்தியை ஒரு தியேட்டரில் படம் பார்த்துக்கொண்டிருந்தபோதுதான் அறிந்தேன்.  அவரையும் அவரது அரசியலையும்  கற்றேன்.

பாடசாலைக்கு செல்லும் வாய்ப்பினை சிறுவயதிலேயே இழந்தவர் அவர். எனினும் தமிழ்நாட்டில் ஏழை மாணவர்களின் கல்விக்கண்ணை திறந்தவர்.  அவர் முதலமைச்சராகவிருந்தபோது,  பல்கலைக்கழகங்களில் மாணவர்களை அனுமதிக்கும் திட்டத்தில் அவர்களின்


விண்ணப்பங்கள் பரிசீலனைக்காக அவரிடம் வருகிறது. அவர் மிகவும் குறுகிய நேரத்தில் தெரிவுசெய்து அதிகாரிகளிடம் கொடுத்துவிடுகிறார்.

 “ எப்படி  அய்யா இவ்வளவு சீக்கிரம் தேர்வுசெய்தீர்கள்…?  “  என்று அதிகாரிகள் அவரிடம் கேட்டபோது,

 “  இந்த மாணவர்களின் தந்தைமாரின் கையொப்பங்களை பார்த்தேன்.  அவர்கள் அனைவரும் கைநாட்டுத்தான் இட்டுள்ளார்கள். இவர்களின் பிள்ளைகளாவது படித்து நல்ல நிலைக்கு வரட்டும்.  , நான் இந்த விண்ணப்பங்களில் அதனைத்தான் முதலில் பார்த்தேன்  “  என்றார் அந்த தீர்க்கதரிசி.

விருதுநகரில் செக்கிழுத்து எண்ணெய் வடித்து வயிற்றைக்கழுவிய ஏழைக் குடும்பத்திலிருந்து வந்த காமராஜரையும்,  செல்வந்த குடும்பத்திலிருந்து வந்து லண்டன் சென்று பாரீஸ்டர் பட்டம் பெற்றுத்திரும்பிவந்து அரசியல்வாதியாகி, நாட்டின் அதிபராகிய ஜே.ஆர். ஜெயவர்தனாவையும்  அக்காலப்பகுதியில் ஒப்பிட்டுப்பார்த்தேன்.

எழுத்துப்பிழைகளை திருத்தும் ஒப்புநோக்காளராகியபோதே, உலகத்தலைவர்களையும் ஒப்புநோக்குவதற்கும் கற்றுக்கொண்டேன்.

தான் பதவியேற்ற காலப்பகுதியிலேயே  ஒரு இனக்கலவரம்


நாட்டில் வந்துவிட்டிருந்தால், அந்த நாட்டின் தலைவர் என்ன செய்திருக்கவேண்டுமோ அதனைச்செய்யத்தவறியதால்,  கடந்த நான்கு தசாப்தங்களுக்கும் மேலாக இலங்கையின் இனப்பிரச்சினை தீர்ந்தபாடாயில்லை.

அன்று 1977 – 1978 இல் அமிர்தலிங்கம்  அண்ணன் இந்தியாவுக்கு ஓடியதுபோன்று இன்று சம்பந்தன் அய்யாவும் ஓடிக்கொண்டிருக்கிறார்.

தேசிய இனப்பிரச்சினையை தீர்க்கவென ஜே.ஆர் காலத்தில்தான் முதலில் மாவட்ட சபை திட்டமும் பின்னர் மாகாணசபை முறைமையும் வந்தன. இறுதியில் ஒரு பிரயோசனமும் இல்லை.

1981 இல் மாவட்ட சபைத்  திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டபோது, அந்த யோசனையை வரைந்த தந்தை செல்வநாயகத்தின் மருமகனும் பிரபல சட்ட மேதையுமான ஏ. ஜே. வில்சனும் அமைச்சர் தொண்டமானும்,  யாழ்ப்பாணம் மாவட்டத்தில் ஐக்கியதேசியக்கட்சியை போட்டியிட அனுமதிக்கவேண்டாம் என்றுதான் ஜே.ஆருக்கு ஆலோசனை கூறினார்கள்.

இங்குதான்  இந்தப்பத்தியின் தொடக்கத்தில் குறிப்பிட்ட எமது திருவள்ளுவரின் வாக்கை  நினைவுபடுத்தவேண்டியிருக்கிறது.

இந்தியாவில் ஜாகிர் உசேன்,  அப்துல் கலாம் முதலான இஸ்லாமியர்கள் ஜனாதிபதியாக வருவதற்கு வாய்ப்பிருக்கிறது. ஆனால், இலங்கையில் சபாநாயகராக  ஒரு சிறுபான்மை இனத்தவர் வருவதற்கும் சங்கடம் இருக்கிறது.  பாக்கீர்மார்க்காரும் எம். எச். முகம்மதுவும் சொற்ப காலமே சபாநாயகர்களாக இருந்தார்கள்.

இந்நிலையில் ஒரு தமிழர் எவ்வாறு எதிர்க்கட்சித்தலைவராக தொடர்ந்து இருக்கமுடியும் என்ற சிந்தனைதான் பேரினவாதிகளிடத்தில் குடியிருந்தது.  அதன் எதிரொலிகளை அக்காலப்பகுதியில் செவிமடுக்கமுடிந்தது.

யாழ்ப்பாணம் மாவட்ட சபைகளுக்கான தேர்தல்  அறிவிக்கப்பட்டதும், தமது கட்சியின் பிரசாரப்பணிகளுக்காக ஜே.ஆர். அனுப்பிய அமைச்சர்கள் காமினி திஸாநாயக்காவும் சிறில் மத்தியூவும்.  சுமார் 180 சிங்கள் அரசுப்பணியாளர்கள் தேர்தல் ஆணையாளரால் தேர்ந்தெடுக்கப்பட்டு அனுப்பப்பட்டனர். அத்துடன், யாழ். மாவட்டத்தில் போதியளவு பொலிஸார் இருக்கத்தக்கதாக தென்னிலங்கையிலிருந்து மேலதிகமாக 250 பொலிஸார் சென்றனர்.  இவர்களுடன் பாதுகாப்பு இணை அமைச்சர் வெரபிட்டிய, செயலாளர், மற்றும் பொலிஸ் மா அதிபரும் சென்றனர்.

ஒரு மாவட்டத்தில் நடக்கவிருந்த தேர்தலுக்கு இத்தனைபேர் எதற்காக அனுப்பிவைக்கப்பட்டனர் என்பது மிஸ்டர் தர்மிஸ்டர் ஜே.ஆருக்கே வெளிச்சம்.

 இவ்வளவு பாதுகாப்பு ஏற்பாடுகளுக்கும் மத்தியில்தான் ஜே.ஆரின். அன்றைய அரசை ஆதரித்த வட்டுக்கோட்டை முன்னாள் எம். பி.யான ஆ. தியாகராஜா இளைஞர்களினால் சுட்டுக்கொல்லப்பட்டார்.

நாச்சிமார் கோவிலடியில் நடந்த தமிழர் விடுதலைக்கூட்டணியின் பிரசாரக்கூட்டத்தில் நான்கு பொலிஸ்காரர்கள் இளைஞர்களின் வேட்டுக்கு பலியாகினர்.

அதன்பிறகு நடந்த அனர்த்தங்கள் பற்றி இலங்கை தமிழர் அரசியல் வரலாற்று ஏடுகள் பதிவுசெய்துள்ளன.

மே 31 ஆம் திகதி,  யாழ்ப்பாணம் பொது நூலகம் பற்றி எரிகிறது   எனக் கேள்விப்பட்டதும், அங்கிருந்த பதட்டமான  சூழ்நிலைகளையும் பொருட்படுத்தாமல், வீட்டிலே தடுத்தபோதும்  கேளாமல், மறுநாளே யாழ்ப்பாணம் புறப்பட்டுச்சென்று மல்லிகை ஆசிரியர் டொமினிக்ஜீவாவுடன் அந்தக் கொடுமையைப் பார்த்தேன்.

எனக்கு என்ன நேரமோ… காலம் கடந்துதான் (2003இல்)  மாரடைப்பு வந்தது. அந்தச்சாம்பர் மேட்டைப் பார்த்தபோது  வந்த நெஞ்சுவலியை பின்னர் ஒரு Activist ஆக என்னை மாற்றியே போக்கிக்கொண்டேன்.

யாழ்.பொதுநூலகம் எரிக்கப்பட்டதை  அறிந்த வண.பிதா தாவீதுஅடிகள்  மாரடைப்பால் காலமான செய்தி ஜீவா  சொல்லித்தான் எனக்குத் தெரியும்.  

அவரதுபடத்தை மல்லிகை முகப்பில் பார்த்துள்ளேன். யாழ்ப்பாணத்தில் நாலாதிசையிலும் நடமாடிக்கொண்டிருந்த மிலிட்டரி பொலிஸ்காரர்கள் மக்களை மிரட்டிக் கொண்டிருந்தனர்.

 அவர்களின் நடமாட்டமே மிரட்சியை ஏற்படுத்தியிருந்தது. நூல் நிலையத்தை எரித்தவர்கள்,   யாழ். எம். பி. வெற்றிவேல் யோகேஸ்வரனின் வீட்டையும் ஈழநாடு அலுவலகத்தையும் எரித்திருந்தார்கள்.  யோகேஸ்வரனும் அவரது மனைவி சரோஜினியும் பின்புறத்தால் தப்பி ஓடியதாக அறிந்தேன். 

அச்சம்பவத்தின் பின்னர் யோகேஸ்வரனை அச்சமயம் எதிர்க்கட்சித் தலைவராக இருந்த அமிர்தலிங்கம் அவர்களின் கொழும்பு வாசஸ்தலத்தில்தான் சந்தித்தேன்.

1981 ஆம் ஆண்டு ஜூன் 01 ஆம் திகதி முற்பகல் எரிந்துகொண்டிருந்த யாழ். பொது நூலகத்தைப்பார்க்கச்சென்றபோது அங்கு மிலிட்டரி பொலிஸார்தான் காவலுக்கு நின்றார்கள்.

 “ இனிமேல் அங்கே எரிப்பதற்கு என்ன இருக்கிறது…? ஏன் இவர்கள் இங்கு காவலுக்கு நிற்கிறார்கள்..?  “ என்று உடன் வந்த மல்லிகை ஜீவாவிடம் கேட்டேன்.

காவலுக்கு நின்ற ஒரு மிலிட்டரி பொலிஸ்காரரிடம் சிங்களத்தில்,  "புவத்பத், புஸ்தகால கறபு வெறத்த குமக்த?" (பத்திரிகைகளும் நூல்நிலையமும் செய்த குற்றம் என்ன? ) என்று சிங்களத்தில் கேட்டேன்.

அந்த மிலிட்டரி  பொலிஸ்காரர் என்னை விநோதமாகப் பார்த்தார்.  யாழ்ப்பாணத்தில் தன்னோடு சிங்களத்தில் பேசும் இவன் யாராகவிருக்கும்  என்ற பார்வை அதில் தெரிந்தது.

 ஜீவா என்னை அழைத்துக்கொண்டு யாழ்ப்பாணம் ரயில் நிலையத்திற்கு வந்துவிட்டார்.    “ கொழும்புக்குச் சென்றதும்  தமது கட்சிக்காரியாலயத்திற்குச்சென்று,  அங்கிருப்பவர்களுக்கு இங்கு கண்டதைச்சொல்லும்.  பத்திரிகையில் எழுதும்  “ என்று நெற்றி நரம்பு புடைக்க ஜீவா உரத்துப்பேசிக்கொண்டு வந்தார்.

ரயில் நிலையம் வெறிச்சோடிக்    கிடந்தது. அன்று மாலை உரிய நேரத்திற்கு வரவேண்டிய இரவு தபால் ரயிலும் காங்கேசன்துறையிலிருந்து தாமதமாகவே புறப்பட்டது. ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுவிட்டதால் எனக்கு விடை கொடுத்துவிட்டு ஜீவா அருகிலிருந்த தமது வீட்டுக்குச் சென்றுவிட்டார்.

இரவுபத்துமணிக்குத்தான் அந்தமெயில்வண்டி வந்தது. விரல் விட்டு எண்ணத் தக்க பயணிகளுடன்   பதட்டத்துடனும் எனக்கு சிங்களமும் பேசத் தெரியும் என்ற தைரியத்துடனும் அந்தப் பயணத்தை தொடர்ந்தேன்.  கைத்தொலைபேசி இல்லாத அக்காலத்தில் நீர்கொழும்பில்  எனதுவீட்டார் மிகுந்த பதட்டத்துடனும் பயத்துடனும் எனது   வரவுக்கு காத்திருந்தனர்.

நீர்கொழும்பில் வாழ்ந்த இனவாதச் சிந்தனையற்ற சில முற்போக்கு எண்ணம் கொண்ட சிங்கள இளைஞர்களுடன்   இணைந்தேன்.

வண.பிதா திஸ்ஸ பாலசூரியா அவர்களின்   தலைமையில் ஒன்று திரண்டோம். யாழ்.பொதுநூலக  எரிப்புக்கு கண்டனம் தெரிவித்துகூட்டம் நடத்துவதற்கும் நூல்கள் சேகரிப்பதற்காகவும் ஒரு இயக்கத்தை ஆரம்பித்தோம். 

அச்சமயம் நீர்கொழும்புக்கு அருகாமையில் சீதுவை   என்னுமிடத்தில் வசித்த பிரபல சிங்கள திரைப்பட நடிகரும்  பின்னாளில் அரசியல்வாதியாக மாறியவருமான விஜயகுமாரணதுங்காவும் எம்முடன் இந்தக்கூட்டத்தில் இணைந்து கொண்டார்.

யாழ்.பொதுநூலக எரிப்புக்கு கண்டனம் தெரிவித்து                            ஜி. செனவிரத்தின உட்படசில மனிதஉரிமை ஆர்வலர்களுடன் இணைந்து கொழும்பில் புதிய நகரமண்டபத்தில் ஒரு பொதுக்கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டது. இக்கூட்டத்தில் எதிர்க்கட்சித் தலைவராக இருந்த அமிர்தலிங்கமும் பேசுவதாக இருந்தது.  ஏதும்  குழப்பம் நேரலாம் என்று இறுதி நேரத்தில் பொலிசார் இக்கூட்டத்திற்கு அனுமதி வழங்கவில்லை.

நாம் அரசின் உளவுப் பிரிவினரால்  கண்காணிக்கப்படுகிறோம் என்பது தெரியாமலேயே அந்த  இயக்கத்தை முன்னெடுத்தோம். அக்காலப்பகுதியில் நான் அங்கம் வகித்திருந்த நீர்கொழும்பு இந்து இளைஞர் மன்றத்தில் அதன் அப்போதைய தலைவர் அ.மயில்வாகன்   தலைமையில் நீர்கொழும்பில் நூல்களும் வர்த்தக அன்பர்களிடம் நிதியும் சேகரித்தோம்.

பின்னர் பம்பலப்பிட்டி சரஸ்வதி மண்டபத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் நிதியுட்பட சேகரிக்கப்பட்டவற்றை  கட்டிடக் கலைஞர்  வி.எஸ்.துரைராஜா  முன்னிலையில் வழங்கினோம்.

அமிர்தலிங்கம் அந்தச்சம்பவத்தை கண்டித்து நாடாளுமன்றில் நிகழ்த்திய உரை மிகவும் முக்கியமானது. அவர் அன்று இவ்வாறு சொன்னார்:

“ இரண்டாம் உலக மகா யுத்தத்தின்போது, ஹிட்லர் தனது படைகளிடத்தில்,“ மருத்துவமனைகள் நூல் நிலையங்கள் மீது தாக்குதல் நடத்தவேண்டாம்  “ என்று கட்டளை இட்டார். கொடுங்கோலன்  சர்வாதிகாரி எனப் பெயரெடுத்த  ஹிட்லருக்கும் கூட நூல் நிலையத்தின் பெறுமதி தெரிந்திருக்கிறது. ஆனால், இலங்கையில் எமது நாட்டைப்பாதுகாக்கவேண்டிய பொலிஸாருக்கு இந்த அடிப்படை அறிவும் தெரியவில்லை  “

யாழ்.பொது நூலக எரிப்பு தொடர்பாக “  வலிசுமந்த நூலக நினைவுகள் “  என்ற எனது கட்டுரை, கடந்த 2019 ஆம் ஆண்டு வெளியான எனது சொல்லத்தவறிய கதைகள்  நூலிலும் இடம்பெற்றுள்ளது.

பொலிஸாரின் அடாவடித்தனத்தால், அன்று யாழ். ஈழநாடு பத்திரிகை அலுவலகம் மற்றும் பஸ் நிலையத்திலிருந்த பூபாலசிங்கம் புத்தகசாலை உட்பட  பல கட்டிடங்கள்  எரிந்தன.

அதனைப்பார்க்க யோகர்சுவாமிகள்தான் இல்லை.

இருந்திருப்பின், ஈழநாடு முதல் பிரதி தன்வசம் தரப்பட்டபோது,  எதற்காக,  “ ஏசுவார்கள், எரிப்பார்கள்  “ என்று சொன்னேன்.  எனது நாக்கு கரிநாக்கா..?  “ என்றும் யோசித்திருக்கக்கூடும்.

வில்சனும், தொண்டமானும்  சொன்ன சொல்லை கேளாமல்  எதுவித தீர்க்கதரிசனமுமற்று யாழ். மாவட்ட தேர்தலில் ஐக்கியதேசியக்கட்சியை போட்டியிடவைத்து,  இத்தனை அநர்த்தங்களுக்கும் வித்திட்ட ஜே.ஆர். சர்வதேச அழுத்தங்களினாலும் கூட்டணித்தலைவர்களின் நெருக்குதலினாலும், இறுதியில் யாழ். நூலக எரிப்புக்கு ஒரு கோடி ரூபா இழப்பீடு தருவதற்கு சம்மதித்தார்.

யாழ். எம்.பி. வெற்றிவேல் யோகேஸ்வரனின் வீடு தீக்கிரையாக்கப்பட்டதற்கும்  இழப்பீடு வழங்கப்பட்டது.

நிகழ்ந்த அநர்த்தங்களை விசாரிக்க சர்வதேச ஜூரிமார் சபை நியமிக்கப்பட்டது.  அந்தச்சபை Ethnic Conflict and Violence in Srilanka என்ற தலைப்பில் நீண்ட அறிக்கை தயாரித்து ஜே.ஆரிடம் கொடுத்தது.

அவர் கண்துடைப்பில் பெரிய வித்தகர்.  அதற்கு முன்னர் 1977 இல் நடந்த கலவரம் பற்றியும் சன்சோனி என்ற நீதியரசர் தலைமையில் ஆணைக்குழு வைத்து விசாரித்து அறிக்கை பெற்றவர்.

இழப்பீடுகள், ஜே.ஆரின் குடும்பச்சொத்திலிருந்து வழங்கப்படுவதில்லை. மக்களின் வரிப்பணத்திலிருந்தும் வெளிநாட்டு கடனுதவியிலிருந்தும்தான் வழங்கப்படுகிறது.

எங்கள் வீரகேசரியின் மூத்த ஊடகவியலாளர் எஸ். எம். கார்மேகம்,  ஈழத்தமிழர் எழுச்சி – சமகால வரலாறு என்ற நூலில் இந்த தர்மிஸ்டரின் அரசியல் வாழ்க்கை பற்றியும் பதிவுசெய்துள்ளார்.

ஜே.ஆர். பிறந்து தவழ்ந்த இல்லத்திலிருந்துதான், நாம் எமது ஊடக அனுபவங்களையும் அவரைப்பற்றிய செய்திகளையும்  பெற்றுக்கொண்டோம் என்பதும் விதிப்பயன்தான் !

( தொடரும் ) 

No comments: