தியாகம் - நாட்டியக் கலாநிதி.கார்த்திகா.கணேசர்

 .

தியாகம் - ஆமாம், இவ்வார்த்தையைக் கேட்டதும் எம் மனக் கண்ணிலே தெரிபவர்கள் தமது சொகுசான வாழ்வை தியாகம் செய்ததால் உலகத்தவரால் போற்றப்படும் சமூக சேவையாளர்கள்.


தியாகம் என்ற மாபெரும் வார்த்தைக்கு அர்த்தம் கற்பித்து வாழ்ந்து காட்டியவர்கள் பலர். யேசுநாதரின் தியாகம் போற்றுதலுக்குரியது. மனிதனாகப்பிறந்து மனித வாழ்வை அவர் மேம்படுத்தினார்.அன்னை திரேசா வாழ்வையே இன்னலுறும் மக்களுக்காக அர்ப்பனித்தார். மகாத்மா எனப் போற்றப்படும் காந்தி வாழ்வு பூராவும் ஏழை இந்தியனுக்காக உழைத்தவர்.

இதை ஏன் செய்தார்கள்? மக்களின் இன்னலை ; கஸ்டத்தை அவஸ்தையை உணர்ந்து, அதற்கு நிவாரணம் தேட அவர்கள் உள்ளம் துடித்தது. மற்றவர்களின் கண்கள் காணாததை அவர்கள் கண்டுவிடவில்லை. நாளாந்தம் பலர் காணும் ஏழைகளையும் அவர்களின் துன்பத்தையும் தான் இவர்களும் கண்டார்கள். ஆனால் அவற்றைக் காணும் மற்றவர்களுக்கு இல்லாத துடிப்பும் பற்றும் பரிவும் பாசமும் அவர்களிடம் பெருகி ஓடியது. அதற்காக அவர்கள் தம் சுகங்களை இழக்கத் தயாரானார்கள். இதைத் தான் தியாகம் என்பது.


தியாகம் என்ற வடமொழிச் சொல்லின் அர்த்தம் எதையோ துறப்பது அல்லது விட்டுவிடுவது என்பதாகும். ஆமாம், இத்தகைய தியாகிகள் தமது வாழ்வின் சுகங்களைப் பிறர் பொருட்டுத் துறந்தவர்கள். எனது ; என்னுடயது என்ற பற்றை விட்டு விட்டவர்கள்.


ஆனால் இவற்றை எல்லாம் சாதாரண மனிதன் செய்துவிட முடியுமா? இல்லைத்தான். ஆனால், ’அத்தனையும் எனக்காக’ என்ற வாழ்வு நின்மதியைத் தந்துவிடுமா? சந்தேகம் தான். பேராசையின் நிமித்தம் பணத்தைச் சேர்ப்பவன் நின்மதியை அடைகிறானா? பணத்தைத் தேடி அலைவதால் ஏற்படும் இரத்த அழுத்தம், உடல் நோய், மனநோய், தீராக்க்கவலை என எத்தனை எத்தனை....


அதனால் தான் உழைப்பின் ஒரு பகுதியைத் தான தர்மங்களில் செலவு செய்ய உலகம் வலியுறுத்துகிறது. திருப்பி வட்டியாக நீ செய்யும் தர்மம் உன்னைத் தேடி வராது. இதற்கு வட்டியாகக் கிடைப்பது மனநின்மதி, அமைதி, திருப்தி போன்ற விலைமதிக்கவியலாத செல்வங்களே! எந்தவித பதிலுபகாரத்தையோ நன்றியையோ கைமாற்றையோ எதிர்பாராது செய்யப்படும் காரியமே மனநின்மதியைத் தரவல்லது. மன நிறைவுடன் கொடுப்பதே தர்மம். இந்த மன அமைதியை ஏற்படுத்தவே மதங்கள் ‘தர்மம் செய்’ எனப் போதிக்கிறது.


ஜைன மதம் குடும்பத்தாருக்கு நான்கு வகையான தர்மங்களைப் போதிக்கிறது. ஆகார தானம்; பசித்தவனுக்கு ஆகாரம் - உணவு அளிப்பது, அபய தானம் - வாழ்விடம் அளிப்பது, ஒளஷ்டத தானம் - நோய்தீர்க்கும் மருந்தும் மருத்துவ சேவைகளும் வழங்குவது, ஞான தானம் - அறிவைத் தானமாக வழங்குவது. என்பவையே அவையாகும்.


இங்கு குறிப்பிட்ட இந்த நான்கு தானங்களும் இன்று எமது சமூகம் வேண்டி நிற்கிறது. ஆமாம், போரினால் பாதிக்கப்பட்ட எமது சமுதாயம் அத்தனையையும் வேண்டி நிற்கிறது. அதை மனதார அளிக்க வேண்டியது எமது கடமையும் தர்மமுமாகும். எமக்குத் தந்தது பத்தாது என எண்ணி மேலும் ஆசையால் ஆண்டவனை வேண்டி, அவனைப் பிரீதி செய்யாமல் மேலை நாடுகளில் சொகுசு வாழ்வு வாழும் நாம் எமது சமூகத்தில் ஏற்பட்ட அவலத்தில்; மக்களின் துன்பத்தைத் துடைக்க, தமது கண்ணை அவர்கள் பால் திருப்புவதே இன்று நாம் செய்யவேண்டிய தர்மம்.


எமது அற்ப சுகங்கள் சிலவற்றை நாம் தியாகம் செய்தாலே அங்கு பலர் நின்மதியாக வாழலாம். வளர வேண்டிய வயதிலே போஷாக்கு அற்றுத் தவிக்கும் குழந்தைகளைப் பாருங்கள்! குண்டுவீச்சில் கால்களை இழந்தவரைச் சற்றே சிந்தியுங்கள்! அனாதையாகிவிட்ட குழந்தைகளை ஒரு கணமேனும் நினைத்துப் பாருங்கள்! வாழ்வதற்குக் குடிசைதன்னும் அற்று கூடாரத்தில் வாழ்பவர்கள் எத்தனை பேர்? நாம் எமது சுகத்தில் சிலதையேனும் தியாகம் செய்தால் நிச்சயம் அவர்களின் குடும்பம் கொடிய மாரிக்கு ஒதுங்க குறைந்த பட்சம் ஒரு கூரையாவது கிடைக்கும். பட்ட கஷ்டங்கள், காயங்கள், ஊனங்கள், நித்திய வேதனை ... இவைகளுக்கு ஒரு சிறு மாற்றாவது கிடைக்கும். இவை எல்லாம் எமக்குத் தெரியாததா என்ன?


எமது பிள்ளைகள் இன்று விளையாட்டுப் பொருட்களை வாங்கி எறிந்து விடுகிறார்கள். அந்தப் பணத்தைத் தன்னும் நாம் சிறிது சிந்தித்து ஊருக்கு அனுப்பினால் நாதியற்ற குழந்தை ஒன்று நாளை தனது சொந்தக் காலில் நிற்க உதவியவர்கள் ஆவோமல்லவா? தியாகம் என்பது உயர்ந்த ஒன்றைப் பெறுவதற்காக தன்னையே இழப்பது என்கிறார் ஒரு தத்துவ ஞானி. இயற்கையை உற்று நோக்கினால் அங்கும் நாம் அவற்றைக் காணலாம் என மேலும் அவர் கூறுகிறார்.


இறைவனைத் தேடித் தீர்த்த யாத்திரை போகும் பக்தர்களுக்குக் காசியிலே அர்ச்சகர் உணர்த்துவது எமக்கு அதிகமாகப் பிடித்த ஒரு உணவை நாம் இறைவனுக்காகத் தியாகம் செய்ய வேண்டும் என்பதாகும். அதாவது எமது காசியாத்திரையின் பின் உயிர் உள்ள வரை நாம் அதை உண்ண மாட்டோம் என்ற சங்கபம் அது. இது எதற்காக? ஏன் நாம் எம் ஆசையில் ஒன்றையேனும் தியாகம் செய்யவேண்டும் ? அப்பொழுது தான் காசியாத்திரையின் புண்ணியம் எம்மை வந்தடையுமாம். நீ எல்லாவற்றையும் உனக்காகவே கொள்ளாமல் தியாகமும் செய் என்பதையே இந்தச் செய்கை உணர்த்தி நிற்கிறது. இதைப் போன்ற செய்கையை; இந்துக்கள் காசியிலே செய்வது போன்று பெளத்தர்கள் புத்தகாயாவில் மேற்கொள்ளுகிறார்கள்.


இவ்வாறு தியாகம் செய்யாமல் நாம் அதிகப்படியாக உண்போமானால் இயற்கையே எமக்கு எமது தவறை உனர்த்தி விடும். வேறு என்ன! அதிகப்படியாக நாவுக்கடிமையாகி உண்பவருக்கு நிச்சயமாக உடல் நலம் பாதிக்கப்படும். சக்கரை வியாதி,- இனிப்பு ஆகாரத்தை அதிகப்படியாக உண்ண முடியாது போகும். இரத்த அழுத்தம் வரும். அது உப்பே இல்லாமல் சாப்பிட வலியுறுத்தும். மேலும் இதியாதி இத்தியாதி.... அதிக உணவை உண்பவருக்கு மட்டுமல்ல, அதிக பணத்தைத் தேட வேண்டும் என்ற அவாவும் நோய்க்கே கால்கோளாகும்.


பெளத்த சங்கக் கோட்பாட்டின் படி வீட்டிலே பிறந்த முதல் ஆண்மகவை சங்கத்திற்கு அர்ப்பணிக்க வேண்டும் என்கிறது. அன்றய காலகட்டத்தில் பெளத்த சங்கம் அறியாமையில் உழன்ற மக்களுக்கு அறிவை வழங்கி சேவை செய்த இயக்கம். மக்களின் கண்களைத் திறக்க; அவர்கள் வாழ்வை மலர வைக்க; உங்கள் மகனைத் தியாகம் செய்யுங்கள் என்பதையே பெளத்த சங்கம் அன்று வேண்டி நின்றது.


இராமகிருஷ்ண பரமஹம்சரோ உண்மைத் தியாகம் என்பது தன்னை இழப்பது என்றார்.அது நான் செய்தது என்ற மமதை அற்றது என்றார். அது தன் நலம் அற்றது; இவ்வாறு செய்வதால் நாம் அன்பின் உருவாக முடியும் என்கிறார். அவ்வாறே வாழ்ந்தும் காட்டியவர் அவர். மேலும், அவர் உலகில் உள்ள அத்தனையும் ஆண்டவனதே! என்ற எண்ணம் வரும் போது அதைக் கொடுப்பது என்பது எங்கே? அது தானே ஆண்டவன் யாவருக்கும் அளித்தது! அப்படி இருக்க, அதை எப்படி நான் கொடுத்ததாகக் கொள்ள முடியும்? என அவர் கேள்வி எழுப்புகிறார். இது ஞானியருக்கே வரத்தக்க அதி உயர் சிந்தனையா?


அண்மையில் ஒரு கதை வாசித்தேன். ஒரு ஆதிவாசி அல்லது காட்டுமனிதன் அவன். ஒரு நாள் அவன் மனித நாகரிக நகரத்துக்குள் புகுந்து விடுகிறான். அங்கு ஓடும் பஸ் கார் போன்றவற்றைப் பார்த்து ஏதோ தனக்குப் பழக்கப்படாத பெரிய மிருகங்கள் போலும் என அவற்றை அவன் எண்னணுகிறான். பசிவர கண்ணில் பட்ட மரத்தில் இருந்து கொய்யாப்பழத்தை கொய்து உண்டான். சிறிது அப்பாலே போய், நல்ல மாங்காய்கள் தொங்கிக் கொண்டிருந்ததைக் கண்டு,  அதையும் பிடுங்கி உண்டு பசியாறுகிறான். தூக்கம் கண்களைச் சுழற்ற அந்த மாமரத்தடியிலேயே தூங்கியும் விட்டான். அவனை யாரோ அதட்டி எழுப்புகிறார்கள்.


அது தான் நம் நாகரிக உலகத்தின் பொலிஸ்காரர். அவனை இழுத்து ஜீப்பில் போட்டுக்கொண்டு போகிறார்கள். அவனுக்கும் அந்த பெரிய மிருகத்தில் பறப்பதைப் போன்ற ஒரு உல்லாச உணர்வு! பொலிஸ்நிலயம் போய் சேர்ந்ததும் அவனைக் கூண்டில் அடைக்கிறார்கள். அவனோ ஏனெனெப் புரியாது முளிக்கிறான். மறுநாள் நீதினம்றம் அழைத்துச் செல்லப்படுகிறான். குற்றப்பத்திரிகை வாசிக்கப்பட்டது. அத்து மீறி பிறருக்கு உரிமையான நிலத்தில் பிரவேசித்தது முதல் குற்றம். அங்குள்ள அவர்களுக்குச் சொந்தமான கனி மரத்தில் பழங்களைப் பறித்து உண்டது இரண்டாவது குற்றம். பிறருக்குச் சொந்தமான நிலத்தில் அவர்களின் அனுமதி இல்லாமல் படுத்துறங்கியது மூன்றாவது குற்றம். என அதில் கூறப்படுகிறது.


அவனுக்கு எதுவுமே புரியவில்லை. நான் கனிகளைப் பறித்துச் சாப்பிட்டது பசிக்குத் தானே! அது தப்பா என யோசிக்கிறான். மேலும் அவன், அத்துமீறி நுழைந்ததா? அப்படி என்றால் என்ன? என அவன் நீதியரசரை வினவுகிறான். அதற்கு நீதி அரசரோ அங்கு அவர்களின் நிலம் என்பதைக் குறிக்க எல்லைக்கு வேலி உண்டு. அது அவர்களின் நிலம். அதை மீறி நீ அவர்களின் நிலத்துக்குள் புகுந்தது மட்டுமன்றி, அங்கேயே தூங்கவும் செய்திருக்கிறாய், அது குற்றம் என்கிறார். அவனுக்கு எதுவுமே புரியவில்லை. எனினும் அவனுக்கு 6 மாத சிறைத்தண்டனை வழங்கப்படுகிறது.


ஆமாம் அவனை நாம் நாகரிகம் அற்ற மனிதன் எனக் கூறுகிறோம். ஆனால் உலகில் உள்ள யாவையும் யாவருக்கும் சொந்தமான இயற்கை அளித்த செல்வம் என்பது தெரியாத கொடியவர்கள் அல்லவா நாம்? சமூகமும் உலகமும் நாகரிகம் என்ற பெயரிலே வாழும் வாழ்வைச் சித்தரிக்கும் கதை அது!


இந்த ‘நாகரிக’ சமூகத்தில் தான் தனது; தனக்கு; என்னுடயது எனற சிந்தனைகள்  உள்ளன. அதன் பின், ’அதைக் கொடு’ என அறம் வேறு பேசுகிறோம். தியாகம், அறம் என்பதெல்லாம் பின் தோன்றிய கருத்துருவாக்கங்களே. இருந்த போதும் ‘அறம் செய்ய விரும்பு’ என்றால் கொடுத்து விடுகிறானா மனிதன்? ஒளவை சொல்லி எத்தனை காலமாயிற்று! ஒருவனுக்கு உணவில்லையெனில் ஜெகத்தினை அழித்திடுவோம் என்றானே பாரதி! அத்தனையும் சொத்துரிமை கொண்டாடும் சமூகத்தின் வெறும் இலக்கியமாகவன்றோ போயிற்று!


கார்ல்மார்க்ஸும் ஏங்கலிஸ் உம் தோன்றி பலகாலம் ஆராய்ந்து தனியுடமையே சமூகச் சீர்கேட்டுக்குக் காரணம் எனக்கண்டறிந்து எடுத்து விளக்கினார்கள். அதை உலகம் கேட்டதா? அவர்கள் தத்துவங்களும் இன்று குழிதோண்டி புதைக்கப்பட்டுவிட்டன.


யாவருக்கும் பொதுவான செல்வம் போதியளவு உலகில் உண்டு. ஒவ்வொருவரும் செல்வந்தராக முயலும் போது மற்றவருக்கு தேவைப்படுகிற ஒன்று பறிக்கப்படுகிறது. இதை உணர பெரிய பெரிய தத்துவங்களோ தத்துவ ஞானிகளோ தேவை இல்லை.


( இக்கட்டுரை ATBC வானொலியில் ‘பண்பாட்டுக் கோலங்கள்’ நிகழ்ச்சியில் .... அன்று ஒலிபரப்பானது. )

Posted by நாட்டியக் கலாநிதி.கார்த்திகா.கணேசர் at 11:37 AM 

Email This

BlogThis!

Share to Twitter

Share to Facebook

Share to Pinterest

2 comments:


ParameswaranFebruary 14, 2019 at 10:13 AM

ஒருவன் தனக்கு உபயோகமில்லாத ஒன்றை பிரிதொருவருக்கு கொடுப்பதற்கே தியாக சிந்தனை அவசியம். எனவே, தான் உயிர் வாழ்வதற்கு மூலாதாரமான ஒன்றை மற்றவருக்கு விட்டுக் கொடுப்பது, தியாகத்தின் சிகரம் என்றே கொள்ள வேண்டும்.


அப்படிப்பட்ட தியாகங்கள் பற்றி நாம் இதிகாசங்கள் மற்றும் வரலாறுகளிலிருந்து அறிந்துள்ளோம்.


கொடைக்கு இலக்கணமாக விளங்கிய கர்ணன் தன்னுடன் கூடவே பிறந்த கவச குண்டலங்களை இந்திரனுக்கு தானஞ் செய்கின்றான். அவ்வாறு செய்ய வேண்டாம் என்று எச்சரிக்கைச் செய்யப்பட்ட நிலையிலும், தனக்கும் மிகவும் அவசியமானதும் தானம் பெறுவர்க்கு எவ்வகையிலும் பிரயோசனம் படாத ஒன்றையும் தியாகம் செய்ததை தியாகத்தின் சிகரம் என்பதை விட வேறு எப்படிப் கொள்ள முடியும்?


பீஷ்மர் செய்த தியாகமோ இதை விட மேன்மையானது. தந்தையின் மகிழ்ச்சிக்காக தனது அரசுரிமையை மட்டுமல்லாது தனது இல்லறசுகத்தையும் தியாகஞ் செய்ததைப் போல வேறொருவாரால் செய்ய முடியுமா?


அரசன் குமணன் நாடிழந்து வனவாசஞ் செய்யும் போது தன்னிடம் யாசகம் கேட்டவனுக்கு தனது தலையையே தியாகம் செய்ததும் இது போன்றதே.


இவ்வகையில், அண்மைக் காலத்தில் யுத்தச் சூழ்நிலையில் தமது இளமையையும் அதற்கும் மேலான உயிரையையும் தியாகஞ் செய்தவர்களை நாம் எப்படி மறக்க முடியும்?


அல்லலுறும் மக்களுக்கு உதவி செய்ய வேண்டிய கடமை எமக்குண்டு. இதற்கு கொஞ்சம் தியாகம் செய்யும் எண்ணத்தை மனதில் கொள்ள வேண்டும்.



No comments: