பல்வைத்திய கலாநிதி பாரதி இளமுருகனார்
சாதகங்கள் மிகப்பொருத்தம் தாமதிக்க நேரமில்லை
“சாத்திரத்தை நம்பிநீயும் திருமணத்தை வைக்கநல்ல
மாதமிது கேட்டிடுவீர் மங்கலநாண் ஏறும்வரை
மணமுடிக்குந் தம்பதியர் பேசிடவே தேவையில்லை”
‘வேதமந்ரம்’ போலவேயோர் சாத்திரியார் சொன்னவுடன்
மேளதாளத் தோடுபெற்றோர் விவாகத்தைச் செய்துவைத்தார்
காதலனைக் கண்ணீரில் கதறவிட்ட காதலிதன்
கதைகூற வழிவிடாது கணையாழி மாற்றவைத்தார்!
உள்ளத்தால் வரித்துவிட்ட காதலனின் கதையையவள்
உணர்ச்சிபொங்க முதலிரவில் கணவனிடம் உரைத்திட்டுக்
கள்ளமொன்றும் இல்லைநானும் களங்கப்பட வில்லையெனக்
கதறியவள் சத்தியந்தான் செய்துநின்றும் பயனில்லை
“தள்ளிப்போ! தொடமாட்டேன்! தந்திடுவேன் விவாகரத்து”
என்றவளைத் துரத்திவிட்டான்! சாத்திரமும் பொய்த்ததுவே!
வெள்ளைமனப் பெண்ணவளின் கட்டாயக் கலியாணம்
விபரீத மாகிப்பெரும் வேதனையில் முடிந்ததுவே!
மணமுடிக்க இருப்போர்கள் மனந்திறந்து பேசவேண்டும்!
மனம்வைத்துப் பெற்றோரும் இதையுணர்ந்து செயற்படணும்!
இணங்கியொத்த மனங்கூடில் என்றும்பிரி வில்லையன்றோ?
இந்தநல்ல மனப்பொருத்தம் இருப்பதென அறிவதற்கு
எண்ணிநீவிர் சாதகத்தைப் எடுத்தலையத் தேவையில்லை!
இணைபவர்கள் சந்திப்பால் இழப்பொன்றும் ஏற்படாது!
மணமகளின் கற்புக்கும் மாசேதும் வந்திடாது!
மணப்போர்நல் வாழ்விற்கு மாறாதோ எண்ணங்கள்?
பச்சைத்தாள் தாளாகப் பணம்பண்ண எத்தனையோ
பரிகாரத் திட்டங்கள்! சிறுதெய்வ பெருவேள்வி!
அச்சப்பட வைத்திடுவர்! ஆட்டிப்ப டைத்திடுவர்!
அபிடேகம் ஆராதனை அத்தனையும் செய்துவிட்டால்
மிச்சமெனத் தொடருமுன்றன் வினைகளெலாம் விலகிடுமோ?
மிகுத்துவரும் வினைகளைநீ அனுபவித்தே தீர்க்கணுமே!
இச்சையுடன் நவக்கிரகம் இயக்கிவருஞ் சிவனிருக்க
ஏன்மூட நம்பிக்கை? எண்ணங்கள் மாறாதோ?
“ஏழையாக்கி விட்டதுவே ஏழரைச்சனி பிடிச்சதுவே!
என்வீட்டுக் காரிக்கோ அட்டமத்துச் சனியாச்சே!
நாளைக்கே சாத்திரியார் சொன்னபடி பரிகாரம்
நல்லபடி சனீஸ்வரனுக் கபிடேகம் செய்திடுவேன்!
வேளைக்கே எள்ளெண்ணெய் எரித்திடுவேன்!” எனப்புலம்பி
விலைகொடுத்துப் பூசைசெயவர்! வினைகளெலாம் போயிடுமோ?
கோளையெலாம் படைத்திட்ட சிவனைமறந் திட்டோர்சிறு
கோளுக்குப் பூசைசெய்தால் கூட்டுவினை குறைந்திடுமோ?
கூடா!மூட நம்பிக்கை! எண்ணங்கள் மாறாதோ?
எடுத்ததற்கும் சாத்திரத்தைப்; பார்ப்பவர்கள் பலருண்டு
இறைவனிடம் மனமுருகி முறையிடவே அவனிரங்கிக்
கொடுத்திடாத தீர்வையெந்தச் சோதிடர்தான் கொடுத்திடுவர்?
“கூடிநிற்கும் கிரகங்கள் பார்வையொன்றும் சரியில்லை
அடுத்துநானும் சொன்னபடி பரிகாரம் அத்தனையும்
ஆற்றிடுவீர் அதன்பின்னர் பவளக்கல் மோதிரத்தை
நடுப்பகலில் நவக்கிரக பூசைவைத்து அணிந்திடுவீர்!
நாடிவந்த துயரெல்லாம் ஓடிவிடும்” என்றொருநாள்……..
சாத்திரியார் செப்பியதைச் சத்தியவாக் கென்றெடுத்துத்
தன்னிடம் இருந்ததெல்லாம் ‘தாரைவார்த்து’ப் பரிகாரம்
பாத்திருந்து நிறைவேற்றிப் பச்சைக்கல் மோதிரமோ
பலன்அதிகந் தந்துவிடும் பட்டதுயர் தீருமென்று
காத்திருந்தார்! பலன்அந்தோ கடுகளவும் நிகழவில்லை! கடவுளைத்தான்; மறந்ததனால் இருந்ததெல்லாம் தொலைந்ததென்று
ஏத்திநின்று வணங்கிநின்றார் இட்டபிழை பொறுத்திடவே!
ஏன்மூட நம்பிக்கை? எண்ணங்கள் மாறாதோ?
கருவிலெமை இணைத்திட்ட அக்கணமே சிவபெருமான்
கணக்கெழுதி வைத்துவிட்டான்! பிணக்கின்றி அதுநடக்கும்!
‘கருமவினை தனையெந்தக் ‘கல்’அணிந்தும்; போக்காது
கடைசிவரை தானேதான் அனுபவித்துப் போக்கவேணும்’
தருமஞ்செய் வதனாலும் தனக்குள்ளே சிவனான
தலைவனவன் சிந்தனையை வளர்ப்பதாலும் வினைப்பயனாய்
இருந்துலைக்கும் தாக்கத்தைச் குறைத்துவிட வழியண்டு!
ஏன்மூட நம்பிக்கை? எண்ணங்கள் மாறாதோ?
விதம்விதமாய்த் துன்பங்கள் உபாதைதரும் வேளைமட்டும்
வேண்டாத தெய்வமெலாம் வேண்டிடுவர்! வினைதீர்க்கப்
பதம்பார்த்துத் ‘தரகரென’த் தேர்ந்தெடுத்த ஐயருக்குப்
பணத்தாலே அர்ச்சித்து இறைவனிடம் தூதனுப்பி
இதமாகப் பரிகாரம் பலசெய்து தோற்றவரே!
இன்றேநன் றாய்அறிவீர்! இறைவனைமெய்த் தியானத்தால் இதயத்தில் எழச்செயவீர்!’இருமைக்கும்வழிபிறக்கும்!
ஏன்மூநம்பிக்கை? எண்ணங்கள் மாறாதோ? ..
….தொடரும்
No comments:
Post a Comment